Monday, June 21, 2010

ஜெண்டில்மென் - சிறுகதை

- செல்லமுத்து குப்புசாமி

’மெளனங்கள்’ என்ற தலைப்பில் 21-ஜூன்-2010 உயிரோசையில் வெளியானது

இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை ஊருக்குப் போவது சிம்ம சொப்பனம் ஆகி விட்டது. இரண்டு மாதம் முன்பே டிக்கெட் புக் செய்தால்தான் ஆச்சு. இல்லையேல் தட்கால் ஒன்றுதான் கதி. அதுவும் ஆன்லைனில் எல்லாம் செய்ய முடிவதில்லை. புதன்கிழமை எட்டரை வரைக்கும் IRCTC வெப்சைட் தொங்கிக்கொண்டே இருக்கும். அதற்குள் 144 டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்து விடும். அதனால் காலை ஆறேமுக்கால் மணிக்கே வரிசையில் நின்று விட வேண்டியிருக்கிறது.

ஒரு பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் புராஜெக்ட் மேனேஜராக இருக்கும் பிரவீன் குமார் புதன்கிழமை மட்டும் ஆறு மணிக்கே எழுந்து விடுவது வாடிக்கை. அப்படியே சீக்கிரம் எழுந்து போனாலும் சில சமயங்களில் அவருக்கு சைட் (சைட் இல்லீங்க சைடு) அப்பர் பர்த் மட்டுமே கிடைக்கும். காலை மடக்கியும், குறுக்கியும் படுத்தபடி பாதி தூங்கியும், தூங்காமல் பயணம் செய்தாலும் ரிசர்வ் பண்ணாமல் ஜெனரல் கம்பார்ட்மென்டில் பயணம் செய்யும் கொடுமைக்கு அது பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு ஏற்காடு எக்ஸ்பிரசில் சங்ககிரி வரை சென்று சனிக்கிழமை காலை ஆறேகாலுக்கு இறங்கி விடுவார்.

ஒரு சில அபூர்வமான தருணங்களில் மட்டும் தட்காலில் கூட பிரவீனால் ரிசர்வ் செய்ய முடியாமல் போய் விடுவதுண்டு. இந்த வாரம் அப்படி ஒரு அபூர்வமான வாரம். அப்படியாகப்பட்ட ஒரு சூழலில் தள்ளப்பட்ட போது தாம்பரத்தில் இருந்து பஸ் ஏறி அப்படியே மாறிமாறி ஊருக்குப் போவது அல்லது இரவு ஏற்காடு எக்ஸ்பிரஸில் ஜெனரல் கம்பார்ட்மென்டில் பயணம் செய்வது என்ற இரு ஆப்ஷன்களுமே அவருக்கு உவப்பாக இல்லை.

அதனால் வெள்ளிக்கிழமை மதியமே கோவை இன்டர்சிட்டியில் பயணிக்க எத்தனித்து 2:30 வண்டிக்கு மதியம் ஒரு மணிக்கே சென்ட்ரலை அடைந்தார். ஜெனரல் கம்பார்ட்மென்டில் முன்னபின்னே பயணம் செய்து பழக்கம் இல்லாத காரணத்தால் கோவையில் இருந்து வரும் வண்டி எந்த நடைமேடையில் வரும் என்பதை அறியும் வரை பதட்டமாகவே இருந்தார்.

அறிவிப்பு வந்ததுதான் தாமதம். வண்டி வரும் பிளாட்பாரத்தில் விறுவிறுப்பாக ஓடத் துவங்கினார். அந்த பிளாட்பாரம் எங்கே ஆரம்பிக்கிறதோ அதுவரை ஓடி முடித்தார். ரயில் வந்து நின்றதோ இல்லையோ, பயணிகள் இறங்கினார்களோ இல்லையோ, நம்மவர் அடித்துப் பிடித்து கூட்டத்தை ஊடுருவிச் சென்று ஜன்னலோரம் இடம் பிடித்தார்.

ஜெனரல் கம்பார்ட்மென்டில் இடம் பிடிக்க முடியும் – அதிலும் ஜன்னலோரமாக – என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. அவரது சாதுர்யத்தை எண்ணி வியக்காமலும் இருக்க இயலவில்லை. வெற்றிப் புன்னகையை வெளியே சிந்தி விரயமாக்காமல் தனக்குள்ளாகவே சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர் இடம் பிடித்து அரை மணி நேரம் ஆகும் வரை அவரது பக்கத்து இருக்கைக்கு ஆள் வரவில்லை என்ற கடினமானதும், கசப்பானதுமான உண்மையை அவரால் ஜீரணிக்கவும் முடியவில்லை.

சரியாக ரெண்டே காலுக்கு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு கணவான் பிரவீனுக்கு அருகில் வந்து அமர்ந்தார். எப்போதுமே பயணத்தின்போது பக்கத்தில் உட்காரும் ஆட்களை பிரவீனுக்குப் பிடிக்காது. ஆனால் இந்த நபர் கண்ணியமாகத் தெரிந்தார். என்னவோ தெரியவில்லை, இவர் மீது பிரவீனுக்கு வெறுப்பு வரவில்லை.

வழக்கமாக இரவு ஏற்காடு வண்டியில் போனால் சங்ககிரியில் நிற்கும். ஆனால் கோவை இன்டர்சிட்டி சேலத்தை விட்டால் ஈரோடுதான். இரவு எட்டரைக்குப் போய் விடும். ஈரோட்டில் இறங்கி சங்ககிரிக்குப் பஸ் பிடிக்க வேண்டும்.

யாரையாவது சந்திக்கும்போது தனது பெயரை முதலில் சொல்லி அறிமுகம் செய்துக் கொள்ள வேண்டும் என்று பிரவீன் வேலை செய்யும் நிறுவனத்தில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். இருந்தாலும் அவருக்கு முன்பாகவே "சண்முகநாதன் சார் என் பேரு. திருப்பூர் போறேன். நீங்க? " என்று அந்த கணவான் அறிமுகம் செய்து கொண்டார்.

ஏதோ பனியன் கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருப்பார் போல என அவரைப் பற்றி மனதில் ஒரு உருவகம் செய்து வைத்திருந்தார் பிரவீன்.

"திருப்பூர்ல பிசினஸ் எல்லாம் எப்படிங்க போகுது? யூ.எஸ் ஸ்லோடவுன் ஒண்னணும் பாதிப்பு இல்லையே?" லேசாக விசாரித்தார்.

"இல்லை சார். நான் கார்மெண்ட் பிசினஸ்ல இல்லை. அரசு ஊழியன். அறநிலையத் துறைல வேலை பாக்கறேன்," என்ற இந்தப் பதில் எதிர்பாராத ஒன்றாகவே அமைந்தது.

மேலும் அந்த நபர் நல்ல தமிழிலேயே நிறையப் பேசினார். தொந்தரவு, கருத்து, ஊழியன், தகவல் முதலிய சொற்களை எல்லாம் பயன்படுத்தினார். இன்ஃபர்மேஷன், ஒபீனியன் என்றே தன்னைச் சுற்றியிருக்கும் தமிழர்கள் பேசிக் கேள்விப்பட்ட பிரவீனுக்கு விந்தையான ஒரு உணர்வே மேலிட்டது.

போகப் போக பல விசயங்களைக் குறித்துப் பேசினார்கள். திருவாளர் சண்முகநாதனின் சொந்த ஊர் பல்லடம். கோவையில் பணியாற்றி வந்தவரை சென்னைக்கு மாற்றி ஒரு வருடம் அங்கே கட்டாயம் வேலை செய்தே தீர வேண்டும் என்று அனுப்பி வைத்து விட்டார்களாம்.

மனிதர் பாவம் புலம்பிக்கொண்டே வந்தார். இலஞ்சம் வாங்காமல் வெறும் சம்பளத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சென்னையில் ஒரு அரசு ஊழியன் காலம் தள்ள முடியாது என்ற உண்மையைச் சொன்னார். இப்போது கூட சென்னையில் சில பேச்சிலர் பையன்களோடு சேர்ந்து தங்கியிருக்கிறாராம்.

"தனியா வாடகைக்கு வீடு பாத்து தங்க முடியாது சார். நம்ம சம்பளத்துல அது கட்டுப்படி ஆகாது" என்ற அவரது கூற்றை பிரவீன் ஆமோதித்தார்.

கூடவே, "எப்படி சார்? அவங்களோட ஜெனரேஷன் கேப் இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணலையா நீங்க?" என்றார்.

"அதை ஏன் சார் கேக்கறீங்க? கருமாந்திரம் புடிச்சவனுக. ராத்திரி பன்னண்டு மணி ஆனாலும் தூங்க மாட்டேங்கறாங்க. காலைல எந்திரிக்கிற நேரத்துக்கு ஒரு கணக்கு வழக்கே கெடையாது. 2-3 நாளைக்கு ஒரு தடவை நடு ஹால்ல பேப்பர விரிச்சுப் போட்டு தண்ணி அடிக்க ஆரம்பிச்சானுகன்னா எவனாவது ஒருத்தன் வாந்தி எடுத்ததுக்கு அப்புறமாத்தான் நிப்பாட்றரானுக. நான் சீக்கிரமா தூங்கி காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எந்திருச்சுருவேன்.

ஒண்ணுமே செட் ஆக மாட்டேங்குது. என்ன செய்யறது சார்? நம்ம ஊரு பசங்க. நமக்கும் வேறு போக்கிடை கிடையாது. அதனால் அப்படியே ஓட்டிட்டு இருக்கேன் சார்.

அவங்களைச் சொல்லி பிரயோசனம் இல்லைங்க. எனக்கு நாப்பது வயசு ஆகுது சார். இப்பத்தான் இருபதாயிரம் சம்பளம். இந்தப் பசங்களுக்கு இப்பத்தான் 23-24 வயசு ஆகுது. எவனைக் கேட்டாலும் நாப்பது, அம்பது ஆயிரம்ங்கறான். வேற பொறுப்புகளோ, குடும்ப பாரமோ கெடையாது. அப்பறம் இப்படிக் கும்மாளம் அடிக்காம என்ன செய்வானுக!"

பிரவீன் இடையிடையே "ம்" கொட்டி வந்தார். குறை சொல்லப்பட்ட அதே சாஃப்ட்வேர் துறையில்தான் அவரும் பணியாற்றினாலும் அவருக்கும் அதே கருத்து உண்டு. இது பணியாற்றுகிற துறை சார்ந்த சங்கதியல்ல. மாறாக, தலைமுறை இடைவெளி பிரச்சினை என்பதாகவே பிரவீனுக்குப் பட்டது.

"நாமெல்லாம் அந்தக் காலத்துல" என்ற வழக்கமான பல்லவியை அவர்கள் பாடவில்லையே தவிர அதற்குரிய அனைத்து அலகுகளும் அவர்களது பேச்சில் தென்பட்டது.

"இவனுகளை வெச்சுக்கிட்டு ஆபீஸ்லயும் ஒரே பிரச்சினை சார். எவனும் டைமுக்கு வரது கிடையாது. எப்ப பாத்தாலும் புள்ளைக கூட கேன்டீன்ல போய் உக்காந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கிட்டு தொட்டுத்தொட்டு பேசிக்கிட்டே இருக்கானுக சார்" தன் அங்கலாய்ப்பை தக்கதொரு தருணத்தில் பதிவு செய்தார் பிரவீன்.

"ஆமா சார். ரூம்ல இருக்கும்போது பொண்ணுங்க கூட போன்ல பேசுவானுக. பாக்க வெகு டீசண்டா இருக்கும். ஆனா போனை வெச்ச உடனே கமெண்ட் அடிப்பானுக பாருங்க. அவங்க அங்க அளவு முதற்கொண்டு அல்குல்(முக்கோண சமாச்சாரம் என்று நாகரீகமாகச் சொன்னார் அவர்) சம்பந்தப்பட்ட டீட்டெய்ல் வரைக்கும் எல்லாம் பேசுவானுக பாருங்க. கருமம் கேக்கவே சகிக்காது." இது அரசு ஊழியரின் அங்கலாய்ப்பு.


ரயில் திருப்பத்தூரைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. ஜெனரல் கம்பார்ட்மெண்டில் அப்படி இப்படி எழுந்து போனால் இருக்கை பறிபோகும் என்பதால் எழுந்திருக்காமலே உட்கார்ந்திருந்தார் பிரவீன். கடும் கோடையாகையால் வியர்வையும், வெப்பமுமாகக் கலந்து வாட்டியது. இருக்கையில் அப்படியே ஒட்டிக்கொண்டது போல இருந்தது. அவரது ஜாக்கி ஜட்டி பின்பிறத் தோலோடு அப்படியே ஒட்டிக்கொண்டது போல இருந்தது. அப்படியும் இப்படியுமாக அசைந்து கொடுத்து ஆசுவாசப்படுத்தி காற்றோட்டம் ஏற்படுத்த முயன்றார்.

இப்படியாக பிரவீன் முயன்றுகொண்டிருந்த சமயத்தில் மேலே உட்கார்ந்திருந்த ஒரு நபர் (உட்கார்ந்தபடியே தூங்கும் வரம் பெற்ற ஒரு புண்ணியவான்) கையிலிருந்த வாரப் பத்திரிக்கை கீழே விழுந்தது. சண்முகநாதன் அதை எடுத்துப் புரட்டத் துவங்கினார். ஒரு குறிப்பிட்ட பக்கத்தை அடைந்ததும் பிரவீனை நோக்கித் திரும்பினார்.

"சார். இவங்கதான் எங்க சீஃப்" என்றார்.

அந்த பிரபலத்தைப் பற்றி பிரவீன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்மணி சமூக சேவகியாக அறியப்பட்டவர். நல்ல பேச்சாற்றலும், எழுத்துத் திறமையும், பப்ளிக் ரிலேசன்ஷிப் எல்லாவற்றிலும் தேர்ந்தவர். அந்த ஜெனிஃபரைப் பற்றிய செய்திகள், அவரது பேட்டிகள் அவ்வப்போது பத்திரிகை அல்லது தொலைக்காட்சியில் வரும். அப்படி வந்த செய்திதான் வாரப் பத்திரிககையில் அவர்கள் கண்டது. அந்த அம்மணி ஸ்விட்சர்லாந்து சென்று வந்த பயணம் குறித்த கட்டுரை அது. போட்டோவில் தளதளவென்று இரட்டைக்கிளவிக்கு உதாரணம் காட்டுவது போலத் தெரிந்தார்.

"இவங்களை நல்லாத் தெரியும் சார்" என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார் பிரவீன். ஆனால் சொல்ல வந்ததே வேறு. ஜெனிபருக்கும், அறநிலையத் துறை அமைச்சருக்கும் உள்ள நெருக்கம் பற்றி அவருக்கும் அரசல் புரசலாகத் தெரிய வந்திருந்த்து.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அதையும் சொல்லி முடித்தார் பிரவீன். சண்முகநாதன் ஆச்சரியப்பட்டுப் போனார். பிரவீனின் பொது அறிவு குறித்து பிரமித்துப் போனார். அமைச்சரின் அந்தரங்கம் குறித்துப் பேசினார்கள். அறநிலையத் துறையில் அம்மணிக்கு இருக்கும் செல்வாக்கு குறித்துப் பேசினார்கள்.

"சார். பில்டிங் ரொம்ப அழுக்கா இருக்கும்ங்க. ஆனால் அவங்க மட்டும் ஆபீஸுக்குள்ள பளிச்சுனு இருப்பாங்க. ஹ்ம்ம்..அவங்க மனசு வெச்சா எனக்கு கோயம்புத்தூர் டிரான்ஸ்ஃபர் கிடைச்சுரும்"


மனைவி, குழந்தைகளைப் பிரிந்து தனியாக தலைமுறை இடைவெளியைச் சகித்துக்கொண்டு சின்னப் பசங்களோடு தங்கியிருக்கும் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவனின், அதுவும் இலஞ்சம் வாங்காத அரசு ஊழியனாக இருக்கிற குடும்பத் தலைவனின், நியாயமான ஏக்கம் வெளிப்பட்டது.

இப்படியாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ரயில் சேலத்தை நெருங்கியிருந்த்து. அப்போது சண்முகநாதனின் மொபைல் போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அவர் திருப்பி அழைத்துப் பேசினார்.

நீண்ட நேரம் பேசிக்கொண்டே வந்தார். குரல் மிகவும் சன்னமாக குழைந்து இருந்தது. குரலிலும், முகத்திலும் ஆனந்தம் தாண்டவம் ஆடியது. நீண்ட நாள் தலைவியைப் பிரிந்த தலைவனின் அணுகுமுறையாக அது தென்பட்டது. ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தி வந்த பிரவீனுக்கு சண்முகநாதன் மீதான மதிப்பு கூடியபடியே சென்றது.

"சரி, எப்ப வரட்டும் சொல்லுடா" என்று கொஞ்சினார்.

""

"வேண்டாம்பா. கிருஷ்ணன் வந்தா என்னை ஒதைக்கறதுக்கா? நாளைக் காலை நானே போன் பண்ணிச் சொல்றேன். எஙகயாவது மீட் பண்ணலாம். சரியா? மிஸ் யூடா" போனை வைப்பதற்கு முன் அவர் பேசிய கடைசி வாசகம் இதுதான்.

ஜன்னலுக்கு வெளியே நிலைகொண்டிருந்த தன் பார்வையை மீண்டும் சண்முகநாதன் பக்கம் திருப்பினார் பிரவீன். செல்போனில் பிசியாக இருந்தார் அவர். டயல்டு கால் சென்று பார்த்துக்கொண்டிருந்தார். அதில் முதலாவதாக இருந்த சாந்தா என்ற பெயரை டெலீட் செய்தார். மிஸ்ட் கால் பகுதியிலும் அதே மாதிரி செய்தார்.

யாராவது கணிப்பொறி கீபோர்டில் பாஸ்வெர்ட் டைப் செய்தாலே அது என்னவென்று உன்னிப்பாகக் கவனித்து விடும் சாமர்த்தியசாலியான பிரவீன் குமாருக்கு இந்த naïve மனிதர் செய்வது என்னவென்பதை கணிப்பதில் சிரமம் இருக்கவில்லை. மனிதர் ஏதோ சைடு டிராக்கில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்துகொண்டார்.

அதைப் பற்றி எதுவும் பேசவும் இல்லை. அதைக் கவனித்தது போல காட்டிக் கொள்ளவும் இல்லை. அவரளவில் அவர் கடைபிடிக்கும் சபை நாகரீகம் இதுதான். இப்படியாகப் பயணம் சென்றுகொண்டிருக்கையில் ரயில் சங்ககிரியைக் கடந்து சில நிமிடங்கள் ஆகியிருந்த்து.

ரொம்ப நேரமாக அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து வந்த பிரவீனுக்குக் கொஞ்ச நேரம் நிற்க வேண்டும் போல இருந்தது. சண்முகநாதனிடம் சொல்லி விட்டு வந்தார். பெட்டியின் கதவொரமாக வந்து சேர்ந்தார். டிக்கெட் எடுக்காமல் கோவை வரை செல்லும் சில பீகாரிகள் அங்கே மூட்டை முடிச்சுகளோடு அமர்ந்திருந்தனர். அவர்கள் உபயத்தில் வாஷ்பேசின் சிவப்பு நிறமாக மாறியிருந்தது. எதை மென்று எதைத் துப்பினார்களோ தெரியவில்லை.

கதவைத் திறந்த பிரவீன் வெளியே தலையை நீட்டி காற்று முகத்தில் அறையச் செய்தார். சுகமாக இருந்த்து. மணி எட்டரை இருக்கும். காவேரிப் பாலத்தை ரயில் நெருங்கி தடதட சத்தம் உருவானது. இன்னும் பத்து நிமிடத்தில் இறங்க வேண்டியிருக்கும்.

மொபைல் போனை எடுத்து ரயில் பயணத்தின்போது தனக்கு வந்திருந்த 53 குறுஞ்செய்திகளையும், தான் அனுப்பியிருந்த 47 குறுஞ்செய்திகளையும் நிதானமாக அழிக்க ஆரம்பித்தார். சண்முகநாதனைப் போல சாந்தா என்ற ஒரு பெயர் மட்டுமே இருக்கவில்லை.

ரவிசங்கர் மற்றும் சமீர் என்ற இரு பெயர்களில் அவை பதிவாகியிருந்தன.

6 comments:

Anonymous said...

:-) sirantha kathai

"உழவன்" "Uzhavan" said...

இவ்வார உயிரோசைக் கதை அருமை :-)

Anonymous said...

what you want to say.,,,!

Anonymous said...

all are sailing in the same boat

yeskha said...

கிளைமாக்ஸ் புரியலை. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். ப்ளீஸ்..


எஸ்கா

yeskha said...

கிளைமாக்ஸ் புரியலை. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். ப்ளீஸ்..

"எஸ்கா".

(யூத்ஃபுல் விகடன் டாட் காம், தமிழ்வணிகம் டாட் காம், உயிரோசை டாட் காம் ஆகிய வலைதளங்களில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். அவற்றில் வெளியான என்னுடைய கட்டுரைகளை தொகுத்து என் ப்ளாக்கில் பதிவேற்றியுள்ளேன். எனது ப்ளாக் முகவரி http://yeskha.blogspot.com/ அனைவரையும் வரவேற்கிறேன்.)