Wednesday, September 26, 2012

அவள் பெயர் . . .

- செல்லமுத்து குப்புசாமி

அவள் பெயர் சகுந்தலாவோ, சாவித்திரியோ, சங்கீதாவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  அனேகமாக லண்டனுக்கு படிப்பதற்காக வந்திருக்க வேண்டும்.அவளை முதன்முதலாக நான் பார்த்த பொது  பிசினஸ் சூட் அணிந்திருந்தாள். சூட்டுக்குக் கீழே போட்டிருந்த சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் திறந்திருந்தன. அது கோடை காலத்தின் இறுதி வாரங்களை உள்ளடக்கிய பருவம். 'இன்றே கடைசி' என டூரிங் கொட்டகை சினிமா போஸ்டரில் ஒட்டியிருப்பார்களே அந்த மாதிரி மிச்சமிருக்கிற சில  நாட்களில் வளி மண்டலத்தில் உள்ள வெப்பத்தைக் கொஞ்சம் உள்ளிழுக்க உடலின் சருமப் பரப்பை அதிகமாக வெளிக்காட்டும் செயலில் ஈடுபட்டிருந்தனர் அதனூடாக சருமத்தை வெளிக்காட்டாத ஆண்களுக்கும் வெப்பம் ஊட்டிகொண்டிருக்கும் பருவம். எனவே  சட்டை போட்டிருக்கும் பெண்ணைப் பார்த்தாலே அடக்கமான பெண் என்று சொல்ல வேண்டும். சட்டையில் பட்டன் போட்டிருக்கிறாளா இல்லையா என்றெல்லாம் ஆராய்வது தப்பு. 

இன்னும் சொல்லப் போனால் இதைப் பற்றிப் பேசுவது மட்டுமல்ல. பார்ப்பது கூடத் தப்பு. அப்படியே பார்த்தாலும் கசமுசா எண்ணம் வருவது தப்பு. ஏனென்றால் இடம் அப்படிப்பட்டது. நான் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது ஈஸ்ட் ஹாம் மகாலக்ஷ்மி கோவிலில்.

கீழ்த் தளத்தில் கோவில். முதல் மாடியில் அன்னதான மண்டபம். சரியாக இரவு 08:30 க்கு அன்னதானாம் ஆரம்பித்து விடும். சில நாட்களில் எட்டே காலுக்கே ஆரம்பித்து விடுவார்கள். சில நாட்களில் எட்டு நாற்பது ஆகும். பெரும்பாலும் எட்டரை என்பது அனுபவம் தந்த பாடம். ஒரு சில சமயம் ஈசரைக்கே வந்து ஒரு மணி நேரம்  மூடி தியானம் செய்த கொடுமையெல்லாம் நடந்திருக்கிறது. இப்போதெல்லாம் சரியாக எட்டு இருபதுக்கு உள்ளே ஆஜர். சாமி கும்பிட்டு, சைட் அடித்து, நெற்றியில் விபூதி வைத்து மேலே போனால் சாப்பாடு போட சரியாக இருக்கும்.

சாப்பாடென்றால் பிரம்மாண்டமான விருந்தென் நினைத்து விட வேண்டாம். கொஞ்சம் சாதமும், மஞ்சள் நிறத்தில் நீர்த்துப் போன சாம்பாரும், ஒரு முழு அப்பளத்தை ஐந்தாக உடைத்த துண்டும் தருவார்கள். ஆனாலும் அதற்கேன்ற மதிப்பு இருந்தது.

'ச'வில் பெயர் தொடங்கும் அவள் அன்னதான மண்டபத்திலும் 'காட்சி' தந்தாள். சரி தவறுகளைப் பகுத்து அறியும் அறிவு எதைக் காண வேண்டும், காணக் கூடாது எனத் தணிக்கை செய்யும் நிலையில் இல்லை. கழுத்துக்கு மேலும்  அவள் அழகாக இருந்தாள்.

நெற்றியைச் சுருக்கினால் ஒரு கோடு விழுமே அந்த அகலத்தில் ஓரங்குல நீளத்தில் விபூதிக் கீற்றை தரித்திருந்தாள். காதோரம் நான்கு முடிகள் கீழே விழுவதும் அதை அவள் ஒதுக்குவதும் ரசிப்புக்குரிய காட்சியே. சாப்பாட்டுத் தட்டில் அப்பளம் வைக்கும் நாதஸ்வரக்காரர் கூடுதலாக ஒரு அப்பளத் துண்டை அவள் பிளேட்டில் வைத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

சகுந்தலாவோ, சாவித்திரியோ, சங்கீதாவோ... அவளது உதடு ஈரமாக இருந்தது. நொடிக்கொரு தரம் இணைந்து பிரியும் அந்த உதடுகள் தமிழை 'நன்றாகப் பேசுமா' அல்லது 'வடிவாகக் கதைக்குமா' தெரியவில்லை. தேவதைகள் உதிர்க்கும் சொற்கள் தெரியாத மொழியாக இருந்தாலும் இனிமைதானே!! அவள் சம்சரித்தோ, மாத்தாடியோ, மாட்லாடியோ தொலைக்கட்டும். எப்படியும் குரலைக் கேட்டு விட வேண்டும்.

இந்த அரை வேக்காட்டுச் சாப்பாட்டை 13 நிமிடத்தில் தின்பதற்குள் ஒரு போன கூட அவளுக்கு வரவில்லை என்பதே என் ஆதங்கம்.  அவள் கனிமொழி கேட்கும் பாக்கியத்தை ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் அன்றைக்கு வழங்கவில்லை.

ஈஸ்ட் ஹாம் என்பது ஒரு குட்டி ஆசியா. அங்கே தமிழ்க் கடைகள் மட்டுமல்ல. இந்தியாவின் பல அம்சங்களும் இருக்கும்.  பாகிஸ்தான், பங்களாதேஷ், இன்ன பிற ஆப்பிரிக்க மக்கள் என யாவரும் தென்படுவார்கள். வெள்ளையர்கள் இங்கே சிறுபான்மையினர்.

ஈஸ்ட் ஹாமில் பிரபலமான கோவில் என்றால் அது லக்ஷ்மி நாராயண டிரஸ்ட் நடத்தும் மகா லக்ஷ்மி கோவில்தான். காரணம் அங்கே தினமும் கிடைக்கும் அன்னதானாமும், ஈஸ்ட் ஹாம் ரயில்வே ஸ்டேஷன்க்கு அருகில் நடக்கும் தூரத்தில் இருப்பதுவுமே. 

அதற்கு மாறாக அளவில் பெரியது, பிரம்ம்மாண்டமானது என்றால் முருக்கன் கோவில். ஈஸ்ட் ஹாமில் இருந்து 5 நிமிடம் பஸ்ஸில் போக வேண்டும். தவிர எப்போது சோறு போடுவார்கள் என உறுதியாகச் சொல்ல முடியாது. சில நாட்கள் மிஞ்சிப் போயிருக்கும் சில நாட்களில் அறவே இருக்காது.  அதனால் கூட்டம் தினசரி நிலையாக இருக்காது. வெள்ளிக்கிழமை போனால் முருகன் கோவில் திவ்யமாக அமையும், தரிசனம் மற்றும் சாப்பாடு இரண்டுக்கும்.

மகா லக்ஷ்மி கோவிலில் செவ்வாய்க் கிழமையும், புதன் கிழமையும் பார்த்த சகுந்தலாவோ, சாவித்திரியோ, சங்கீதாவோ அவள் வெள்ளிக் கிழமை முருகன்  கோவிலுக்கு வந்தாள். வெள்ளிக் கிழமை முருகன் கோவிலுக்குச் சென்றால் வெறும் வயிற்றோடு திரும்ப மாட்டோம் என்பது லண்டன் ஐதீகம்.

வியாழக் கிழமை நான் மகா லக்ஷ்மி கோவிலுக்குப் போகவில்லை. அவளும் போயிருக்க மாட்டாள். ஏனென்றால் அன்று அவளை சாய்பாபா கோவிலில் கண்டேன். மற்ற நாளெல்லாம் காற்று வாங்கும் சாய்பாபா கடை.. சாரி கோவில்.. வியாழனன்று மட்டும் ஜெஜெவென இருக்கும். கூட்டம் அலை மோதும். சாப்பாடு தருவார்கள். மகா லக்ஷ்மி கோவில் போல தினமும் ஒரே சோறு போடாமல் வெரைட்டி ரைஸ் பேக் செய்தே தருவார்கள். ஈஸ் ஹாம் ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள சுவை ரெஸ்டாரண்டை விட சுவையாக இருக்கும்.

எங்கள் அலுவலகத்தில் மைக்கேல் என்றொரு இத்தாலியர் உள்ளார். நான் பாத்ரூம் போகும் போதல்லாம் பத்துக்கு எழு முறை அவரும் சிறு நீர் கழித்துக் கொண்டிருப்பார். ஒரு நாள், "We seem to have same schedule" என்றார். கோவில் சாப்பாடு விசயத்தில் பெயர் தெரியாத அந்தப் பெண்ணும் ஒரே ஷெட்யூல் வைத்திருந்தோம். கிட்டத் தட்ட 2 வாரம் இவ்வாறு தொடர்ந்தது. இதற்குள் ஒரு முறை தனது செல்போனில் 'ஆ போல்' என்று பேசிக் கொண்டிருந்தாள்.

வடிவாகவும், நன்றாகவும் தமிழ் பேசுவாள் என இன்னும் மனது எதிர்பார்க்கவில்லை. அவள் பெயர் சகுந்தலாவோ, சாவித்திரியோ, சங்கீதாவோ இருக்கும் எனவும் இப்போது நினைக்கவில்லை அவள் ஒரு ஆஷவாகவோ, பூஜாவாகவோ இருந்து விட்டுப் போகட்டும்.

ஈஸ்ட் ஹாமில் தமிழ் சர்ச் ஒன்று இருக்கிறது.  அங்கே பிரார்த்தத்னை நடக்கும் நேரத்திற்குப் போனால் பிரியாணி போடுவார்களாம். அதே மாதிரி தமிழில் தொழுகை செய்யும் பள்ளிவாசலும் இருக்கிறது. அங்கும் பிரியாணி போடுவார்களாம். கோவில்களில் சப்பைச சோறு தின்று நாக்குச் செத்த இந்தத் தருணத்தில் சர்ச்சுக்குப் போலாமா, மசூதிக்குப் போலாமா என்ற குழப்பம்.

சர்ச்சுக்குப் போகலாம் என்கிறது பகுத்தறிவு. ரீட்டாவோ, லின்டாவோ தரிசனம் தருவார்கள். மசூதிக்குள் மும்தாஜ்களையும், முமைத்கான்களையும் அனுமதிப்பதில்லை.

2 comments:

பழமைபேசி said...

ஆகா... பள்ளிவாசல்ல பட்சி கிடைக்காதுங்றதை.... இஃகி இஃகி

perumal karur said...

ஹா ஹா ஹா

நைஸ்....