Thursday, November 29, 2012

பர்சனல் ஃபைனான்ஸ் தொடர்


மல்லிகை மகள் நவம்பர் இதழில் இருந்து

சென்னையில் உள்ள பிரபலமான கேட்டேட் கம்யூனிட்டி ஒன்றில் சமீபத்தில் இரண்டு பெண்கள் பேசுவதைக் கேட்க நேர்ந்தது. அவர்களது குழந்தைகள் பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்க பரஸ்பரம் புன்னகையைப் பரிமாறியபடி அவர்கள் தங்களை பரிட்சயம் செய்து கொள்கிறார்கள்.
உரையாடல் வளர்கிறது. 

"உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றார்?"
"சாப்ட்வேர் கம்பெனில புராஜெக்ட் மேனேஜரா இருக்கார்" 
"நீங்க?" 
"அவர் சம்பாதிக்கறதை செலவு செய்ய ஒத்தாசை பண்ணிட்டு இருக்கேன்"
இருவரும் வாய் விட்டு சிரித்துக் கொள்கிறார்கள். இது ஒரு ஜோக். அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியல்லாமல் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகுந்த கவலையளிக்கும் போக்காக இதைக் கருத வேண்டும்.

பல நடுத்தர வர்க்கக் குடும்பங்களில், அதை விடக் கூடுதலாக உயர் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையிலான பெண்களுக்கு பண விஷயங்களில் அலட்சியத் தன்மை உள்ளது. 'எல்லாம் அவர் பாத்துக்குவார்'  என்ற மனோபாவம். சில பெண்கள் தங்களது ஏடிஎம் அட்டை, இன்டர்நெட் பேங்கிங் அக்கவுண்ட் முதல் வருமான வரிச் சேமிப்புக்காக எவ்வளவு/எதில் முதலிடுவது என்பது குறித்து முடிவெடுப்பது வரை எல்லாவற்றையும் தமது கணவன்மாரையே கையாளச் சொல்கிறார்கள். "நீங்க தாங்க என்னோட ஆடிட்டர்" என்கிறார்கள். இதில் குடும்பத் தலைவிகள், வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் என்ற பேதமெல்லாம் கிடையாது.
உண்மையில் நிதி நிர்வாகம் ஆண், பெண் பேதமின்றி யாவருக்கும் தேவையான சப்ஜெக்ட். அது ஆண்களுக்கே உரித்தான பிரத்யேக உரிமையில்லை. ஆண்கள் மட்டுமே தனியாகச் சுமக்க வேண்டிய பொறுப்புமில்லை. 
நமது சமூகத்தில் இரண்டு விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறோம். பொது வெளியில் விவாதிப்பது குறித்து கூச்சப்படுகிறோம். அவை பற்றிய கல்விக்கு முக்கியத்துவம் தருவதேயில்லை. அதில் முதலாவது செக்ஸ், இரண்டாவது பணம். செக்ஸ் கல்வி கூட இப்போது வேகமெடுக்கத் தொடங்கி விட்டது. ஆனால் பண விஷயத்தில் அப்படியில்லை. பண மேலாண்மை குறித்த அடிப்படைக் கல்வி அவசியம். அது வெட்கப்பட வேண்டிய சங்கதியே கிடையாது.
இங்கிலாந்திலே படித்து முடித்து வேலை இல்லாதவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். வயதான காலத்தில் பராமரிப்புக்கு பணம் தருகிறார்கள். நம்ம ஊரில் அப்படியில்லை. தானே கையை ஊன்றிக் கரணம் பாய வேண்டிய நிலை. வயதான பெற்றோரையும் கவனித்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் திட்டமிட வேண்டும். தமது சொந்த ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை சிக்கலில்லாமல் அனுபவிக்கவும் இப்போதிருந்தே சேர்த்து வழி செய்ய வேண்டும்.
தற்போதைய தலைமுறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நுட்பமானவை. அடிப்படை உரிமைகளான  கல்வியும், மருத்துவமுமே இன்றைக்கு ஆடம்பரமோ என எண்ணத் தோன்றுகிறது. நிதி நிர்வாகம் என்பது முன்னெப்போதையும் விட இன்றைக்கு அவசியமானதாக உள்ளது. உலகமயமாக்கலும், பொருளாதாரச் சீர்திருத்தங்க்களும் வாழ்க்கைக்கான சமன்பாட்டை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன.
தனிமனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் பாதிக்கும் மேலானவை பணம் தொடர்பானவை. போதுமான பணம் இல்லாமையால் அல்லது அளவுக்கு அதிகமான பணம் உள்ளதால் வருபவை. பணம் தொடர்பான புரிதலைச் சரியாக உருவாக்கி, பண விஷயங்களைத் திறம்படக் கையாண்டால் அவற்றில் பெருவாரியானவற்றைத் தீர்த்து விட முடியும்.
"நன்றாகப் படிக்க வேண்டும். நல்ல கம்பெனியில், நல்ல வேளையில் சேர்ந்து செட்டில் ஆகி விட வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெருவதற்கான சூத்திரம் இதுதான்."  நமது பெற்றோரும், கல்வி அமைப்புகளும், சமூகமும் குழந்தைப் பருவம் முதல் கிளிப்பிளைக்குச் சொல்வதைப் போல இதைச் சொல்லிச் சொல்லியே நம்மை ஆளாக்கி வளர்க்கிறார்கள். நண்பன் பட 'வைரஸ்' சத்யராஜ் போல எடுத்தவனை ஏறி மிதித்து மேலே வந்தால்தான் வெற்றி என்கிறார்கள். ஒருவர் ஜெயிக்கிறான் என்றால் மற்ற எல்லோரும் தோற்றுப் போகிறோம் என்று நம்ப வைக்கிறார்கள். எல்லோரும் ஜெயிக்க இந்த உலகத்தில் இடமிருக்கிறது என்பது புரிவதில்லை. அப்படிப்பட்ட சிந்தனையே இருபது ஆண்டுகள் நமக்குள் செலுத்தபடுகிறது.
மனிதர்கள் தாமாகத் தமது சொந்தக் காலில் நிற்க ஆரம்பிக்கும்போது நிஜ உலகத்தை  அவர்கள் எதிர்கொள்கிறார்கள். அதன் நிதர்சனங்கள் முகத்தில் அறைகின்றன. அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டதும், சொல்லப்பட்டதுமான ஏட்டுக் கல்விக்கும் நடைமுறை வாழ்வின் எதார்த்தத்துக்குமான முரண்பாட்டைக் கண்டு குழப்பத்தில் ஆழ்கிறார்கள். 
வாழ்க்கையில் வெற்றிக்கான, அதிலும் குறிப்பாக பொருளாதார வெற்றிக்கான சூத்திரம் என்பது கணக்கு வாய்ப்பாடு மாதிரி நிலையானதாக  இருப்பதில்லை. அது தத்துவத்தைப் போன்றது. குழப்பமானது. அதை வாசிப்பவனின் அனுபவத்திற்கு ஏற்ப வெவ்வேறு பொருள் தரவல்லது. கறுப்புக் கண்ணாடி அணிந்து பார்ப்பவனுக்கு உலகமே இருட்டாகவும், நான்கு குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து விவரித்ததைப் போலவும் இருப்பது.
ஒரே படிப்புப் படித்த நண்பர்களில் ஒருவர் சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்ப்பதும், இன்னொருவர் அதே கம்பெனியில் பெரிய பதவியில் அதிகச் சம்பளம் பெறுவதும் இங்கே நடக்கிறது. ஒரே வேலையில் ஒரே சம்பளம் வாங்கி ஒரே மாதிரி ரிட்டையர்ட் ஆகும் இருவரை ஒப்பிட்டுப் நோக்கினால் ஒருவர் செல்வந்தராகவும், ஒருவர் கடனாளியாகவும் இறந்து போகிறார்கள். படிக்காத ஒருவர் பணக்காரராக ஆவதையும், நன்கு படித்தவர் ஹவுசிங் லோன் கட்டவே திணறுவதையும் காண்கிறோம். ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வேலை செய்யும் ஒருவர் அன்றாடச் செலவுக்கே அல்லாடுவதையும், அதில் பாதி நேரமே வேலை பார்க்கும் இன்னொருவர் சொகுசாக வாழ்வதையும் பார்க்க நேரிடுகிறது.
பணத்தின் மதிப்பைப் புரிந்து கொள்வது, சமூகத்தில் அது ஆற்றும் பாத்திரத்தை அங்கீகரிப்பது, அது எப்படி நடிகைகள் எப்போதும்  தொழிலதிபர்களையே கல்யாணம் கட்டிக் கொள்கிறார்கள் என்ற அறிவுப் பூர்வமான கேள்விக்கு விடை தேடுவது, குடும்ப உறவுகளுக்கும் பணம் ஏற்படுத்தவல்ல குணாதிசிய மாற்றங்களை உணர்வது, நேரத்திற்கும், இழப்பிற்கும், பணத்திற்குமான இணைப்பைப் புரிவது, பணம் சம்பாதிப்பதற்கான வழிகளை அடையாளம் காண்பது, சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாகச் செலவு செய்வது அல்லது சரியாகச் சேமிப்பது/முதலிடுவது, ஏமாற்றுப் பேர்வழிகளின் வலையில் விழாமல் எச்சரிக்கையாக இருப்பது, நிதி மற்றும் முதலீட்டுத் துறை தொடர்பான குறைந்தபட்ச அறிவையாவது பெறுவது முதலிய பல அம்சங்கள் இன்றைய மனிதனுக்கு அவசியமானவையாக இருக்கின்றன.
இவை யாவும் ஆணுக்கும், பெண்ணுக்குமாக மனித சமூகம் ஒட்டு மொத்தமாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். ஆனால் ஆண்களுக்கு நிகராக, சொல்லப் போனால் ஆண்களுக்கு மேலாக நிதி நிர்வாகம் தொடர்பான விஷயங்களைப் பெண்கள் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஆண் ஊதாரியாக இருந்தாலும், பெண் கெட்டிக்காரியாக இருந்தால் அடுத்த தலைமுறை சிரமமில்லாமல் தலை தூக்கிட இயலும். பெண் பொறுப்பில்லாமல் இருப்பது அபாயகரமானது.  
அடித்தட்டு மக்களில் இதை வெளிப்படையாகக் காண முடியும். மாதம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கும் ஐடி கம்பெனி பையன் வாரக் கடைசியில் ஆயிரம் ரூபாய் பாரில் செலவு செய்வது பிரச்சினையில்லை. தினசரி 200 ரூபாய் சம்பாதிக்கும் கூலித் தொழிலாளி ஒருவர் அதில் 100 ரூபாயை டாஸ்மாக்கில் மொய் எழுதுவது பிரச்சினை. அதனால் ஏற்படும் பாதிப்பு கடுமையானது. தன்னைத் தாண்டி, பொஞ்சாதி பிள்ளைகளைத் தாண்டி அடுத்து வரும் தலைமுறைக்கும் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது. சரியாகக் கையாளாமல் போனால் சமூகக் குற்றங்களை விளைவிக்கும் ஆபத்தை உள்ளடக்கியது.
இப்படிப்பட்ட பல குடும்பங்களை தாய்மார்களே தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள். வீட்டு வேலைக்கோ, தினக் கூலிக்கோ சென்று பட்டினியில்லாமல் குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவமானங்களைச் சுமந்து தன்னம்பிக்கை தளராமல் ஒரு தலைமுறையை மேலே ஏற்றுகிறார்கள். அவர்கள் இருக்கும் திசை நோக்கித் தொழுதால் தவறில்லை. 
'மணப்பாறை மாட்டு கட்டி' என ஆரம்பிக்கும் சிவாஜி பாடல் கூட இப்படித்தான் முடியும்.
"சேர்த்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கயில கொடுத்து போடு சின்ன கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு"
அம்மாமார்கள் ஆறை நூறு ஆக்குவது எப்படி?  தொடர்ந்து பேசுவோம்.
கணவன்மார்கள் சம்பாதிப்பதைச் செலவு பண்ண ஒத்தாசை செய்வது ஒருபுறம் இருக்க செலவு  செய்யாமல் ஒத்தாசை செய்வது எப்படி என்பதைப் பற்றியும்.

அடுத்த பகுதி

6 comments:

perumal karur said...

சூப்பர்...

shanthi raj said...

Where cani get the paperback book The science of stock market. I am in coimbatore. Pl reply

shanthi raj said...

Where will i getscience of stock market in coimbatore.pl reply

shanthi raj said...

Where cani get the paperback book The science of stock market. I am in coimbatore. Pl reply

Chellamuthu Kuppusamy said...

English version is only available in Kindle format now. tamil version இழக்காதே is available in print. Please click on the image on the side bar. It will take to the link

வேலு பாரதி said...

Sir,

I need your article of jeevan anand - unique insurance plan. i searched in 2009 & 2008 list. i cant find. Please repost or send to my mail : baralatwins@gmail.com