Friday, September 28, 2012

கணக்கு டீச்சர் கள்ளக் காதல்

- செல்லமுத்து குப்புசாமி

நேற்று வரைக்கும் என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இன்றைக்கு கதை வேறு. ஒட்டு மொத்த லண்டனுமே என்னைப் பற்றித்தான் பேசுகிறீர்கள். அட் லீஸ்ட் பேப்பர் படிப்பவர்களும், டிவி பார்ப்பவர்களும்.இன்னும் சில நாட்களுக்கு இது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.  பிரேக்கிங் நியூஸ் அப்டேட்களுக்கும், அம்பலமாகும் ரகசியங்களுக்கும் குறைச்சல் இருக்காது.


இப்போது கூட ரஹீமின் நண்பரது வீட்டு வரவேற்பறையில் உள்ள டிவியில் எங்களைப் பற்றி ஓடிக்கொண்டிருக்கும் செய்தியைப் பார்த்தபடியேதான் இந்தக் கடிதத்தை எனது ஐபோனில் டைப் செய்துகொண்டிருக்கிறேன்.  நாங்கள் இப்போது பிரான்சில் இருக்கிறோம் என்பது இங்கிருந்து கேத்திக்கு நான் அனுப்பிய மெசேஜில் இருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில்  நாங்களிருக்கும் இடத்தையும் போலீஸ்காரர்களும், மேடியாகாரர்களும் கண்டுபிடிக்கக் கூடும். அதன் பின்னர் மைனர் பெண்ணைக் கடத்தி வந்த குற்றவாளியாக ரஹீம் கைது செய்யப்படலாம். அவரது இஸ்லாம் பெயரைக் கொண்டு அவருக்கும், எதாவது ஒரு பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான தொடர்பு 'கண்டறியப்படலாம்'.

ரஹீம் எனது கணக்கு வாத்தியார். 15வயதாகும் என்னை விட 15 வயது பெரியவர். ஏற்கனவே திருமணமானவர். இப்படி ஒரு மைனர் மாணவி ஆசிரியரோடு ஓடிப் போவது நமது நாட்டில் எதற்காக புதுமையாக, மீடியாவுக்கு இத்தனை ஆர்வத்தைத் தூண்டக் கூடிய செய்தியாக இருக்கிறதென்று புரியவில்லை.

என் பெயர் எம்மா வாட்சன். ஒரே வயிற்றில் நாங்கள் மூன்று பேர் பிறந்தோம், ஆனால் ஒரே தகப்பனுக்கு இல்லை. நானும், என் தங்கை எமிலியும் மிக நெருக்கமானவர்களாக ஆன பொது அவளுக்கு நாலு வயது. எனக்கு ஏழு. அப்போது அம்மாவும், அப்பாவும் சட்டப்படி பிரிந்தார்கள். அவர்கள் பிரிவதற்குக் காரணமாக இருந்தவரை அம்மா அடுத்த மாதமே மருமணம் செய்து கொண்டாள்.  அதற்கு அடுத்த வருடமே எங்களுக்கு ஒரு தம்பி பிறந்தான். இரண்டு  நாள்முன்பு வரைக்கும் மூன்று குழந்தைகளும், இரண்டு பெரியவர்களுமாக என் அம்மாவின் கணவருக்குச் சொந்தமான வீட்டில் ஒரே குடும்பமாகவே வசித்தோம்.

எனது தந்தை பெயர் லூகாஸ் வாட்சன். என்னிடமும், எமிலியிடமும் அன்பாக இருந்தார். பெண்கள் விரும்பும் ஆணாக, சுவாரசியம் அற்றவராக அவரை என் தாய் கருதினாள். அம்மா அவள் விரும்பிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அவர் குறுக்கே நிற்கவில்லை. பேராண்மை கொண்ட அந்தப் பெருமகன் சட்டப்படி எங்களைப் பிரிந்தாலும் என்னை வாரத்துக்கு ஒரு தடவை சந்திக்கலாம். அதைச் செய்ய நாங்கள் ஒரு போதும் தவறியதில்லை. என் தாய்க்குக் கணவனாக தன 'கடமையைச்' சரிவரச் செய்த என் மாற்றான் தந்தை எனக்கும் எமிலிக்கும் நல்ல தந்தையாக இருக்க முயலவேயில்லை. அப்படியிருக்க வாரத்துக்கு ஒரு தரம் லூகாஸ் அப்பாவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எத்தகையது என்பதை உணர   நீங்கள் நானாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ரஹீம் எனக்கு அறிமுகமானார், முதலில் கணக்கு வாத்தியாராக. ஒரு வகையில் லூகாஸ் அப்பாவைப் பார்ப்பது போலவே இருந்தது. கணக்குப் பாடம் மட்டுமல்ல. உலகத்தில் எல்லா/எந்த விஷயத்தையும் பற்றி ரஹீம் கொண்டிருக்கும் பார்வையும், அவற்றை அணுகும் விதமும் வித்தியாசமாக இருந்தது.  ஆசானாக, வழிகாட்டியாக, நண்பனாக, மனதுக்கு நெருக்கமானவனாக அவர்  என்னுள் பரிமாண வளர்ச்சி அல்லது தேய்ச்சி அடைந்து வந்தார். அவர் சொல்லும் விஷயங்களை ரசித்தவள், சொல்லிக் கொடுத்த விதத்தை ரசிக்கும் அளவுக்கு வளர்ந்து சொல்லிக் கொடுத்தவனையே ரசிக்கும் நிலைக்குத் தேர்ச்சி பெற்றேன்.

மதின்மம் பூத்துக் குலுங்கும் பருவம். குறும்புப் பார்வையை விடாது வீசும் துருதுரு கண்கள். வம்பிழுக்கும் பேச்சு. அவரும் ஆண்தானே !! கூடவே குடும்ப வாழ்வில் கலக்கமடைந்த நிலையில் இருந்தது ரஹீமுக்கும், அவர் மனைவிக்குமான மணவாழ்க்கை. வெற்றிடத்தை உருவாக்கி அதில் இட்டு நிரப்பிக்கொள்ளும் உயிர்ப்புடன் இருந்த நான் ரஹீமுக்குள் இயல்பாகவே இருவாகியிருந்த வெற்றிடத்தை ஆக்கிரமித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அம்மா உனக்கிது புரிய வேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நீயும், உன் கணவரும் டிவியில் அழுவதைப் பார்க்கிறேன். உங்களோடு வந்து என்னிஸ் சேரும்படி நீங்கள் கண்ணிர் மல்க வேண்டுவதைப் பார்த்து எனக்கு எந்த மாற்றமும் உண்டாகவில்லை என்பது உங்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம்.  நான் சம்மந்தப்பட்ட சங்கதிகளில் நாட்டமே இல்லாமல் எட்டு வருடமாக எனக்குள் தீராத தனிமையை,  நாதியற்றவள் நானென்ற வெறுமையை உருவாக்கி என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கும் நீங்கள் அதை உணர்ந்த பிறகு முழுமையாக அழுவீர்கள் என்றும் தேவனை மன்றாடுகிறேன்.

உன்னைத் தவிர வேறு யாரும் என்னைப் புரிந்து கொள்ள முடியாது. சுவாரசியம்றவன் எனக்கூறி லூகாஸ் அப்பாவைப் பிரிய உனக்கிருந்த தார்மீக நியாங்களை விடக் கூடுதலான காரணம் எனக்கிருக்கிறது. பதினைந்து வரை வாழ்வில் எவ்வித சுவாரசியத்தையும், கவனிப்பையும் கண்டிராத துர்பாக்கியசாலி நான். நிச்சயமாக உன்னைத் தவிர வேறு யாரும் என்னைப் புரிந்து கொள்ள முடியாது.

நியாயங்களையும், சட்டதிட்டங்களையும் எடுத்துச் சொல்லி வாதாடி பிறரை நம்ப வைக்க இது ஒன்றும் நீதி மன்றமில்லை. காதல். காதலில் வரம்பும் இல்லை, வரையறுக்கும் இலக்கணமும் இல்லை. திருமணமாகி மனைவியோடிகும் ஒருவரின் குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கும் குற்ற உணர்ச்சி எனக்கில்லை.


மனசாட்சிபடி நானே குற்றவாளி. இன்னொருவன் குடும்பத்தைக் குலைத்த கேடுகேட்டவள். ஆனால் டிவியிலும், பேப்பரிலும் அப்படியா போடுகிறார்கள்? பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற ஆசிரியர் என்ற கிரிமினலாகவே சித்தரிக்கிறார்கள். என்னொரு படிக்கும் ஸ்ரேயா சொல்லியிருக்கிறாள். அவர்கள் நாட்டில் 'கள்ளக் காதல்' என்று போட்டாலும் 'காதல்' என்ற அங்கீகாரத்தைத் தந்திருப்பார்கள்.

கேத்திக்கு நான் டைப் செய்துகொண்டிருக்கும் இந்தக் கடிதம் இன்னும் முடியவில்லை. வெளியே பேச்சரவம் கேட்கிறது. அனேகமாக பிரான்சுக்கு வந்திருக்கலாம் ஸுசெக்ஸ் போலீஸ். ஒரு வேளை இதை நான் அனுப்புவதற்குள் கைப்பற்றப்பட்டால் உங்களுக்காகக் காத்திருக்கிறது ஒரு பிரேக்கிங் நியூஸ்.

"சர்ச்சைக்குரிய ஆசிரியர் கைது. பள்ளி மாணவி மீட்பு"

குறிப்பு: 15 வயது பள்ளி மாணவி Megan Stammers தனது கணக்கு வாத்தியார் Jeremy Forrest உடன் ஓடிப்போன சம்பவம் தொடர்பானது.

1 comment:

perumal karur said...

அசத்தல் !!!