Thursday, March 04, 2010

நித்தியானந்தாவுக்கு ஆதரவாக..

- செல்லமுத்து குப்புசாமி

பழனியில் இருந்து 40-45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எங்கள் ஊர். இது வரைக்கும் அப்பன் முருகனை நேரில் சென்று தரிசித்து வந்தது எத்தனை தடவை என்பதை ஒற்றைக் கையில் விரல் விட்டு எண்ணி விடலாம். நம்ம பக்தி அத்தனை ஆழமா இருக்கும் போது ஆசிரத்துக்கு எல்லாம் போவதென்பது நடக்காத காரியம்.


ஒஹாயோவில் இருக்கும் போது சில ஆந்திர நண்பர்கள் பல முறை நித்தியானந்தா கோவிலுக்கு அழைத்தனர். போனதில்லை, ஆனால் அவர்கள் கொண்டு வந்து கொடுத்த சர்க்கரை பொங்கலையும், புளியோதரையையும் உண்டிருக்கிறேன். அந்த நண்பர்கள் நித்தியானந்தாவின் போதனைகளையும், மெய் சிலிர்க்கும் பிரசங்கத்தையும் பற்றி சிலாகித்துப் பேசுவார்கள்.

பிரிட்டிஷ்காரனிடம் தப்பித்து ஓடி பாண்டிச்சேரியில் குடிசை போட்ட அரவிர்தர் முதல் முள்ளம்பன்றித் தலை முடி வைத்திருக்கும் சாய்பாபா வரை எல்லாச் சாமியார்களும் நமக்கு ஒன்றுதான். இடையில் பிரேமானந்தா, சுகபோகானந்தா, ஜக்கி வாசுதேவ், மருவத்தூர் சாமியார் முதலியோரும் அடக்கம். சாமியே இருக்குதா இல்லையான்னு தெரியாத போது சாமியார்கள் சிலர் தங்களை சாமியாக முன்னிறுத்திக் கொள்வது நமக்கு ஒப்பில்லை.

இத்தனை நாத்திய ஆத்திகக் குழப்பங்களையும் கடந்து பார்த்த போது, அளப்பரிய உயரங்களை எட்டிய நித்தியானந்தா மீது வியப்பு இருந்தது உண்மை. இவ்வளவு சின்ன வயதில் அவன் எட்டிய உயரங்கள், அவனது management techniques, கூட்டத்தை வசீகரம் செய்யும் தன்மை, தனக்கென்று அவன் உருவாக்கி வைத்திருந்த பிராண்ட் ஆகிய எல்லாமே கவனிக்க வேண்டியவை. சுயமாக தொழில் தொடங்கி பிசினஸ் சாம்ராஜ்ஜியம் கட்டி எழுப்ப முனையும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை இவை.

அத்தனை பேரும் நித்தியானந்தாவை கடவுளாகக் கண்ட போது மனிதனாகக் கண்ட என் மனது, இப்போது அவன் அத்தனை பேருக்கும் பொறுக்கியாகத் தெரியும் போதும் மனிதனாகவே காண்கிறது. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கக் கூடிய இயல்பான ஈர்ப்பை, அந்த ஈர்ப்பினால் ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கத்தை, அந்த நெருக்கத்தின் ஊடாக உருவான அந்தரங்கத்தை இங்கே வெளிச்சம் போட்டு விற்பது முறையாகப் படவில்லை.

அந்த மனிதனுக்கும், ரஞ்சிதா என்ற நடிகைக்குமான உறவை படம் பிடித்து வெளியிட்டது யாரென்ற உண்மைகள் விரைவில் வெளியெ வரலாம். அது ரஞ்சிதாவின் மீது பொறாமை கொண்ட நித்தியானந்தாவின் முன்னாள் காதலியாக இருக்கலாம். அல்லது போட்டி மடம் நடத்தும் இன்னொரு சாமியாரின் தூண்டுதலால் நடந்ததாக இருக்கலாம்.

அதில் இரண்டாவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த போட்டி சாமியாரை வெறுக்கிறேன். தொழிலில் போட்டி என்றால் திறமையாகத் தொழில் செய்துதான் வெல்ல வேண்டும். அவனை விட அதிகமாக பிரசங்கம் செய்து, யாகம் நடத்தி, பத்திரிக்கைகளில் தன்னம்பிக்கை / ஆன்மீகத் தொடர் எழுதி அல்லது வேறு யாராவது பிச்சைக்கார எழுத்தாளனை தன் பெயரில் எழுத வைத்து, விஐபி க்களை பக்தர்களாகச் சம்பாதித்து அல்லது உருவாக்கி, திறமையாக மார்க்கெட்டிங் செய்து.. இப்படியெல்லாம் சிலபல பிசினஸ் உத்திகளைக் கையாண்டுதான் அவனை முந்தியிருக்க வேண்டுமே ஒழிய, இப்படி அவனது அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியல்ல.

நிலங்களை ஆக்கிரமித்த போது அவன் கடவுளுமில்லை, இப்போது அவன் பொறுக்கியுமில்லை. எபோதுமே அவன் மனிதன். ஒரு திறமையான பிசினஸ் மேன். பிசினஸ்மேன்கள் நிலங்களை ஆக்கிரமிப்பதும், நடிகையைப் புணர்வதும் நமது தேசத்தில் புதிதல்ல.

மேலும் சாமியார்கள் அனைவரும் உத்தமர்கள் இல்லை. நித்தியானந்தா படுக்கையைப் பகிர்வது இதுதான் முதன் முறையாக இருக்காது. அதே போல, நடிகையோடு கலவி கொள்ளும் ஒரே சாமியார் நித்தியானந்தாவாக மட்டுமே இருக்க முடியாது. இந்து மதத்தின் போப்பாண்டவராக நிறுவிக் கொள்ள முனையும் சாமியார் அமெரிக்கா ரிட்டர்ன் டிவி நடிகையோடு கூடிக் கலந்த காட்சிகள் இருப்பதாக செய்திகள் கசிந்த போது அவற்றைப் பற்றிய வீடியோக்கள் வெளிவராதது ஏன்?

சாமியார்களுக்குக் கூட சாதிகள் இருக்கிறது போல. இதே நித்தியானந்தா முதலியார் சாதியில் பிறக்காமல் சக்கிலி, பறையன், பள்ளன், நாவிதன், வண்ணான் போன்ற ஏதாவது சாதியில் பிறந்திருந்து, இதே அளவு பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை எழுப்பியிருந்தால் அவனது செக்ஸ் லீலைகள் எப்போதே வெளியாகியிருக்கும். இவ்வளவு லேட் ஆகியிருக்காது.

நித்தியானந்தா மீது கொண்ட பொறாமையால் வீடியோவை எடுத்த நபரும், அதை வெளியிட்ட சன் விடியும் ரஞ்சிதாவைப் பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கவில்லை. உள்ளபடியே அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது. மார்க்கெட் இல்லாத முதிர்ந்த நடிகையாகி விட்ட பிறகு, மண வாழ்க்கையும் தோல்வியில் முடிவடைந்ததாகச் சொல்லப்படும் ஒரு பெண்ணை இதை விட யாரும் காயப்படுத்த முடியாது.

இதே சாமியாரோடு கலவியது ஒரு ஆளுங்கட்சி பெண் எம்.பியாக இருந்தால் இப்படித்தான் வெளியிட்டிருக்குமா சன் டி.வி? அந்த வீடியோ எடுத்தவனை அல்லது எடுத்தவளை பேரம் பேசி செட்டில் பண்ணியிருக்க மாட்டார்கள்? அல்லது ஆளை ஒரு வழி பண்ணியிருக்க மாட்டார்கள்? சன் டி.வியில் மெகா சீரியல் நடிக்கும் நடிகைகள் யாருமே எந்த ஆசிரமத்துமே போனதில்லையா? அவர்களின் வீடியோ கிடைத்திருந்தாலும் இப்படித்தான் வெளியிட்டிருப்பார்களா? கேட்க ஆளில்லாத, மார்க்கெட் & பின் புலம் இல்லாத நடிகையென்றால் இப்படித்தான்...

அவன் முற்றிலும் துறந்த முனிவனுமில்லை, அவள் படி தாண்டாப் பத்தினியுமில்லை என்று சிலர் சொல்லலாம். அந்த அளவுகோல் காதலர்களுக்கு இல்லை. அவர்கள் மனிதர்களாக, ஆணும்-பெண்ணுமாக, காதலர்களாகவே என் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.

ரஞ்சிதாவுக்கும் எனது ஆறுதல். சக மனிதன் என்ற முறையில் நித்தியானந்தாவுக்கு ஆதரவு.

Monday, March 01, 2010

நீயா நானா - சுய முன்னேற்றம்

- செல்லமுத்து குப்புசாமி

‘நீயா நானா’ நாங்கள் விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. ”இந்த வாரம் நம்ம டாபிக்தான்” என நேற்று மதியமே வீட்டுக்காரம்மா சொல்லி வைத்திருந்தார்கள்.

குறைந்தபட்சம் நான் எழுதிய புத்தகங்களையாவது அவர் வாசித்து விட வேண்டும் என்று எங்களுக்கு திருமணமான காலத்திலிருந்து முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். நடந்த பாட்டைக் காணோம். ஒரு கட்டத்திற்குப் பிறகு முயற்சிப்பதையே நிறுத்தி விட்டேன்.

இதில் தவறொன்றும் இல்லை. இன்றைக்கு பல பேர் புத்தகம் வாசிப்பதே இல்லை.

ஒரு வாரக் கடைசியை ஐ.டி துறையில் வேலை செய்யும் என்னை விட வயதில் சிறிய சில இளைஞர்களோடும், மதுப் புட்டியோடும் கழித்தேன். அதில் ஒரு எஞ்சினியர் பஞ்சாபின் தலைநகர் காந்தி நகர் என்று பந்தயம் கட்டினார். அதே போல அமெரிக்காவின் தலைநகர் கலிபோர்னியா என்று சொல்கிற சாஃப்ட்வேர் மக்கள் உண்டு.

நீயா நானா நிகழ்ச்சி தொடங்கிய பிறகுதான் தெரிந்தது. விஷயம் பொதுவான புத்தகம் படிப்பது பற்றியல்ல, சுய முன்னேற்ற நூல்களைப் பற்றியது என. கை கொடுப்பது எப்படி, நடப்பது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் பேசினார்கள்.

குறிப்பாக சுய முன்னேற்ற நூல்களுக்கு எதிராகப் பேசிய நண்பர் முத்து கிருஷ்ணன் (விருந்தினர்) பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற ரீதியில் தலைப்பு வைத்த புத்தகங்களைக் காய்ச்சினார். அவை எதிர்தரப்பில் உட்கார்ந்திருந்த சோம.வள்ளியப்பனை நோக்கியவை என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். சுய முன்னேற்ற நூல்களின் பெயரில் அதை எழுதியவர்களும், பதிப்பாளர்களும் இயலாதவன் பாக்கெட்டில் இருந்து ஐம்பதும், நூறும் களவாடுகிறார்கள் என்றார்.

சுய முன்னேற்ற நூல்களைப் படிப்பது உண்மையிலேயே ஒருவனை முன்னேற்றி விடுமா என்று தெரியாது. ஆனால் நிச்சயமாக மாறுபட்ட பார்வையை ஏற்படுத்தும்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்த Seven Habits of Highly Effective People ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என்னை விட்டு நீங்க வில்லை. அதே போல Why men don’t listen and women don’t read maps என்ற நூலை இது வரை ஏழு முறை வாங்கியிருக்கிறேன். ஒரு பிரதி கூட என்னுடன் இல்லை. இரவல் வாங்கியவர்கள் எல்லாம் இன்னொரு பிரதி வாங்கச் சொல்லி விட்டார்கள்.

நானெல்லாம் பெண்ணொருத்தியைக் கல்யாணம் செய்து கொண்டு காலம் தள்ளுகிறேன் என்றால் அதற்கு அந்த நூல் கொடுத்த insight முக்கியமானது. (இணையத்தில் இளவஞ்சியின் கல்யாணமாம் கல்யாணம் தொடரையும் முடிந்தால் பாருங்கள்)

ஆனால், இன்டர்வியூ அட்டெண்ட் செய்வது எப்படி, டைம் மேனேஜ் செய்வது எப்படி, ஷேர் மார்க்கெட்டில் பணம் பண்ணுவது எப்படி என்று ஓரிரு புத்தகங்களை வாசிப்பதால் மட்டுமே ஒருவனின் சுயம் முன்னேற்றம் ஆகி விடாது.

சுய முன்னேற்ற நூல்கள் என்றில்லை. பொதுவான புத்தகங்கள் என்றாலும் கூட ஓரிரு புத்தகங்களை மட்டும் வாசிப்பதால் மட்டுமே முழுமையான பார்வை கிடைக்காது.

உதாரணத்துக்கு ராபர்ட் கியோசாகி எழுதிய Rich Dad Poor Dad புத்தகம்.

பல ஆண்டுகளுக்கு முன் நானும், என நண்பரும் அதை வாசித்து விட்டு ஒரு முடிவுக்கு வ்ந்தோம். அதாவது, வீடு என்பது முதலீடு கிடையாது. அது ஒரு கடன் என்ற சிந்தனையை எங்களுக்குள் வலுவாக விதைத்த நூல் அது.

அதன் காரணமாக நாங்கள் பங்குச் சந்தையிலும், ஏனைய முதலீட்டுத் தளங்களிலும், பொருளாதார சூட்சுமங்களை அறிவதிலும் கிளை பரப்பினோம் என்பது வேறு விஷயம்.

ராபர்ட் அந்தப் புத்தகத்தை எழுதிய சமயத்தில் முதிர்ச்சியடைந்த அமெரிக்கப் பொருளாதாரச் சூழலில் வீடு என்பது முதலீடாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த நூலை நாங்கள் வாசித்த காலத்தில் ஒரு வீடு வாங்கியிருந்தால் நண்பர் இன்றைக்கு ஐம்பது இலட்சம் கடன் வாங்கியிருக்க வேண்டியிருக்காது. ஒரு புத்தகம் மட்டுமே நமது சிந்தனையை வடிவமைக்க அனுமதிப்பதால் வந்த வினை.

(ஆனால் இன்றைக்கு asset appreciation has far exceeded increase in salary level and affordability level என்பதை உணர முடிகிறது)

சுய முன்னேற்ற நூல்களில் தேவை இல்லவே இல்லை என்று சொல்லி விட முடியாது.

ஒருவனின் வாசிப்புப் பரிணாமத்தில் ஒரு ஆரம்ப நிலை. (நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப.வீ, அறிவியல் படித்தால் அது சுய முன்னேற்றம் தராதா என்று கேட்டதை மிகவும் ரசித்தேன்)

உண்மையைச் சொன்னால், சுய முன்னேற்ற நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை ஓரளவாவது சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்கின்றன என்பது உண்மை. அடுத்த படி நிலைக்கு வாசகனை இட்டுச் செல்வதில் அவை பெரும் பங்கு வகிக்கின்றன.

எந்தத் துறையாக இருந்தாலும், நிறைய வாசிக்க வேண்டும். அதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அதே நேரத்தில், மாற்று உத்திகளும், மாறுபட்ட சிந்தனைகளும், மெருகூட்டலும் மனிதனின் நீடித்த இருப்பிற்கு இன்றியமையாதது.

என்றைக்கு நாம் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என்று நினைக்கிறோமோ அன்றைக்கும் முதுமை எய்தி விடுகிறோம். மனித குலத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதில் முக்கியப் பங்காற்றிய ஹென்றி ஃபோர்ட் சொன்னது இது.