Tuesday, November 30, 2010

மந்திரப் புன்னகை

உயிரோசைக்கு எழுதியது

செல்லமுத்து குப்புசாமி


தமிழில் வலைப்பதிவர்களின் உலகம் ஒரு தனி உலகம். சாதி, அரசியல், ஆரிய-திராவிடச் சண்டைகள், ஈழம், பொதுவுடமை, சமையல், வெட்டிப் பேச்சு என அங்கே அலசப்படாத சங்கதிகளே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் வலைப்பதிவுகள் அடைந்திருக்கும் எண்ணிக்கைப் பெருக்கமும், அவை இணையமும் நேரமும் இலகுவாகக் கிடைக்கிற வாசகர்களுக்குத் தீனி போடும் ரீதியும் நிச்சயம் கவனிக்கத் தக்கது.

நினைத்த கருத்தை தெளிவாகப் பதிவு செய்யக் கூடிய கட்டற்ற சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. எதை வேண்டுமானாலும், யாரைப் பற்றி வேண்டுமானாலும் போகிற போக்கில் எழுதி விடலாம் என்பதாலும், மரபு ஊடகத்தினைச் சார்ந்திராமல் தன்னிச்சையாக இயங்க இயலும் என்பதாலும் மரபு ஊடகத்தினர் ஒரு மூன்றாந்தர கண்ணோட்டத்துடனேயே வலைப்பதிவர்களைக் கருதுவதுண்டு. பெரும்பாலான இலக்கியவாதிகளும், மரபு ஊடகத்தினரும் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

இப்படிப்பட்ட சூழலில், வலைப்பதிவினருக்கு ஒரு முக்கியமான அங்கீகாரம் என்று கருதக் கூடிய நிகழ்வு கடந்த வாரம் நடந்த்து. தனது மந்திரப் புன்னகையை வலைப்பதிவர்களுக்காக சிறப்புக் காட்சி மூலம் திரையிட்டுக் காட்டும் ஏற்பாட்டை செய்திருந்தார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

இந்நிகழ்வு ஒற்றை நிகழ்வாக அமையப் போகிறதா அல்லது தமிழ் ஊடகப் பரிணாமப் படிநிலை மாற்றத்தின் துவக்கமாக அமையப் போகிறதா என்பதை வருங்காலம் தீர்மானிக்கும்.

எனினும் மரபு ஊடகங்களும், சில இணைய இதழ்களும் கரு.பழனியப்பன் வலைப்பதிவர்களுக்குத் தந்த அங்கீகாரத்தை ஜீரணிக்க முடியாமல் போனதை தட்ஸ்தமிழ் பிரதிபலிக்கிறது.

”வலைப்பூ எனப்படும் பிளாக் எழுதுவது இன்று ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. தெரிந்ததையெல்லாம் மொழி, இலக்கணம், நடை எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதித் தள்ளலாம் என்ற வசதி, எல்லோரையுமே ஒரு முறை எழுதிப் பார்க்கத் தூண்டியுள்ளது வலையுலகில்”

ஊடகங்களின் வளர்ச்சி மட்டுமல்ல, இருப்பும் கூட ஒன்றோடொன்று தொடர்புடையது என்ற எதார்த்தம் ஏனோ இன்றைக்கும் கூட பலருக்கும் ஒப்ப முடியாமல் உள்ளது.

சரி, விசயத்துக்கு வருவோம்.

மந்திரப் புன்னகை வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து வேறுபட்ட ஒரு படம். இயக்குனரின் முந்தைய படங்களான ’பார்த்திபன் கனவு’ மற்றும் ’பிரிவோம் சந்திப்போம்’ச் ஆகியவற்றைப் போலவே இதுவும் கவித்துவமான ஒரு படைப்பாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

திறமையான, அதே நேரம் திமிரான ஒரு ஆர்க்கிடெக்ட். புல்லெட் ஓட்டிச் சுற்றுகிறான். வேலை செய்கிறவன் கூளைக் கும்பிடு போட மாட்டான் என முதலாளியால் ஏற்றுக்கொள்ளப்படுகிற பாத்திரம். இஷ்டம் போல மதுவையும், மாதுவையும் துய்க்கும் வெளிப்பார்வைக்கு கரடுமுரடான இளைஞனான அவன் பல காமம் கடந்த பிறகு ஒரு காதலைக் காண்கிறான்.

அவனது பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து அவள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறாள். எந்த உறவையுமே மனதுக்கு அருகில் நெருங்க விடாத அவன் அவளை மட்டும் நெருங்க விடுகிறான். அடிக்கடி தன் தாயை நினைவுபடுத்தும் அவளுக்காக குடிப் பழக்கத்தை விடுகிறான். திருமணம் செய்துகொள்ளத் தீர்மானிக்கிறார்கள்.

“உன்னை மாதிரி ஒருத்தனுக்கே நல்ல பொண்ணு கிடைக்குதுன்னா, நல்ல பையனுக்கெல்லாம் என்ன மாதிரி பொண்ணு கிடைக்கணும்? எனக்கென்னவோ அவளும் உன்னை மாதிரியே இருப்பாளோனு தோணுது. ஏனா கல்யாணதுக்கு அப்புறம் நீ கண்டுக்க மாட்டே பாரு. It is a marriage of convenience” என்று அவனது அப்பா அவனை எச்சரிக்கிறார்.

அவர் சொன்னது போலவே அவள் சீமான் ஒருவனோடு சொகுசுக் காரில் ஏறிச் சென்று நட்சத்திர விடுதி அறையில் கூடிக் குலவுகிறாள். அதைக் கண்டு அவன் அதிர்ச்சியடைகிறான்.

”நீ மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவள் இருக்க்க் கூடாதா?” என்ற சமத்துவச் சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அவள் தன்னிடம் உண்மையைச் சொல்லாமல் மறைத்து விட்டாள் என்ற ஆத்திரமே மேலிடுகிறது. அவளை அடித்துக் கொன்று விடுகிறான். போலீசில் சென்று தானே சரணடைகிறான்.

இதற்குப் பிறகுதான் தெரிய வருகிறது எல்லாமே மாயை என்பது. திரைக் கதைக் குடைக்குள் மழை வந்து மிரட்டுகிறது. அதாகப்பட்டது அவள் இன்னொருவனோடு கூடியிருந்தது, அவளை இவன் கொலை செய்து விட்டது எல்லாமே அவனே செய்து கொண்ட கற்பனை. அடிக்கடி அப்பாவோடு பேசுவது கூட அப்படி ஒரு பிரமையே.

தான் சின்ன வயதில் மிகவும் நேசித்த அம்மா அப்பாவின் நண்பனோடு ஓடிப் போனதும், அவனது அப்பா அதைத் தாங்க முடியாமல் தன்னை மாய்த்துக்கொண்டதும் அவனை வெகுவாகப் பாதித்திருக்கிறது. அதன் பிறகு தனக்கென தனியொரு உலகத்தில் வாழ்கிறான். யாரையும் மனதளவில் நெருங்க விட்டதில்லை. அடிக்கடி அவனைப் பார்க்க வரும் அப்பாவோடு பேசிக்கொள்கிறான்.

நாயகனின் பிரச்சினை தெரிந்தும் அவனைத் தன் அன்பால் பராமரித்து இயல்பு நிலைக்குத் திருப்பி விடலாம் என்று விடாமல் காதலிக்கிறாள் நாயகி. அவனோ அவளை வெறுப்பது போல நடித்தால் வேறு ஒருவனை அவள் கல்யாணம் செய்துகொள்வாள் என நினைக்கிறான். கடைசியில் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.

கதை என்னவோ இவ்வளவுதான். ஆனால் திரைக்கதையில் வெகுவாக உழைத்திருக்கிறார்கள். அதைக் காட்டிலும் படத்தின் மிகப் பெரிய பலம் வசனங்கள்.

மனதில் நிற்க்க் கூடிய வசனங்கள் கரு.பழனியப்பன் படங்களின் சிறப்பு. பார்த்திபன் கனவு படத்தில் மணிவண்ணன் ஒரு பெண்ணுக்கு உதவுவார். அப்போது உடன் இருப்பவர் தவறாக கண்ணோட்டத்துடன் ஏதோ சொல்லும் போது, “ஒரு வயசுல எந்தப் பொண்ணப் பாத்தாலும் அம்மா மாதிரியே தெரியும். ஒரு வயசுல பொண்டாட்டி மாதிரியே தெரியும். ஒரு வயசுல மகள் மாதிரியே தெரியும். இந்தப் பொண்ணைப் பாக்கும் போது எனக்கு மக மாதிரித்தான் தெரியுது” என்று பேசுவது போல ஒரு வசனம் வரும். முதுமையின் விளிம்பில் இருந்த என் தாத்தா பார்த்து நெகிழ்ந்த வசனம் அது.

பழனியப்பன் இலக்கியப் பரிட்சயம் உள்ளவர் என்பதும், அவருக்கு உலகலாவிய பார்வை உண்டு என்பதும் அவரது படங்களில் பிரதிபலித்துள்ளது. இந்தப் படத்திலும் பல காட்சிகள்/வசனங்கள் அதற்குச் சான்று பகர்கின்றன.

• பெண்களுக்கு வேண்டியது அன்பான வார்த்தைகளும், சின்னச் சின்ன அங்கீகாரங்களும். கதாநாயகனின் அம்மா ஓடிப் போவதற்கு முன்பு ஒரு சில ஃபிளாஸ்பேக் காட்சிகளில் இதை நுட்பமாகக் காட்டியிருக்கிறார்கள்.

• நான் ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்ச உடனே அந்த ஸ்கூல்ல போய் அப்ளிகேஷன் வாங்கிட்டேன் – சந்தானம்

• கல்யாணம் பண்ணிக்க்கிட்டு தீபாவளிக்கும், பொங்கலுக்கும் கடை கடையா ஏறி இறங்கி ஷாப்பிங் செய்யற லட்சிய வாழ்க்கைய வாழுங்க – ஆரம்ப கட்டத்தில் நாயகன் சொல்வது

• மனநிலைச் சிக்கல் உடையவன் என்பது பார்வையாளர்களுக்கு வெளிப்படும் தருணத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், ஆனால் இடைவிடாமல், பேசும் வசனங்களை - மனசுல நினைக்கறதையெல்லாம் பேசுவதாக இருந்தால் இன்னைக்கு போதாது என்று டாக்டர் கூறுவது – ரசிக்க முடிகிறது. நக்சலைட்டுகளை துப்பாக்கி ஏந்திய காந்தி என்று அருந்த்தி ராய் வர்ணித்ததை துணிச்சல் என்று பாராட்ட முடிகிறது இவர்களால்.

• தன் பொண்டாட்டி மேல நம்பிக்கை இல்லாதவந்தான் அடுத்தவன் பொண்டாட்டியை தப்பா பேசுவான் – பிளாஷ்பேக்கில் பக்கத்து வீட்டு தாத்தாவிடம் அப்பா பேசுவது

• பார்க்கில் அப்பாவுடன் வாக்கிங் போகும் போது நாயகன் செய்யும் அறிவுப்பூர்வமான தர்க்கம் ஆரோக்கியமான அப்பா-மகன் உறவு இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்கு உதாரணம்.

• கதாநாயகனிடம் அடிக்கடி வந்து போகும் கால்கேர்ள் புரோக்கரிடம் சொல்கிறாள்: “இனி மேல் கதிர் கூப்பிட்டா என்னை அனுப்பாதே. அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னன்னு ஒரு நிமிசம் தோணுச்சு. அது அவருக்கும் நல்லதில்லை. எனக்கும் நல்லதில்லை”

• மருத்துவனையில் இருக்கும் கதிரைப் பார்க்க கால்கேர்ள் வரும் போது, “உடம்புல இளமை இருக்கும் போது போய் சம்பாதிக்கிற வழியப் பாரு. அத விட்டுட்டு ஆப்பிள், ஆரஞ்சுனு வாங்கி வந்து சீன் போடாதே” என்று காயப்படுத்தி திருப்பி அனுப்புகிறான். அவள் வெளியே போகும் போது நாயகியைப் பார்த்து, “எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு உனக்கு ஆம்பிளைகளைத் தெரியாது. உனக்கு இவன் ஒத்து வர மாட்டான். வேற நல்ல பையனா பாத்து கல்யாணம் செஞ்சுக்கோ” என்று அட்வைஸ் செய்கிறாள். அதற்கு நாயகி சொல்லும் பதில் பாக்யராஜ் படங்களை நினைவுபடுத்துகிறது. “உனக்கு எத்தனை ஆம்பிளைகளத் தெரியும்? ஒரு 500? அத்தனை ஆம்பிளைகளைத் தெரிஞ்ச உனக்கே கதிரை மட்டுந்தான் ஆஸ்பிட்டல் வந்து பாக்கணும்னு தோணுச்சு. எனக்கு கதிரை மட்டுந்தான் தெரியும்” என்ற அவளது பதில் பெண்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

• ”இந்த உலகத்துல கோபம் தாங்க முடியாதவங்க இருக்கலாம். அநியாயம் தாங்க முடியாதவங்க இருக்கலாம். வலி தாங்க முடியாதவங்க இருக்கலாம். ஆனா அன்பைத் தாங்க முடியாதவங்க இருப்பாங்களா? நீ அன்பைத் தாங்க முடியாதவனா இருக்கியே! நீ ரொம்ப பாவம் கதிர்” என்ற கிளைமேக்ஸ் வசனம் நெகிழ்ச்சி. தான் மிகவும் நேசித்த அம்மா தன்னை விட்டுப் போன பிறகு யாரையுமே ஏற்றுக்கொள்ளாத கதிர், தன் அம்மாவை நினைவுபடுத்துகிற நாயகியும் எங்கே யாருடனாவது ஓடி விடுவாளோ என்ற பயத்தில் அவளை ஏற்றுக்கொள்ளாமலே இருந்தவன், அந்த நெகிழ்ச்சியில் இளகுகிறான்.

• அதைக் காட்டிலும் 2010 இல் தமிழ்த் திரைப்படம் ஒன்றின் நாயகன் பழனியப்பன் என்ற பெயர் தாங்கி துணிச்சலாக நடிக்க முடிந்திருப்பது என்னைப் பொருத்த மட்டில் ஆரோக்கியமான ஒரு செய்தி.

• படம் துவங்கும் போது புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவதற்கு ஒரு டிஸ்கிளைமர் போடுவார்கள். இவர்கள் கூடவே கள்ளுண்ணாமை அதிகாரத்தில் (தப்பேன்றால் தமிழாசிரியர்கள் மன்னிக்க) ஒரு குறளையும் எடுத்துப் போட்டுக் காட்டுகிறார்கள்.

• மந்திரப் புன்னைகையில் சண்டைக் காட்சியே இல்லை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு சங்கதி. ஒரு விறுவிறுப்பான மனதைத் தொடுகிற நாவலை வாசிப்பது அல்லது உயர்தர மலையாளப் படம் பார்ப்பது போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது.

• குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு பிளஸ் தம்பி ராமையா. மனிதர் நகைச்சுவையிலும், குணச்சித்திர நடிப்பிலும் கலக்குகிறார். மைனாவிற்குப் பிறகு இதிலும் அவருக்கும் முக்கியமான பாத்திரம்.

குறை கண்டுபிடிப்பது என்று முடிவு செய்தால் எதிலும் எப்படியும் குற்றம் காணலாம். இந்தப் பட்த்தில் பலவீனம் என்று சொன்னால் விரசமான ஓரிரு காமெடி சீன்கள் - கிளி செத்துப் போச்சென்று கிண்டல் செய்வது. மேலும், ’பார்த்திபன் கனவு’ பட்த்தைப் போல இதில் பாடல்கள் எல்லாமே மனத்தில் நிற்கவில்லை. கேட்கக் கேட்க பிடிக்குமோ என்னவோ. இன்னொரு பலவீனம் இதற்கு முன்பே ’குடைக்குள் மழை’ வெளி வந்த்து. அதற்கு எந்த வகையிலும் கரு.பழனியப்பன் பொறுப்பல்ல என்பதால் மன்னித்து விடலாம்.

சென்சாரில் வசனங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. கரு.பழனியப்பனின் முந்தைய படங்களோடு ஒப்பிட்டால் இது அதிகம்தான் என்றாலும், கதையில் தீவிரம் மற்றும் பாத்திரத்தின் மூர்க்கம் காரணமாக அவை அமைக்கப்பட்டிருக்கலாம்.

பட்த்தின் பல காட்சிகள் உண்மையா அல்லது நாயகனின் பிரமையா என்று புரியவில்லை. உதாரணமாக ஊரில் படுக்கையில் கிடக்கும் பாட்டியைப் பார்க்கப் போவது உள்ளிட்ட காட்சிகள். அவற்றை ரசிகர்களின் யூகத்திற்கே விட்டு தியேட்டரில் உட்கார்ந்து யோசிக்க வைப்பதற்காக இருக்குமென்று தேற்றிக்கொண்டேன்.

சிறப்புக் காட்சி இடைவேளியின் போது கரு.பழனியப்பனிடம் உரையாடுகையில் தொடர்ந்து நடிப்பதாக உத்தேசமா என்று கேட்டேன். அதை நீங்கதான் சொல்லணும் என்றார். ஒரேயொரு படத்தில் நடித்ததை வைத்து உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

சொல்லப் போனால் இது இயக்குனர்களின் சீசன். மிஷ்கினின் நந்தலாலா, கெளதமனின் மகிழ்ச்சி, சுந்தர்.சியின் நகரம் என எங்கு நோக்கினும் இயக்குனர் நடித்த படங்கள். தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் நடிப்பது ஒன்றும் புதிதல்ல.

கடந்த ஏழு ஆண்டுகளில் 55 இயக்குனர்கள் கோடம்பாக்கத்தில் அரிதாரம் பூசியதாக ஒரு கட்டுரையில் வாசிக்க நேர்ந்த்து. ஆனால் அனைத்து இயக்குனர்களும் வெற்றிகரமான நடிகராக முடிவதில்லை என்பதே எதார்த்த நிலை.

ஒரு கதையைத் தீர்மானித்த பிறகு அதற்கேற்ற நடிகரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் பட்சத்தில் தானே நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு சில இயக்குனர்கள் ஆளாகிறார்கள். மந்திரப் புன்னகையில் கூட வேறு நடிகர்கள் யாரும் ஒப்புக்கொள்ளாததால் இயக்குனரே நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என அறிகிறோம்.

ஆனால் மந்திரப் புன்னையில் கரு.பழனியப்பன் ஒரு நடிகராக ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டிலும், இயக்குனராக ஏற்படுத்திய தாக்கமே அதிகமெனப் படுகிறது. தங்கர் பச்சான் இயக்கத்தில் சேரன் முதன்முறையாக நடித்த போது ஏற்பட்ட தாக்கம் கூட இதில் ஏற்படவில்லை.

புள்ளியியலாளர்கள் மொழியில் சொன்னால், one sample may not perfectly reflect the population. தாவணிக் கனவுகள் காலத்தில் மிகை நடிகராகத் தோன்றிய பாரதிராஜாவை ரெட்டச் சுழியில் பார்க்கும் போது தமிழ் சினிமா இத்தனை நல்ல நடிகனை பயன்படுத்தத் தவறிவிட்டதே என்ற அங்கலாய்ப்பு ஏற்படுகிறது.

பல வெற்றிப் படங்களை இயக்கிய மணிவண்ணன் பிறகாலத்தில் முழு நேர நடிகராக மாறி விட்டார். உண்மையில் இன்றைக்கு இயக்குனர் என்பதைக் காட்டிலும் நடிகராகவே அவர் அறியப்படுகிறார். இன்னொரு உதாரணம் சுந்தர்ராஜன்.

இயக்குனர்களே (கதாநாயக) நடிகர்களாக இருந்ததும், வெற்றி பெற்றதும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. பாக்யராஜ், அவரது சிஷ்யப் பிள்ளைகள், டி.ராஜேந்தர் பல ஆண்டுகள் கோலோச்சியிருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா ஒன்னொரு உதாரணம். சுந்தர்.சி இன்றைக்கு சி சென்டரிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடிகர். ’மாயாண்டி குடும்பத்தாரில்’ நடித்தது எல்லாமே இயக்குனர்கள்.

ஆகவே கரு.பழனியப்பன் நடிப்பதிலோ, நடிக்காமல் இருப்பதிலோ பிரச்சினை இல்லை. அவருக்கு ஏற்ற கதையாக இருந்தால் சரி. சேரனின் ’மாயக் கண்ணாடி’ போல எதையாவது முயன்று தொலைக்காமல் இருக்க வேண்டும். கரு.பழனியப்பன் நடைமுறை மனிதர். அவருக்கே தெரியும்.

மற்றபடி மந்திரப் புன்னகை வித்தியாசமான முயற்சி என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது; கூடவே வலைப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சியும்.

Wednesday, November 24, 2010

நல்ல படம்

நண்பர் உண்மைத் தமிழன் புண்ணியத்தில் ஒரு நல்ல படம் பார்த்தேன்.

மந்திரப் புன்னகை

அது குறித்து விரைவில் எழுத வேண்டும்..