Friday, January 22, 2010

பெங்களூரு to கோவை

- செல்லமுத்து குப்புசாமி

ரொம்பப் பேசினால் பழமைபேசி ஆக்கி விடுவார்கள். இருந்தாலும் சொல்லித்தான் தீர வேண்டியிருக்கிறது. 2010 இன் முதல் வாரத்தை பெங்களூருவில் கழித்தேன். ரொம்பவே மாறியிருக்கிறது தேவதைகளின் நகரம்.

சர்ஜாபூர் சாலை முதல் மரத்தஹல்லி வரையான Outer Ring Road இல் அப்போது தகரக் கூரை போட்ட இரண்டு பரோட்டா கடைகளை மட்டுமே காண முடியும். ஆனால் இப்போது பல மல்டிநேஷனல் கம்பெனிகளில் இருப்பிடமாக எதோ நியூயார்க் மேன்ஹாட்டனுக்குள் நுழைந்து விட்டதைத் போன்ற பிம்பத்தை ஊட்டுகிறது.

ஓசூர் சாலையில் பட்டு வாரியம் (அதாங்க சில்க் ஃபோர்ட்) முதல் எலெக்ட்ரானிக் சிட்டி வரையில் நீண்டதொரு மேம்பாலம் போட்டிருக்கிறார்கள். விரைவில் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என்று தெரிகிறது.

மடிவாலாவில் டிராவல்ஸ் பேருந்துகள் நிற்கும் இடங்களில் இருந்த பெரிய மரங்களை எல்லாம் வெட்டிக் கடாசி விட்டு சாலையை அகலமாக்கியிருக்கிறார்கள். ஊரைச் சுற்றிலும் ஏசி பேருந்துகள்.. இன்னும் சில மாற்றங்கள்..

தோற்றத்தில் எத்தனையோ மாறிப் போயிருந்தாலும் ஒரு விஷயத்தில் மாறிலியாக இருக்கிறது பெங்களூர். அங்கே எப்போதும் போல பெங்களூர் பெண்கள் அழகாகவே இருந்தார்கள். (வீதிக்கு வீதி மதுபானக் கடைகளும் எப்போதும் போல மாற்றமின்றி இருக்கின்றன)

**
அடுத்த வாரம் நண்பனின் குழந்தையைக் காண கோவை செல்ல நேர்ந்தது. அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு. கோவை என்ற நகரம் மீதான அத்தனை பிரமிப்புகளும் சுக்கு நூறாக உடைந்தது அன்றுதான். ஆறு வருட காலம் கோவையில் தங்கிய போது கட்டியெழுப்பிய பிரமிப்பு அது. சென்னையோடு ஒப்பிடுகையில் கோவை எவ்வளவு சின்ன ஊர் என்று இப்போது தெரிகிறது. ஒன்னுக்கு இருக்கும் நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காந்திபுரம் போய் விடலாம். (ஞாயிறு என்பதாலா?)

காந்திபுரம் சிக்னலில் இருந்து கிராஸ்கட் ரோட்டில் லஷ்மி காம்ப்ளெக்ஸைத் தேடிக் கண்டு பிடிப்பதற்குள் வட கோவை மேம்பாலம் வந்து விடுகிறது. மறுபடியும் 100 அடி ரோடு போய் சுற்றி வந்தேன். சென்னை அளவுக்கு பிரம்மாண்டம் இல்லையே தவிர கோவையின் ரம்மியத்திற்கு யாதொரு குறையும் இல்லை.

லஷ்மி காம்ப்ளெக்ஸில் பதிவர் செல்வேந்திரனைச் சந்தித்து அவரோடு சிறுது நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நிகழ்கால வலைப் பதிவு உலகத்தில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளியிருக்கிறோம் என்பதை உணர முடிந்தது.
**நாஞ்சில் நாடனைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. நாகர்கோவிலைப் பூர்வீகமாக கொண்ட அவர் மும்பையில் 18 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் வசித்து வருகிறார். தீவிர இலக்கியச் சிந்தனையாளர். பல படைப்புகளைத் தந்த போதிலும் விகடனில் அவர் எழுதிய ‘தீதும் நன்றும்’ அவரைப் பரவலாக வெகுமக்கள் மத்தியில் அறிய வைத்தது. எளிமையான மனிதர். அமைதியான சூழலில் வசிக்கிறார்.

பெரும்பாலும் இலக்கியவாதிகள் எதார்த்தவாதியாக இருப்பதில்லை என்ற கருத்து எனக்கு இருந்து வந்தது. நாஞ்சில் நாடனைச் சந்தித்து வந்த பிறகு அது முற்றிலும் மாறவில்லை என்றாலும் மறுபரிசீலனைக்கு ஆளாகிறது.

அடுத்த முறை ராஜேஷ் குமாரைச் சந்திக்க வேண்டும். இதை நாஞ்சில் நாடனிடம் சொல்லவில்லை. நீங்களும் சொல்லி விடாதீர்கள்.

3 comments:

பழமைபேசி said...

வணக்கமுங்க!

perumal said...

இப்பொழுதுதான் தங்களை புகைப்படத்தில் பார்க்கிறேன்

பணிவன்புடன்
பெருமாள்
கரூர்

Chellamuthu Kuppusamy said...

வாங்க பழமைபேசி !!

அன்புள்ள பெருமாள்.. :-):-)