Monday, June 14, 2010

ராணி மகா ராணி!!

- செல்லமுத்து குப்புசாமி

எப்போதுமே திங்கட்கிழமை என்றால் பதட்டமாக இருக்கும் நியூசிலாந்து தமிழ் நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன் ஒரு திங்கட்கிழமை வீட்டிலேயே உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்தபடி ஆசுவாசமாக ஆன்லைனில் ஜாலியாக அரட்டையடித்துக்கொண்டிருந்தார்.


ராணியின் பிறந்த நாளுக்கு விடுமுறையாம். வழக்கமாக ஜூன் மாதம் முதல் திங்கட்கிழமை நியூசிலாந்தில் இது கடைப்பிடிக்கப்படுகிறதாம். இங்கிலாந்து ராணிதான் நியூசிலாந்துக்கும் ராணி. கனடா, ஆஸ்திரேலியா முதலிய தேசங்களிலும் இது விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

என்னதான் அங்கெல்லாம் தன்னிச்சையான அரசாங்கம் நடந்தாலும் Head of the State என்னவோ இன்னமும் பிரிட்டிஷ் மகாராணியாரே. 1972 வரை சிலோனுக்குக் கூட எலிசபெத் ராணிதான் அரசத் தலைவர். நாற்பதுக்கும் மேற்பட்ட முன்னாள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலனி நாடுகளின் கூட்டமைப்பே காமன்வெல்த் அமைப்பாக இன்றைக்கு இருக்கிறது.

பிரிட்டிஷ் பேரரசின் தாக்கத்தைத் தவிர்த்து உலக வரலாற்றை முழுமையாக அறிய முடியாது. கிட்டத்தட்ட உலக மொழி என்றால் அது ஆங்கிலம்தான் என்றாகிவிட்டது இன்று. மொழி, இனம், மதம் என பல வகையிலும் முரண்பட்ட இந்தியா போன்ற ஒரு தேசம் இன்றைக்கும் ஒரு தேசமாகவே இருக்கிறது என்றால் அதற்கு ஆங்கில மொழியும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

உலகையே ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் விக்டோரியா மகாராணியின் காலம் மிகவும் முக்கியமானது. அறுபத்து மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ராணியாக அவர் இருந்த காலத்தில் ஆங்கில சாம்ராஜ்யத்தின் பரப்பு வெகுவாக விரிவடைந்தது. சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக ஏற்த்தாழ ஒரு நூற்றாண்டு காலம் உலக வல்லரசாக அது கோலோச்சியது என்றால் அதில் பெரும்பகுதி விக்டோரியன் யுகத்தில்தான்.

இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் கூட அவரது ஆட்சிக் காலம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனி கலைக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தியா கொண்டுவரப்பட்ட்து அப்போதுதான்.

அவர் உயிரோடு இருந்த காலத்தில் இந்தியாவின் தலைநகராக விளங்கிய கொல்கத்தாவில் சுமார் 64 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள விக்டோரியா மெமோரியலைக் கண்டு வந்த 4 மணி நேரத்தில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். 1901 ஆம் ஆண்டு மறைந்த விக்டோரியா ராணிக்கு கல்கத்தாவில் நினவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் 1907 ஆம் ஆண்டு போடப்பட்டு 1921 இல் கட்டிமுடிக்கப்பட்டதாக அறிகிறேன்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் தலைநகரானது கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டாலும் கொல்கத்தா நகரின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக விக்டோரியா மெமோரியல் திகழ்கிறது. கட்டிடக் கலையின் சான்றாகவும் அது தெரிகிறது.

உண்மையைச் சொல்லப் போனால் இந்த மெமோரியல் ஹால் விக்டோரியா ராணியின் நினைவிடமாக மட்டும் இல்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் செலுத்திய ஆட்சியின், அதன் ஆதிக்கத்தின் சின்னமாகவும் காட்சியளிக்கிறது. பல ஆங்கில கவர்னர் ஜெனரல்கள், ஆட்சியாளர்கள், அவர்களுக்கு சலாம் போட்ட இந்திய மன்னர்களின் சிலைகள், படங்கள், ஓவியங்கள் மட்டுமல்லாது பரந்துபட்டதொரு அருங்காட்சியகமாகவும் பேணப்படுகிறது.


விக்டோரியாவைப் பற்றியும், பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தைப் பற்றியும் சில விஷயங்களைக் கேட்க நேர்ந்த்து. விக்டோரியா ராணி தொடங்கி இன்றைய எலிசபெத் ராணி வரையான தொடர்பையும் அறிய முடிந்தது.

1819 ஆம் வருடம் விக்டோரியா பிறந்தபோது அவரது தாத்தா மூன்றாம் ஜார்ஜ் மகுடம் தரித்திருந்தார். விக்டோரியாவின் தந்தையாகிய இளவரசர் எட்வர்ட், ஆட்சியில் இருந்த மன்னரின் நான்காவது மகன். முதல் மூன்று இளவரசர்களுக்கும் முறையாகப் பிறந்த வாரிசுகள் யாரும் உயிரோடிருக்கவில்லை.

மூன்றாம் ஜார்ஜ் 1820இல் இறந்து விட, அவரது முதல் மகனாகிய நான்காம் ஜார்ஜ், அதாவது விக்டோரியாவின் முதல் பெரியப்பா அரசர் ஆகிறார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1830 அவர் இறக்கிறார். விக்டோரியாவின் இரண்டாவது சித்தப்பா இல்லாத காரணத்தால் (அவர் 1827 லேயே அவுட்) மூன்றாவது சித்தப்பாவாகிய நான்காம் வில்லியம் ஆட்சிக்கு வருகிறார். அவருக்கு முறைப்படி பிறந்த வாரிசுகள் யாரும் இல்லையாகையால் அடுத்த வாரிசு அவரது தம்பி மகள் 11 வயது விக்டோரியாதான். விக்டோரியாவின் தந்தையும் அதற்கு முன்பே இறந்து போயிருந்தார்.

விக்டோரியா மேஜர் ஆவதற்கு முன்பே வில்லியம் மன்னர் இறந்தால் என்னவாகும் என்ற குழப்பம் பெருங்குழப்பமாக உருவெடுத்தது. சிறுமி ஆட்சிக்கு வந்தால் அவரது மேற்பார்வையாளராக அல்லது பொறுப்பாளராக யாரை உருவாக்குவது என்ற கேள்விக்கான பதிலாக 1930 இல் பாராளுமன்றம் ஒரு சட்டமே இயற்றியது. அது விக்டோரியாவின் பெயரில் அவரது தாயார் ஆட்சி செலுத்துவதற்கு ஆவன செய்தது.

அப்படி ஒரு சூழ்நிலை உருவாவதை சிறுமியின் பெரியப்பாவும், மன்னருமான நான்காம் வில்லியமுக்கு விருப்பமில்லை. விக்டோரியாவின் தாயார் டச்சுக்காரர் – ஒரு டச்சுப் பெண்ணின்கீழ் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வரக் கூடாது என்ற நல்லெண்ணம். தன் தம்பி மகள் பதினெட்டு வயது ஆவதற்கு முன் தனக்கு மரணம் வரக் கூடாது என்று உறுதி பூண்டிருக்க வேண்டும்.

1837 மே 24ஆம் தேதி விக்டோரியாவுக்கு 18 வயது நிறைவடைகிறது. அடுத்த ஒரு மாதத்துக்குள் மன்னர் மரணமடைந்து விடுகிறார். மனிதர் அதுவரை உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்தார் போலும். என்ன ஒரு வைராக்கியம்! அப்போது கல்யாணமே ஆகாத குமாரி விக்டோரியா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணியாக உருமாறுகிறார்.

ஒரு நூற்றாண்டாக இந்தியாவை நிர்வகித்த கிழக்கிந்தியக் கம்பெனி கலைக்கப்பட்டு 1858 ஆம் ஆண்டில் இந்தியாவை தனது நேரடிக் கட்டுப்பாடின்கீழ் விக்டோரியா கொண்டு வந்தார். டெல்லி தர்பார் இருந்த இடம் தெரியாமல் போனதும் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா உருவெடுத்த்து. கவர்னர் ஜெனரல் எனப்படும் வைசிராய் கொல்கத்தாவில் அமர்ந்துகொண்டு மகாராணி விக்டோரியாவின் சார்பிலும், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் சார்பிலும் இந்தியாவை ஆளத் துவங்கினார்.

கர்சன் பிரபு இந்தியாவின் வைசிராயாக இருந்தபோது 1901 ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணி தனது 81 ஆவது வயதில், 63 வருடம் மற்றும் 7 மாத ஆட்சிக்குப் பிறகு மரணமடைந்தார். அவரது பெயரைச் சொல்லி இந்தியாவில் காலந்தோறும் நிலைத்திருக்கும் நினைவிடத்தை, பிரிட்டிஷ் பேரரசின் பெருமையைப் பறைசாற்றும் வரலாற்றுச் சின்னத்தை நிறுவும் யோசனை கர்சன் துரையிடமிருந்தே உருவானதாகச் சொல்கிறார்கள்.

பிரிட்டிஷ் மற்றும் மொகலாய கட்டிடக் கலையின் கலவையாக உருவானதாகச் சொல்லப்படுகிறது. எனினும் இந்த நினைவுச் சின்னம் அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருந்த அயர்லாந்து நகரான பெல்பாஸ்ட் நகர் மையக் கட்டிடத்தின் பிரதி என்று சொல்வதையும் நம்பித்தான் ஆக வேண்டும்.

விக்டோரியா தனது பேருக்குப் பின்னால் அழியாத சரித்திரத்தை மட்டும் விட்டுச் செல்லவில்லை. கூடவே 42 பேரக் குழந்தைகளையும் விட்டுச் சென்றார். அவர்கள் ஐரோப்பா முழுவதிலும் அரசக் குடும்பங்களை அலங்கரித்து வந்தனர் என்பதால் ’ஐரோப்பாவின் பாட்டி’ என்று கூட அவர் அழைக்கப்பட்டதுண்டு.

விக்டோரியாவுக்குப் பின்னர் அவரது மகன் ஏழாம் எட்வர்ட் 1910 வரை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஆண்டு இறந்து போனார். குதிரை மீதமர்ந்த அவரது கம்பீரமான சிலையும் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் அமைந்துள்ளது.

அவரது மகன் ஐந்தாம் ஜார்ஜ் அதிலிருந்து தான் இறந்த 1936 வரை சக்ரவர்த்தியாக விளங்கினார். இந்தியாவிற்கு வந்து இந்தியாவின் பேரரசராக முடிசூடிக் கொண்டவரும் அவரே. அதற்கு முன்பெல்லாம் இங்கிலாந்திலேயே எல்லாம் முடிந்து விடும்.

1936இல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்த பின் அவரது மூத்த மகன் எட்டாம் எட்வர்ட் ஆட்சிக்கு வந்தார். எனினும் விவாகரத்து ஆன பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி, அதைச் செய்தால் அரசராக இருக்க முடியாது என்பதால் பதவியே வேண்டாம் என்று ஒரே வருடத்தில் தூக்கி எறிந்த காதல் மன்னராக அவர் ஆனார்.

அதனால் அவரது தம்பியும், ஐந்தாம் ஜார்ஜின் இரண்டாவது மகனுமான ஆறாம் ஜார்ஜ் மகுடம் தரித்தார். மிகவும் முக்கியமான காலகட்டம் இது. இரண்டாம் உலகப் போர், இந்தியாவுக்கு சுதந்திரம், உலக வல்லரசு என்ற அங்கீகாரம் பிரிட்டனிடமிருந்து அமெரிக்காவுக்கு இடம் மாறுவது எனப் பல முக்கியமான நிகழ்வுகள் அரங்கேறியது இவரது காலத்தில்தான்.

ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952 இல் இறந்த பிறகு அவரது மகள் எலிசபெத் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ராணியானார். இப்போதும் அவரே தொடர்கிறார். அவர் விக்டோரியாவின் 63 ஆண்டு கால சாதனையை முறியடிப்பாரா என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: 14-ஜூன்-2010 உயிரோசை

2 comments:

Anonymous said...

good post

Jeyan Deva said...

ah...history lessons.. still can't get rid of this colonial mindset...just a small clue...Queen's birthday is not a public holiday in the United Kingdom...