Saturday, December 08, 2012

கமலின் விஸ்வரூபம் DTH


சில ஆண்டுகளுக்கு முன் நான் ஹைதராபத்தில் இருந்தேன். எல்லா புதிய தமிழ்ப் படங்களும் சிடியில் உடனே வந்து விடும். ஒரு முறை பாரதிராஜவின் மகன் மனோஜ் நடித்த படத்தின் சிடியை வாங்கினோம். அந்தப் படம் வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. ஆனாலும் நாங்கள் சிடி வாங்கி வந்த மூன்றாம் நாளே அந்தப் படம் சன் டிவியில் ‘தமிழ்த் தொலைக் காட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக’ வந்து விட்டது.

புதிய படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால் அதிகம் பாதிக்கப்படுவது திருட்டு விசிடி இண்டஸ்ட்ரி தவிர வேறெதுவும் இல்லை. தியேட்டர் தொழிலுக்கு ஓரளவு பாதிப்பு இருக்கலாம்.

Kamal Viswaroopam


இந்தப் பின்னணியில் தனது விஸ்வரூபம் படத்தை நேரடியாக DTH மூலம் இல்லத் திரைகளில் ஒளிர விடும் நடிகர் கமல்ஹாசனின் புதிய அணுகுமுறையை நாம் கவனிக்க வேண்டும். சில மேலை நாடுகளில் இது நடைமுறையில் இருக்கிற விஷயம்தான். பொருளைத் தயாரிக்கிறவன் அதை உபயோகிப்பவனிடம் நேரடியாகக் கொண்டு செல்வதற்குத் திராணி இருக்கும் பட்சத்தில் அதைத் தடுக்கவோ, எதிர்க்கவோ முயற்சிப்பது முறையல்ல.

தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் இதனை குய்யோ முறையோ என்று கூச்சலிடுவது ஒன்றும் புதிதில்லை. புதிய முயற்சிகளை நாம் ஊக்குவிக்காமல் இருப்பது மட்டுமல்ல, அவற்றைத் தீவிரமாக எதிர்ப்பதும் மனித இயல்பு. உலக நாயகன் என அறியப்படும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் DTH மூலம் ஒளிபரப்பாகுமானால் அது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான மைல் கல்லாக அமையும்.

அதிகாரம் வர்க்கம் தான் நினைப்பதையெல்லாம் (உதாரணத்துக்கு கூடங்குளம்) குரல்வலையை மிதித்து மக்கள் மீது திணிக்கும் இந்தக் காலத்தில், காவிரி நீர் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு போட்டாலும் அதைத் துச்சமாக மதிக்கும் இந்தக் காலத்தில், ஒரு நடிகன் - ஒரு வியாபாரி - தனது படத்தை தான் நினைத்த ஊடகத்தில் வெளியிட எதிர்க்கும் ஆட்களும் இருக்கிறார்கள்.

மாற்றம் ஒன்றுதான் மாற்றமின்றி நிலைக்கும்.

Wednesday, December 05, 2012

சாரு நிவேதிதா going global

சாரு நிவேதிதா பரபரப்புக்குச் சொந்தக்காரர். அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு Morgue Keeper என்ற பெயரில் Kindle நூலாக வெளிவந்திருக்கிறது.

Sunday, December 02, 2012

'Warren Buffett - an Investography' புத்தகம்

- Chellamuthu Kuppusamy

Warren Buffett - an Investography என்ற புத்தகத்தைப் பற்றிய தகவலைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.இது அமேசான் இணையதளத்தில் kindle ebook ஆக வெளிவந்துள்ளது.

Thursday, November 29, 2012

பர்சனல் ஃபைனான்ஸ் தொடர்


மல்லிகை மகள் நவம்பர் இதழில் இருந்து

சென்னையில் உள்ள பிரபலமான கேட்டேட் கம்யூனிட்டி ஒன்றில் சமீபத்தில் இரண்டு பெண்கள் பேசுவதைக் கேட்க நேர்ந்தது. அவர்களது குழந்தைகள் பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்க பரஸ்பரம் புன்னகையைப் பரிமாறியபடி அவர்கள் தங்களை பரிட்சயம் செய்து கொள்கிறார்கள்.

Monday, November 26, 2012

The Science of Stock Market Investment புத்தகம் அதிரடி ஆஃபர்

- செல்லமுத்து குப்புசாமி


“The Science of Stock Market Investment - Practical Guide to Intelligent Investors” புத்தகத்தின் விலையில் 100% தள்ளுபடி. 

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

1. The Science of Stock Market Investment நூலின் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்.
2.   புத்தகத்தை http://www.amazon.com/dp/B009XUI1X6 என்ற லிங்கில் வாங்குங்கள். முழுமையாக வாசித்த பின் அமேசான் தளத்தில் சில வரிகள் புத்தகத்தைப் பற்றி எழுதுங்கள். (அமேசான் Kindle நூலை எப்படி கணிப்பொறியில் வாசிப்பது என்பது குறித்தான பதிவு) உங்களது கமெண்ட் பாசிட்டிவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியல் இல்லை. மனதில் பட்டதை நேர்மையாகச் சொல்லுங்கள்.
3.  ஒரு விமர்சனத்தை உங்களது ஃபேஸ்புக் பக்கம், கூகிள் பிளஸ் மற்றும் வலைப்பக்கத்தில் (வலைப்பூ எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்) சில வரிகள் எழுதி புத்தகத்திற்கான அமேசான் லிங்க்கையும் கொடுங்கள்.
4.  புத்தகம் வாங்குவதற்கு ஆன செலவை 100% திரும்பப் பெறுங்கள்.

Friday, November 16, 2012

சென்னை பங்குச் சந்தை இயக்குனர் நாகப்பன் புத்தக முன்னுரை


திரு.நாகப்பன் சென்னை பங்குச் சந்தையின் இயக்குனர். முன்னணி டிவி சேனல்களிலும், இதழ்களிலும் பங்குச் சந்தை முதலீடு குறித்து தனது கருத்துக்களைத் தொடர்ச்சியாக பகிர்ந்து வருபவர். நாணயம் விகடன் பத்திரிக்கை ஆரம்பித்த சில வாரங்களிலேயே எங்களுக்குள் பரிட்சயம் ஏற்பட்டது. சென்னை பங்குச் சந்தையில் வழக்கமாக நடைபெறும் முதலீட்டாளர் பயிற்சி வகுப்பு ஒன்றில் உரையாட அழைத்துக் கெளரவித்தார்.

The Science of Stock Market Investment - Practical Guide to Intelligent Investors என்ற நூலுக்கு முன்னுரை எழுதித் தர வேண்டும் என்ற வேண்டுகோளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, புத்தகத்தை முழுமையாக வாசித்து அருமையானதொரு foreword தந்திருக்கிறார். நாகப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

பங்குச் சந்தை பற்றிய புத்தகத்தின் முன்னுரையை முழுமையாக வாசிக்க..

Saturday, November 10, 2012

வல்லமை - The Science of Stock Market Investment

வல்லமை இதழில் வெளியான புத்தக அறிமுகம்.

பங்குச் சந்தை முதலீடு பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன்ன. எல்லாப் புத்தகமும் தன்னளவில் ஒரு அடிப்படைக் கோணத்தை நமக்கு ஊட்டுகின்றது. சில புத்தகங்கள் அவற்றில் சொல்லியிருக்கிற விஷயத்தின் ஸ்திரத்தன்மை காரணமாக காலத்தை வென்று நீடித்து நிலைத்து விடுகின்றன. சில புத்தகங்கள் செய்தித்தாளைப் போல நாளைக்கு பழசாகிப் போவதும் உண்டு. காலத்தைக் கடந்து நிற்கிற புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஒரு அம்சம் இருக்கும். அது வாசிக்கிற வாசகர் மனதில் சிந்தனை மாற்றத்தை உண்டுபண்ணுவது. அல்லது ஒரு குறிப்பிட்ட சங்கதியை நோக்கி அணுகும் பார்வையை மாற்றுவது. சரியான பார்வையில் நோக்குமாறு பார்க்கத் தூண்டுவது.

அப்படியாகப்பட்ட புத்தகங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வாசகர்களுக்காக எழுதப்பட்டு, வேறு வழியில்லாமல் இந்திய வாசகர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டவை. பங்கு முதலீட்டின் அடிப்படை சாராம்சங்களை இந்திய பங்குச் சந்தை தொடர்பான உதாரணங்களோடு வெளிக்கொணர்ந்த புத்தகங்கள் வெகு சிலவாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் The Science of Stock Market Investment - Practical Guide to Intelligent Investors by Chellamuthu Kuppusamy

பொதுவாக ஒரு துறை சார்ந்த நூல்கள் அது தொடர்பான டெக்னிகல் சொற்களைக் கூடுதலாகக் கொண்டிருக்கும். படிக்கிற எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கும் என்ற நினைப்பில் அப்படியான புத்தகங்களை எழுதிகிறார்களா அல்லது நாங்கள்தான் வல்லுனர் கூட்டம், படிக்கிற நீங்களெல்லாம் பாமரர்கள், என்ன வேண்டுமானாலும் எங்களைச் சார்ந்துதான் நீங்கள் இருந்தாக வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா தெரியவில்லை. செல்லமுத்து குப்புசாமியின் The Science of Stock Market Investment மிகவும் அடிப்படையான விஷயங்களை, ஆழமாகவும், எளிமையாகவும் விளக்குகிறது.

பங்குச் சந்தை என்பது பெரிய கம்ப சூத்திரமல்ல. அதே நேரத்தில் அது சூதாட்டமுமல்ல. தொடர்ச்சியாக தன்னை மேம்படுத்திக்கொள்ள முனையும் ஒருவனால் முழுமையான முதலீட்டாளர் ஆக முடியும். நாம் முதலில் முதலிட வேண்டியது நமது அறிவை. பிறகு கொஞ்ச நேரத்தை. அதற்குப் பிறகுதான் பணத்தை என்று இந்தப் புத்தகம் வலியிறுத்துகிறது. (ஆனால் அநேகம் பேர் இந்த வரிசையில் கடைசியில் தொடங்குகிறார்கள். முதல் படியைத் தொடுவதேயில்லை) அறிவை முதலீடு செய்வதென்று முடிவெடுத்தால் அதற்கான முக்கியமான படியாகவும் இந்தப் புத்தகம் அமையும்.

முதலில் கதை சொல்வதைப் போலத்தான் புத்தகம் ஆரம்பிக்கிறது, கடற்கரையில் காலை நனைப்பதைப் போல. பிறகு போகப் போக நமக்கே தெரியாமல் உள்ளே இழுத்துச் சென்று மூழ்கி முத்தெடுப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. முத்துக் குளிப்பதும், மூச்சையடக்குவதும் இவ்வளவுதானா என ஆகி விடுகிறது. கம்பெனி என்றால் என்ன, பங்குதாரர்கள் யார், மேனேஜ்மெண்ட் என்ன, டைரக்டர்களின் பாத்திரம் என்ன, பங்குச் சந்தைகள் எனப்படும் ஸ்டாக் எக்சேஞ்ச்களில் என்ன செய்கின்றன, ஷேர் புரோக்கர்கள் யார், அவர்கள் நம்மைப் பயன்படுத்திக்கொள்ளாமல் நாம் அவர்களை எப்படிப் பயன்படுத்துவது,  சென்செக்ஸ்-நிஃப்டி என்றெல்லாம் பேசுகிறார்களே அது என்ன, அதில் என்னென்ன கம்பெனிகள் இருக்கின்றன, அதை ஒரு அளவுகோலாகக் கொண்டு பொதுவான பொருளாதாரத்தையும், ஒரு தனி நபரின் முதலீட்டு வெற்றியையும் ஒப்பிடலாமா, அப்படி ஒப்பிட்டால் எப்படி நம்மை நாமே அளந்து கொள்வது, IPO எனப்படும் பிரைமரி மார்க்கெட் - அதில் கவனிக்க வேண்டிய பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது புத்தகம்.

பிறகு முதலீட்டாளர்களுக்கும், சூதாடிகளுக்குமான வேறுபாட்டைப் புலப்படுத்துகிறது. தன்னை முதலீட்டாளர் என நினைத்துக்கொண்டு உண்மையில் சூதாட்டம் செய்துகொண்டிருக்கும் ஆட்களை இது எச்சரிக்கிறது. சூதாடியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி இருப்பதே தெரியாமல் இருப்பதில் உள்ள சிக்கலை உணர்த்துக்கிறது. யாரோ சொன்னார்கள், பத்திரிக்கையில் எழுதினார்கள், பிசினஸ் நியூஸ் சேனலில் ஆலோசனை கூறினார்கள் என்றெல்லாம் முதலீடு செய்யாமல் சுயமாக ஆராய்ந்து குறை நிறைகளை சீர் தூக்கிப் பார்த்த பின் முதலீடு செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு மனிதன் தான் எடுக்கும் முடிவுகளுக்கும், தனது செயல்களுக்கு தானே பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவது எல்லா இடத்திலும் நல்லது. பங்குச் சந்தையில் கூடுதலாக நல்லது. அதே போல அளவுக்கு அதிகமான ஆசையை வளர்த்து, பங்குச் சந்தையில் ராவோடு ராவாக கோடீஸ்வரர் ஆகி விடலாம் என நம்பும் மடத்தனத்தையும் எச்சரிக்கிறார் செல்லமுத்து குப்புசாமி. அளவான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு இயங்குவோர் நிபுணர்கள் என தம்மை அழைத்துக்கொள்வோரை விட கூடுதலான வெற்றியை ஈட்ட முடியும் என்பதைப் புரிய வைக்கிறார்.

உலகமே போற்றிய விஞ்ஞானி ஐசக் நியூட்டனே பங்கு விலை அதிகமாக இருக்கிறடு என்று முதலீடு செய்வதத் தவிர்த்திருக்கிறார். மார்க்கெட் ஏறிக்கொண்டே போயிருக்கிறது. அவர் வேண்டாம் என நினைத்த விலையை விட அதிக விலைக்கு பிற்பாடு வாங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் ஒரேயடியாகச் சரிந்து கிட்டத்தட்ட போண்டியாகி விட்டாராம். நியூட்டனுக்கே அந்த நிலையென்றால் யோசிக்க வேண்டும் என்கிறார் செல்லமுத்து. பங்கு முதலீடு முழுக்க முழுக்க கலையுமில்லை, முழுக்க முழுக்க வாய்ப்படுகளால் அடக்கி விட முடிகிற விஞ்ஞானமும் இல்லை. இவை இரண்டும் மானுடமும், உளவியலும் கலந்த கலவை.

அடுத்தபடியாக, பணவீக்கம், வட்டி வீதம், இவை இரண்டும் பங்குச் சந்தை முதலீட்டையும் ஏனைய பிற முதலீடுகளையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அத்தியாயம் வருகிறது. பணத்தின் ஆற்றல், காலத்தின் ஆற்றல் மற்றும் இவை இரண்டும் சேர்ந்தால் உண்டாகும் சூப்பர் பவர் பற்றிப் பேசுகிறது. உதாரணங்களோடு தெளிவாக விளக்குகிறது. ஐன்ஸ்டீன் power of compounding ஐ எட்டாவது அதிசயம் என்று சொன்னதை நினைவூட்டுகிறது. அதன் பின்னர், இலாபம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ நஷ்டம் அடையக் கூடாது என்பதை ஒரு அத்தியாயம் வலியுறுத்துகிறது. 

இப்படி விளையாட்டு விதி முறைகளைப் பற்றிச் சொல்லி விட்டு, விளையாடுவதற்குக் கற்றுக்கொடுக்கும் அத்தியாயங்கள் வருகின்றன. பங்குகளை எப்படி ஆராய்வது, ஒரு பிசினசை எப்படி மதிப்பீடு செய்வது, பேலன்ஸ் ஷீட், லாப நட்டக் கணக்கு, பங்கு வல்லுனர்கள் உபயோகப்படுத்தும் பல நம்பர்கள், குறியீடுகள், அளவிகள், அவற்றில் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள் எல்லாவற்றையும் அலசுகிறது. பிறகு பல்வேறு முதலீட்டு அணுகுமுறைகளை அலசுகிறது. Value investor Vs growth investor, அடிப்படை ஆயுவு Vs டெக்னிகல் ஆய்வு, டிவிடெண்ட்கள், போனஸ், ஸ்பிலிட், உரிமைப் பங்குகள் முதலிய கார்ப்பரேட் நடவடிக்கைகளை நமக்குப் புரிய வைக்கிறது.

அதன் பிறகு எனக்குப் பிடித்த ஒரு அத்தியாயம் வருகிறது. ராகுல் திராவிட் பேட்டிங் ஸ்டைலை ஆராய்ந்து அதை எப்படி பங்கு முதலீட்டுக்கு முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வெகு இலாவகமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளர் வாரன் பஃபட் உபயோகித்த ஆர்பிட்ரேஜ் அணுகுமுறை விளக்கப்படுகிறது. வாரன் பஃபட் மற்றும் அவரது குருநாதர் பெஞ்சமின் கிரஹாம் பயன்படுத்திய, பயன்படுத்தச் சொல்லி மற்றவர்களை ஊக்கப்படுத்திய உத்திகளை எல்லாம் விளக்குகிறார் செல்லமுத்து குப்புசாமி. நல்ல கம்பெனியாக இருந்தாலும் மோசமான மேனேஞ்மெண்ட் இருந்தால் ஆபத்து என்பதற்காக ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருக்கிறார். பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய அடிப்படைத் தவறுகளைப் பட்டியலிடுகிறார். வாரன் பஃபட் கூட ஒரு தருணத்தில் தனது முதலீட்டு வாழ்வில் செய்த அபத்தமான தவறுகளைப் பட்டியலிட்டிருந்தார். தான் செய்த தவறுகளில் இருந்து மட்டுமல்லாமல், பிறரது தவறுகளில் இருந்து பாடம் கற்பதற்கு இந்த அத்தியாயம் உதவும். இன்னும் சில அத்த்தியாயங்களின் பெயர்கள் நான் இங்கே குறிப்பிடவில்லை. அதற்காக அவை முக்கியமில்லை என்றல்ல என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.

குறிப்பாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு அத்தியாயம் Behavioral Finance தொடர்பானது. பலரும் அலட்சியப்படுத்தும் ஒரு துறை. இதைப் பற்றியே பல ஆயுவுகளை வெளியிட முடியும் என்று சொல்லும் நூலாசிரியர், பங்கு முதலீட்டில் இது செலுத்தும் ஆதிக்கம், அது எவ்வாறு முடிவுகளைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்குகிறார். பிறகு தன்னைத் தானே தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். கூடவே பொருளாரத் துறையின் பிற சங்கதிகளைப் பற்றி ஒரு அத்தியாயத்தில் பேசுகிறார். அது எவ்வாறு பங்கு முதலீட்டைப் பாதிக்கிறது என்பதை விளக்குகிறார். முடிவாக மேலதிகத் தகவல்களை எப்படிப் பெறுவது, ஏதேவது பிரச்சினை என்றால் எங்கே முறையிடுவது, விதிமுறைகள், நெறிமுறைகள் பற்றியெல்லாம் விளக்குகி ஆல் த பெஸ்ட் சொல்கிறார்.

மிகவும் நல்ல முயற்சி. ஊக்குவிக்கப்பட வேண்டியது. ஏனென்றால், இது தியரியாக வறட்சியான விஷயங்களைப் பற்றி மட்டும் பேசாமல் நடைமுறை உதாரணங்களைக் கொண்டிருக்கிறது. படிக்கிற விஷயத்தை இலகுவாக செயல்படுத்துவதில் சிக்கலில்லாத அருமையான நூல்.

Thursday, November 01, 2012

மல்லிகை மகள் தொடர்

- செல்லமுத்து குப்புசாமி


//"நன்றாகப் படிக்க வேண்டும். நல்ல கம்பெனியில், நல்ல வேளையில் சேர்ந்து செட்டில் ஆகி விட வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெருவதற்கான சூத்திரம் இதுதான்."  நமது பெற்றோரும், கல்வி அமைப்புகளும், சமூகமும் குழந்தைப் பருவம் முதல் கிளிப்பிளைக்குச் சொல்வதைப் போல இதைச் சொல்லிச் சொல்லியே நம்மை ஆளாக்கி வளர்க்கிறார்கள். நண்பன் பட 'வைரஸ்' சத்யராஜ் போல எடுத்தவனை ஏறி மிதித்து மேலே வந்தால்தான் வெற்றி என்கிறார்கள். ஒருவர் ஜெயிக்கிறான் என்றால் மற்ற எல்லோரும் தோற்றுப் போகிறோம் என்று நம்ப வைக்கிறார்கள். எல்லோரும் ஜெயிக்க இந்த உலகத்தில் இடமிருக்கிறது என்பது புரிவதில்லை. அப்படிப்பட்ட சிந்தனையே இருபது ஆண்டுகள் நமக்குள் செலுத்தபடுகிறது.

 
மனிதர்கள் தாமாகத் தமது சொந்தக் காலில் நிற்க ஆரம்பிக்கும்போது நிஜ உலகத்தை  அவர்கள் எதிர்கொள்கிறார்கள். அதன் நிதர்சனங்கள் முகத்தில் அறைகின்றன. அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டதும், சொல்லப்பட்டதுமான ஏட்டுக் கல்விக்கும் நடைமுறை வாழ்வின் எதார்த்தத்துக்குமான முரண்பாட்டைக் கண்டு குழப்பத்தில் ஆழ்கிறார்கள். //


மல்லிகை மகள் மகளிர்  இதழில் பர்சனல் பைனான்ஸ் பற்றிய தொடர் ஒன்று எழுதுகிறேன். 

அதிலிருந்து சில வரிகள் மேலே. 

ஷேர் மார்க்கெட் புத்தகம் The Science of Stock Market Investment

அனைவருக்கும் வணக்கம்.

 பங்குச் சந்தை முதலீடு தொடர்பான எனது இழக்காதே புத்தகம் வெளியாகி கிட்டத் தட்ட ஐந்தரை ஆண்டுகள் ஒடி விட்டன. புத்தகம் எப்படி ஓடியது என்பது விவாதத்துக்குரியது. அள்ள அள்ளப் பணம் மாதிரி ஒரு வசீகரமான தலைப்பை வைத்திருக்கலாம். Anyway இழக்காதே நூலை ஆங்கிலத்தில் வெளியிட வேண்டும் என்ற முயற்சியும், சில நண்பர்களது வேண்டுகோளும் தொடர்ந்தபடியேதான் இருந்தது.

இப்போது அது சாத்தியமாகி  உள்ளது. பல சேர்க்கைகள், மற்றும் கால ஓட்டத்தில் செய்யப்பட வேண்டிய அப்டேட்கள் அனைத்தும் செய்யப்பட்டு, The Science of Stock Market Investment - Practical Guide to Intelligent Investors என்ற தலைப்பில் அமேசான் இணையதளத்தில் ebook ஆக வெளிவந்துள்ளது. அதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

ஒரு பதிப்பகத்தின் வாயிலாக இல்லாமல் சுயமாக புத்தகத்தை  வெளியிடுவதில் ஏராளமான  சவால்கள் உள்ளன. அட்டைப்பட வடிவமைப்புக்கு காசு கொடுத்து அதை தயார் செய்வது, சுயமாக மெய்ப்புப் பார்ப்பது, இன்னொருவரை வைத்து எடிட் செய்வது என சகலமும் நாமே செய்தாக வேண்டும். ஒரு வழியாக இது வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி. 


இது அச்சுப் புத்தக வடிவில் இல்லாமல் மின் புத்தகமாக வாசிக்க கூடியது. செல்போன் மாதிரி Kindle என்றொரு சிறு உபகரணம் மூலமாக கணக்கில்லாத மின்னூல்களை வாசிக்க இயலும். அச்சுப் புத்தகம் வாசிப்பது போன்ற உணர்வையே அது தரும். பார்ப்பதற்கு புத்தகம் போலவே இருக்கும். ஒரு புத்தக சைசில் பல லைப்ரரிகளை இலகுவாக எடுத்துச் செல்லலாம்.

சொல்லப் போனால் இத்தகைய மின் புத்தகங்களை வாசிப்பதற்கு Kindle உபகரணம் கட்டாயம் தேவை என்றில்லை. Kindle for PC என்ற சாப்ட்வேரை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தாலே போதும். 

அமேசான் இணைய தளத்தில் புத்தகத்தை வாங்கி விட்டு அந்த file ஐ கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்துகொண்டு Kindle for PC மூலம் வாசித்துக் கொள்ளலாம். 

Friday, September 28, 2012

கணக்கு டீச்சர் கள்ளக் காதல்

- செல்லமுத்து குப்புசாமி

நேற்று வரைக்கும் என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இன்றைக்கு கதை வேறு. ஒட்டு மொத்த லண்டனுமே என்னைப் பற்றித்தான் பேசுகிறீர்கள். அட் லீஸ்ட் பேப்பர் படிப்பவர்களும், டிவி பார்ப்பவர்களும்.இன்னும் சில நாட்களுக்கு இது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.  பிரேக்கிங் நியூஸ் அப்டேட்களுக்கும், அம்பலமாகும் ரகசியங்களுக்கும் குறைச்சல் இருக்காது.


இப்போது கூட ரஹீமின் நண்பரது வீட்டு வரவேற்பறையில் உள்ள டிவியில் எங்களைப் பற்றி ஓடிக்கொண்டிருக்கும் செய்தியைப் பார்த்தபடியேதான் இந்தக் கடிதத்தை எனது ஐபோனில் டைப் செய்துகொண்டிருக்கிறேன்.  நாங்கள் இப்போது பிரான்சில் இருக்கிறோம் என்பது இங்கிருந்து கேத்திக்கு நான் அனுப்பிய மெசேஜில் இருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில்  நாங்களிருக்கும் இடத்தையும் போலீஸ்காரர்களும், மேடியாகாரர்களும் கண்டுபிடிக்கக் கூடும். அதன் பின்னர் மைனர் பெண்ணைக் கடத்தி வந்த குற்றவாளியாக ரஹீம் கைது செய்யப்படலாம். அவரது இஸ்லாம் பெயரைக் கொண்டு அவருக்கும், எதாவது ஒரு பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான தொடர்பு 'கண்டறியப்படலாம்'.

ரஹீம் எனது கணக்கு வாத்தியார். 15வயதாகும் என்னை விட 15 வயது பெரியவர். ஏற்கனவே திருமணமானவர். இப்படி ஒரு மைனர் மாணவி ஆசிரியரோடு ஓடிப் போவது நமது நாட்டில் எதற்காக புதுமையாக, மீடியாவுக்கு இத்தனை ஆர்வத்தைத் தூண்டக் கூடிய செய்தியாக இருக்கிறதென்று புரியவில்லை.

என் பெயர் எம்மா வாட்சன். ஒரே வயிற்றில் நாங்கள் மூன்று பேர் பிறந்தோம், ஆனால் ஒரே தகப்பனுக்கு இல்லை. நானும், என் தங்கை எமிலியும் மிக நெருக்கமானவர்களாக ஆன பொது அவளுக்கு நாலு வயது. எனக்கு ஏழு. அப்போது அம்மாவும், அப்பாவும் சட்டப்படி பிரிந்தார்கள். அவர்கள் பிரிவதற்குக் காரணமாக இருந்தவரை அம்மா அடுத்த மாதமே மருமணம் செய்து கொண்டாள்.  அதற்கு அடுத்த வருடமே எங்களுக்கு ஒரு தம்பி பிறந்தான். இரண்டு  நாள்முன்பு வரைக்கும் மூன்று குழந்தைகளும், இரண்டு பெரியவர்களுமாக என் அம்மாவின் கணவருக்குச் சொந்தமான வீட்டில் ஒரே குடும்பமாகவே வசித்தோம்.

எனது தந்தை பெயர் லூகாஸ் வாட்சன். என்னிடமும், எமிலியிடமும் அன்பாக இருந்தார். பெண்கள் விரும்பும் ஆணாக, சுவாரசியம் அற்றவராக அவரை என் தாய் கருதினாள். அம்மா அவள் விரும்பிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அவர் குறுக்கே நிற்கவில்லை. பேராண்மை கொண்ட அந்தப் பெருமகன் சட்டப்படி எங்களைப் பிரிந்தாலும் என்னை வாரத்துக்கு ஒரு தடவை சந்திக்கலாம். அதைச் செய்ய நாங்கள் ஒரு போதும் தவறியதில்லை. என் தாய்க்குக் கணவனாக தன 'கடமையைச்' சரிவரச் செய்த என் மாற்றான் தந்தை எனக்கும் எமிலிக்கும் நல்ல தந்தையாக இருக்க முயலவேயில்லை. அப்படியிருக்க வாரத்துக்கு ஒரு தரம் லூகாஸ் அப்பாவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எத்தகையது என்பதை உணர   நீங்கள் நானாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ரஹீம் எனக்கு அறிமுகமானார், முதலில் கணக்கு வாத்தியாராக. ஒரு வகையில் லூகாஸ் அப்பாவைப் பார்ப்பது போலவே இருந்தது. கணக்குப் பாடம் மட்டுமல்ல. உலகத்தில் எல்லா/எந்த விஷயத்தையும் பற்றி ரஹீம் கொண்டிருக்கும் பார்வையும், அவற்றை அணுகும் விதமும் வித்தியாசமாக இருந்தது.  ஆசானாக, வழிகாட்டியாக, நண்பனாக, மனதுக்கு நெருக்கமானவனாக அவர்  என்னுள் பரிமாண வளர்ச்சி அல்லது தேய்ச்சி அடைந்து வந்தார். அவர் சொல்லும் விஷயங்களை ரசித்தவள், சொல்லிக் கொடுத்த விதத்தை ரசிக்கும் அளவுக்கு வளர்ந்து சொல்லிக் கொடுத்தவனையே ரசிக்கும் நிலைக்குத் தேர்ச்சி பெற்றேன்.

மதின்மம் பூத்துக் குலுங்கும் பருவம். குறும்புப் பார்வையை விடாது வீசும் துருதுரு கண்கள். வம்பிழுக்கும் பேச்சு. அவரும் ஆண்தானே !! கூடவே குடும்ப வாழ்வில் கலக்கமடைந்த நிலையில் இருந்தது ரஹீமுக்கும், அவர் மனைவிக்குமான மணவாழ்க்கை. வெற்றிடத்தை உருவாக்கி அதில் இட்டு நிரப்பிக்கொள்ளும் உயிர்ப்புடன் இருந்த நான் ரஹீமுக்குள் இயல்பாகவே இருவாகியிருந்த வெற்றிடத்தை ஆக்கிரமித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அம்மா உனக்கிது புரிய வேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நீயும், உன் கணவரும் டிவியில் அழுவதைப் பார்க்கிறேன். உங்களோடு வந்து என்னிஸ் சேரும்படி நீங்கள் கண்ணிர் மல்க வேண்டுவதைப் பார்த்து எனக்கு எந்த மாற்றமும் உண்டாகவில்லை என்பது உங்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம்.  நான் சம்மந்தப்பட்ட சங்கதிகளில் நாட்டமே இல்லாமல் எட்டு வருடமாக எனக்குள் தீராத தனிமையை,  நாதியற்றவள் நானென்ற வெறுமையை உருவாக்கி என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கும் நீங்கள் அதை உணர்ந்த பிறகு முழுமையாக அழுவீர்கள் என்றும் தேவனை மன்றாடுகிறேன்.

உன்னைத் தவிர வேறு யாரும் என்னைப் புரிந்து கொள்ள முடியாது. சுவாரசியம்றவன் எனக்கூறி லூகாஸ் அப்பாவைப் பிரிய உனக்கிருந்த தார்மீக நியாங்களை விடக் கூடுதலான காரணம் எனக்கிருக்கிறது. பதினைந்து வரை வாழ்வில் எவ்வித சுவாரசியத்தையும், கவனிப்பையும் கண்டிராத துர்பாக்கியசாலி நான். நிச்சயமாக உன்னைத் தவிர வேறு யாரும் என்னைப் புரிந்து கொள்ள முடியாது.

நியாயங்களையும், சட்டதிட்டங்களையும் எடுத்துச் சொல்லி வாதாடி பிறரை நம்ப வைக்க இது ஒன்றும் நீதி மன்றமில்லை. காதல். காதலில் வரம்பும் இல்லை, வரையறுக்கும் இலக்கணமும் இல்லை. திருமணமாகி மனைவியோடிகும் ஒருவரின் குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கும் குற்ற உணர்ச்சி எனக்கில்லை.


மனசாட்சிபடி நானே குற்றவாளி. இன்னொருவன் குடும்பத்தைக் குலைத்த கேடுகேட்டவள். ஆனால் டிவியிலும், பேப்பரிலும் அப்படியா போடுகிறார்கள்? பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற ஆசிரியர் என்ற கிரிமினலாகவே சித்தரிக்கிறார்கள். என்னொரு படிக்கும் ஸ்ரேயா சொல்லியிருக்கிறாள். அவர்கள் நாட்டில் 'கள்ளக் காதல்' என்று போட்டாலும் 'காதல்' என்ற அங்கீகாரத்தைத் தந்திருப்பார்கள்.

கேத்திக்கு நான் டைப் செய்துகொண்டிருக்கும் இந்தக் கடிதம் இன்னும் முடியவில்லை. வெளியே பேச்சரவம் கேட்கிறது. அனேகமாக பிரான்சுக்கு வந்திருக்கலாம் ஸுசெக்ஸ் போலீஸ். ஒரு வேளை இதை நான் அனுப்புவதற்குள் கைப்பற்றப்பட்டால் உங்களுக்காகக் காத்திருக்கிறது ஒரு பிரேக்கிங் நியூஸ்.

"சர்ச்சைக்குரிய ஆசிரியர் கைது. பள்ளி மாணவி மீட்பு"

குறிப்பு: 15 வயது பள்ளி மாணவி Megan Stammers தனது கணக்கு வாத்தியார் Jeremy Forrest உடன் ஓடிப்போன சம்பவம் தொடர்பானது.

Wednesday, September 26, 2012

அவள் பெயர் . . .

- செல்லமுத்து குப்புசாமி

அவள் பெயர் சகுந்தலாவோ, சாவித்திரியோ, சங்கீதாவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  அனேகமாக லண்டனுக்கு படிப்பதற்காக வந்திருக்க வேண்டும்.அவளை முதன்முதலாக நான் பார்த்த பொது  பிசினஸ் சூட் அணிந்திருந்தாள். சூட்டுக்குக் கீழே போட்டிருந்த சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் திறந்திருந்தன. அது கோடை காலத்தின் இறுதி வாரங்களை உள்ளடக்கிய பருவம். 'இன்றே கடைசி' என டூரிங் கொட்டகை சினிமா போஸ்டரில் ஒட்டியிருப்பார்களே அந்த மாதிரி மிச்சமிருக்கிற சில  நாட்களில் வளி மண்டலத்தில் உள்ள வெப்பத்தைக் கொஞ்சம் உள்ளிழுக்க உடலின் சருமப் பரப்பை அதிகமாக வெளிக்காட்டும் செயலில் ஈடுபட்டிருந்தனர் அதனூடாக சருமத்தை வெளிக்காட்டாத ஆண்களுக்கும் வெப்பம் ஊட்டிகொண்டிருக்கும் பருவம். எனவே  சட்டை போட்டிருக்கும் பெண்ணைப் பார்த்தாலே அடக்கமான பெண் என்று சொல்ல வேண்டும். சட்டையில் பட்டன் போட்டிருக்கிறாளா இல்லையா என்றெல்லாம் ஆராய்வது தப்பு. 

இன்னும் சொல்லப் போனால் இதைப் பற்றிப் பேசுவது மட்டுமல்ல. பார்ப்பது கூடத் தப்பு. அப்படியே பார்த்தாலும் கசமுசா எண்ணம் வருவது தப்பு. ஏனென்றால் இடம் அப்படிப்பட்டது. நான் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது ஈஸ்ட் ஹாம் மகாலக்ஷ்மி கோவிலில்.

கீழ்த் தளத்தில் கோவில். முதல் மாடியில் அன்னதான மண்டபம். சரியாக இரவு 08:30 க்கு அன்னதானாம் ஆரம்பித்து விடும். சில நாட்களில் எட்டே காலுக்கே ஆரம்பித்து விடுவார்கள். சில நாட்களில் எட்டு நாற்பது ஆகும். பெரும்பாலும் எட்டரை என்பது அனுபவம் தந்த பாடம். ஒரு சில சமயம் ஈசரைக்கே வந்து ஒரு மணி நேரம்  மூடி தியானம் செய்த கொடுமையெல்லாம் நடந்திருக்கிறது. இப்போதெல்லாம் சரியாக எட்டு இருபதுக்கு உள்ளே ஆஜர். சாமி கும்பிட்டு, சைட் அடித்து, நெற்றியில் விபூதி வைத்து மேலே போனால் சாப்பாடு போட சரியாக இருக்கும்.

சாப்பாடென்றால் பிரம்மாண்டமான விருந்தென் நினைத்து விட வேண்டாம். கொஞ்சம் சாதமும், மஞ்சள் நிறத்தில் நீர்த்துப் போன சாம்பாரும், ஒரு முழு அப்பளத்தை ஐந்தாக உடைத்த துண்டும் தருவார்கள். ஆனாலும் அதற்கேன்ற மதிப்பு இருந்தது.

'ச'வில் பெயர் தொடங்கும் அவள் அன்னதான மண்டபத்திலும் 'காட்சி' தந்தாள். சரி தவறுகளைப் பகுத்து அறியும் அறிவு எதைக் காண வேண்டும், காணக் கூடாது எனத் தணிக்கை செய்யும் நிலையில் இல்லை. கழுத்துக்கு மேலும்  அவள் அழகாக இருந்தாள்.

நெற்றியைச் சுருக்கினால் ஒரு கோடு விழுமே அந்த அகலத்தில் ஓரங்குல நீளத்தில் விபூதிக் கீற்றை தரித்திருந்தாள். காதோரம் நான்கு முடிகள் கீழே விழுவதும் அதை அவள் ஒதுக்குவதும் ரசிப்புக்குரிய காட்சியே. சாப்பாட்டுத் தட்டில் அப்பளம் வைக்கும் நாதஸ்வரக்காரர் கூடுதலாக ஒரு அப்பளத் துண்டை அவள் பிளேட்டில் வைத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

சகுந்தலாவோ, சாவித்திரியோ, சங்கீதாவோ... அவளது உதடு ஈரமாக இருந்தது. நொடிக்கொரு தரம் இணைந்து பிரியும் அந்த உதடுகள் தமிழை 'நன்றாகப் பேசுமா' அல்லது 'வடிவாகக் கதைக்குமா' தெரியவில்லை. தேவதைகள் உதிர்க்கும் சொற்கள் தெரியாத மொழியாக இருந்தாலும் இனிமைதானே!! அவள் சம்சரித்தோ, மாத்தாடியோ, மாட்லாடியோ தொலைக்கட்டும். எப்படியும் குரலைக் கேட்டு விட வேண்டும்.

இந்த அரை வேக்காட்டுச் சாப்பாட்டை 13 நிமிடத்தில் தின்பதற்குள் ஒரு போன கூட அவளுக்கு வரவில்லை என்பதே என் ஆதங்கம்.  அவள் கனிமொழி கேட்கும் பாக்கியத்தை ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் அன்றைக்கு வழங்கவில்லை.

ஈஸ்ட் ஹாம் என்பது ஒரு குட்டி ஆசியா. அங்கே தமிழ்க் கடைகள் மட்டுமல்ல. இந்தியாவின் பல அம்சங்களும் இருக்கும்.  பாகிஸ்தான், பங்களாதேஷ், இன்ன பிற ஆப்பிரிக்க மக்கள் என யாவரும் தென்படுவார்கள். வெள்ளையர்கள் இங்கே சிறுபான்மையினர்.

ஈஸ்ட் ஹாமில் பிரபலமான கோவில் என்றால் அது லக்ஷ்மி நாராயண டிரஸ்ட் நடத்தும் மகா லக்ஷ்மி கோவில்தான். காரணம் அங்கே தினமும் கிடைக்கும் அன்னதானாமும், ஈஸ்ட் ஹாம் ரயில்வே ஸ்டேஷன்க்கு அருகில் நடக்கும் தூரத்தில் இருப்பதுவுமே. 

அதற்கு மாறாக அளவில் பெரியது, பிரம்ம்மாண்டமானது என்றால் முருக்கன் கோவில். ஈஸ்ட் ஹாமில் இருந்து 5 நிமிடம் பஸ்ஸில் போக வேண்டும். தவிர எப்போது சோறு போடுவார்கள் என உறுதியாகச் சொல்ல முடியாது. சில நாட்கள் மிஞ்சிப் போயிருக்கும் சில நாட்களில் அறவே இருக்காது.  அதனால் கூட்டம் தினசரி நிலையாக இருக்காது. வெள்ளிக்கிழமை போனால் முருகன் கோவில் திவ்யமாக அமையும், தரிசனம் மற்றும் சாப்பாடு இரண்டுக்கும்.

மகா லக்ஷ்மி கோவிலில் செவ்வாய்க் கிழமையும், புதன் கிழமையும் பார்த்த சகுந்தலாவோ, சாவித்திரியோ, சங்கீதாவோ அவள் வெள்ளிக் கிழமை முருகன்  கோவிலுக்கு வந்தாள். வெள்ளிக் கிழமை முருகன் கோவிலுக்குச் சென்றால் வெறும் வயிற்றோடு திரும்ப மாட்டோம் என்பது லண்டன் ஐதீகம்.

வியாழக் கிழமை நான் மகா லக்ஷ்மி கோவிலுக்குப் போகவில்லை. அவளும் போயிருக்க மாட்டாள். ஏனென்றால் அன்று அவளை சாய்பாபா கோவிலில் கண்டேன். மற்ற நாளெல்லாம் காற்று வாங்கும் சாய்பாபா கடை.. சாரி கோவில்.. வியாழனன்று மட்டும் ஜெஜெவென இருக்கும். கூட்டம் அலை மோதும். சாப்பாடு தருவார்கள். மகா லக்ஷ்மி கோவில் போல தினமும் ஒரே சோறு போடாமல் வெரைட்டி ரைஸ் பேக் செய்தே தருவார்கள். ஈஸ் ஹாம் ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள சுவை ரெஸ்டாரண்டை விட சுவையாக இருக்கும்.

எங்கள் அலுவலகத்தில் மைக்கேல் என்றொரு இத்தாலியர் உள்ளார். நான் பாத்ரூம் போகும் போதல்லாம் பத்துக்கு எழு முறை அவரும் சிறு நீர் கழித்துக் கொண்டிருப்பார். ஒரு நாள், "We seem to have same schedule" என்றார். கோவில் சாப்பாடு விசயத்தில் பெயர் தெரியாத அந்தப் பெண்ணும் ஒரே ஷெட்யூல் வைத்திருந்தோம். கிட்டத் தட்ட 2 வாரம் இவ்வாறு தொடர்ந்தது. இதற்குள் ஒரு முறை தனது செல்போனில் 'ஆ போல்' என்று பேசிக் கொண்டிருந்தாள்.

வடிவாகவும், நன்றாகவும் தமிழ் பேசுவாள் என இன்னும் மனது எதிர்பார்க்கவில்லை. அவள் பெயர் சகுந்தலாவோ, சாவித்திரியோ, சங்கீதாவோ இருக்கும் எனவும் இப்போது நினைக்கவில்லை அவள் ஒரு ஆஷவாகவோ, பூஜாவாகவோ இருந்து விட்டுப் போகட்டும்.

ஈஸ்ட் ஹாமில் தமிழ் சர்ச் ஒன்று இருக்கிறது.  அங்கே பிரார்த்தத்னை நடக்கும் நேரத்திற்குப் போனால் பிரியாணி போடுவார்களாம். அதே மாதிரி தமிழில் தொழுகை செய்யும் பள்ளிவாசலும் இருக்கிறது. அங்கும் பிரியாணி போடுவார்களாம். கோவில்களில் சப்பைச சோறு தின்று நாக்குச் செத்த இந்தத் தருணத்தில் சர்ச்சுக்குப் போலாமா, மசூதிக்குப் போலாமா என்ற குழப்பம்.

சர்ச்சுக்குப் போகலாம் என்கிறது பகுத்தறிவு. ரீட்டாவோ, லின்டாவோ தரிசனம் தருவார்கள். மசூதிக்குள் மும்தாஜ்களையும், முமைத்கான்களையும் அனுமதிப்பதில்லை.

Monday, September 10, 2012

அணு மின்சாரம் என்ற மாயை & அரசுகளின் அயோக்கியத்தனம்

- செல்லமுத்து குப்புசாமி

(கிட்டத் தட்ட 10  மாதம் முன் எழுதியது - இப்போதும் பொருந்துவதாகவே உள்ளது)
என்னோடு பணியாற்றும், என்னை விட பத்து வயது குறைந்த ஒரு பெண்ணிடம் கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டேன். பதிலுக்கு ”இந்தியா முன்னேறனும்னா கட்டாயம் செய்தாக வேண்டிய புராஜெக்ட்” என்றார். நம்மில் பலர் அவ்வாறே கருதுகிறோம். நாம் வாழும் சூழலும், நமக்கு அளிக்கப்படுகிற செய்திகளும், சிந்தனைத் திணிப்புகளும் நம்மை அப்படிக் கருத வைக்கின்றன. நம்மில் மின்தடை காரணமாக பாதிக்கப்படாத, அதனால் எரிச்சலடையாதோர் இருப்பது மிகவும் அரிது. ஆகையால் மின் பற்றாக்குறையைப் போக்கவும், மின் தேவையில் தன்னிறைவு அடையவும் அணு ஆற்றலைத் தவிர வேறு போக்கில்லை என திடமாக நம்புகிறோம்.

அதனாலேயே கூடங்குளத்திலும், இடிந்தகரையிலும் போராடும் மக்களை நாம் வெறுக்கிறோம். அவர்களது போராட்டத்தின் பின்னுள்ள நியாயத்தை புரிந்துகொள்ள மறுக்கிறோம். கார்ட்டூன் வீடியோவில் அவர்களை கோமாளிகளைப் போலக் காட்டுவோம் என்று அணு விஞ்ஞானிகள் கொடுத்த செய்தியை ரசிக்கிறோம்.

உண்மையில் கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்தும், அவ்வளவு ஏன் அணு மின் உலைகள் குறித்தே போதுமான புரிதலை ஏற்படுத்திக்கொள்ள நாம் முனையவில்லை. பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு மட்டுமே நாட்டின் தலையாய பிரச்சினைகள் என எண்ணும் நடுத்தர வர்க்கத்துச் சிந்தனை அதற்கு அனுமதிக்கவில்லை. நமக்கு ஏற்பட்டால் மட்டுமே இழப்பு, மற்றவர்களுக்கென்றால் செய்திதான் என்ற மனநிலையில் இருக்கிறோம். கூடங்குள மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போராட்டத்தைப் புரிந்து கொள்வது இன்றியமையாத ஒன்று. இது ஒரு வட்டாரத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் பிரச்சினை மட்டுமல்ல.

இந்தியாவில் பெருகி வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டியதன் அவசியம் குறித்து யாருக்கும் இங்கே மாற்றுக் கருத்து கிடையாது. அந்த உற்பத்தியை அணு ஆற்றல் மூலமாக மட்டுமே தயாரிக்க முடியும் என்பதிலும், அணு மின் சக்தி மலிவானது + பாதுகாப்பானது + சுற்றுச் சூழலுக்கு உகந்த்து என்பதிலுமே நாம் வேறுபட வேண்டியிருக்கிறது.

கூடங்குளத்தில் ஆயிரம் மெகா வாட் திறன் கொண்ட இரு உலைகளை இயக்கத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு எவ்வளவு செலவு பிடித்த்து என்பதைப் பற்றிய வெளிப்படையான தகவல் இல்லை. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் இன் முன்னாள் பேராசிரியர் டாக்டர் சுரேந்திர கடேகர் அணு உலை செலவுக் கணக்கே முறைப்படி இல்லை என்கிறார். அழுத்த கன நீர் சர்வதேச்ச் சந்தையில் கிலோவுக்கு ரூ 30,000 க்கு விற்றாலும், அணு உலைகள் விஷயத்தில் 800 என்று கணக்கிட்டிருக்கிறார்கள் என்கிறார். வெளியே தெரிவித்த்து சுமார் 13,147 கோடியில் இருந்து 17,000 கோடி ரூபாய் வரை சொல்கிறார்கள். இது ஆலையை நிறுவுவதற்கு மட்டுமே ஆகும் செலவு. அதன் ஆயுள் முடிந்து அதைப் புதைப்பதற்கு 20,000 கோடி செலவாகும். சராசரியாக ஒரு மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு ரூ 17 கோடிக்கும் குறைவில்லாமல் ஆகிறது.

காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாத்தியக் கூறுகள் குறித்து மிகத் தீவிரமாக ஓராண்டு காலமாக நான் ஆய்வு செய்து வருகிறேன். ஒரு மெகாவாட் காற்று டர்பைன் நிறுவ 6 கோடி ரூபாய் ஆகும்.

அணு உலையப் பொறுத்த வரை யுரேனியம் எரிபொருள் செலவு, அணு உலையை இயக்கும் செலவு, பராமரிப்புச் செலவு, பாதுகாப்பு செலவு உள்ளிட்ட மற்ற செலவுகள் வேறு. எனவே பிற மூலங்களை விட அணு மின் ஆற்றல் மலிவானது என்ற கூற்று ஊரை ஏமாற்றுவதற்கு சொல்லப்படுவதாகும். தடையில்லாத மின்சாரம் கிடைக்காமல் அவதியுறும் மக்களை நம்ப வைப்பதற்காக க்ட்டவிழ்த்து விடப்படும் பொய்யே அல்லாமல் வேறேதுமில்லை.

பல ஆண்டுகள் அணுசக்தித் துறையும் நீண்ட அனுபவமும், படிப்பினையும் கொண்ட அமெரிக்க வல்லுனர் அர்ஜுன் மஹிஜனி, அணுசக்தி அறவே இல்லாமல் காற்று மற்றும் சூரிய ஒளி மூலமாவே மலிவான கார்பன் உமிழாத மின்சாரத்தைத் தயாரிக்க முடியும் என்கிறார். இது வெறும் பொருளாதார நோக்கில் சொல்லப்பட்டது. பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கோணத்தில் அவரது கருத்துக்களை பின்னர் காண்போம்.

இந்தியாவைப் பொருத்த வரை 2000 ஆவது ஆண்டுக்குள் 43,500 மெகாவாட் அணு மின்சாரம் தர்யாரிப்பது என்ற இலக்கு 1970 இல் நிர்ணயிக்கப்பட்ட்து. கடந்த ஆண்டு வெறும் 2,720 மெகா வாட் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. சொற்ப உற்பத்திக்கு வெகுவான தொகையை மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவழிக்கிறோம். இந்தியாவில் அணுசக்தி என்பதே பெரும் தோல்வியாக அமைந்துள்ளது. அதை சரிக்கட்ட தேச பக்தியும், தேசப் பாதுகாப்பும் பூச்சாண்டியாக காட்டப்படுகின்றன.

ஆயிரக் கணக்கில் போராடும் மக்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. பல பொய் வழக்குகள் புனையப்படுவதாக தெற்கிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. போராடும் மக்களைத் திசை திருப்புவது/ஒடுக்குவது ஒரு பக்கம், போராடுவோருக்கு பொது மக்களின் ஆதரவு கிடைக்க்க் கூடாதென்பது இன்னொரு பக்கம். இதைச் செய்து முடிக்க அனைத்து ஊடகங்களின் ஆதரவோடும், பலத்தோடும் ஆவன அனைத்தையும் செய்து வருகிறது மத்திய அரசு.

அவ்வாறு ஏவிய ஒரு ஆயுத்த்தின் பெயர் மிடில் கிளாஸ் டார்லிங் அப்துல் கலாம். அவ்வட்டாரம் நீங்கலாக தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள ஏனையோரின் ஆதரவை அணு உலைக்கு சம்பாதிப்பதிலும், அவர்களிட்த்தில் போராடும் மக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதையும் அவர் செவ்வனே செய்திருக்கிறார்.

அணு மின் உலைகள் மலிவானவை, பாதுகாப்பானவை என்பதை விற்பதற்கு அவரது கவர்ச்சிகரமான பிம்பம் பயன்படுத்தப்பட்ட்து. கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய கலாம் திரும்பி வந்து நீண்ட நெடியதொரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்.

இன்றைக்கு உக்ரேன் தேசமாக விளங்க்க் கூடியதும், முந்தைய சோவியத் யூனியனில் அங்கமாக விளங்கியதுமான செர்னோபில் (1986) அணு ஆலை விபத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கலாம். அதில் வெறும் 57 பேர் மட்டுமே இறந்த்தாகச் சொல்கிறார். ஆனால் கதிரியக்கம் காரணமாக ஏற்பட்ட புற்று நோயினால் 1986 முதல் 2004 வரை இலட்சக் கணக்கான பேர் (985,000) இறந்த்தாக ஒரு ஆய்வு சொல்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானம் ஜப்பானின் ஹிரோசிமா மீது வீசிய அணுகுண்டை விட 400 மடங்கு அதிகமாக கதிர் வீச்சு செர்னோபில் விபத்தினால் வெளிப்பட்ட்து. ஒரு இலட்சம் சதுர கிலோ மீட்டர் நிலம் பாதிக்கப்பட்ட்து. மேகத்தில் கலந்து விட்ட கதிரியக்கப் பொருட்கள் பரவாமல் இருக்க விமானப்படை விமான்ங்களைக் கொண்டு செயற்கை மழை பெய்யச் செய்தார்கள். அப்படியும் கூட ஏறத்தாழ பாதி கதிரியக்க மாசு சோவியத் யூனியனுக்கு (உக்ரேன், பலாரஸ், ரஷ்யா தேசங்கள்) வெளியே பரவியது. கதிரியக்க நச்சு ஆறுகளையும்,, ஏரிகளையும், அணைத் தேக்கங்களையும் பாதித்த்து. 19,38,100 ஏக்கர் விவசாய நிலமும், 17,15,000 ஏக்கர் காடும் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டன. பெலாரஸ் தேசத்தில் 30 ஆண்டுகளாக சுமார் 235 பில்லியன் டாலர் (11,750 இலட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்ட்து. உக்ரேன் தனது வருடாந்திர பட்ஜெட்டில் 5 முதல் 7 சதவீதம் வரை செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பை நோக்கியே செலவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு அவலத்தைத்தான் நாம் ரஷ்யாவில் இருந்து கூடங்குளத்திற்கு இறக்குமதி செய்யத் துடிக்கிறோம்.

1986 இல் ஏற்பட்ட செர்னோபில் அணு உலை விபத்து சோவியத் யூனியனின் பொருளாதாரத்தையும், சர்வதேச அளவில் அதன் பிம்பத்தையும், ரஷ்ய அணுசக்தி தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையையும் வெகுவாகப் பாதித்தது. இந்தப் பின்னணியில் 1988 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், சோவியத் அதிபர் கார்ப்பசேவும் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்கள். அதன் மூலம் கூடங்குளத்தில் ரஷ்ய அணுசக்தி ஆலை அமைக்க முடிவாகிறது.

அணு உலை என்றிருந்தால் விபத்து ஏற்படுவது இயற்கை. தினம் தினமா விபத்துகள் நடக்கின்றன. எப்போதோ நடந்த செர்னோபில் கூடங்குளத்தில் மீண்டும் நிகழும் என்பதில்லை. இப்படித்தான் பலரும் நினைக்கலாம். கோழைகளால் வரலாறு எழுதப்பட்ட்தில்லை என்று கலாம் அய்யா கூட கூறியிருக்கிறார். அதாவது விபத்து நேரும் என்று பயந்தால் மின்சாரம் கிடைக்காது என்கிறார். ராஜராஜ சோழனையும், கரிகாலனையும் அவர் உதாரணம் காட்டுகிறார். பூகம்பம் வந்தால் வீழ்ந்து விடுமே என்று ராஜராஜன் நினைத்திருந்தால் நமக்கு பெரிய கோவில் கிடைத்திருக்காது என்கிறார். எத்தனை பெரிய அபத்தம்? கோவில் கட்டிடமும், ஆயிரக் கணக்கான ஆண்டுகள் நீங்காமல் இருக்கச் செய்யும் கதிர்வீச்சை எச்சமாக விடப் போகும் அணு உலையும் ஒன்றா? ஆக அணு உலையில் ஆபத்து உள்ளது என்பதை அவர் ராஜராஜனை உதாரணம் காட்டி ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர்தான், சோலார் எனர்ஜியைப் போல, நீர் மின்சாரம் போல அணுசக்தி பாதுகாப்பானது + மாசற்றது + கூடங்குளம் அணு உலை 100 சதவீதம் பாதுகாப்பானது என்ற பச்சைப் பொய்யைக் கூறி பொதுப் புத்தியைக் கட்டமைக்க பிரயத்தனப்பட்டிருக்கிறார்.

போராடும் மக்களுக்கு எதிராக, அவர்களைச் சிறுமைப்படுத்தும் பிரச்சாரம் அரச விசுவாச ஊடகங்களில் மிகத் தீவிரமாக நடக்கிறது. ஒரே பொய்யை அல்லது அரை உண்மையை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நினைக்கிறார்கள். போராட்டக்கார்ர்கள் உள்நோக்கம் கொண்டவ்ர்கள் என்று கூறியதல்லாது, அவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்வோம் என்று பாண்டிச்சேரியில் இருந்து வந்து மத்திய அமைச்சர் நாராயணசாமி சிரிக்காமல் பேசுகிறார். இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க அந்நிய சக்திகளின் கை உள்ளதென்கிறது அரசு.

தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் மக்களின் அச்சத்தைக் களைய வேண்டும் என்கின்றனவே தவிர, அணுமின் நிலையம் தேவையில்லை என்று சொல்லக் காணோம். மக்களின் உணர்வுகளை, அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை வாக்கு வங்கியாக மாற்றித்தான் அவர்களுக்குப் பழக்கம் என்பதால் பிரச்சினையின் மையப் புள்ளிக்கே மீண்டும் செல்வோம்.

அணு ஆலையில் யுரேனியம் பிளவுறும் போது சுமார் 200 வகையான கதிரியக்க பொருட்கள் வெளியாகின்றன. அவற்றில் சில ஆயிரக் கணக்கான ஆண்டுகள் கதிர்வீச்சை உமிழ்கின்றன. பாதுகாப்பாக இயங்கும் போது கூட சில கதிர்வீச்சுக் கசிவு வளிமண்டலத்தில் நிகழ்வது இயல்பு. ஆயிரம் மெகா வாட் அணு மின் உலை ஆண்டொன்றுக்கு 4 ஆயிரம் கன மீட்டர் திராவாக்க் கழிவுகளை வெளியிடுகிறது. கூடங்குளத்தில் 2,000 மெகா வாட் நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள இரு உலைகளும் தமது ஆயுட்காலத்தில் சுமார் 3,600 டன் கழிவுகளை உற்பத்தி செய்யப் போகின்றன. இவற்றை துப்புரவாக அப்புறப்பத்துவதென்பது சாத்தியமில்லாத காரியம். எனவே விபத்து நேராமல் இயங்கினாலே இவ்வுலைகள் புற்றுநோய், மலட்டுத்தன்மை, பிறப்புக் கோளாறுகள் என எல்லா வகையான கேடுகளையும் உண்டாக்கும். கழிவுகளைத் தானே எடுத்துக் கொள்கிறேன் என்று எற்கனவே வாக்குறுதி அளித்திருந்த ரஷ்யா ஏன் பின்வாங்கியது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.அணுசக்தி உலையில் கழிவுகள் தவிக்கவே முடியாதவை. பல அணு உலைகளை, அவற்றின் கழிவுகளைக் கண்காணித்த அமெரிக்காவின் அர்ஜுன் மஹிஜனி Nuclear Wasteland என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார். உலைகளால் ஏற்படும் கதிரியக்கம் பல தலைமுறைகளைப் பாதிக்கும். உடலின் திசுக்களைப் பாதித்து கொடிய விளைவுகளை உண்டாக்கிய பின்னர்தான் அது குறித்துத் தெரியவரும்.

மேலும் குளிர்விக்கப் பயன்படும் நீர் கடலில் கலக்கப்படும். அதனால் கடல் நீர் வெப்பமடைவது ஒரு பக்கம். கதிரியக்க மாசு காரணமாக மீன் பிடிப்பு குறைவது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட மீன்கள் கரைக்கு வந்து உணவு மூலமாக பரவலான மக்களைச் சென்றடைவது இன்னொரு பக்கம். கடலோரம் அணு உலை உள்ள எல்லாக் பகுதிகளிலும் இது ஏற்கனவே நடந்திருக்கிறது, கல்பாக்கம் உட்பட.

இவையெல்லாம் விபத்தில்லாமல் இயல்பாக இயங்கும் போதே ஏற்படும் கேடுகள். அதை யாரும் உறுதிப்படுத்த முடியாது. 1986 செர்னோபில் முதல் சமீபத்தில் ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்ட போது நிகழ்ந்த புகோஷிமா விபத்து வரை எத்தனையோ சின்னதும், பெரியதுமான விபத்துகள் அணு உலைகளில் உலகம் முழுவதும் நடந்துள்ளது. அப்படியொரு விபத்து கூடங்குளத்தில் நடந்தால் என்ன செய்வது?

புகோஷிமா விபத்தின் முழுமையான பாதிப்புகள் வரும் ஆண்டுகளில் முழுமையாக அறியப்படும். அடுத்த பத்தாண்டுகளில் அணு உலையில் இருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 2 இலட்சம் பேருக்கு புற்று நோய் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஞாநி கூட எழுதியிருக்கிறார்: ”1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை. அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து.” இந்திய அணு உலைகளில் நடக்கும் சின்னச் சின்ன விபத்துக்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் அவை அவ்வப்போது கசிந்த வண்ணமே உள்ளன.

ஜப்பான் புகோஷிமா அணுசக்தி உலை நிகழ்வுக்குப் பிறகு உலகின் முன்னேறிய நாடுகள் பல அணு உலைகளை நிறுத்துவதற்கு யோசிக்கின்றன. மரவு சாரா கச்திகளான காற்று, வெப்பம் ஆகிய மூலங்களில் தீவிரமாக கவனம் செலுத்துகின்றன.

அமெரிக்கா 1973 க்குப் பிறகும், கனடா 1976 க்குப் பிறகும், செர்னோபில் நிகழ்வுக்குப் பின்னர் ரஷ்யாவும் புதிய அணு உலைகள் எதையும் நிறுவ்வில்லை. உலக மின் உற்பத்தியில் 2006 ஆம் ஆண்டு 15.2 சதவீதமாக இருந்த அணுசக்தி 2010 இல் 13.5 சதவீதமாக தொடர்ந்து இறங்கியுள்ளது. புகோஷிமா நிகழ்வை அடுத்து ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஏற்கனவே இயங்கி வரும் அணு உலைகளை மூடுவதென்று முடிவெடுத்துள்ளன. புதிய உலை எதையும் கட்ட போவதில்லை என முடிவெடுத்துள்ள ஜப்பான் அதை வியட்நாமுக்கு விற்கிறது.

சமீபத்தில் 24 நாடுகளில் நடந்த ஒரு சர்வதேச வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் (62 சதவீதம் பேர்) அணுசக்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். 90 சதவீத இத்தாலியர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். ஜெர்மனி, மெக்சிகோ முதலிய நாடுகளில் 80 % க்கு மேலும், தனது பெரும்பான்மை மின் தேவையை அணுசக்தி மூலம் பெறும் பிரான்சில் 67% பேரும் எதிர்த்துள்ளனர். ஆளும் வர்க்கத்தினரால் வல்லரசுக் கனவு விற்கப்பட்ட, மின்தடையால் பாதிக்கப்பட்ட இந்தியாவில் மட்டும் 61% பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அதனாலேயே முன்னேறிய நாடுகளும், இந்தியாவின் ஆளும் வர்க்கமும் பெரும்பான்மை நடுத்தர வர்க்க பொது புத்தியி நிழலின் துணையுடன் போராடும் மக்களின் நியாயமான எதிர்ப்பை மீறி அணு உலைகளை நிர்மாணிக்கிறார்கள்.

தார் பாலைவன பகுதிகளில் சோலார் எனர்ஜி மூலம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 25 – 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதை விடுத்து இந்தியாவிற்கு மட்டும் அணுசக்தியில் ஏன் இத்தனை அவசரம்? அந்நிய சக்தி. ஆம், போராடும் உள்ளூர் மக்கள் பின்னால் இல்லை அந்நிய சக்தி. மாறாக அணு உலைகளை அவசர அவசரமாக நிர்மாணிப்பதில் உள்ளது வெளி நாட்டு சதி.

100 % பாதுகாப்பானது என்கிறார் கலாம். அப்படியானல் விபத்து நடப்பதற்கான சாத்தியம் 0 % என்றுதானே பொருள். அணு உலையில் பேரிடர் ஏற்பட்டு அதனால் விளையும் கேடுகளுக்கு ஆட்டம்ஸ்டோரியெக்ஸ்போர்ட் (அணு உலையை விற்ற ரஷ்ய நிறுவனம்) பொறுப்பாகாது என்றும், அதன் மீது இழப்பீடு கோரி வழக்குப் போட முடியாது என்றும் இரு அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் எதற்காக போடப்பட்ட்து?

இந்தியா இழப்பீட்டுச் சட்டம் ரூ 1,500 கோடி வரை இழப்பை அணு உலையை இயக்குவோர் (அதாவது இந்திய அரசோ அல்லது இந்திய அணுசக்திக் கழகமோ) ஏற்கும். அதற்கு மேல் ஏற்படும் இழப்பை அணு உலை விற்கும் நிறுவனத்திடம் கோர வேண்டும் என்கிறது. இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் இந்தச் சட்ட்த்தை மீறி ரஷ்யாவுடனான இரகசிய ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு கையெழுத்தானதன் பின்னணி என்ன? விபத்தே நடக்காத உபகரணத்தில் விபத்து நடக்கும் பட்சத்தில் எதற்காக ரஷ்ய கம்பெனியை காப்பாற்ற வேண்டும்?

அணு உலை அமைக்கும் நிறுவனத்திடம் இழப்பீடு கோருவது இன்னொரு பக்கம் இருக்கட்டும். இந்திய இழப்பீட்டுச் சட்டம் ரூ 1,500 கோடியை வரையறுக்கிறது. இதுவே அமெரிக்காவில் பிரைஸ் ஆண்டர்சன் சட்ட்த்தின் படி 12.5 பில்லியன் டாலர் (அதாவது ரூ 62,500 கோடி). இது இந்தியாவின் இழப்பீட்டுச் சட்டம் வழங்குவதை விட 41 மடங்கு அதிகம். இந்தியனின் ஒரு அமெரிக்கனின் உயிரை விட 41 மடங்கு மலிவானது அல்லவா?. மேலும் முக்கியமில்லாத சிறு அணு உலை விபத்துக்களை தெரிவிக்க வேண்டியதில்லை என்றும் இந்தச் சட்டம் வழி வகை செய்கிறது. எனவே எந்த விபத்தையும் முக்கியமில்லாத விபத்து என்று எளிதாகச் சொல்லி விட முடியும். அதே போல மத்திய அரசு குறிப்பிட்ட எந்த ஒரு அணு உலைக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கலாம். சட்ட்த்தின் முக்கிய நோக்கம் அணு உலை விபத்தினால் ஏற்படும் பொருளாதாரப் பொறுப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பதை நோக்கமாக்க் கொண்டிருக்கிறதே ஒழிய எந்த மாதிரியானா பாதுகாப்பு பாதுகாப்புக் கருவிகளையும், அமைப்பு முறைகளையும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

சமீபத்தின் ரஷ்ய அணு உலைகளின் பாதுகாப்பு சோதனையின் முடிவுகள் ரஷ்ய அதிபர் மெத்வதேவிடம் ஒரு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டன. இயற்கைச் சீற்றங்களாலும், மனித்த் தவறுகளாலும் நடக்கும் விபத்துகளைத் தவிர்க்கும் ஏற்பாடு ரஷ்ய உலைகளில் இல்லை என்பதைச் சொல்லும் அந்த ரகசிய அறிக்கை இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியே கசிந்த்து. அதுவரை வெளியே தெரியாத, உலகம் அறியாத பல குறைபாடுகளை அது வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இப்படிப்பட்ட சூழலில் உள்ளூர் மக்கள் 100 % பாதுகாப்பானது என்பதை எப்படி நம்புவது? அணுஉலை நிறுவனங்கள் தங்கள் பொருளாதார நலனை 100 சதவிகிதம் பாதுகாப்பதில் கவனமாக இருக்கும்போது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அணுஉலைகளை அனுமதிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்களை மட்டும் அரசு எப்படி நிர்ப்பந்திக்க முடியும்? அந்நிய சக்திகளின் நலனுக்காக சொந்த குடிமக்களின் உயிரைப் பணயம் வைப்பது இதுதான்.

அணு நிலையம் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று சொல்வது பைத்தியக்காரத்தனமானது மட்டுமல்ல கேட்கிறவர்களை கேனையர் ஆக்கும் தன்மை கொண்ட்து. பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரான அனில் ககோத்கர் இம்மாதம் அளித்த ஒரு பேட்டியில், “புகோஷிமா அணு உலையில் உள்ளபடியே எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. இருந்த போதும் சிலர் அதை அணு விபத்து என்று குற்றம் சாட்டுகிறார்கள். சுனாமியைப் போன்ற இயற்கைச் சீற்றத்தில் பல விஷயங்கள் தவறாகப் போகக் கூடும்”

இயற்கைச் சீற்றங்கள் இல்லாமலேயே இந்திய அணு உலைகளில் இயந்திரக் கோளாறு மற்றும் மனிதத்ட் தவறுகள் காரணமாக கதிர்விச்சு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதை இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் பல முறை கூறி வந்திருக்கிறார். ஒரு தணிக்கைக் குழு இந்திய அணு உலைகளில் 134 பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லியது. ஆனால் தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் வெளியிடப்படவில்லை.

அனில் ககோத்கர் மராத்தி நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில், பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட அணுஉலைகளை நாம் கட்டாயம் இறக்குமதி செய்தாக வேண்டும். ஏனென்றால், வெளிநாடுகள், அந்நாட்டு நிறுவனங்களின் வர்த்தக நலன்களையும் நாம் மனதில் கொண்டாக வேண்டியிருக்கிறது என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்.

அணுசக்தி கடப்பாடு சட்டத்தின் 17பி பிரிவு, அணு உலையின் வடிவமைப்பில் தவறு இருந்து, அதனால் விபத்து நேரும் பட்சத்தில், அந்த உலையை விற்பனை செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கேட்பதற்கு வழி வகுக்கிறது. பிரிவு 46 பாதிக்கப்பட்ட மக்கள் அணு உலை தயாரித்த கம்பெனியிடம் நட்ட ஈடு கோர மறைமுகமாக வழி செய்கிறது.’ எனவே இவ்விரண்டு பிரிவுகளையும் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்கிறார் ஹிலாரி கிளிங்டன்.

அணு உலைகளுக்கு எதிராகப் போராட இதை விட வேறு காரணம் தேவையா?

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த்த்தில் இந்தியா கையெழுத்திடாத நாடு என்பதால் இராணுவப் பயன்பாடு அல்லாமல் சிவில் பயன்பாட்டுக்கான யூரேனியம் மூலப் பொருளை இந்தியாவுக்கு விற்பதற்கு மற்ற நாடுகள் சம்மதிப்பது அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட 123 ஒப்பந்த்த்தை சார்ந்தே உள்ளது. இந்த 123 ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தம் அல்ல. அமெரிக்கா அரசு 1954 ஆம் ஆண்டு இயற்றிய அணு ஆற்றல் சட்ட்த்தில் கீழுள்ள 123 பிரிவின் அடிப்படையில் உருவானதாகும். இதன் படி அமெரிக்காவின் ஹைட் சட்ட்த்திற்கு இந்தியா கட்டுப்பட்டாக வேண்டும்.

அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் இதை முறித்துக்கொள்ள முடியும். அப்படி முறித்துக்கொண்டால் பிற நாடுகளில் இருந்தும் எரிபொருள் பெற முடியாத வகையில் ஒவ்வொப்பந்தம் வழி செய்கிறது. எரிபொருள், தொழில் நுட்பம் எதை வேண்டுமானாலும் அமெரிக்கா திரும்ப்ப் பெற்றுக்கொள்ளலாம். அப்படி நிகழும் பட்சத்தில் இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்படலாம். அதன் காரணமாக முழுக்க முழுக்க அமெரிக்கச் சார்பு நிலைப்பாட்டையே இந்தியா எடுக்க வேண்டும்.

அப்படியானால் எதற்காக இந்தியா யுயேனியம் அணு உலைகளையே நிர்மாணிப்பதில் ஆர்வம் காட்டுகிறது? யுரேனியத்தைப் போலவே அணுசக்திக்காகப் பயன்படும் இன்னொரு எரிபொருள் தோரியம். உலக அளவில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தோரிய வளம் கொண்ட நாடு இந்தியாதான். தோரியத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை நமது விஞ்ஞானிகள் உருவாக்கி விட்ட்தாக சிலர் சொல்கிறார்கள், சிலர் இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள்.

தோரியம் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வாங்கும் யுரேனியம் ஏன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே அணு மின் நிலையம் அமைக்கப்படுவதாக அரசு சொன்னாலும், அது பொருளாதார ரீதியாகவும் சரி, பாதுகாப்பு நோக்கிலும் சரி ஏமாற்று வேலையாகவே இருக்கிறது. உண்மையான நோக்கம் மேலை நாட்டு அணு சக்தி நிறுவன்ங்களுக்கு வியாபாரத்தை உறுதி செய்வதும், அணுசக்தி என்ற போர்வையை ராணுவத்தின் அசுரப் பசிக்கு தீனி போடுவதுமே ஆகும்.

அணு உலைகளை பயன்படுத்தப்பட்டு முடிந்த எரிபொருளில் இருந்து புளூட்டோனியம் பிரித்தெடுக்க முடியும். இங்கிலாந்து மற்றும் பிரான்சில் உள்ள இரு மறுசுத்திகரிப்பு ஆலைகள் மட்டுமெ ஆண்டுக்கு சுமார் 900 மெட்ரிக் டன் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை உள்வாங்குகிறது. 1995 வரை சிவில் அணு உலைகளில் சுமார் 10 இலட்சம் கிலோ புளூட்டோனியம் உற்பத்தியாகியுள்ளது என்றும், அடுத்த 20 ஆண்டுகளில் பிரித்தெடுக்கப்படும் புளூட்டோனியத்தின் அளவு இன்று வரை உலக நாடுகள் இராணுவத் தேவைக்காக உருவாக்கியத்தை விட இரு மடங்கும் என்றும் அறிகிறோம். வெறும் மூன்று தேக்கரண்டு அளவு புளூட்டோனியம் 900 கோடி மக்களுக்கு புற்று நோயை உண்டாக்கும் சக்தி கொண்ட்து. ஆனால் சிவில் அணு உலைகளில் இருந்து ஆயிரக் கணக்கான கிலோ புளூட்டோனியம் கழிவாக உருவாகிறது.

மின் உற்பத்திக்காக அணு உலைகள் என்ற முகமூடியில் அணு குண்டு தயாரிக்க புளூட்டோனியம் உருவாக்கும் ஒரு கருவியாகத்தான் சிவில் அணு உலைகள் பயன்படப் போகின்றன. ஒவ்வொரு சிவில் அணு உலையும் 40 அணுகுண்டு இணையான புளூட்டோனியத்தை வருடாவருடம் உருவாக்குகிறது என்கிறார் அர்ஜுன் மஹிஜனி. அணு குண்டு வைத்திருந்தால் மட்டுமே வல்லரசு என்பதால் அந்த்த் திமிரை இந்தியா அடைவதற்காக்க் கொடுக்கும் விலையே கூடங்குளம் மாதிரியான நிகழ்வுகள்.

மேலும், கூடங்குளம் உலையை ரஷ்யா நிறுவினாலும் அது இயங்க வேண்டும், அதை மூட வேண்டும் என்ற போராட்டம் தோற்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து ஆதிக்க சக்திகளும் கவனமாக உள்ளன. ஏனென்றால் இந்தியாவுக்கு விற்பதற்காக, இங்கே நிறுவுவதற்காக பல திட்டங்கள் ஆயத்தமாக உள்ளன. கூடங்குளம் அணு உலை மூடப்பட்டால் அது இந்தியாவில் எதிர்கால அணுமின் நிலையங்கள் அனைத்தையும் பாதிக்கும் என்பதால் இந்த மக்களின் போராட்டம் இந்திய அரசின் மூலமாக உலக வல்லரசுகள் அனைத்துக்கும் எதிரான இயலாதவர்களின் போராட்டமாகும்.

இந்த இட்த்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாராட்டியே ஆக வேண்டும். ரஷ்ய அணு உலைகள் அமையவிருந்த ஹரிபூர் அணு மின் நிலையத் திட்ட்த்தை அவர் நிறுத்தியிருக்கிறார். வங்காளிகளுக்கு மின்சாரம் தேவையில்லையா? அவர்களும் ஆளும் மத்திய அரசாங்கத்தின் அங்கம் வகிக்கிறார்களே, அவர்களை ஏன் நிர்ப்பந்திக்க முடியவில்லை? மம்தாவின் முடிவிற்குப் பின்னர் அந்நிய சக்தி இருக்கிறதென்று பேச ஏன் யாருக்கும் துணிவில்லை? கொல்கத்தாவில் இருந்து கூடங்குளம் போராட்டத்தை விமர்சித்து பிரசங்கம் செய்த அப்துல் கலாம் ஏன் ஹரிபூர் பற்றி வாய் திறக்கவில்லை? 6000 மெகா வாட் அணுசக்தி நிலையத்தை நிறுத்தியவரைப் பற்றி யாரும் பேசவில்லை, ஆனால் 2000 மெகாவாட்டை கட்டாயமாகத் திணிக்கப் பார்க்கிறார்கள்.

கூடங்குளம் திட்ட்த்தை எதிர்த்து ஆர்வலர்கள் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடியபடியேதான் இருந்திருக்கிறார்கள். 1989 கன்னியாகுமரி மே தின ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நட்த்தப்பட்டது. அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் இப்போது உள்ளூர் மற்றும் வட்டார மக்களின் முழு ஆதரவையும் பெற்று தீவிரத்தை அடைந்துள்ளது.

கூடங்குளம் அணு உலை குறித்த சுற்றுச் சூழல் பாதிப்பு ஆய்வும், அதன் ஆய்வறிக்கையும் (Environmental Impact Assessment - EIA) சமர்ப்பிக்கப்படவில்லை. பொதுமக்களோடு, மக்கள் பிரதிநிதிகளோடு, ஊடகங்களில் அதைப் பகிரவில்லை.

அப்துல் கலாம் & கோ பிரசங்கம் செய்வது போல அணுசக்தி கிரீன் & கிளீன் சக்தி அல்ல. நவம்பர் 2000 இல் ஐநா சுற்றுச் சூழல் மாறுபாடு குறித்த பேச்சு வார்த்தையில் இது உறுதி செய்யப்பட்டு அணுசக்தி ஆபத்தான, தேவையற்ற ஒன்று என்ற செய்தியை சொல்லாமல் சொல்லப்பட்ட்து. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் தயாராகும் மின்சாரம் (எடுத்துக்காட்டாக காற்றாலை & சோலர் எனர்ஜி) அதே அளவு மின்சாரம் அனல்மின்நிலையம் மூலம் தாராயாகியிருந்தால் எவ்வளவு கரியமில வாயு வெளியேறியிருக்குமோ அதைக் குறைத்திருக்கும். அதனால் அத்தகைய மாற்று எரிசக்திகளுக்கு கார்பன் கிரெடிட் வழங்குவது வழக்கம். அத்தனகைய கிரெடிட் அணுசக்திக்கு வழங்க முடியாது என்று ஐநா மறுத்த்து. ஆகவே அது கிளீன் & கிரீன் எனர்ஜி மூலம் அல்ல. மேலும் 2001 இல் நிலையான தொழில்நுட்பம் என்ற அங்கீகாரத்தை அணுசக்திக்கு அளிக்க UN Sustainable Development Conference மறுத்த்து.

அணுமின் உலை இருக்கும் இட்த்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் யாரும் குடியிருக்க்க் கூடாது என்ற அரசாணை உள்ளது. ஆனால் மக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் வாய்வழியாக உறுதி சொல்கின்றனராம். எப்படியாவது காரியத்தை சாதித்தால் சரி என்ற குறுக்கு வழியே இது.

இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் அழிவைச் சமாளிக்கும் பேரிடர் மீட்பு முறையே நம்மிடம் சீராக இல்லை. அணு உலை விபத்தால் ஏற்படும் பேரிடரை நம்மால் எவ்வாறு சமாளிக்க இயலும்? ஹிரோசிமா, நாகசாகியில் இருந்து துவளாமல் மீண்ட ஜப்பானே புகோஷிமா பேரிடரில் கலங்கி நிற்கிறது. தொழில்நுட்பமும், அனுபவமும், ஆற்றலும் கொண்ட ஜப்பானே அணு உலைகளின் கதிர்வீச்சுக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. ஒவ்வொரு ஜப்பானியரையும் தனித்தனியே கதிர்வீச்சுக்கு ஆளாகியிருக்கிறார்களா என்று பரிசோதித்தார்கள். சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் உணவில் கதிர்வீச்சு உள்ளதா என்று சோதிப்பதை ஒரு வாரம் முன்னர் கூட செய்தியில் கண்டோம்.

ஜப்பானோடு ஒப்பிடும்போது உள்கட்டமைப்பு, துரிதமாக செயலாற்றும் ஆற்றல், தொழில் நுட்பம், நிர்வாகச் நேர்மை என எவற்றிலுமே ஒப்பிட முடியாத இந்தியா அது போன்ற ஒரு பேரிடரை எவ்வாறு எதிர்கொள்ளும் என நினைத்தாலே கலங்குகிறது. சுனாமியின் ஆரம்ப மணிகளில் / நாட்களில் மக்களே மக்களுக்கு உதவி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டார்கள். அதன் பிறகு அரசு இயந்திரமும், தன்னார்வ அமைப்புகளும் களத்தில் இறங்கின. அணு விபத்தில் கதிர்வீச்சை மக்களால் மக்களால் கட்டுப்படுத்த முடியாதே!

சர்வதேச விதிப்படி விபத்து நேரும் பட்சத்தில் 25 கிமீ சுற்றளவில் உள்ளவர்கள் 24 மணி நேரத்திலும், 75 கிமீ சுற்றளவில் உள்ளவர்கள் 48 மணி நேரத்திலும் வெளியேற வேண்டும். கூடங்குளத்தில் இருந்து நாகர் கோவில் 30 கிமீ தூரத்திற்குள்ளும், தூத்துக்குடி 40 கிமீ தூரத்திற்குள்ளும் உள்ளது குறிப்பிட்த்தக்கது. அணு உலையில் இருந்து 40 கிமீ சுற்றளவில் உள்ள நகரத்தின் மக்கள் தொகை ஒரு இலட்சத்துக்கு மேலே இருக்க்க் கூடாது. 2001 கணக்கெடுப்பின் படி நாகர்கோவிலின் மக்கள் தொகை 2.5 இலட்சம்.

அணுமின் நிலையத்தை சுற்றி 30 கிமீ சுற்றளவில் பத்து இலட்சம் பேருக்கு மேல் வசிக்கிறார்கள். இது அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த வரம்பை விட அதிகம். கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். அப்படியானால் இங்கே அணு உலையை அனுமதித்திருக்கவே கூடாது. எல்லா விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இங்கே மீறப்பட்டுள்ளன.

30 கிமீ என்பது ஒரு கணக்கு. அவ்வளவுதான். புகோஷிமா நிகழ்வின் போது 90 கிமீ எல்லைக்கு வெளியே இருக்குமாறு தனது பிரஜைகளை அமெரிக்கா அறிவுறுத்தியது. சில நாட்களுக்குப் பிறகு 220 கிமீ தொலைவில் உள்ள குழாய் நீரில் கதிர்வீச்சு இருப்பது தெரியவந்த்து. இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி அதை ஒரு விபத்து என்று ஒப்புக்கொள்ளவே பத்து நாள் ஆனது. கதிர்வீச்சு அணுமின் உலையில் இருந்துதான் வந்த்து என்று சொல்ல முடியாது என்றார். இவர்களை நம்பி கூடங்குளத்தை விட்டால் என்ன ஆகும்?

அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் நடந்து சிறு அணுமின் உலை விபத்தில் பாதிப்புக்குள்ளான 30 கிமீ சுற்றளவை சுத்தம் செய்ய 14 ஆண்டுகள் ஆனது என்பது இங்கே குறிப்பிட்த்தக்கது.

இந்தியாவின் கடலோரச் சட்டங்கள் கடலில் இருந்து 500 மீட்டர் தொலையில் மனிதக் குடியிருக்குக்கள், வணிக நடவடிக்கைகள் ஏதும் இருக்க்க் கூடாது என்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூடங்குளம் உலைகள் 3-6 ஆகியவற்றுக்கு விதிமீறலின் காரணமாக அனுமதியளிக்க்கவில்லை. ஏற்கனவே கட்டப்பட்ட உலைகள் விதிகளுக்கு உட்பட்டுத்தான் கட்டப்பட்ட்தா? தமிழகத்தில் இரண்டு அணுமின் நிலையங்களுமே (கல்பாக்கம் & கூடங்குளம்) கடலுக்கு மிக அருகில் அமைகின்றன.

2004 சுனாமியின் போது கல்பாக்கத்தில் என்ன நடந்தது என்ற விஷயங்கள் வெளி உலகுக்கு சொல்லப்படாமல் உள்ளன. செர்னோபில் அளவுக்கு ஒரு பெரும் விபத்து நடைபெறுவதற்கான பல வாய்ப்புகள் இருந்ததாக தெகல்கா மாதிரியான பத்திரிக்கைகள் மூலம் அறிகிறோம். அதில் எஸ்.பி.உதயகுமார் எழுதிய கட்டுரை மிகவும் கவனிக்க வேண்டியதாகும். அணுசக்தி பயன்பாட்டின் பாதகமான விளைவுகளை தகவல் அறியும் சட்ட்த்தின் மூலம் கூட அறிய முடியாத ஜனநாயகத் தன்மையற்ற போக்குதான் நமது நாட்டில் உள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது.

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாகாது என்று அதிகார வர்க்கம் திரும்பத் திரும்ப சொல்கிறது. 2004 சுனாமி கூடங்குளம் கட்டுமானப் பகுதிக்கும் புகுந்த்து. மார்ச் 2006 இல் கூடங்குளத்தையும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்ட்து. ஆக்ஸ்ட் 2011 இல் தமிழத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட்து. இதை எழுதுகிற தினத்தில் (நவம்பர் 20) கூட திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்ட்து.

கடலோரமாக இந்தியாவில் தெற்கு முனையில் அமையும் கூடங்குளம் அணு உலை தேசத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அணு மின் நிலையங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்ற அச்சத்தை பிரதமரே கூறியிருக்கிறார். சீனா வலுவாக காலூன்றியுள்ள இலங்கையில் இருந்து ஒரு ஏவுகணை விட்டால் தென் தமிழகத்தையே காவு வாங்கிட முடியும். காப்பாற்ற எந்த போதி தர்மரும் இல்லை. 

கூடங்குளத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் எங்கும் புதிய அணு உலைகள் அமைவதை அனுமதிக்காத வகையில் மக்கள் போராட்டம் அமைய வேண்டும். அமெரிக்க, ரஷ்ய, பிரெஞ்சு கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாபத்தை விடவும், இந்திய இராணுவத்தின் அணுகுண்டு தாகத்தை விடவும் அப்பாவி மக்களின் உயிரும், அவர்களது வருங்காலச் சந்த்தியினரின் நலனும் அற்பமானவை என்பதை உலகுக்கு நிரூபித்து விடக்கூடாது.

ஆனால் இந்த விஷயத்தில் ஜனநாயகத் தன்மையற்ற போக்கில் நடந்து கொள்ளும் மத்திய அரசு அதைச் செய்தே தீரும் போல் இருக்கிறது.

Monday, August 06, 2012

ஓடும் ரயிலில் ஒரு முத்தம்

- Chellamuthu Kuppusamy

"என்ன ஆச்சரியம் !! 20 ஆண்டுகளாக கனடாவில் இருக்கிறாராம். இன்னும் ஒரு கவிதைத் தொகுப்பு கூட வெளியிடவில்லை."


அ.முத்துலிங்கம் இப்படி எங்கோ எழுதியதாக துபாயில் இருந்து ஒரு நண்பர் கூறினார்.

கனடாவில் கன காலம் கழித்த முத்துலிங்கம் அய்யா லண்டனில் ரொம்ப நாள் இருந்ததில்லையென நினைக்கிறேன். நான் லண்டன் வந்து ஆறு வாரம் ஆகிறது. இன்று ஐந்தாவது புத்தக வெளியீட்டு நிகழ்வுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருக்கிறேன். இன்னும் தெரியாத நிகழ்வுகள் எத்தனையோ.

இன்று நூல் வெளியீடு செய்த பெண்மணி பிரான்சில் இருந்து குடும்பத்தோடு வந்திருந்தார், கணவன் மற்றும் குழ்ந்தைகள் சகிதமாக. லண்டனில் ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து விழாவை நடத்தினார்கள். சுமார் 30 பேர் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோருமே விழா நாயகிக்கு அல்லது அவரது கணவருக்கு தெரிந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரு கெட்-டூகதர் மாதிரித்தான் இருந்தது.

மேடையில் படைப்பாளி மற்றும் விழா தலைவர் தவிர வேறு இருவர் பேசினார்கள். ஒருவர் கவிதாயினியின் நற்பன்புகள் குறித்துப் பேசினார். இன்னொருவர் இளைய தலைமுறை பெண் கவிஞர்களின் பெயர்களை பட்டியல் போட்டுப் பேசினார். அவரது வரிசையில் 38 வரை எண்ணினேன். அதற்கு மேல் போரடித்து விட்டது. கடைசியாக, இதில் 2008 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிவந்த என்னுடைய இரு தொகுப்புகளும் அடங்கும் என்று அவர் சொன்னதுதான் ஹைலைட்.

எனினும் டூரிஸ்ட் இலக்கியவாதி என சுப்பிரமணியபுர மகாகவிஞனால் விளிக்கப்பட்ட கவிதாயினின் பெயர் விடுபட்டதை, பெண் கவிஞர்களை பட்டியல் போடுவது கடல் நீரை கையில் அள்ளுவது போல இயலாத காரியம் என்ற உண்மையில் சாட்சியமாகவே கருதினேன்.

ஆயிரம் விசிட்டிங் கார்டு அடிக்க நானூறு ரூபாய் ஆகிறதாம். நானூறு பிரதிகள் கவிதைத் தொகுப்பு போட ஐயாயிரம். பிறகென்ன? நானும் சென்னைக்குப போனவுடனே ஒரு கவிதைத் தொகுப்பு போட முடிவு செய்திருக்கிறேன். சென்னையில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பி 60 பக்க கவிதைத் தொகுப்பு அறுபது ரூபாய் எனப் போட்டிருந்தார்கள்.

பேச்சாளர்கள் பேசி முடித்ததும் விழாத் தலைவர் பேசினார். இன்னார் வெளியிட இன்னார் பெற்றுக் கொள்வார் என அறிவித்தார்.

இன்னும் சில பெயர்களை அவர் அறிவித்தார். அவர்கள் எல்லாம் வந்து புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துச் சென்றனர். கூடவே 5 பவுண்ட், 10 பவுண்ட் என பணமும் கொடுத்துப் போனார்கள். அறுபது ருபாய் புக்கை அறுநூறு கொடுத்து வாங்குமாறு வலியுறுத்தப்படுவது புதுமையாக இருந்தது. சற்று நேரம கழித்த பிறகுதான் உறைத்தது. நாளைக்கு இவர்கள் கவிதைத் தொகுப்பு வெளியிட்டால் இந்தக் கவிதாயினி வந்து பணம் கொடுப்பார். என் வீட்டுக் கல்யாணத்தில் நீ மொய் வைத்தால் உன் வீட்டுக் கல்யாணத்துக்கு நான் அதைத் திருப்பிச் செய்வேன்.

வெளியீட்டு நிகழ்வு முடிந்து சமோசாவும், சாண்ட்விச்சும், தேநீரும் தந்தார்கள். விழாவின் இந்தப் பகுதி எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் இலக்கியக் கூட்டம் ஒன்று சர்ச்சை இல்லாமல் முடிவது பிடிக்கவில்லை. கூடவே புத்தகத்தை வெளியிடுகிறேன் என்று சொல்லி அதற்குக் காசு வாங்கும் லண்டன் பழக்கமும் பிடிக்கவில்லை. இரண்டாவது கப் தேநீர் முக்கால்வாசி முடித்த பொது 'கொண்டு போய் வாசியுங்கண்ணா ' என்று கவிதாயினி ஒரு பிரதியை சும்மா தந்தார். பிடிக்காததெல்லாம் இப்போது பிடித்தது.

ஒரு வழியாக கூட்டம் கலைய இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. சின்னதாக பஸ் பிடித்து விம்பிள்டன் போனால் போதும். அங்கிருந்து ஒரே ரயில். நல்ல வேளையாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த கனவான் ஒருவர் தன்னுடைய காரில் என்னை விம்பிள்டனில் டிராப் செய்தார். நாளைக்கு இங்குதான் ரோஜர் ஃ பெடரரும், ஆண்டி முர்ரேயும் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்காக மோதப் போகிறார்கள் என்பதற்கான சுவடுகள் அதிகமில்லை.

ஆறு நிமிடத்தில் கிளம்பிய அப்மினிஸ்டர் செல்லும் ரயில் காலியாகவே இருந்தது.  நான்கைந்து ஸ்டேஷன்கள் கடக்கையில் சில பேர் சேர்ந்திருந்தார்கள். இரண்டு பேர் அமரும் இருக்கைகள் எதிரெதிரே இருந்தன. பட்னி ஃ பிரிட்ஜில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆங்கிலேயர் ஏறி எனக்கு எதிரே அமர்ந்து கொண்டார். அடுத்த ஸ்டேஷனில் ஒரு ஜோடி ஏறியது. எனக்கு அடுத்திருந்த இருக்கையில் ஆடவனும், எதிரே முதியவருக்கு அருகிலிருந்த இருக்கையில் அந்தப் பெண்ணும் அமர்ந்து கொண்டனர். பெட்டியின் இதர இருக்கைகள் மனிதர்களாலும், காற்று மது வாடையிலும் ஓரளவு நிரம்பியிருந்தது.

ரயில் சவுத்கேன்சிங்க்டனை அடைந்த போது நான் கவிதைத் தொகுப்பைத் திறந்து வைத்திருந்தேன். யெளவனம் கூடிய மயிலாடும் தோப்பில் காகம் ஒன்று சட்டையில் எச்சம் கழிவது தொடர்பான பின்நவீனத்துவ கவிதையை வாசிக்கையில் எனது தோளை யாரோ தொடுவது போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன், அவனருகில் அதே வயதுள்ள அவனை விடச் சற்று பருமனான பெண். இருவரிடமும் இருந்து மது நெடி வீசியது.

"வாட் ஆர் யு ரீடிங்?" என்றான்.

கிராமத்துப் பள்ளியிலிருந்து வந்த முதலாமாண்டு மாணவனை சீனியர் ஸ்டூடண்ட்ஸ் ராகிங் செய்வது போன்ற தொனியில் இருந்தது அவன் கேள்வி. அவனை சட்டை செய்யாமல் மறுபடியும் திரும்பி கவிதையில் லயிக்க முயன்றேன்.

மறுபடியும் தோளைப் பிடித்து உலுக்கி, "வாட் ஆர் யு ரீடிங் மேன்?" எனக் கேட்டான்.

கிட்டத்தட்ட 15 பேர் என்னையே கவனித்தார்கள். மயிராண்டி. மூஞ்சி மேலே குத்த வேண்டும் போலிருந்தது. ஆனாலும் கருமம் எதற்கு வம்பென்று கருதி, "இட்ஸ் எ ஸ்டோரி" என்று சொல்லி விட்டு மறுபடியும் வாசிக்கத் தொடர்ந்தேன்.

இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் கேள்வி கேட்டான், "ஹவ் டூ யு சே ஃபக் ஆப் இன் யுவர் லேங்குவேஜ்?". இப்போது தோளைத் தொடவில்லை.

கோபமும், அவமானமும், வெறுப்பும் ஒருசேர தலைக்கேறியது. திரும்பி ஒரு முறை முறைத்து விட்டுத் திரும்பவும் புத்தகத்தில் பார்வையைச் செலுத்தினேன். இப்போது கவிதை படிக்கும் மனநிலையில் இல்லையென்றாலும் வேறு எதையும், யாரையும் நோக்கும் விருப்பம் இல்லை. மறுபடியும் பேசிக்கொண்டே வந்தான்.

"ஐ ஆஸ்கிடு ஹவ் டூ யு சே ஃபக் ஆஃப் இன் யுவர் லேங்குவேஜ்"

எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆடவன் மந்தகாசப் புன்னகை கொண்டிருந்தான். எதிரே இருந்த பெரியவர் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தார்.

ஐம்புலன்களில், நேராகப் பார்த்திடாத கண்ணைத் தவிர ஏனைய பிற புலன்களைக் கூர்மையாக்கிக்கொண்டேன். பின்னாலிருந்து என்னைச் சீண்டுபவனின் காதலி அவனது காதலி எதோ முனுமுனுப்பது கேட்டது. 'ரைட்' என்ற வார்த்தை மட்டும் எனக்குக் கேட்டது.

"ஹே யு ரீட் ஃபுரம் ரைட் டு லெப்ட்?"

இப்போது எனக்குப் புரிந்து விட்டது, போதையில் இருப்பவனை அவள்தான் உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறாள் என்று. மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டான். இல்லையெனப் பதில் சொல்லி விட்டு அந்தக் கவிதாயினி கூட தனது நூலை வாசித்திராத அளவுக்கு அதை ஆராய்ந்து கொண்டிருந்தேன். எதிரே இருந்த பெரியவர் கவலை தோய்ந்த முகத்தோடு என்னை நோக்கினார்.

அவன் மீண்டும் என்னைக் கேட்டான்.  இப்போது வேறு கேள்வி.
 "ஹவ் டு யு சே ஐ லவ் யு இன் யுவர் லேங்குவேஜ்?"

"உச்சரிக்கச் சிரமாயிருக்கும். பரவாயில்லையா?" என்றேன்.

"என் நாக்கு எப்படிச் சுழலும் என்று இவளைக் கேள். தெரியும்"

அவள் சிரித்துக்கொண்டாள்.

"டெல் மீ. ஹவ் டு யு சே ஐ லவ் யு இன் யுவர் லேங்குவேஜ்?"

"கண்டாரொலி முண்டை"

"தேங்க் யூ" என்று அவன் சொல்லவும் "நெக்ஸ்ட் ஸ்டேஷன் ஈஸ் எம்பெங்க்மென்ட்" என அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது.

அவர்கள் இறங்க ஆயத்தமாகையில் அவள் தனது கைகளை அவன் கழுத்தைச் சுற்றி வளைத்தாள். அவன் குடித்திருந்த ஒட்காவின் வாசத்தையும், அவள் குடித்திருந்த ஒயின் வாசத்தையும் அவர்களது உதடுகள் மீண்டுமொரு முறை பரிமாறும் தருவாயில் இருந்தன.

"ஐ லவ் யூ" என்றபடி அவள் மூக்கோடு மூக்கு உரச, "கேண்டரொளி முண்டே" என யாருமே தன காதலியைக் கொஞ்சாத வண்ணம் கொஞ்சி முத்தமிட்டான் அவன்.

எம்பெங்க்மேண்டில் அவர்கள் இறங்கிய கணமே எனக்கு எதிரேயிருந்த பெரியவர் சீரியசான குரலோடு பேசினார்.

"நான் மன்னிப்க் கேட்கிறேன். இத்தனை காலித்தனத்தையும் பொறுத்துக்கொண்டு நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டீர்கள்"

"பரவாயில்லை" எனும் பொது எனது புன்னகையில் திருப்தி தவழ்ந்தது.

Friday, March 23, 2012

முதலாளியின் மனைவி

அமீரகத்தில் இருக்கும் ஆஃசிப் மீரான் வேண்டுகோளின் படி அமீரக ஆண்டு மலருக்காக எழுதியது..

- செல்லமுத்து குப்புசாமி

*****

இது ஒரு மெகா சீரியல். இப்போது நாம் பார்க்கவிருப்பது அதில் ஒரு எபிசோடு. முந்தைய பகுதிகளைப் பார்க்காமல் இதைக் கண்டால் புரியாது என்பதால் பின்னணி என்ற பெயரில் ஒரு முன் கதைச் சுருக்கம்.

நாற்பத்து மூன்று வீடுகளே உள்ள சின்னஞ்சிறு கிராமம் செல்லப் பிள்ளை புதூர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளிக் கட்டிடமும், இப்போது பால் சொசைட்டியாக இயங்கும் பழைய திண்ணைப் பள்ளிக்கூடக் கட்டிடமும், அவை இரண்டுக்கும் இடையில் கிழக்குப் பார்த்து அமராவதி ஆற்றை நோக்கியபடி ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் முனீஸ்வரர் மற்றும் விநாயகர் (தமிழ் சினிமாவில் பஞ்சாயத்து சொல்வதற்குத் தோதான) திண்ணைக் கோவில்களும் முகப்பில் அமைந்திருக்கும் கிராமம்.
தினமும் காலை, மாலை இரு வாகன்ங்கள் நிச்சயமாக வந்து போகும். ஒன்று எஜமான் படத்தில் வரும் ரஜினியை நிஜத்தில் நிறுத்தும் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் நடத்தும் தனியார் பள்ளியில் இருந்து வரும் ஸ்கூல் வேன். மற்றது பால் சொசைட்டியில் பால் எடுக்க வெரும் டெம்போ. மற்றபடி பஸ் பிடிக்க வேண்டுமானால் ஸ்கூல் வேன் கூடவே ஆறு கிலோ மீட்டர் ஓட வேண்டும். இல்லையானால் ஆற்றைத் தாண்டினால் பஸ். அதுதான் வெளி உலகுடன் அவர்கள் தொடர்பு கொள்ளும் முதன்மையான ரூட்.
 
இருபதுக்கும், முப்பந்தைத்துக்கும் இடையில் பிராயம் கொண்ட ஆட்கள் அரிதாகத் தென்படும் ஊர். ஏகதேசமாக கேரளா கந்துக் கடைக்கும், திருப்பூர் பனியன் கம்பெனிக்கும் போய் விட்டார்கள். அமெரிக்கா மாப்பிள்ளையைக் கட்டிக்கொண்டு ஒருத்தியும், பெங்களூர் சென்னை என சாஃப்ட்வேரை நோக்கி நாலு பேரும், கோயம்புத்தூரில் சலூன் வைப்பதற்கு இரண்டு வாலிபர்களும் போய் விட இரண்டு பேர் தினசரி காலையில் எட்டே முக்கால் பஸ்ஸில் தாராபுரம் போய் சாயங்காலம் ஐந்தரை பஸ்ஸில் திரும்புகிறார்கள். அதில் ஒருவன் கார் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்கிறான். இன்னொருவன் ஆறு வருசமா என்ன செய்யறான்னு யாருக்கும் தெரியாது. ஏதோ கல்யாணம் ஆகும் வரைக்கும் பில்டப் செய்து தீர வேண்டியிருக்கிறது பாவம் அவனுக்கும்.

இப்படியாகப்பட்ட ஊரில் விவசாயத்தின் மீதுள்ள நாட்டம் காரணமாகவும், வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டிருக்கிற தான் பிறந்து வளர்ந்த மண்ணைப் பிரிய இயலாத்தாலும் ஊரிலேயே இருக்கும் ஒரு இளைஞன் முத்து, நமது நாயகன். கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்தவன்.

வார லீவில் ஊருக்கும் வரும் பழனிச்சாமி பதினைந்து நாளாக திரும்பிப் போகாமல் ஊரைச் சுற்றியபடியே இருக்கிறான். அவன் வேலை பார்த்த திருப்பூர் பனியன் கம்பெனியில் லாங் லீவ் விட்டிருப்பதாகச் சொல்கிறான்.

நேற்று எர்ணாகுளத்தில் இருந்து மணியன் வந்திருந்தான். இவர்களை விட சின்னப் பையன். எட்டாவதுக்கு மேல் படிப்பு ஏறாமல் மலையாள தேசம் போய் கந்துக் கடை விரித்து நன்றாக செட்டில் ஆகி விட்ட பயல்.

மணியன் வந்த்தை ஒட்டி முத்துவின் தென்னந்தோப்பில் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு ஏற்பாடாகிறது. தோப்பின் நடுவே டிராக்டர். அதன் பின்னே டிரெய்லர். அதனுள்ளே முத்து, பழனிச்சாமி, மணியன் மூவரும் வட்டமாக உட்கார்ந்திருக்க அவர்களுக்கு மத்தியில் சரக்கும், அதற்குக் கடிக்க முறுக்கும், முத்துவின் டிரேக்டரில் எப்போதும் தயாராக இருக்கும் வாட்டர் பாட்டில் + எவர்சில்வர் டம்ளர் கூட்டணியும் உள்ளேன் அய்யா. இளமத்தியான நேரம். மணி 11 ஐ நெருங்குகிறது.

காட்சி 1:
பழனிச்சாமியின் டம்ளர் மட்டும் வேகமாகத் தீர்கிறது.

பழனி: (மணியனை நோக்கி) ஏண்டா இப்பவெல்லாம் அடிக்கடி வர்றது இல்ல?

மணியன்: எங்கண்ணா வர்றது? முந்தி மாதிரின்னா வந்துரலாம். இப்ப குடும்பம் குட்டீனு ஆகிருச்சு. அப்பறம் உங்கலையாட்ட பொச்சுக்கு பொறவாலயா இருக்கறேன்? (கொஞ்சம் இடைவெளி விட்டு) நீங்க வாராவாரம் வந்துருவீங்களாட்ட இருக்குது.

பழனி: இத்தன நாளு அப்படித்தான் வந்தண்டா. இனி முடியாது.

மணியன்: ஏன்னா? வேலை ஜாஸ்தியா? இல்லீன்னா திருப்பூர்ல எதாவது பிகர் செட் பண்ணிட்டீங்களா?

முத்து: (இடைமறித்து) டேய் சும்மா இருடா. அவனே எடஞ்சல்ல இருக்கான். நீ வேற கொடயாதே.

மூன்று பேரும் கொஞ்ச நேரம் பேசாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆளுக்கு நாலு மடக்கு குடித்து, புது முறுக்கு பொட்டலத்தையும் உடைக்கிறான் முத்து. அவர்கள் இருக்கும் இட்த்தை நோக்கி ஒருவர் நடந்து வருகிறார். மரமேறும் மூப்பன் அவர். தோளில் தொழிலுக்கான உபகரணமும், முதுகில் கத்தி வைக்கும் பொட்டியும் சூடி வருகிறார். நாற்பதைக் கடந்த வயது. ஐம்பதாக்க் காட்டுகிறது உடலும், முகமும். கயிறு உரசி முதுகு காய்த்திருக்கிறது.

மணியன்: அது நம்ம நல்லான் தான?

பழனி: ஆமாண்டா. பாரு. நேரா வந்து ஏனுங்க இப்படி பண்றீங்கம்பாம்பாரு.

அதே மாதிரி டிரெயிலருக்கு அருகில் வந்த்தும் வராத்துமாம நல்லான் பேசுகிறார்.

நல்லான்: உங்களைல்லா நம்பி எப்புடீங்க ஊருக்குள்ள இருக்கறது? உங்களுக்கே இது நல்லா இருக்குதா? பெரிய மனுசம்பெத்த புள்ளயாட்டவா இருக்குது நீங்க செய்றது?

முத்து: எல்லா நல்லாத்தே இருக்குது. ஏழு மணில இருந்து மரமேறீட்டு வந்து வெறு வயித்துல குடிச்சீன்னா கொடலு வெந்து போயிரும். அப்பறம் உம்பட இஸ்டம்.
காய் போடப் போன தோப்பில் மூன்று இளநீர் குடித்திருந்தார் நல்லான். அதைத் தவிர வேறொன்றும் சாப்பிட்டிருக்க மாட்டார் என்பது முத்துவுக்குத் தெரியும். அந்த ஊரில் அநேகமான கடின வேலைகள் அதிகாலை தொடங்கி பத்து பத்தரைக்குள் முடிந்து விடும். மறுபடி மாலை நாலு மணிக்கு மேல்தான்.

நல்லான்: (பொட்டி, கயிறு எல்லாம் கீழே கழட்டி வைத்து விட்டு டிரெயிலர் டயரில் காலை வைத்து உள்ளே ஏறியபடியே) நீங்கல்லாம் பொறக்கறதுக்கு மிந்தியே கள்ளு கட்டுனவன் நானு. நீங்க என்னமோ சொல்றீங்க. இது கூல் டிரிங்க்ஸாட்ட. இன்னொரு தம்ளாரு எடுத்து வெய்யிங்க.

நல்லான்: கேரளாக்காரரு வந்திருக்காங்க.. அதுனாலதான் எளமத்தியானத்திலயே ஆரம்பிச்சுட்டீங்களா?

மூவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்க்க, முத்து இன்னொரு டம்ளரை எடுத்து நீட்ட நல்லான் அதில் தானே பிராந்தியை ஊற்றுகிறார். எதையை கலக்காமல் அப்படியே வாயில் வைக்கிறார் நல்லான்.

பழனி: வாட்டர் பாட்டில் இருக்குது நல்லா(ன்). தண்ணி ஊத்தி மிக்ஸ் பண்ணிக்க.

நல்லான்: பாலாக இருந்தாலுந்சரி, பிராந்தியா இருந்தாலுந்சரி தண்ணீர் கலக்கினா ஒடம்புக்கு ஒத்துக்காதுங்க

ஊற்றியதில் பாதியை காலி செய்து விட்டு கீழே வைத்து விட்டு ப்ழனிச்சாமியைப் பார்த்து கேட்கிறார்.

நல்லான்: இன்னி உங்களுக்கு வேலை இல்லீங்க? எதாச்ச்சியும் தறிக்கிறி போட்டுக்குங்க. நெழல்லயே இருந்து பழகீட்டீங்க. காடு தோட்ட்த்துல போய் பாடுபடவா போறீங்க !
(பனியன் கம்பெனியில் வேலை போய் விட்ட்து என்பது மணியனுக்கு இப்போதுதான் தெரிகிறது)

மணியன்: வேல போயிருச்சான்னா? பத்து பன்னண்டு வருச சர்வீஸ். எதோ சூப்பர்வைசருன்னு சொன்னைல்லண்ணா?

பழனி: எல்லா இந்த சாயப்பட்டறை பிரச்சனடா. அதுக்கு முந்தி நல்லாத்தான் இருந்துது. ஏகதேசமா எல்லா யூனிட்டும் மூடிட்டாங்க.

முத்து: ஒதச்சுப்போடுவண்டா. யாருடா பிரச்சின பண்ணுனா? முப்பது வருசமா நொய்யல் ஆத்தையே நாசம் பண்ணீட்டானுக. அப்பவெல்லாம் ஒன்னுந்தெரியல. இப்ப இவனுகளுக்கு லாபம் வல்லீன்னா, வேல போச்சுன்னா மட்டும் வலிக்குது. குத்துது கொடையுதுனுக்கிட்டு. கம்பெனி ஓனர்கள உடுடா. உன்னையாட்ட வேலைக்குப் போன குடியானவனுகள ஒதக்கணும் மொதல்ல.

பழனி: மறுக்கா ஆரம்பிச்சிட்டியாடா? சித்தே கம்முனு இரு. (மணியனை நோக்கி) அப்பறம்டா மணியா.. எல்லா சவுக்கியந்தான?

மணியன்: பரவால்லீண்ணா. எட்டு லைன் போட்டிருக்கேன். இன்னோ 3 லைன் போடலானு ஐடியா பண்ணீட்டு இருக்கேன். பனண்டுருவா (12) ரொட்டேஷன்ல ஓடுது.

முத்து: டேய்.. உங்க உப்புசம் தாங்க முடியலடா சாமி. (கொஞ்சம் இடைவெளி விட்டு) இதெல்லா ஒரு பொழப்பாடா? ஊரு விட்டு ஊரு போய் வட்டிக்கு உட்டு சம்பாரிக்கறதுக்கு பொம்பள புரோக்கர் வேலை பாக்கலாம்.

பழனி: இவன் இப்படித்தான் ஒளறுவான்.. தானும் படுக்காம தள்ளியும்படுக்காம... நீ கண்டுக்காத மணியா. (முத்துவை நோக்கி) நீ இந்த ஊரு பொடக்காலியக் கூட தாண்டாட்டி யாருமே வெளிய போயி பொழைக்க்க்கூடாதாடா?

முத்து: (நக்கலாக) முத்தூட் பினான்ஸ், மணப்புரம் கோல்டுன்னு மலையாளத்தானுக நம்ம ஊர்ல வட்டிக்கு விட்டா இவனுக போய் கேரளாவுல கந்துக் கடை விரிக்கறானுக. என்னைய பொறுத்தவரைக்கும் அது ஒரு கேடுகெட்ட பொழப்பு.

உனக்கு பொறாமைண்ணா என மனதுக்குள் நினைத்தபடி அமைதியாக இருக்கிறான மணியன்.

நல்லான்: ஆளாளுக்கு அவியவிய பொழப்பப் பத்தி பேசுங்க எம்பொழப்ப மறந்துருங்க.  

பழனி:. உடு நல்லா(ன்). நம்ம காட்ல கள்ளு கட்டீரலாம். ஆளுக்கு ரண்டு குடுவை. மிச்சத்த நீ வித்துக்க. ஆனா போலீஸ் வந்துதுனு வெய்யி..

நல்லான்: எங்காட்டுல தெளுவு கட்டச்சொன்னேன். இந்த மூப்பந்தே கள்ளு கட்டி திருட்டுத்தனமா விக்கறான்னு சொல்லீருவீங்க. கவண்டீகள்ளா வெவரமுங்கோ..

முத்து: கள் எறக்கறது, கள்ளச் சாராயம் காச்சறது எல்லாம் சட்ட விரோதம். எது செஞ்சாலும் சட்டப்படி செய்யணும்

நல்லான்: (நடக்கும் விவாத்த்துக்கு சம்மந்தமே இல்லாமல்) ஏனுங்க அங்க பாருங்க மாரியப்பன.. பண்ணையத்துல இருந்தா அவனாட்ட இருக்கணுங்க.. அப்படி ஒரு பண்ணையத்துல சேர்ரதுன்னா நானெல்லா சம்பளமே கேக்க மாட்டனுங்க.

மணியன்: என்னமோ மேட்டர் இருக்குமாட்ட இருக்குது. ஊருக்கு அடிக்கடி வல்லீன்னா நாட்டு நடப்பே தெரிய மாட்டீங்குது.

பழனி: கெழபுறத்து தோட்ட்த்து கந்தசாமி அண்ணன் இருக்கார்ல.  அவரு துபாய் போனது உனக்கு தெரியும்ல. அவரு பண்ணையத்துல ஆரான்னு ஒரு பள்ளப்பையன் இருக்கான்.

நல்லான்: அகல உளுகறதுக்கு அவிய வெளிநாடு போய்ட்டாங்க. ஆரான் அவிய பண்ணையத்தை ஆழ உளுகறான்னா பாத்துக்குங்க..

மணியன்: பண்ணையத்தை மட்டுந்தேனா? (நக்கலாக)

நாலு பேரும் விவகாரமாக சிரிக்கிறார்கள்.

காட்சி 2:
மாலை 5 மணி. முனீஸ்வரன் கோவில் ஆல மரத்தடியில் ஊரே கூடியிருக்கிறது. இன்னும் பால் சொசைட்டி திறக்கவில்லை.

ஒருவர்: ஏப்பா கருப்பா. நல்லா கேட்டையா. 4 மணீன்னுதான் சொல்லி உட்டாங்களா?

நல்லசாமி என்கிற மூப்பன் நல்லான் ஆனது போல, ஆறுச்சாமி என்கிற பள்ளன் ஆரான் ஆனது போல கருப்புசாமி என்கிற நாவிதன் கருப்பன் ஆனான்.

கருப்பன்: நாலு மணிக்கு வந்துருவோம். ஊர்ல அல்லாரும் இருக்கோணும்னு கண்டிசனா சொல்லி உட்டாங்களுங்க. எசமாங்க சொன்னதத்தான் நான் சொன்னனுங்க. வந்துருவாங்களுங்க.. (கொஞ்சம் பளபளப்பாக இருக்கும் ஒருவரை நோக்கி) ஏனுங்க மச்சூட்டு கவண்டருங்க.. நம்ம கிட்ட எசமாங்க நம்பர் இருக்குமல்லவுங்க. வேணும்னா செல்போன்ல கூப்பிட்டு பாருங்களே.

மச்சு வீட்டுக்காரர்: அட நீ வேற ஏப்பா. அவிய வாரப்ப வரட்டும். நம்மளுக்கு எதுக்கு வம்பு?
(மிராசுதார், ஜமீன்தார் வழக்குகள் நாடெங்கும் ஒழிந்தாலும் கொங்குநாட்டில் குடியானவர்கள் முதல் கூலிக்கார்ர்கள் வரை அனைவரும் பயந்து மரியாதையோடு தொழும் பட்டக்கார்ர்கள் எல்லது எஜமான்கள் இன்னும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். சேரர் காலத்தில் கொங்கு நாடு 24 பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியையும் ஒரு பட்டக்காரர் நிர்வகித்த்தாகச் சொல்லப்படும் பிளாஸ்பேக் இந்த எபிசோடின் இரண்டாவது காட்சிக்கு முக்கியமானது)

ஒரு குடியானவர்: (மெதுவாக பக்கத்தில் இருப்பவரிடம்) மாடு பாதி வயித்தோடு இழுத்துக் கட்டீட்டு வந்துட்டேன். இன்னஞ்சித்த மேச்சிட்டு வந்திருக்கலாம்.

பக்கத்தில் இருப்பவர்: நீங்க வேற மாப்ள. நான் மூனரைக்கே பால் பீச்சீ பாலும் வல்ல ஒன்னும் வல்ல. கண்ணுக்குட்டிய அவுத்து உட்டுட்டு வந்துட்டேன்.

இந்த சமயத்தில் பொலீரோ, பஜீரோ, இன்னோவா என ஐந்தாறு வண்டிகள் வந்து நிற்கின்றன. அதில் ஒன்றிலிருந்து பட்டக்கார்ர் இறங்க மற்றதில் இருந்து ஆளுங்கட்சி வேட்பாளரும், அவரது அடிபொடிகளும் சற்று பவ்யமாகவே பின் தொடர்கிறார்கள். பட்டக்காரரைப் பார்த்து ஊர் மக்கள் அனைவரும் கையெடுத்து கும்பிடுகிறார்கள். அறுபது வயதுக்கு மேலான குடியானவக் கவுண்டர்கள் ஜப்பானிய சண்டைக்காரர்கள் போல இடுப்புக்கு மேல் முன்னால் குனிந்து கையை முன்னால் நீட்டி கும்பிடுகிறார்கள். மனிதனின் முதுகெலும்பு வயோதிகத்தில் அதிகபட்சமாக எவ்வளவு தூரம் முன்னோக்கி வளையும் என்பதை அங்கே அறிய முடிந்த்து. Old habits die hard for them. கர்வத்தோடு தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அவர்கள் அணுகும் முறைக்கும், இப்போது அவர்கள் நடந்துகொள்வதற்கும் துளியும் தொடர்பில்லை.

பட்டக்கார்ர்: என்னப்பா எல்லாம் வந்துட்டீங்களா?

கும்பலாக பேசுகிறார்கள்.
வயதானவர் 1; சாமி நம்மூருக்கு வெகு நாளக்கப்பறம் வந்துருக்கறீங்க. நாங்க இவத்தாளையே இருந்துக்கிட்டு வராம இருப்பமுங்களா?

வாழைப்பழ சீப்பு, வெற்றிலை தேங்காய், ஆப்பிள், ஆரஞ்சு என வைக்கப்பட்டிருக்கும் பெரிய தட்டை ஒன்னொரு பெரியவர் பவ்யமாக நீட்டுகிறார். பட்டக்காரர் அதை வாங்கி பக்கத்தில் நிற்கும் தன் சமையல்கார பண்டாரத்திடம் நீட்டுகிறார். அதன் பிறகு பேச ஆரம்பிக்கிறார்.

பட்டக்காரர்: இவரு ரத்தினம். ஆளுங்கச்சில எம்.எல்.ஏ எலக்சன்ல நிக்கறாரு. அவருக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வெச்சரணும்.

வயதானவர் 1: நீஙக் என்ன சொல்றீங்களோ அப்படியே செய்யறமுங்க சாமி.

பட்டக்காரர்: அப்பறம் உங்களுக்கு எதாச்சும் கோரிக்கை இருந்தா சொல்லுங்க. இவரு நெறவேத்தி வெப்பாரு.

ஒரு பெண்: தண்ணி டேங்க் இருக்குதுங்க. நல்ல மொறையா வேலை செய்யறது இல்லீங்க. பாதி நாள் தண்ணி வாரதே இல்லீங்க.. பாத்து செஞ்சு குடுக்கச் சொல்லுங்க சாமி

வேட்பாளர்: ஆட்சிக்கு வந்த உடனே பாக்கறேங்கம்மா

பட்டக்கார்ர்: அடையாளந்தெரியல.. (மேக்காலக்காட்டு குமாரமி மருமக என்று கூட்டத்தில் சொல்கிறார்கள்) ஓ.. நீயா.. ஏம்மா. இதெல்லாமா எம்.எல்.ஏ பாப்பாரு? ஆத்தோரமா இருக்கற ஊரு. நாம போயி தண்ணி ஒரு பிரச்சினைனு பேசிக்கிட்டு. நீங்களே ஒரு ஆள ஏற்பாடு பண்ணி டேங்க சுத்தம் பண்றது மோட்டார் போட்டு உடறது பாத்துக்கணும், சரியா?

அந்தப் பெண்: சேரிங்க.

முத்து: ஆத்துல மணல் எடுக்கறத தடுக்கணும்ங்க. எல்லா மண்ணையும் அள்ளீர்ராங்க. வேடையில தண்ணியே நிக்க மாட்டீங்குது. மிந்தியெல்லாம் ஊத்து பறிச்சா ரண்டு மூனு மாசம் தாங்கும், இப்ப வெறும் பாறைதான் இருக்குதுங்க. நீங்க எம்.எல்.ஏ ஆனா என்ன நடவடிக்கை எடுப்பீங்க?

வேட்பாளர்: எங்க தலைவர் சொல்றதையே நானும் சொல்றேன். சட்டவிரோதமா மணல் அள்றத தடுப்போம். மணல் கொள்ளையர்களை தண்டிப்போம்.

முத்து: சட்ட வீரோதமா அள்றது சரிங்க.. சட்டப்படி அரசாங்கமே அள்ளுதே.

வேட்பாளர்: மணல் மாஃபியாவை வேற எப்படி தம்பி தடுப்பீங்க?

முத்து: ஏங்க மணல் அள்றது தப்பு. அதனால நிலத்தடி நீர் மட்டம் குறையுது. கோடை காலத்துல கெணறு எல்லாம் முன்னை மாதிரி இல்லாம வத்திப் போகுது. ஆத்துல தண்ணி ஓடற ஆறு மாசம் சரி. அப்பறம் அப்படியே மொட்ட மண்டையாட்ட காஞ்சு போகுது. ஒரே பாறைதான் இருக்குது. எப்படீங்க தண்ணி தேங்கும்?

வேட்பாளர்: தம்பி.. ஒன்னு புரிஞ்சுக்குங்க. நம்ம தொகுதில யாரும் மணல் அள்ளாம இருக்க நான் கேரண்டி. கரூர் பக்கத்துல அள்ளுனா அது நம்ம கட்டுப்பாட்டுல வராது.

முத்து: (கொஞ்சம் மிரட்டலான தொனியில்) உங்க தலைவர் கிட்ட சொல்லி அமராவதி ஆத்துல மணல் அள்ளவே கூடாதுன்னு சொல்லுவீங்களா? அப்படீன்னா சொல்லுங்க ஓட்டுப் போடறோம். இல்ல அதெல்லாம் முடியாது அது நம்ம கட்டுப்பாட்டுல இல்லைன்னு சொன்னீங்கன்னா எங்க ஊர்க்காரங்க எல்லாம் மெட்ராஸ் வந்து உங்க வீட்டு முன்னால் உக்காந்துக்கிட்டு உங்க கை கால் எல்லாம் கட்டிப் போட்டு உங்க பேர்ல அறிக்கை விட்டுருவோம்.

பட்டக்காரரின் முகம் மாறுகிறது. கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருக்கிறார்.

வேட்பாளர்: என்னன்னுப்பா?

முத்து: இனிமேல் தமிழகமெங்கும் ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தவிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் மணல் அள்ளி தமிழ்நாடு மற்றும் கேராள முழுவது சப்ளை செய்ய சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வருவேன் அபடீன்னு.

பட்டக்காரர் அதற்கு மேல் நிற்க விரும்பவில்லை.

பட்டக்காரர்: அதெல்லாம் செய்வாரு. ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைங்க.
(எல்லோரையும் கும்பிட்டு விட்டு கிளம்புகிறார். பின்னாலேயே வேட்பாளரும் கிளம்ப, நல்லான் சத்தமாக குரல் கொடுக்கிறார்)

நல்லான்: ஏனுங்க. அப்படியே இன்னொரு வேண்டுதலைங்க. கள் எறக்க எதாவது ஏற்பாடு செஞ்சு குடுப்பீங்களா?

வேட்பாளர்: சட்ட விரோதமாக கள் எறக்க, சாராயம் காச்ச அனுமதி கெடைக்காதுன்னு நினைக்கிறேன்.. (என்றபடியே நடக்கிறார்)

நல்லான்: (தனக்குத்தானே) மணல் அள்றது சட்டப்படி செய்யலாம், டாஸ்மாக் சட்டப்படி விக்கலாம். அவனவன் செஞ்சா தப்பு அரசாங்கம் செஞ்சா சரி. இனிமே அவனவன் பொண்டாட்டிய அவனே இது பண்ணா கூட சட்ட விரோதம் அரசாங்கம் பண்ணாதான் சட்டப்படி சரின்னு சொல்லுவாங்களாட்ட இருக்குது.

காட்சி 3:

முத்துவும், நல்லானும் ஒரு மாலை நேரத்தில் ஆற்றோரமாக நடந்து போகிறார்கள். நாணல் புதரில் இருந்து பரிமளா போகிறாள். வயது முப்பந்தைந்தில் இருந்து நாற்பதுக்குள் இருக்கும். துபாய்க்கார கந்தசாமியின் பொண்டாட்டி. முந்தானையை சரி செய்தபடி போகிறாள். முகத்தில் ஒரு வித திருப்தியோடு நடை போடுகிறாள்.

அவள் போன ஓரிரு நிமிட்த்தில் புதரில் இருந்து வெளியே லுங்கியை சரிசெய்தபடி ஆரான் வருகிறான். நல்லானையும், முத்துவையும் பார்த்து விடுகிறான். ஒரு கணம் செய்வதறியாது திகைத்தவன் இயல்பு நிலைக்கு உடனே வந்து விடுகிறான்.

நல்லான்: டேய் ஆரா. என்னடா பண்றீங்க ரண்டு பேரும்?

முத்து: இத்தன நாள் கேட்டதுக்கு பூனை பிய்ய மூடி வெச்ச மாதிரி மழுப்பிக்கிட்டே இருந்தே. இன்னைக்கு மாட்டினியா!

சுமார் 25 வயதுள்ள ஆறுச்சாமி லேசாக வெட்கப்படுகிறான்.

நல்லான்: ஏண்டா.. நீ என்ன சனம்?. அவிய என்ன சாதி?. இப்படி மொற தவறி .. வெளில தெரிஞ்சா நல்லாவாடா இருக்கும்?

ஆரான்: அப்ப ஒரே சாதில இப்படி நடக்கலாமுங்களா?

நல்லான்: இருந்தாலும் உம்பட வயசென்ன அவிய வயசென்ன? நீ கல்யாணம் ஆகாதவன்.. அவிய குடும்ப பொம்பள..

ஆரான்: ஏனுங்க பண்றதுன்னா ஆனதுக்கப்பறம் மொறதவறி பண்றது வேற மொறையோட தாலி கட்டி பண்றது வேற.. போங்க நீங்க..