Monday, May 31, 2010

செம்மொழி மாநாடு

’தோலர்’ (தோழர் இல்லை) மா.சிவகுமார் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார் – கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக.

கொழும்பு திரைப்பட விழாவுக்கு கமல்ஹாசனுக்கு விடுக்கப்பட்டதைப் போன்றதொரு அழைப்பொன்றும் செம்மொழி மாநாட்டுக்காக எனக்கு வரவில்லை. புனைவுச் சண்டையில் தமிழ் வலைப்பதிவுலகம் கும்மியடித்துக்கொண்டிருக்கையில் புறக்கணிப்பு குறித்து யாருக்கென்ன கவலை? குறைந்தபட்சம் லீனாவின் கவிதை அளவுக்குக் கூட புறக்கணிப்பில் கிளுகிளுப்பு இல்லை. பரபரப்பும் இல்லை.

எனினும் நாம் வாழும் காலத்தில் நம்மை மவுனச் சாட்சியாக மாற்றி ஒரு இனத்தின் மீது அவிழ்த்து விடப்பட்ட மிக்க் கொடூரமான அழித்தொழிப்பைத் தடுக்கத் துப்பில்லாத்தும், அந்த மக்களுக்கு இப்போதும் கூட நடமாடும் சுதந்திரத்தினை உத்திரவாதம் செய்ய முயலாத்துமான ஒரு தலைமை எதைச் சாதிக்க நடத்துக்கிறது இந்த மாநாட்டை என்ற ஆற்றாமை வருகிறது.

நம்மைப் போன்ற சாமானியர்களின் கருத்து எதையும் சாதித்து விடப் போவதில்லை. அதற்காக மவுனமாக இருந்து விடவும் முடியாது.

அதனால் கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டை தார்மீகமாகப் புறக்கணிக்கிறேன்.

Sunday, May 30, 2010

சிங்கம்

தமிழ் பேசாத தேசங்களில் தமிழ்த் திரைப்படம் பார்ப்பது என்பது மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமே. கொல்கத்தாவில் கூட எனக்கு என்னவோ நம் தேசத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வே ஏற்பட மறுக்கிறது. பெங்களூரிலோ ஹைதராபாத்திலோ ஏனோ தெரியவில்லை இப்படி அப்படியான உணர்வு ஏற்படுவதில்லை.

இங்கே எபோதாவதுதான் தமிழ்ப் படம் திரையிடுவார்களாம். அதனால் சில நண்பர்களின் தூண்டுதலின் பேரில் இன்று சிங்கம் படத்துக்கு போய்த் தொலைத்தேன்.

படத்தைப் பற்றில் குறிப்பிட்டுச் சொல்லி பெரிதாக பதிவு எழுத ஒன்றும் இல்லை. வழக்கமான ஹரி பாணி மசாலா படம். விறுவிறுப்பு, சவுண்ட். பலம் என்று சொன்னால் சூர்யாவைச் சொல்ல்லாம். அனுஷ்கா அழகாக வந்து போகிறார். பிரகாஷ் ராஜுக்கும், ஹீரோவுக்கும் நடக்கும் சதுரங்கமே படம்.

நாசர், ராதாரவி, நிழல்கள் ரவி, மனோரமா என நட்சத்திரப் பட்டியல் நீள்கிறது. ஹரி தனது மாமனார் விஜயகுமாரை ஹோம் மினிஸ்டராக வர வைத்திருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத்தின் இசை படத்தின் பரபரப்புக்கு ஈடு கொடுக்கிறது.

சிங்கத்தின் பலவீனம் விவேக். காமெடி என்ற பெயரில் அவர் செய்யும் கருமத்தை சகிக்க முடியவில்லை. விரசத்தின் உச்சம். பல வசனங்களை சென்சாரில் கட் செய்திருக்கிறார்கள். வடிவேலை அவர் இமிடேட் செய்ய நினைப்பதை தவிர்த்துக்கொள்ளலாம். ’நான் ஒன்னும் சிரிப்பு போலீஸ் இல்லை’, ’ஆபத்துனா அல்வா சாப்பிடற மாதிரி’ (ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு வடிவேலு சொல்ற மாதிரி) போன்ற வசனங்கள் எதற்கு? பழையபடி கருத்து சொன்னாலே தேவலாம். கூடவே அப்துல் கலாம் போட்டோவை மாட்டி வைத்துக் கொள்ளலாம்.

கற்ற பாடம்:
அனுஷ்கா மட்டும் இல்லையென்றால் 220 ரூபாய் கொடுத்த்தை நினைத்து உறக்கமே வந்திருக்காது. எழும்பே இல்லாத படைப்பு என்று எவனோ ஒரு கவிஞன் பாடியது நினைவு வருகிறது.