Sunday, May 15, 2011

தேர்தல் முடிவுகள்!

- செல்லமுத்து குப்புசாமி

இந்த தேர்தல் முடிவுகள் பல வகைகளில் கவனிக்க வேண்டியவை. தீதி என்றும், அம்மா என்றும் அழைக்கப்படும்  இரண்டு செல்விமார்கள் முதலமைச்சர் பதவியைப் பிடிக்கிறார்கள்.

தீதி மம்தா பானர்ஜி முப்பதாண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்கத்தில் நிலவிய மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்பது கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே உறுதியாகிவிட்ட்து. ஆகையால் அதிக கவனமும் ஆச்சரியமும் தந்தது ஜெயலலிதாவின் வெற்றிதான்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்னதாக திமுக கூட்டணி எப்படியும் வென்றுவிடும் என்பதே எனது கணிப்பாக இருந்த்து. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊடக பலம் மற்றும் அவர்களது பணபலம் மட்டுமல்லாது கிராமப் ப்குதிகளில் நான் உரையாட நேர்ந்த பலருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்சினையாகவே இல்லை. கேஸ் சிலிண்டர், கலர் டிவி, இலவச கான்கிரீட் வீடு என பல முனைகளிலும் கவர்ந்த ஒரு ஆட்சியாகவே அவர்கள் நோக்குவதாக உணர்ந்தேன்.

சென்னையில் இருந்து திருவாரூருக்கு இடம் மாறிய போது ஒரு வேளை கருணாநிதி எதிர்பார்த்தாரோ என்னவோ! வழக்கத்துக்கு மாறான சராசரிக்கும் அதிகமான வாக்குப்பதிவு விழுக்காடு எப்போது ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் கருத்தின் பிரதிபலிப்பாக உறுதியான போது கலைஞரின் கணிப்பு மீது மரியாதை கூடியது.. அப்போதும் கூட அ.தி.மு.க கூட்டணி 140 இடங்களுக்கு மேல் வெல்லும் என யாரும் யூகிக்கவில்லை. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் வெகுஜன மக்களை ஜனரஞ்சக ரீதியாக கேளிக்கையூட்டி வைத்திருந்த நிர்வாகமே இங்கே இருந்த்து.

ஆகையால் கீழ்க்கண்ட அம்சங்கள் கவனத்தைப் பெறுகின்றன.

குடும்ப அரசியல் என்பதும், வாரிசு அரசியல் என்பதும் இந்திய ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை எதார்த்தம் ஆகிவிட்ட்து. இருந்த போதும் கருணாநிதி குடும்பத்தைப் பொறுத்த மட்டில் ஏனோ ஒரு வகையில் அது மக்கள் மனதில் பாதித்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல், ராசா கைது முதலிய விவகாரங்கள் கிராமப்ப்புறங்களைத் தவிர்த்து எல்லோரையும் எட்டியிருக்கின்றன. கிராமங்களில் கூட இவர்கள் இலவசமாக்க் கொடுத்த டிவி மூலமாகவே மக்கள் செய்தியைத்    தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இலவச வாக்குறுதிகள் மூலம் ஆட்சியைப் பிடித்த திமுக இந்த்த் தேர்தலிலும் அதே மாதிரி செயல்பட்ட்து. அதை விட ஒரு படி அதிகமாக உறுதிமொழி கொடுத்து அதையும் ஜெயல்லிதா சமன் செய்து விட்டார்.

தேர்தல் கமிசனை நேரடியாகவே குற்றம் சாட்டி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட்து தி.மு.க.

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் வருகிறது என்ற போக்கு நிலவினாலும் மிக சாதுர்யமாக விஜயகாந்தை தனியாக நிற்க விடாமல் (தி.மு.க எதிர்ப்பு ஓட்டுகளை சிதறவிடாமல்) அரசியல் செய்திருக்கிறார் அம்மையார்.

நான் 1984 இல் இருந்து தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வந்த்தில் 1989 (மும்முனைப் போட்டி) தவிர எல்லா முறையும் காங்கிரஸ் கட்சியோடு (அல்லது தமிழ் மாநில காங்கிரஸ்) கூட்டணி வைத்த கழகமே ஆட்சிக்கு வந்திருந்த்து. இந்த முறை அந்த டிரண்ட் தகர்க்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் சீமான். காங்கிரஸை தமிழ்நாட்டில் இருந்து அழிக்க வேண்டும் என்ற உங்கள் வேலையை காங்கிரஸ்கார்ர்களே செம்மையாக செய்கிறார்கள் என்று தோன்றுகிறது.

எப்போதுமே வெற்றி பெறும் அணியோடு சாதுர்யமாக கூட்டணி வைக்கும் வித்தகர் ராமதாசின் கால்குலேஷன் தொடர்ந்து இரண்டாவது முறையாக மிஸ் ஆகியிருக்கிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினை திமுக+காங்கிரஸுக்கு எதிராக எதிரொலிக்கும் எனக் கருதிய அவர் சறுக்கினார். வழக்கமாக ஜெயிக்கும் பக்கம் தாவும் அவர் இப்போது தொடர்ச்சியாக தோற்கும் அணியைத் தேர்ந்தெடுத்திருப்பதில் ஆறுதல்.

இந்த்த் தேர்தல் தரும் இன்னொரு ஆறுதல் ஜாதிவாரியான கட்சிகள் பெருமளவு ஜொலிக்காத்து. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி, முந்தா நாள் முளைத்த கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோருக்கு மக்கள் அளித்த தீர்ப்பு.

எது எப்படியோ! தமிழகத்தில் ஆட்சி மாறியிருக்கிறது. அடிப்படையில் திமுக, அதிமுக இரண்டுமே ஒரே மாதிரியான அமைப்புகள்தான். ஜெயல்லிதாவுக்கு தமிழினத்தின் எதிரி என்ற முத்திரை எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் அவரை விமர்சிப்பது எல்லோருக்கும் எளிதாக இருந்திருக்கிறது. தமிழினத்தின் பாதுகாவலர் என்ற போர்வையில் இருந்த கருணாநிதி காங்கிரஸ் தயவில் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக தமிழினம் அழிவதை மெளனமாக வேடிக்கை பார்த்த வரலாற்றுப் பிழையைத் தவிர்த்திருக்கலாம்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருக்கும் போது ராஜினாம செய்த கருணாநிதிக்குள் இருந்த போராளி முதலமைச்சராக இருந்த போது காணாமல் போனது புரிந்துகொள்ளக் கூடியதே. காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இராமல் பதவியை அப்போதே ராஜினாமா செய்திருந்தால் அப்போதே தேர்தல் வந்து மீண்டும் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்திருப்பார்.

கருணாநிதிக்கு மக்கள் ஓய்வும் கொடுத்திருக்க மாட்டார்கள்!!

By the way, இடைத் தேர்தலில் ஐந்து இலட்சம் + வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஜெகன்மோகன் ரெட்டியின் சாதனை :-)

2 comments:

Prabu said...

படித்த மக்கள் மட்டுமே திமுக தனது திட்டங்களாலும், பணத்தாலும் வரும் என்று நம்பி இருந்தார்கள். கிராமபுறங்களில் எனது விரிவான பயணங்களில் கண்டது என்னவோ ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்ற அலையையே. கிராமங்களை பாதித்தது உண்மையில் விலைவாசிதான். 2 ஜி பற்றி எல்லோரும் பேசினார்களே தவிர அது யாரையும் கிராமங்களில் நேரடியாக பாதிக்கவில்லை. அடுத்தது நூறுநாள் வேலை உறுதி திட்டம் மூலம் விவசாயத்துக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி கூலியின் அளவை மிக அதிகமாக்கியது. மின்வெட்டு விவசாயத்தை மட்டுமல்லாது, சிறுதொழில்களை கடுமையாக பாதித்தது.
குடும்ப அரசியல் என்பது கலைஞரின் குடும்ப அரசியல் மட்டுமன்று. மாவட்டம், வட்டாரம், வட்டம், சதுரம், முக்கோணம் என பலவாறு பரவிக்கிடந்தது.
தாரபுரத்திலிருந்து கள்ளிமந்தயம் வரை சேர் ஆட்டோ ஓட்டகூட மாவட்ட, வட்டங்கள் சிபாரிசு செய்தவர்கள் மட்டுமே ஓட்ட முடியும் என்றுதான் நிலைமை இருந்தது. எங்கேயாவது தாலுக்கா அலுவலக வாசலில் ஜெராக்ஸ் கடை வைக்ககூட கடுமையான சிபாரிசுகள் இருந்தால் மட்டுமே முடியும் என்ற நிலைமை. இது ஜனநாயக நாட்டில் ஒரு மோசமான நிலைமை. சம்பளம் வாங்கும் மக்கள் இதை உணருவது சற்று கடினமே. இது போன்ற பல உண்டு.

பெரிய எருமை சைசில் காதைபிளக்கும் ஹார்ன் சத்தத்துடன் நகர வீதியில் அறுபது எழுபது கி மீ வேகத்தில் பறக்கும் அமைச்சர் படையின் கார்கள். மற்ற சாலைகளை சொல்லவே வேண்டாம். தூரத்தில் இவர்களின் வாகனங்களை கண்டாலே நாம் நிறுத்தி ஓட்ட வேண்டிய நிலைமை. இல்லையெனில் ஏகத்துக்கும் திட்டிவிட்டு போவார்கள். ஏதோ ராணுவ ஆட்சி நடப்பதுபோல ஒரு தோற்றம் கொடுத்தார்கள். சேலம், திண்டுக்கல், திருச்சி, மதுரை என ஒவ்வொரு பகுதிக்கும் இருந்த குறுநில மன்னர்கள் பொதுமக்களை படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல.

இப்போது என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

Anonymous said...

Like Sridevi comes to railway station with the expectation of arrival of kamal in "16 vayadhinele" film, i daily comes to your blog for a new write up for the past one year.