Saturday, December 08, 2012

கமலின் விஸ்வரூபம் DTH


சில ஆண்டுகளுக்கு முன் நான் ஹைதராபத்தில் இருந்தேன். எல்லா புதிய தமிழ்ப் படங்களும் சிடியில் உடனே வந்து விடும். ஒரு முறை பாரதிராஜவின் மகன் மனோஜ் நடித்த படத்தின் சிடியை வாங்கினோம். அந்தப் படம் வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. ஆனாலும் நாங்கள் சிடி வாங்கி வந்த மூன்றாம் நாளே அந்தப் படம் சன் டிவியில் ‘தமிழ்த் தொலைக் காட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக’ வந்து விட்டது.

புதிய படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால் அதிகம் பாதிக்கப்படுவது திருட்டு விசிடி இண்டஸ்ட்ரி தவிர வேறெதுவும் இல்லை. தியேட்டர் தொழிலுக்கு ஓரளவு பாதிப்பு இருக்கலாம்.

Kamal Viswaroopam


இந்தப் பின்னணியில் தனது விஸ்வரூபம் படத்தை நேரடியாக DTH மூலம் இல்லத் திரைகளில் ஒளிர விடும் நடிகர் கமல்ஹாசனின் புதிய அணுகுமுறையை நாம் கவனிக்க வேண்டும். சில மேலை நாடுகளில் இது நடைமுறையில் இருக்கிற விஷயம்தான். பொருளைத் தயாரிக்கிறவன் அதை உபயோகிப்பவனிடம் நேரடியாகக் கொண்டு செல்வதற்குத் திராணி இருக்கும் பட்சத்தில் அதைத் தடுக்கவோ, எதிர்க்கவோ முயற்சிப்பது முறையல்ல.

தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் இதனை குய்யோ முறையோ என்று கூச்சலிடுவது ஒன்றும் புதிதில்லை. புதிய முயற்சிகளை நாம் ஊக்குவிக்காமல் இருப்பது மட்டுமல்ல, அவற்றைத் தீவிரமாக எதிர்ப்பதும் மனித இயல்பு. உலக நாயகன் என அறியப்படும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் DTH மூலம் ஒளிபரப்பாகுமானால் அது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான மைல் கல்லாக அமையும்.

அதிகாரம் வர்க்கம் தான் நினைப்பதையெல்லாம் (உதாரணத்துக்கு கூடங்குளம்) குரல்வலையை மிதித்து மக்கள் மீது திணிக்கும் இந்தக் காலத்தில், காவிரி நீர் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு போட்டாலும் அதைத் துச்சமாக மதிக்கும் இந்தக் காலத்தில், ஒரு நடிகன் - ஒரு வியாபாரி - தனது படத்தை தான் நினைத்த ஊடகத்தில் வெளியிட எதிர்க்கும் ஆட்களும் இருக்கிறார்கள்.

மாற்றம் ஒன்றுதான் மாற்றமின்றி நிலைக்கும்.

4 comments:

perumal karur said...

நல்ல பதிவுங்க...

அடிக்கடி பதிவு போட்டால் நன்றாக இருக்கும் ...

உங்கள் எழுத்தை மிஸ் பண்றோம்..

Anonymous said...

Do you also support foreign direct investment in retail? Supporting Kamal Hassan's viswaroopam aired directly through DTH is similar to supporting FDI in retail

ரவீந்தரன் said...

திரையரங்குகள் எல்லாம் ஒழிந்து தியேட்டர் இல்லாத இடமாக தமிழகம் மாறப் போகிறது. கை சும்மா இருக்குதுன்னு இண்டர்னெட்ல எதாச்சும் எழுதறவனுக்கு காசு போட்டு தியேட்டர் கட்டுறவன் கஷ்டம் புரியாது

வவ்வால் said...

சார்,

டிடிஎச் இல் வெளியிடுவது என்பது தொழில்நுட்பத்தின் ஒரு பரிமாணம் என்பதை இல்லை என சொல்லவில்லை, ஆனால் இன்னும் சில காரணிகளை பார்க்கும் போது லோகநாயகர் செய்வது எதிர் மறை விளைவை தான் உண்டாக்கும்.

வெளிநாட்டில் படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் சின்னத்திரையில் பார்த்த ஒன்றை பெரிய திரையில் பார்க்கலாம் என வருவார்கள்,அதே நிலை இங்கு இல்லை என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.

மேலும் வெளிநாட்டில் அவ்வாறு டி.வி, டிவிடி என ரிலீஸ் ஆவது எல்லாம் சின்ன பட்ஜெட் படங்களே, பெரிய பட்ஜெட் படம் எல்லாம் தியேட்டர் வழி வெளியாகி ,பின்னர் சில வராங்கள் கழித்தே எலக்ட்ரானிக்ஸ் மீடியாவிற்கு வரும்.

அதை எல்லாம் கணக்கில் கொள்லாமல் வெளிநாட்டில் செய்தார்கள், என பெரிய பட்ஜெட்டில் எடுத்த படங்களை தமிழில் செய்தால் நட்டமே வரும்.

மேலும் இந்தியில் படம் வெளியான நான்கு முதல், ஒரு வாரத்தில் இருந்து மூவி ஆன் டிமாண்ட் முறையில் டிடிஎச் இல் வரும் வழக்கமும் இருக்கு, ஆனால் கட்டணம் 25-150 ரூ மட்டுமே, அதாவது மக்கள் வாங்கும் திறனில் இருக்கு.

எனவே பெருவாரியாக பார்ப்பார்கள்.

இங்கு லோகநாயகர் என்ன செய்கிறார் 1000 ரூ என்கிறார், மக்கள் தியேட்டர், திருட்டு டிவிடி விலையுடன் ஒப்பிடும் போது அதிகம் விலை என்பதால் பார்க்க மாட்டார்கள், மாற்றாக திருட்டு டிவிடி,இணையம் ,அப்புறமா தியேட்டர் என அவர்களின் ஆப்ஷன் விலையை பொறுத்து மாறிவிடும்.

மேலும் படம் ரிலீஸுக்கு முன்னர் டிடிஎச் இல் போட்டால் தரமான டிவிடியே திருட்டுத்தனமாக உருவாக்க முடியும், டி.வி யுனர் கார்டுகள் மூலம் செய்யலாம்.

வழக்கமாக கேமர பிரிண்ட் தான் திருட்டு டிவிடியில் கிடைக்கும் என்பதால் , நல்ல படத்தினை அப்படி பார்க்க சிலர் விரும்பமாட்டார்களும்,அவர்களும் தெளிவான பிரிண்ட் கிடைத்தால் வாங்கவே செய்வார்கள்.

டிடிஎச் கட்டனம் 1000 ரூ என்ற நிலையில் அதுவும் ரிலீஸ் அன்றே திருட்டு டிவிடி கிடைக்கும், இணையத்திலும் உடனே அப்லோட் செய்ய முடியும்,என்பதால் மக்கள் விலையை ஒப்பிட்டு திருட்டு டிவி, இணையம் என பார்க்கவே விரும்புவார்கள். எனவே லோகநாயகர் திட்டம் சினிமாவை வாழ வைக்கும் திட்டம் அல்ல அழிக்கும் திட்டமே.

மேலும் விரிவாக எனது பதிவில் எழுதியிருக்கிறேன்.

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சினிமா ரகசியம்-4:VISHWAROOPAM IN DTH RELEASE வெற்றியடையுமா?