Thursday, September 03, 2009

ராஜசேகர ரெட்டி - சில நினைவுகள்

- செல்லமுத்து குப்புசாமி

ஆந்திர முதல்வர் Y.S.ராஜசேகர ரெட்டியின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அறுபது வயதில் அகால மரணம் அடைந்திருக்கிறார். பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல டாக்டர் பட்டம் கேட்டுப் பெறாமல் படித்து டாக்டர் ஆனவர் அவர். எனினும் அரசியல்வாதி என்ற முறையில் அப்பழுக்கற்றவராக விளங்கினாரா என்பதெல்லாம் வேறு கதை. அவர் மீது எண்ணற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு.1983 இல் என்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியைத் துவங்கிய காலத்தில் இருந்து ஆந்திராவில் செல்வாக்கு சரிந்து போயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு சக்தி மிக்க ஈர்ப்புள்ள ஒரு தலைவராக YSR இருந்திருக்கிறார்.

சிரஞ்சீவியை அரசியலுக்கு வர வைத்ததே காங்கிரஸ்தான் என்று உறுதியாக நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிச் செய்திருந்தால் அது ரெட்டியின் அரசியல் சாணக்கியத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வேளை நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்து ஆந்திரா (ஆந்திரப் பிரதேசத்தின் மூன்று முக்கியப் பகுதிகளில் ஒன்று) பகுதியில் தெலுங்கு தேசக் கட்சியின் வாக்குகளைப் பிரிக்காமல் போயிருந்தால் இன்றைக்கு ரெட்டி இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்க மாட்டார். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்திருக்கக் கூடும். இது குறித்து முன்பொரு முறை எழுதிய பதிவு) ஹெலிகாப்டர் விபத்தும் நிகழ்ந்திருக்காது.

சஞ்சய் காந்தி (விமான விபத்து), ராஜேஷ் பைலட் (கார் விபத்து), மாதவராவ் சிந்தியா (விமான விபத்து) வரிசையில் ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முக்கியமான இழப்பு. சஞ்சய் காந்தியின் மரணம் விமானம் ஓட்டிக்கொண்டிருந்த ராஜீவ் காந்தியை அரசியலுக்கு இழுத்து வந்தது. ராஜேஷ் பைலட் மற்றும் மாதவராவ் சிந்தியாயின் வாரிசுகள் அரசியலில் இருக்கிறார்கள். ரெட்டியின் வாரிசு என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மறைந்த முதல்வருக்கு நம் அஞ்சலி.

*******
ஒரு துண்டுச் செய்தி:
ராஜசேகர ரெட்டியை போலவே முன்னாள் ஆந்திர முதல்வர் சென்னா ரெட்டியும் (இவர் பிற்காலத்தில் தமிழகத்தில் கவர்னராகப் பணியாற்றினார்) மருத்துவம் படித்த டாக்டர்.

ஒரு முறை, “விசாகபட்டிணத்தில் மட்டும் துறைமுகம் இருக்கிறதே, எங்கள் ஊருக்கும் ஒன்று கட்டித்தாருங்கள் என்று விஜயவாடா மக்கள் கேட்டதற்கு, “கண்டிப்பாகக் கட்டித் தருகிறேன்” என்று சீரியசாக வாக்குறுதி அளித்தார் சென்னா ரெட்டி. விஜயவாடாவில் கடலே இல்லை என்பதுதான் வேடிக்கை.

சென்னா ரெட்டியைப் பின்பற்றி, திருப்பதில் துறைமுகம் ஏற்படுத்துவேன் என்றெல்லாம் அள்ளி விடாத ராஜசேகர ரெட்டிக்கு நமது அஞ்சலி.

6 comments:

Anonymous said...

ஓணம் தினத்தில் மறைந்ததுதான் இதில் வருத்தம்.

perumal said...

ஒரு முதலமைச்சர் பயணம் செய்த ஹெலிகாபட்டரை அதுவும் உள் நாட்டில் மறைந்து போனதை கண்டு பிடிக்க 24 மணி நேரம் எடுத்துக்கொண்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

YSR ஊழல் வாதியோ, நேர்மையானவரோ எப்படி இருந்தாலும் அவரது மறைவு வருத்தத்தை அளிக்கிறது.

பெருமாள்
கரூர்

manasu said...

//ரெட்டியின் வாரிசு என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.//

CM ரேஸ் ல இருக்கார்.

SanjaiGandhi said...

கிழக்கிலிருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும்? :)

Chellamuthu Kuppusamy said...

நன்று பெருமாள் & மனசு.

சஞ்சய்: ஒன்னும் பிரியல..

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்