Friday, January 13, 2012

கங்கணம் - பெருமாள் முருகன்

- செல்லமுத்து குப்புசாமி

சென்னைக்கு வெளியே வாழும் படைப்பாளிகள் சிலர் மீது எனக்கு தனிப்பட்டதொரு மரியாதை உண்டு. உதாரணத்திற்கு கோவையில் (நிச்சயமா ராஜேஷ் குருமாருந்தான்) நாஞ்சில் நாடன், நாமக்கலில் பெருமாள் முருகன்... பெருமாள் முருகனின் பீக்கதையும், கூள மாதாரியும் வாசித்திருக்கிறேன். இந்த புத்தகக் கண்காட்சியில் கங்கணம் கிடைத்தது. அடையாளம்பதிப்பக வெளியீடாக மறுமதிப்பில் வந்திருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் விவசாயம் தவிர வேறேதும் தெரியாத, முப்பது முப்பத்தைந்து வருடம் வயதாகியும் திருமணம் ஆகாத ஒருவனைப் பற்றிய கதையே கங்கணம். கதையில் நீக்கமற நிறைந்திருக்கிறது சாதி குறித்த பேச்சுக்கள். மேலோட்டமாக சாதி இல்லையென்று நாம் சொல்லிக்கொண்டாலும் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது – சாதியும், சாதி சார்ந்த பெருமிதங்களும். அதைக் கொஞ்சமும் பாசாங்கில்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார் பெருமாள் முருகன்.

எதெற்கெடுத்தாலும் பொசுக்கென கோபமும், மனிதனை ரணப்படுத்தும் வார்த்தைகளை வீசுகிற மூர்க்கமும் கொண்டவர்களாக வருகிறார்கள் கதை மார்ந்தர்கள். கிராமப்புற மக்கள் எல்லாம் வெள்ளந்தியானவர்கள் என்பதெல்லாம் இல்லை. போட்டியும், பொறாமையும், பங்காளி சண்டையும், சாதிப் பாகுபாடும் வேளாண்மை சார்ந்த எல்லா மாவட்டங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் கலகலப்பாப் பேசி நக்கல் நையாண்டியை வெளிப்படுத்தும் மனிதர்களாகவும் கங்கணம்ஆட்கள் வருகிறார்கள். இதனையெல்லாம் கடந்து அவர்களுக்கேயான ஆசாபாசம், வீம்பு, ஏக்கம், சோகம், சமூகத்திற்கு அஞ்சும் தன்மை, தன்மானம், பெருமிதம், பக்தி, பெருந்தன்மை என அனைத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.

இயல்பான நடையில், ஏற்ற இறக்கம் இல்லாத வட்டார வழக்கோடு புனையப்பட்டிருக்கும் எதார்த்தமான ஒரு படைப்பு இது. சொல்லப்போனால் இதை புனைவு என்று சொல்லவே தேவையில்லை. கிட்டத்தட்ட காட்டு வேலை செய்கிற, அதைத் தவிர வேறேதும் செய்யத் தெரியாத இளைஞர்கள் பெண் கிடைக்காமல் திண்டாடுவது நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நிறையவே இருக்கிறது. தெற்கே எப்படியோ. கொங்குச் சீமையைச் சேர்ந்தவர்கள் இந்தக் கதையில் வரும் சம்பவங்களை தமது வாழ்விலோ அல்லது தெரிந்தவர் வாழ்விலோ நிச்சயம் கண்டிருப்பார்கள்.

கதையில் வரும் எல்லா பாத்திரங்களுக்கும் ஒரு வைராக்கியம் அல்லது தனித்துவம் இருக்கிறது. மகனிடன் சண்டை போட்டு மகள் வீட்டில் தங்கியிருக்கும் அம்மாயி கிழவி பேரன் கோபமாக ஒரு வார்த்தை சொன்னதும் சொல்லாமல் கொள்ளாமல் மகன் வீட்டுக்கே திரும்பப் போவது, தேதி நிச்சயமான பிறகு தான் பிரியமாக இருக்கும் பாட்டி கல்யாணத்துள் செத்துப் போய் விடக் கூடாது (அப்படி நடந்தால் கல்யாணம் நின்று போகும்) என அனிச்சையாக நினைக்கும் பேரன், வயதாகியும் கல்யாணமாகல் தானிருக்கும் போது இருபது வயது கூட ந்ரம்பாமல் திருமண ஏற்பாடாகியிருக்கும் மாதாரி மகனிடன் ‘தம்பி அடங்கலையா?என குரூரம் காட்டும் கவுண்டன், வயதாகி முடியாமல் போனாலும் மகன்/பேரனை நம்பியிருக்காமல் கூலி வேலைக்குப் போகும் கிழவி தன் சாவுக்கு ஆகும் செலவை தானே சம்பாதித்து வைக்க நினைப்பது, மகன் எக்கேடு கெட்டாலும் தனக்கு கள் கிடைத்தால் போதும் என கோவணம் கட்டியபடியே திரியும் மசையன் தகப்பன், வெகு நாள் கழித்து திரும்ப வந்த ஒருக்கப்பட்ட சாதியாள் ராமனின் பெருந்தன்மையான போக்கு, அவனுக்கு காட்டை விடுவதாகச் சொல்லி வாக்குக் கொடுத்தும் கூட அதை தன் பங்காளிக்கே விட நினைக்கும் நாயகன், ஒரு சிறுவனின் கண்ணில் தூசு விழுந்த்தை எடுக்க முடியாமல் போனபோது இனி மேல் தன் வாழ்வு முடிந்து விட்ட்து என நினைக்கும் கிழவி, கல்யாண வீட்டில் தன்னை போட்டோ எடுக்கவில்லை என கோபித்துக்கொள்ளும் தங்கை சமாதானம் ஆவதற்கு நகை கேட்பது என எல்லா இடங்களிலும் கதாபாத்திரங்கள் தமது குணாதிசயத்தை காட்டியபடியே இருக்கிறார்கள்.

படைப்பு என்பது தான் வாழ்ந்த காலத்தையும், தன்னைச் சுற்றி வாழப்பட்ட வாழ்க்கையையும் பதிவு செய்வதில் முழுமையடைகிறது. அந்த வகையில் கங்கணம் ஒரு முழுமையான படைப்பு. இயல்புக்கும், புனைவுக்கும் அதிக இடைவெளி இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கும் படைப்பு.

1 comment:

சிவானந்தம் நீலகண்டன் said...

குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.

/மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/

http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1