Monday, June 07, 2010

வங்கத்தில் தளரும் கம்யூனிடுகளின் பிடி !

07-ஜூன்- 2010 உயிரோசை இதழுக்கு எழுதியது.

இந்த ‘உயிரோசை’ இதழில் இது தொடர்பான பத்தி ஏதேனும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் தற்சமயம் கொல்கத்தாவில் இருப்பதால் கள நிலவரம் குறித்தான புரிதலை ஓரளவுக்கு உருவாக்கியிருப்பதன் காரணமாக சில விசயங்களைப் பகிரலாம் எனக் கருதினேன்.

மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் வெளியான உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியை மட்டுமல்லாது நெருக்கடியையும் உண்டாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களை வென்றிருக்கிறது. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்தெல்லாம் அவர் போட்டியிடவில்லை. என்னதான் மும்முனைப் போட்டி என்று பெயரளவில் சொன்னாலும் அடிப்படையில் திரினாமுல் Vs இடதுசாரிகள் என்ற இருமுனைப் போட்டியே இத்தேர்தலில் நிலவியது.

சென்ற வருடம் இலங்கை இறுதி யுத்தத்திற்கு ஊடாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட மேற்கு வங்க மாநிலத்தின் 42 தொகுதிகளில் 15 இடங்கள் மட்டுமே இடதுசாரிகளுக்குக் கிடைத்த்து. அப்போது காங்கிரஸ் கட்சியோடு மம்தா கூட்டணி வைத்துப் போட்டியிட்டார் என்பதும், அதன் தொடர்ச்சியாக மத்திய அரசில் ரயில்வே அமைச்சராக உள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

கம்யூனிஸ்ட் கோட்டைக்குள் புகுந்த பெரும் புயலென மம்தாவை வர்ணித்தால் மிகையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். படிப்படியாக இட்துசாரிகளின் பிடி மேற்கு வங்கத்தில் தளர்ந்து வருகிறது. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்டுகள் தோற்பது உறுதி என்று இங்கே பலரும் பலமாக நம்புகிறார்கள். ஆட்சியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை ஆளுங்கட்சி இழந்து விட்டது, அதனால் உடனடியாக சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் திருமணம் செய்து கொள்ளாத 55 வயது மத்திய ரயில்வே அமைச்சர் வலியுறுத்தியதே அதற்குச் சான்று.

கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிபாசு மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு இன்று வரை வேறு கட்சி ஆட்சிக்கு வரவே முடியவில்லை என்ற வரலாற்றுப் பின்னணியில் இன்றைய கள நிலவரத்தைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒரு வேளை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் (காங்கிரஸ் கூட்டணியோடு சேர்ந்தோ அல்லது தனித்தோ) ஆட்சியைப் பிடித்தால் அது இந்திய அரசியல் அரங்கில் மிக முக்கியமான நிகழ்வாகப் பதிவு செய்யப்படும்.

இடதுசாரிகளைப் பொறுத்தமட்டில் இந்திய அளவில் அவர்களுக்கு மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் மட்டுமே வலுவான தளம் இருந்து வந்திருக்கிறது. இதில் கேரளாவை எடுத்துக்கொண்டால் அங்கே அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த்து கிடையாது. ஒரு முறை காங்கிரஸ், இன்னொரு முறை பொதுவுடமைவாதிகள் என மாறிமாறி அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாறு காணக் கிடக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் மேற்கு வங்கத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கப்படும் நிகழ்வு நிச்சயமான வரலாற்றுத் திருப்பம் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அப்படி நிகழ்ந்தால் இந்தியாவில் நிலையான, வலுவான கோட்டை என்பது அவர்களுக்கு இல்லை என்றாகி விடும்.

‘அவர்கள்’ என்று பொத்தாம் பொதுவாக இடதுசாரிகளைக் குறிப்பிட்டாலும் CPI எனப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி இங்கே நாம் பேசவில்லை. CPI(M) எனப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே இந்த இரு மாநிலங்களிலும் பெரும் சக்தியாகத் திகழ்கிறது.

நம்ம ஊரில் பல பேருக்கு இந்த இரு கட்சிகளுக்குமான வேறுபாடு தெரிந்திருக்க வாய்ப்பில்லை - இரண்டு பேருமே கம்யூனிஸ்டுகள் என்பதைத் தவிர. மார்க்சிஸ்ட் கட்சி தோன்றிய கதையே கொஞ்சம் கலகமானதுதான். என்னதான் சித்தாந்த்த தளத்தில் வேறுபட்டதாக அவர்கள் சொல்லிக்கொண்டாலும் CPI இல் இருந்து அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதன் அடிப்படைக் காரணத்தை மேலோட்டமாகினும் அறிந்தாக வேண்டும்.

1960களில் முதற்பாதியில் இந்திய-சீனப் போரின்போது CPIயின் ஒரு பிரிவினர் வெளிப்படையாகவே சீனாவை ஆதரித்தனர். அவர்கள் தனியாகப் பிரிந்து வந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை, அதாவது CPI(M) ஐத் துவக்கினார்கள். கட்சி ஆரம்பித்த போது அதன் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக (பொலிட்பீரோ) இருந்த ஒன்பது பேரில் ஜோதிபாசுவும் ஒருவர். நவரத்னா என்று தோழர்கள் அழைத்த அந்த 9 பேரில் கடைசியாக மரணமடைந்தவரும் அவரே.

1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் அண்ணா தலைமையிலான தி.மு.க ஆட்சிக்கு வந்தது. கேரளாவில் நம்பூதிரிபாத் முதல்வராகப் பொறுப்பேற்ற மார்க்சிஸ்ட் ஆட்சி அமைந்தது. மேற்கு வங்கத்திலும் ஜோதிபாசு துணை முதல்வராகப் பொறுப்பேற்ற கூட்டணி அரசில் அஜய் முகர்ஜி (காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்திருந்த வங்காள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்) முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.


ஜோதிபாசு 1977 ஆம் ஆண்டு முதல்வரானார். 23 வருடங்களுக்குப் பிறகு 2000இல் அவராகவே முதுமையின் காரணமாகப் பதவி விலகிய பிறகு புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையில் மார்க்சிஸ்ட் அரசு இன்னமும் தொடர்கிறது. ஆனால் அடுத்த தேர்தலுக்குப் பிறகும் தொடருமா என்பதே நம் முன் எழுந்து நிற்கும் கேள்வி!

தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் முடிவைத் தொடர்ந்து புத்ததேவ் பதவி விலக முன்வந்தார் என்றும், அதைக் கட்சி பொலிட்பீரோ மறுத்து விட்டதாகவும் செய்திகள் உலவுகின்றன.

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சியை முதலாளித்துவ ஏகாதிபத்திய உலகம் ஆவலுடன் எதிர்நோக்குகிறது. இப்படிச் சொல்வதால் மார்க்சிஸ்டுகள் மீது கங்கை(ஹூக்லி) தீர்த்தம் தெளித்து அவர்களைப் புனிதர்கள் ஆக்கும் காரியத்தை நான் செய்யவில்லை.

முதலாளித்துவம்-கம்யூனிசம் என்பதே இன்றைய சீனாவைப் பார்க்கும்போது அபத்தமாகிறது. அதிகார மையத்திற்கும், சாமானியர்களுக்குமுள்ள இடைவெளியைச் சார்ந்து மட்டுமே புதிய உலகின் வர்க்க வரையறை அமையும். 33 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் ஒரு அமைப்பு எப்படி அதிகார மையத்தில் இல்லை எனக் கருதுவது? அப்படி உண்மையிலேயே இல்லையானால் இன்றைக்கு மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளே இருக்கக் கூடாதே? நந்திகிராம், சிங்கூர் என பல சமீபத்திய நிகழ்வுகள் கம்யூனிஸ்டுகளின் அடிப்படை அணுகுமுறையை, சித்தாந்த முரணை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

எது எப்படியோ, மேற்குலகம் நிச்சயமாக கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சியை ஆவலோடு எதிர்நோக்கியபடியே காத்திருக்கிறது. கூடவே பல வங்காளிகளும்!

1 comment:

Anonymous said...

உங்களைப் போன்ற முதலாளித்துவவதிகல் ரசிக்கத்தான் செய்வீர்கல்