Monday, March 01, 2010

நீயா நானா - சுய முன்னேற்றம்

- செல்லமுத்து குப்புசாமி

‘நீயா நானா’ நாங்கள் விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. ”இந்த வாரம் நம்ம டாபிக்தான்” என நேற்று மதியமே வீட்டுக்காரம்மா சொல்லி வைத்திருந்தார்கள்.

குறைந்தபட்சம் நான் எழுதிய புத்தகங்களையாவது அவர் வாசித்து விட வேண்டும் என்று எங்களுக்கு திருமணமான காலத்திலிருந்து முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். நடந்த பாட்டைக் காணோம். ஒரு கட்டத்திற்குப் பிறகு முயற்சிப்பதையே நிறுத்தி விட்டேன்.

இதில் தவறொன்றும் இல்லை. இன்றைக்கு பல பேர் புத்தகம் வாசிப்பதே இல்லை.

ஒரு வாரக் கடைசியை ஐ.டி துறையில் வேலை செய்யும் என்னை விட வயதில் சிறிய சில இளைஞர்களோடும், மதுப் புட்டியோடும் கழித்தேன். அதில் ஒரு எஞ்சினியர் பஞ்சாபின் தலைநகர் காந்தி நகர் என்று பந்தயம் கட்டினார். அதே போல அமெரிக்காவின் தலைநகர் கலிபோர்னியா என்று சொல்கிற சாஃப்ட்வேர் மக்கள் உண்டு.

நீயா நானா நிகழ்ச்சி தொடங்கிய பிறகுதான் தெரிந்தது. விஷயம் பொதுவான புத்தகம் படிப்பது பற்றியல்ல, சுய முன்னேற்ற நூல்களைப் பற்றியது என. கை கொடுப்பது எப்படி, நடப்பது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் பேசினார்கள்.

குறிப்பாக சுய முன்னேற்ற நூல்களுக்கு எதிராகப் பேசிய நண்பர் முத்து கிருஷ்ணன் (விருந்தினர்) பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற ரீதியில் தலைப்பு வைத்த புத்தகங்களைக் காய்ச்சினார். அவை எதிர்தரப்பில் உட்கார்ந்திருந்த சோம.வள்ளியப்பனை நோக்கியவை என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். சுய முன்னேற்ற நூல்களின் பெயரில் அதை எழுதியவர்களும், பதிப்பாளர்களும் இயலாதவன் பாக்கெட்டில் இருந்து ஐம்பதும், நூறும் களவாடுகிறார்கள் என்றார்.

சுய முன்னேற்ற நூல்களைப் படிப்பது உண்மையிலேயே ஒருவனை முன்னேற்றி விடுமா என்று தெரியாது. ஆனால் நிச்சயமாக மாறுபட்ட பார்வையை ஏற்படுத்தும்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்த Seven Habits of Highly Effective People ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என்னை விட்டு நீங்க வில்லை. அதே போல Why men don’t listen and women don’t read maps என்ற நூலை இது வரை ஏழு முறை வாங்கியிருக்கிறேன். ஒரு பிரதி கூட என்னுடன் இல்லை. இரவல் வாங்கியவர்கள் எல்லாம் இன்னொரு பிரதி வாங்கச் சொல்லி விட்டார்கள்.

நானெல்லாம் பெண்ணொருத்தியைக் கல்யாணம் செய்து கொண்டு காலம் தள்ளுகிறேன் என்றால் அதற்கு அந்த நூல் கொடுத்த insight முக்கியமானது. (இணையத்தில் இளவஞ்சியின் கல்யாணமாம் கல்யாணம் தொடரையும் முடிந்தால் பாருங்கள்)

ஆனால், இன்டர்வியூ அட்டெண்ட் செய்வது எப்படி, டைம் மேனேஜ் செய்வது எப்படி, ஷேர் மார்க்கெட்டில் பணம் பண்ணுவது எப்படி என்று ஓரிரு புத்தகங்களை வாசிப்பதால் மட்டுமே ஒருவனின் சுயம் முன்னேற்றம் ஆகி விடாது.

சுய முன்னேற்ற நூல்கள் என்றில்லை. பொதுவான புத்தகங்கள் என்றாலும் கூட ஓரிரு புத்தகங்களை மட்டும் வாசிப்பதால் மட்டுமே முழுமையான பார்வை கிடைக்காது.

உதாரணத்துக்கு ராபர்ட் கியோசாகி எழுதிய Rich Dad Poor Dad புத்தகம்.

பல ஆண்டுகளுக்கு முன் நானும், என நண்பரும் அதை வாசித்து விட்டு ஒரு முடிவுக்கு வ்ந்தோம். அதாவது, வீடு என்பது முதலீடு கிடையாது. அது ஒரு கடன் என்ற சிந்தனையை எங்களுக்குள் வலுவாக விதைத்த நூல் அது.

அதன் காரணமாக நாங்கள் பங்குச் சந்தையிலும், ஏனைய முதலீட்டுத் தளங்களிலும், பொருளாதார சூட்சுமங்களை அறிவதிலும் கிளை பரப்பினோம் என்பது வேறு விஷயம்.

ராபர்ட் அந்தப் புத்தகத்தை எழுதிய சமயத்தில் முதிர்ச்சியடைந்த அமெரிக்கப் பொருளாதாரச் சூழலில் வீடு என்பது முதலீடாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த நூலை நாங்கள் வாசித்த காலத்தில் ஒரு வீடு வாங்கியிருந்தால் நண்பர் இன்றைக்கு ஐம்பது இலட்சம் கடன் வாங்கியிருக்க வேண்டியிருக்காது. ஒரு புத்தகம் மட்டுமே நமது சிந்தனையை வடிவமைக்க அனுமதிப்பதால் வந்த வினை.

(ஆனால் இன்றைக்கு asset appreciation has far exceeded increase in salary level and affordability level என்பதை உணர முடிகிறது)

சுய முன்னேற்ற நூல்களில் தேவை இல்லவே இல்லை என்று சொல்லி விட முடியாது.

ஒருவனின் வாசிப்புப் பரிணாமத்தில் ஒரு ஆரம்ப நிலை. (நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப.வீ, அறிவியல் படித்தால் அது சுய முன்னேற்றம் தராதா என்று கேட்டதை மிகவும் ரசித்தேன்)

உண்மையைச் சொன்னால், சுய முன்னேற்ற நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை ஓரளவாவது சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்கின்றன என்பது உண்மை. அடுத்த படி நிலைக்கு வாசகனை இட்டுச் செல்வதில் அவை பெரும் பங்கு வகிக்கின்றன.

எந்தத் துறையாக இருந்தாலும், நிறைய வாசிக்க வேண்டும். அதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அதே நேரத்தில், மாற்று உத்திகளும், மாறுபட்ட சிந்தனைகளும், மெருகூட்டலும் மனிதனின் நீடித்த இருப்பிற்கு இன்றியமையாதது.

என்றைக்கு நாம் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என்று நினைக்கிறோமோ அன்றைக்கும் முதுமை எய்தி விடுகிறோம். மனித குலத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதில் முக்கியப் பங்காற்றிய ஹென்றி ஃபோர்ட் சொன்னது இது.

10 comments:

Anonymous said...

அழகாக, தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கருத்துகளுடன் என்னால் ஒத்துப்போகமுடிகிறது.

சுயமுன்னேற்றப் புத்தகங்களால் ஒருவர் முன்னேறிவிடமுடியும் என்பதில்லை. ஆனால் நான் படித்த பல சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருந்து வெவ்வேறு techniqueகளைக் கற்றுக்கொண்டிருக்கிறேன், பயன்படுத்தியிருக்கிறேன், பலன் அடைந்திருக்கிறேன், அல்லது இது பம்மாத்து என்று ஒதுக்கிவிட்டுச் சென்றிருக்கிறேன். இதைப் பகிரங்கமாகச் சொல்வதில் எனக்கு ஒன்றும் வெட்கம் இல்லை.

- என். சொக்கன்,
பெங்களூரு.

Vijayashankar said...

No one says to follow a single book. If a person has basic common sense, he or she would sift through various books and identify certain objectives that he can follow and deliver.

I studied at PSG Tech and my outlook to the world was limited to Coimbatore, and the sharings I had with my classmates and chosen friends.

If I had chosen the medical career instead of Engineering, I would have been at Madras and probably my outlook towards life would have changed in a different angle.

It is all relative to what you see and observe.

it is like friends who will want to take help from you, when in dire-straits, than sharing their own success formula, if they became famous and super rich.

But there is no substitute to hardwork.

venkatramanan said...

கல்யாணமாம் கல்யாணம் தொடரின் சரியான சுட்டி:
http://ilavanji.blogspot.com/search/label/க.க - தொடர்
மற்றும் pdf கோப்பு!

அன்புடன்
வெங்கட்ரமணன்

Chellamuthu Kuppusamy said...

வருகைக்கும், கருத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றிகள் சொக்கன் & Vijayashankar!

சரியான சுட்டிக்கு நன்றி வெங்கட்ராமன்.

Anonymous said...

அவரவருக்கு அவரவர் அஜண்டா உண்டு என்பதைத்தான் இந்நிகழ்ச்சி வெளிகாட்டுகிறது.

முத்துக்கிருஷ்ணனுக்கு சோசியலிசம் கம்யூனிசமும் பிரதானம். அதனால் பங்கு சந்தையில் பணம் அள்ளலாம் என்று 7 பகுதிகள் எழுதி எதிரே உட்கார்ந்திருந்த சோம வள்ளியப்பனை ஒரு பிடி பிடித்தார்.

சோம வள்ளியப்பனுக்கு முதலாளித்துவம் மீது நம்பிக்கை அதனை அவர் தாங்கி பிடித்தார்.

சுப.வி கருஞ்சட்டைத் தமிழர் என்ற பத்திரிக்கையை நடத்திக் கொண்டு பெரியாரை படியுங்கள் அம்பேத்கரின் மொழிபெயர்ப்பு நூல்களைப் படியுங்கள் என்கிறார்.

ரமேஷ் பிரபா நிஜமாகவே அவரது முன்றேற்றத்தைக் காட்டவே உதாரணங்களையும் புத்தங்களையும் கொண்டுவந்துள்ளார்.

ஆக அவரவர் முன்னேற்றத்தைத் தான் இந்நிகழ்ச்சி முன்னிறுத்தியது.

இது தொடர்பாக நான் எழுதிய ஒரு குருங்கதையுண்டு

http://sweetkaramkaapi.wordpress.com/2010/01/08/very-short-story-1/2/

natarajan venkatasubramanian said...

First I have this name 'Self-Help'. Now 'self-help' is the most selling genre. I better call these things as Inspirational.

When I was down mentally, a year back, I came to read 'As a Man Thinketh By James Allen'. It changed my view on life.

But now there are so many junks available in the market. The Alchemist is a simple thought.

As everybody said books can't improve your living. The only thing that could improve your living is YOU!

perumal said...

எனக்கு சுயமுன்னேற்ற புத்தகங்களின் பால் அதிக ஈர்ப்பு இல்லை.

தங்களின் இழக்காதே புத்தகம் என்வாழ்வில் ஒளி ஏற்றி வைத்துள்ளது.

அடுத்து என்ன புத்தகம் சார் எழுதுகிறீர்கள்?

தாமதமாக பின்னூட்டமிட்டதற்கு வருந்துகிறேன்

பணிவன்புடன்
பெருமாள்
கரூர்

Chellamuthu Kuppusamy said...

நன்றி karamkaapi ... அனைவருக்கு அவரவர் அஜெண்டா.. எனக்கு இந்தப் பதிவு போட்டதில், உங்களுக்கு உங்கள் குறுங்கதைக்கான சுட்டியை இணைத்ததில் :-)

நிச்சயமாக நடராஜன்.. நீங்கள் சொல்வது சரியே.

Chellamuthu Kuppusamy said...

அன்புள்ள பெருமாள்,

சுய முன்னேற்ற நூல் மீது ஈர்ப்பு இல்லாமல் இருப்பதில் பெருமையொன்றுமில்லை..

இழக்காதே பற்றிப் பேசி மீண்டும் மீண்டும் என்னை நிலைகுலையச் செய்கிறீர்கள். அது ஒரு சிந்தனைப் பகிரல், நல்ல முயற்சி என்ற நம்பிக்கையை எனக்கு அடிக்கடி நினைவூட்டியபடியே இருக்கிறீர்கள்.. நன்றிகள்.

அடுத்த முயற்சிகள் இப்போதைக்கு இல்லை..

India Money Center என்ற பெயரில் முதலீட்டு ஆலோசனைச் சேவை துவங்கியிருக்கிறோம். அதில் கூடுதல் கவனம்..

Prabu said...

குப்புசாமி சார்,
சுய முன்னேற்ற நூல்கள் ஒரு வழியை காட்ட மட்டுமே. நம்ம மக்கள் அது நம்ம கைய புடிச்சு கூட்டிட்டு போய் விடும்னு எதிர்பாக்கரதுதான் தப்பு. அது சாமியாருங்க கடவுளை காட்ற மாதிரி ஆயிடும்.

உங்க 'இழக்காதே' படிச்சிட்டு நாடு ராத்திரில எழுந்து உக்காந்து அவசர அவசரமா மெயில் அனுப்பினேன். அப்படியொரு இம்பாக்ட் கொடுத்தது அது. ஆனா 'பிரபாகரன்' இன்னும் ஆறு மாசமா திறக்கபடாமலே இருக்கு.

அலன் பீஸ்ஓட மத எல்லா புதகங்களும்கூட மிக அருமை. rich dad, poor dad இப்போ தமிழ்-ல வந்திருக்கு. படிச்சா முதல் வேலையா எடுத்த முடிவு என்னோட ஜீவன் ஆனந்த பாலிசிய நிறுத்தனும்ன்றதுதான். outliers படிச்சீங்களா சார்?