Tuesday, January 29, 2013

விவசாயத்தில் கலக்கலாம் வாங்க


விவசாயம் குறித்து மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறேன். குடியானவர்கள் சிறிய அளவில் ஹைதர் அலி காலத்து தொழில்நுட்பங்களையெல்லாம் பயன்படுத்துவதால் வயிற்றுக்கும் வாயுக்குமே சரியாக இருக்கிறது. தற்கொலைகள் இங்கே சர்வசாதாரணமாக இருக்கிறது. விளை நிலங்கள் அருகி வருகின்றன. கிராமங்களில் இளைஞர்களே இல்லை. எல்லாம் நகரத்தை நோக்கிப் பறக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் விவசாயம் கார்ப்பரேட் மயமாகி வருகிறது. திருப்பூரில் டல்லாகிப் போன பனியன் பிசினஸ் ஓனர்கள் எல்லாம் பரவலாக நிலம் வாங்கிப் போட்டு வருகிறார்கள். அம்பானிகள், உலகத்தின் பெருமுதலாளிகளும் 100 கோடி மக்களின் வயிற்றை நிரப்பும் இந்த அமுதசுரபித் துறையில் கால் வைக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நம்மால் இயன்ற அளவுக்கு தொழில்முறையில் விவசாயத்தில் ஈடுபடும் எண்ணத்தில் உள்ளேன். அதிக முதலீடு இன்றி, அதிக ஆள் தேவை இல்லாத, அதே நேரத்தில் கணிசமான வருமானம் ஈட்டும் பண்ணைக் காடுகளைத் தேர்ந்தெடுப்பதாக உத்தேசம்.

ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு சுமார் ஒரு இலட்சம் வருமானம் தரும் மலை வேம்பு முதலியவற்றை சாகுபடி செய்யலாம். இதை குறைந்தபட்சம் 100 ஏக்கர் அளவிலாவது செய்யத் திட்டம். ஒத்த சிந்தனையுடைய, சேர்ந்து முதலிட ஆர்வமுள்ள நபர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

Lets grow with nature !

Wednesday, January 23, 2013

தமிழ் சினிமாவும் திக்குவாயும்

சினிமா என்பது கிட்டத்தட்ட நாம் வாழும் சமூகத்தின் கண்ணாடி மாதிரி. சமூகம் என்ன மாதிரியான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறதோ அதைப் பிரதிபலிப்பதுதான் சினிமா. இல்லையென்று யாராவது சொல்லுபவர்கள் இருக்கலாம். அப்படியே இருந்தாலும் சமூகம் ஒரு விஷயத்தை அல்லது பிரச்சினையை நோக்கும் கண்ணோட்டத்தை சினிமா வெகுவாகத் தீர்மானிக்கிறது என்பதையாவது அவர்கள் ஓரளவுக்கு ஒப்புக்கொள்வார்கள். நமது சமூகத்தில்
சினிமா செலுத்தும் தாக்கமும், செல்வாக்கும் தவிர்க்க இயலாதவை. அப்படி இருக்கையில் என்ன மாதிரியான சினிமாவை நாம் எடுக்கிறோம் என்பதும், என்ன மாதிரியான விஷயங்கள் அந்த சினிமாவில் வெளிப்படுகின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய சங்கதிகள்.

தமிழ் சினிமாவில் திருநங்கைகளுக்கும், தமிழ் வாத்தியார்களுக்கும் அடுத்தபடியாக கேலி செய்யப்படுவது திக்குவாயர்கள் என்றால் அது மிகையல்ல. நகைச்சுவை என்பதே இங்கே பிறரை கேலி செய்வதும், அவர்களைச் சிறுமைப்படுத்துவமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. மனிதனின் தோற்றம் மற்றும் அசிங்கமான உருவம் ஆகியன இங்கே நிரந்தரமான கேலிப் பொருளாக இருந்து வந்திருக்கின்றன. அதை நாமும் தொடர்ந்து ரசித்து வந்திருக்கிறோனம். அது நமது ரசனையின் தரத்தை, நமது சமூகத்தின் முதிர்ச்சி எந்த மட்டத்தில் உள்ளதென்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

அபூர்வமாக விரல் விட்டு எண்ணும் படியாக சில படங்களே உடல் குறைபாடு உள்ளவர்களை சரியான நோக்கில் காட்டியுள்ளன. எனினும் விதிவிலக்குகள் என்பதால் அவற்றை ஒரு அளவுகோலாகக் கருத இயலாத சூழல் நிலவுகிறது. ஒரு சமுதாயம் எம்மாதிரி மாந்தர்களையும், அவர்தம் பிரச்சினைகளையும் அக்கறையுடன் அணுக வேண்டுமோ அவர்களையெல்லாம் வரைமுறை இல்லாமல் எள்ளி நகையாடுவதில் அலாதி இன்பம் நமக்கு.

திக்குவாய் மிகவும் நுட்பமான பிரச்சினை. இது வியாதில்ல. உடல் ஊனமும் அல்ல. ஒரு வகையான மனச்சிக்கல். திக்குவாய் பிரச்சினை வாயில் இல்லை; அது மூளையில் உள்ளது. நம்மை எல்லோரும் கவனிக்கிறார்களே பதற்றமும், சரியாகப் பேசுவோமோ என்ற பயமும், சீக்கிரமாகப் பேசி முடித்து விட வேண்டும் என்ற அவசரமும் இந்தப் பிரச்சினையின் ஆணிவேர். மேற்கொண்டு பேசுவதற்கு முன் ஒரு விஷயத்தை நான் இங்கே தயக்கமில்லாமல் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

திக்குவாய்ப் பிரச்சினை எனக்கு இருந்தது, இன்னும் இருக்கிறது என்பதே அது.

இதை நான் இங்கே அனுபாதத்துக்காகவோ அல்லது விளம்பரத்துக்காகவோ குறிப்பிடவில்லை. Stammering cure எனப்படும் திக்குவாய்ச் சிகிச்சையில் மிக முக்கியான விஷயம் இந்தப் பிரச்சினை நமக்கு உள்ளது என்பதை மறைப்பதையும், மறுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதே. அதுதான் இதிலிருந்து மீளும் பயணத்தின் முதல் படி. நாம் எல்லோருக்கும் ஒரு
திக்குவாயரையாவது தெரிந்திருக்கும். அது நம் பள்ளி, கல்லூரியில் உடன் படித்த நண்பராக இருக்கலாம். உடன் பணியாற்றும் சக ஊழியராக இருக்கலாம். நமது ஏரியாவில் வசிக்கும் ஒரு நபராக இருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் நாம் பார்த்த படங்களில் மறக்க முடியாத பாத்திரமாக இருக்கலாம், காதலா காதலா பிரபுதேவா போல. மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் கூடுதலான திக்குவாய்ச் சிக்கல் உடையோர் உள்ளதாக ஒரு கணிப்பு சொல்கிறது.

இந்தியாவில் ஒன்னேகால் கோடிப் பேர். அவர்கள் அத்தனை பேரும் இதிலிருந்து மீள முடியும். அப்படி மீள்வதற்கு முதல் படி, தமக்ககிருக்கும் பிரச்சினையை ஒப்புக்கொண்டு அதைத் தைரியமாக எதிர்கொள்வது மட்டுமேயாகும்.

இதை வாசிக்க நேரிடுகிற யாருக்காவது திக்குவாய் பிரச்சினை இருக்குமானால், அதைப் பற்றிக் கவலைப்படுவதை முதலில் நிறுத்திக்கொள்ளலாம். ஏனேன்றால், இந்த உலகத்தில் நீங்கள் தனியாக இல்லை. பல பிரபங்கள் திக்குவாயர்களாக இருந்திருக்கிறார்கள். உலகப் புகழ் பெற்ற நடிகை மர்லின் மன்றோ, பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், பரிணாமக் கோட்பாட்டை உலகுக்குத் தந்த டார்வின், விஞ்ஞானி ஐசக் நியூட்டன், அமெரிக்க அதிபர் தியோடர்
ரூஸ்வெர்ல்ட்,இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தை வழி நடத்திய மன்னர்
ஆறாம் ஜார்ஜ் மற்றும் அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த சர்ச்சில், கேரளாவில் முதல் கம்யூனிஸ்ட் முதலமைச்சர் நம்பூதிரிபாத் ஆகியோர் திக்குவாய்ப் பிரச்சினையைக் கடந்து வந்த சில பிரபலங்கள்.

அதனால் கவலைப்பட ஒன்றுமில்லை. சராசரி மனிதர்களை விட திக்குவாயர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்பது இன்னொரு நல்ல செய்தி. அவர்களது மூளை செயல்படும் வேகத்துக்கு பேச்சை வெளிப்படுத்தும் உடல் உறுப்புகள் ஈடுகொடுக்க முடிவதில்லை. அவ்வளவுதான். அது குறித்த குற்ற உணர்ச்சியே தேவையில்லை. மூளை கூர்மையாக செயல்படுகிறது என்பது பெருமையான ஒரு விஷயம்தான்.

திக்குவாய் வியாதி இல்லை என்று சொல்லியாகிவிட்டது. அது ஒரு கெட்ட பழக்கம். புகை பிடிப்பதைப் போல, மது அருந்துவதைப் போல, காலையில் பத்து மணி வரைக்கும் தூங்குவதைப் போல அது ஒரு கெட்ட பழக்கம். அதை மருந்து, மாத்திரைகளால் சரிப்படுத்த முடியாது. நீ திக்குவாயன் என நமது மூளையில் நாமே எழுதி வைத்திருக்கும் புரோகிராமை அழித்து விட்டு, என்னால் தடையில்லாமல்  சரளமாகப் பேச இயலுமென இன்னொரு புரோகிராமை எழுத வேண்டும்.

அதற்கு கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும், ஊக்குவிப்பும் வேண்டும்.  The Indian Stammering Association(TISA) மாதிரியான அமைப்புகள் தன்னார்வ அடிப்படையிலும், stammering cure center என்ற பெயரில் சில தனி நபர்கள் வர்த்தக ரீதியிலும் இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்ற உதவுகிறார்கள்.

மெதுவாகப் பேசுவது, தினமும் சீரான வேகத்தில் வாசிப்பது, பிரச்சினையை மறைப்பதற்கான குறுக்கு வழிகளைத் தவிர்த்து அதைத் துணிச்சலாக எதிர்கொள்வது, பேசும் போது மூச்சு அடைத்துக் கொள்ளாமல் அவ்வப்போது நிறுத்தி மூச்சு விட்டுக்கொள்வது முதலின சில மேம்பாட்டு டெக்னிக்குகள். 

மல்டி லெவல் மார்க்கெட்டிங் எங்கே வெற்றிகரமாகச் செயல்படு முடியுமோ தெரியாது. அது திக்குவாய்ச் சிகிச்சையில் அதிசயங்களை நிகழ்த்தும் என்பது நிச்சயம். இதிலிருந்து விடுபட்டவர்களோடு தொடர்பில் இருங்கள். நீங்கள் செய்யாத தவறுக்காக நீங்கள் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனையில் இருந்து விடுபட்டது போல உணர்வீர்கள்.

தமிழ் சினிமா தான் செய்த தவறுகளுக்காக சாட்டை மாதிரி சில படங்களையாவது எடுக்கட்டும்.

Thursday, January 17, 2013

வேலைக்காரியின் லீலை


இன்றைக்கு சங்கரியை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று நினைக்கவே பதட்டமாக இருந்தது. வேலைக்காரி என்றால் முனியம்மா, ராக்கம்மா இப்படித்தான் பெயர் இருக்கும் என நான் உருவாக்கி வைத்திருந்த கணிப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கியவள்தான் சங்கரி. 12 ஆம் வகுப்பு படித்த பெண். பளிச்சென்ற முகமும், திருத்தமாக உடையும், அமைதி குடிகொண்டு சாந்தமான புன்னகையை சாஸ்வதமாகத் தவழவிடும் இனிமையான முகமும், 33 வயதுக்கே உரித்தான வாளிப்பான உடலும் கலந்த உன்னதக் கலவை. சில பேர் கும்மென்று இருப்பதாக வர்ணிக்கலாம். சிலர் குடும்பப்பாங்கான பெண் எனலாம்.


எங்கள் வீட்டுக்கு வெலைக்கு வர ஆரம்பித்து சரியாக மூன்று மாதம் கூட முடியவில்லை. அதற்குள்ளாக இப்படி நிலைமைக்கு கொண்டு வந்து விடுவாள் என்று நானும் சரி, என் மனைவியும் சரி இம்மியளவும் கற்பனை செய்து பார்க்கவில்லை.

“சும்மா அவ மேல தப்பு சொல்லாதீங்க. நீங்க அந்த மாதிரி கேர்லெஸ்ஸா இருந்திருப்பீங்க. நீங்க எடம் கொடுக்காம அவ இப்படி ஒரு தப்பு செய்வாளா?”

சனிக்கிழமை அந்த சம்பவம் நடந்த போது மனைவி ரேகா ஊரில் இல்லை. அவள் ஊரில் இருக்கும் போது வேலைக்காரியை நேருக்கு நேர் பார்ப்பது கூடக் கிடையாது. சனிக்கிழமைகளில் சங்கரி மதியம் 2 மணிக்கு வருவதுதான் வழக்கம். போன சனிக்கிழமையும் அப்படித்தான் நினைத்திருந்தேன். காலை பதினொரு மணிக்கு பாத்ரூம் ஷவரில் நனைந்துகொண்டிருந்த போது காலிங் பெல் அடித்தது. யாராக இருக்கும் என்ற பதட்டத்தில் இடுப்பில் துண்டைச் சுற்றிக்கொண்டு ஈரம் சொட்டச் சொட்ட ஓடிப் போய் கதவைத் திறந்தபோது பளிச்சென்று சங்கரி நின்றிருந்தாள். இந்த மாதிரி ஒரு செக்ஸியான கோலத்தில் அவள் என்னைக் கண்டதில்லை, அன்று இப்படிக் காண்போம் என எதிர்ப்பார்த்திருக்கவுமில்லை. ஆனால் அப்படிப் பார்க்க அவளுக்குப் பிடித்திருந்தது போன்றதொரு ஒப்புதல் புன்முறுவலை அவளது இதழ்கள் சிந்தின.

அன்றைக்கு எங்கள் வீட்டை விட்டுச் செல்வதற்குள் நடக்கப் போகும் காரியம் என் மனைவிக்கு முன்னால் இப்படியொரு தர்மசங்கடத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என ஈர டவலோடு நின்ற நிமிடத்தில் நினைக்கவில்லை. வழக்கமாக வாரக்கடைசியில் பாத்திரம் கழுவுவதோடு சேர்த்து வீடெல்லாம் கூட்டி, இரண்டு பாத்ரூமையும் கழுவி, துணிகளை மடித்து வைத்து, வீடு மொத்தமும் மாப் போட்டுத் துடைப்பாள். இன்று மாஸ்டர் பெட் ரூமில்தான் அந்தத் தவறு நடந்தது.

சங்கரி வீட்டை விட்டுப் போய் மூன்று மணி நேரம் கடந்த பிறகுதான் என்ன நடந்தது என்றே என்னால் உணர முடிந்தது. அப்போதுதான் எனக்கு உரைத்தது. அதன் பிறகு மதிய சாப்பாட்டுக்கு வெளியே போகும் திட்டத்தைக் கூடக் கைவிட நேர்ந்தது. நூடுல்ஸ் வேக வைத்து சாப்பிட்டுத் தூங்க முயன்று தோற்றுப் போனேன். அன்று இரவும் தூக்கமே வரவில்லை. நான்கு மணி வரை புரண்டு படுப்பதும், ஃபேஸ்புக் பார்ப்பதும், ஆதித்யாவில் காமெடி சீன் பார்ப்பதுமாக மாறி மாறி இரவைக் கடத்தினேன். ஒரு ஆடவன் வீட்டில் யாருமற்ற நேரத்தில் ஜட்டி அணியாமல் லுங்கியுடன் படுத்துக்கொண்டு தனக்குப் பிடித்த காமெடி சேனலைப் பார்க்கும் இன்பத்தைக் கூட ரிலாக்ஸாக அனுபவிக்க முடியவில்லை. முற்பகலில் அப்படி ஒரு விஷயத்தை நடக்க விட்டது வெட்கமாக இருந்தது. எரிச்சலாகவும், ஏமாற்றமாகவும், என் மீதே வெறுப்பாகவும் இருந்தது.

இதை ரேகாவிடம் சொன்னால் நிச்சயம் திட்டுவாள். திட்டுவதென்ன, சீறிப்பாய்வாள். அதற்காக சொல்லாமலா இருக்க முடியும்? சொல்லாமல் விட்டாலும் கண்டுபிடித்து விடுவாள். எனது முக்கியமான பலவீனம் மனைவியிடம் பொய் சொல்லி ஏமாற்றத் தெடியாததுதான். அப்படியே பொய் சொன்னாலும் அது பொய்தான் என்று சிரமமில்லாமல் ரேகா கண்டுபிடிக்கும் அளவுக்கு அமெச்சூராகச் சொல்வேன். எனது பலம், இது வரைக்கும் பெரிய தப்பு எதையும் செய்யாமல் பேணிக் காத்து வருவது. அதனால் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

காலை நாலு மணிக்குத் தூங்கி ஏழு மணிக்கே எழுந்து விட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பல் கூட விளக்கவில்லை. அதற்குள்ளாக ரேகாவை அழைத்து விட்டேன். “நேத்து ஒரு விஷயம் நடந்தது. சொல்றேன். கோவப்படாமக் கேளு பிளீஸ்,” பம்மிக்கொண்டே ஆரம்பித்த மேட்டர் முடிப்பதற்குள் ரேகா வெடித்து விட்டாள். “உனக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி, புள்ள. கல்யாணமே பண்ணாம இப்படியே பொறுப்பில்லாம திரிஞ்சிருக்கணும்”

மூன்று தடவை கோபத்தில் அவள் கட் செய்தாள். ரோசத்தில் இரண்டு முறை  நான் கட் செய்தேன். ஆனாலும் ஒட்டுமொத்தமாக 148 நிமிடம் பேசினோம். அப்போதும் முடியவில்லை.

“நீங்க சொல்றத என்னால நம்பவே முடியலங்க. சங்கரியப் பாத்தா அந்த மாதிரி பொம்பள மாதிரி தெரியல. எனக்கென்னவோ உங்க மேலதான் டவுட்டா இருக்கு. அவ மாஸ்டர் பெட் ரூம் மாப் பண்ணு ஆரம்பிச்சப்ப போது நீங்க எங்க இருந்தீங்க?”

”பொம்பள வேலை செய்யும் போது கூடவே இருந்தா நல்லா இருக்காதுன்னு ஹால்ல உக்காந்து பேப்பர் படிச்சிட்டு இருந்தேன். அவ மாஸ்டர் பெட்ரூம்லயே 10 நிமிசம் வேலை செஞ்சிட்டு இருந்தா. அப்பறம்தான் உள்ளே போனேன்”

“ம்ம்”

“நான் வேணா இன்னைக்கு போன் பண்ணி வரச் சொல்லட்டுமா?”

“என்ன லூஸா நீங்க? எப்பவுமே சண்டே வேலைக்கு வராதவள இன்னைக்கு வரச்சொன்னா நீங்க நேத்து நடந்தத மனசுல வெச்சுக்கிட்டு ஏதோ பிளான் பண்ணித்தான் கூபிடறீங்கன்னு உஷார் ஆகிற மாட்டாளா?”

“எனக்கு கஷ்டமா இருக்குடா”

”நாளைக்கு நான் வந்து பாத்துக்கறேன்”. வைத்து விட்டாள்.

இன்று திங்கட்கிழமை. மனைவியும், மகனும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள். சங்கரியை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று நினைக்கவே பதட்டமாக இருந்தது. வேலைக்காரி என்றால் முனியம்மா, ராக்கம்மா இப்படித்தான் பெயர் இருக்கும் என நான் உருவாக்கி வைத்திருந்த கணிப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கியவள்தான் சங்கரி.

சரியாக 07:45 க்கு வேலைக்காரி வீடியோ காலிங் பெல்லை அடித்து விட்டாள். ரேகாதான் கதவைத் திறந்தாள். நான் ஹாலில் பேப்பர் படிப்பது போல பாவனை செய்துகொண்டே அவளை உன்னிப்பாகக் கவனித்தேன்.

“எப்ப மேடம் வந்தீங்க? ஏற்காடு எக்ஸ்பிரஸா? செரியாவே தூங்கீருக்க மாட்டீங்க. வேணா கொஞ்ச நேரம் படுத்திருங்க மேடம். நான் வேலைய முடிச்சிர்றேன்”

நடந்தது எதையும் என் மனைவியிடம் சொல்லியிருக்க மாட்டேன் என்ற தைரியத்தில் இருக்கிறாளா? இல்லை நாம் செய்த தவறுக்கு இவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்ற திமிரா? அப்படியே தவறு நடந்திருந்தாலும் வீட்ல பொம்பள இல்லாத நேரத்தில் நடந்த சம்பவத்தை என்னவென்று விசாரிப்பார்கள் என்ற அனுபவம் துணிச்சல் தந்திருக்கிறதா? சரியான கில்லாடிதான் இவள். இந்த மாதிரி லீலையெல்லாம் எத்தனை இடத்தில் செய்திருக்கிறாளோ? தனியாக ஆம்பிள்ளை மட்டும் வீட்டில் இருந்த போது செய்வதையெல்லாம் செய்து விட்டும் ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு எப்படித்தான் இவளால் சகஜமாகப் பேச முடிகிறதோ.

வார நாட்களில் பெரும்பாலும் வீட்டு வேலைகளை சங்கரி முடிப்பதற்கு முன்பாகவே ஆஃபீஸ் புறப்பட்டுவிடுவேன். ஆனால் இன்று அவள் போன பிறகுதான் கிளம்ப வேண்டும் எனக் காத்திருந்தேன்.

”போய்ட்டு வர்ரேன் மேடம்”

சங்கரி போயும் போகாததுமாக என்னிடம் திரும்பினாள் ரேகா.

“ஏங்க. அவ மொகத்தப் பாத்தீங்களா? பாத்தா தப்பு பண்ற மூஞ்சி மாதிரியா இருக்கு? நீங்க சொன்ன மாதிரியெ பெட் மேல வேலட் நீங்க வெச்சிருந்தாலும், அவ எடுத்திட்டுப் போயிருந்தா அவதான் எடுத்திருப்பானு நமக்குத் தெரியும்னு அவளுக்கு தெரியாதா? இப்பவும் உங்க மேலதான் எனக்கு டவுட்டு. பெட் மேலதான் வெச்சீங்களான்னு யோசிச்சு பாருங்க. வேற எங்கயாச்சும் இருக்கும். தேடிப்பாக்கலாம். வேலட்டுக்குள்ளயே வெச்சிக்கிட்டு கிரெடிட் கார்ட் தொலஞ்சு போச்சுன்னு பேங்குக்கு போன் பண்ணை கார்ட பிளாக் பண்ணின ஆளுதான் நீங்க”

என்னால் இன்னமும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. சனிக்கிழமை தட்கால் டிக்கெட் புக் பண்ணி விட்டு பெட் மீதுதான் வேலட்டை வைத்திருந்தேன். கட்டின பொண்டாட்டியே நம்மை நம்பவில்லையென்றால் யார் நம்புவார்கள்?

“தேடிப்பாரு ரேகா. கிடைச்சா நீ சொல்றத ஓத்துகறேன்”

“கெடக்கலன்னா”

“ஒரு டெபிட் கார்ட், ஒரு ஆக்சஸ் கார்ட், டிரைவிங் லைசன்ஸ், 4360 ரூபா பிள்ஸ் துபாய்ல வாங்கின லெதர் வேலட்.....இது வரைக்கும் நான் எழுதின காஸ்ட்லியான கதை இதுவா இருந்துட்டுப் போகட்டும்”

கையளவு நெஞ்சத்திலே

பாடல் பிடித்ததை விட, பாடிய விதம் பிடித்ததை விட, பாடலைப் பாடியவரின் நல்ல தமிழ்ப் பெயர் மிகவும் கூடுதலாகப் பிடித்திருக்கிறது..

மகிழினி மணிமாறன்..Monday, January 14, 2013

பணத்தை சேமிப்பது எப்படி

மல்லிகை மகள் டிசம்பர் 2012 இதழுக்கு எழுதியது

முந்தைய பகுதி

கே.பி.சுந்தராம்பாள் ஒரு இலட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் என்பதைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இன்றைய கால கட்டத்தில் ஐ.டி நிறுவன இளைஞர்களும், யுவதிகளும் மாதம் ஒரு இலட்சம் சம்பளம் வாங்குவது சாதாரணம் என்பதால் கொடுமுடி கோகிலம் வாங்கிய சம்பளம் சில பேருக்கு பெரியதாகத் தெரியாமல் போகலாம். அந்நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 14 ரூபாய். அதாவது அவரது சம்பளம் 7143 சவரன். இன்றைய மதிப்பில் 17 கோடி ரூபாய்க்கும் மேலே. கிட்டபாவின் மறைவிற்குப் பின் கிட்டத்தட்ட ஒரு
துறவியைப் போல வாழ்ந்த கே.பி.எஸ் அளவுக்கு சம்பளம் வாங்கிய, வாங்கும் நடிகை இன்று வரை இந்தியாவில் யாருமில்லையென்று அடித்துக் கூறலாம்.

நம்மைச் சுற்றி யாராவது ’நானெல்லாம் அந்தக்  காலத்தில’ எனத் தொடங்கினால் அவர்கள் ‘அப்பவெல்லாம் ஒரு பவுன்’ என்று அங்கலாய்க்காமல் அவர்களது கச்சேரியை முடிப்பதேயில்லை. தங்கத்தின் மதிப்பு நம் கண் முன்னாலேயே ஏறிக்கொண்டு வருவதை நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். ஒரு நிமிடம் பொறுங்கள். இந்த இதழ் தங்கம் பற்றியதல்ல. அதிலும் ஆதாரமான ஒரு விஷயம் குறித்தது.

Appreciate என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. பொதுவாகப் புழங்கும் மொழியில் அந்தச் சொல்லுக்கு ஒரு விஷயத்தைப் பாராட்டுவது, உணர்வது, அங்கீகரித்து ஒப்புக்கொள்வது என்ற பொருள் உண்டு. இன்னொரு பக்கம் நிதித் துறையில் ஒரு முதலீட்டின் மதிப்பு உயருவதை அந்த வார்த்தையால் குறிப்பார்கள். பணத்தைப் பற்றிப் பேசும் போது நாம் இந்த இரண்டு அர்த்தங்களையும் மனதில் கொண்டாக வேண்டும். முதலில் பணம் என்ற உபகரணம் அன்றாட வாழ்வில் வகிக்கும் அங்கம், அது ஆற்றும் பாத்திரம் ஆகியவற்றை
உணராமல் நமது கையில் இருக்கும் அந்தப் பணத்தின் மதிப்பை உயர்த்துவதைப் பற்றியும், உயர்வதைப் பற்றியும் பேசுவது சரியாக இருக்காது.

கொஞ்சம் அடிப்படையாக, தியரிட்டிக்கலாக அமைந்தாலும் பரவாயில்லை.

பணம் என்பது ஒரு உபகரணம். பொருட்களை விற்று வாங்குவதற்காக மனிதன் கண்டறிந்த ஒரு உபகரணம். இந்த உபகரணம் நடைமுறைக்கு வரும் முன்னர் பண்டமாற்று முறையே புழக்கத்தில் இருந்தது. நம்மிடத்தில் உள்ள பொருளைக் கொடுத்துத்தான் நமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளும் அந்த சிஸ்டம் இன்றைக்கு உதவாது என்றாலும் பண்பமாற்று முறையில் இருந்து கிரெடிட் கார்டுக்கு நாம் ஒரு நாளில் வந்து விடவில்லை. பண்டமாற்று முறை படிப்படியாக உருமாறி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சங்கதியாக உலோகக் காசுகள் உருவாயின.அவற்றின் மதிப்பானது அந்தக் காசில் உள்ள உலோகத்தின் மதிப்பிற்குச் சமமாக இருந்தது. உதாரணத்துக்கு ஒரு பொருளின் விலை பத்து
வெள்ளிக் காசுகள் என்றால் அந்தப் பத்துக் காசுகளில் எத்தனை கிராம் வெள்ளி இருக்குமோ அதன் மதிப்புக்குச் சமமாக இருந்தது.

வெள்ளியின் மதிப்பு நிலையாக இருக்கும் பட்சத்தில் வெள்ளிக் காசின் மதிப்பு நிலையாக இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் பத்து வருடத்துக்கு முன் ஒரு பொருளின் விலை ஒரு வெள்ளிக் காசு என்றால் இப்போதும் அதே வெள்ளிக் காசுதான் இருக்கும். ஒரு வேளை அந்தப் பொருளுக்கான தேவை அதிகமானால் விலை இரண்டு வெள்ளிக்காசாக ஏறலாம். பொருளின் விலை, அதாவது மதிப்பு, உண்மையிலேயே உயர்வதை இது உணர்த்துக்கிறது. ஆனால் நாம் விலைகளை பொற்காசுகள் மற்றும் வெள்ளிக்காசுகளின் எண்ணிக்கையில் குறிப்பதில்லை.
மாறாக ரூபாயிலும், டாலரிலும், யூரோவிலும் குறிப்பிடுகிறோம்.

கரன்சி நோட்டின் மதிப்பில் குறிப்பிடும் ஒரு பொருளின் விலை ஏறுவது அந்தப் பொருளின் விலையை மட்டும் குறிப்பதில்லை. அந்தப் பொருளின் மதிப்பு, அந்தப் பொருளை விலை வைத்துக் குறிப்பிடும் கரன்சியின் மதிப்பு ஆகிய இரண்டையுமே அது பிரதிபலிக்கிறது. இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பணத்தின் மதிப்பை. பொதுவாகவே வருடாவருடம் பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே போவது அதன் இயல்பு. அதாவது பொருட்களின் விலை ஏறிக்கொண்டே போவது அல்லது விலைவாசி ஏற்றம் நீடிப்பது. இது எல்லா நாட்டு
கரன்சிகளுக்கும் பொருந்தும். ஆகையால் பணத்தை குழி தோண்டிப் புதைத்து வைத்தாலோ ஜமுக்காளத்துக்கு அடியில் மறைத்து வைத்தாலோ ஒரு பயனும் உருவாகப் போவதில்லை. அதைத் திறம்படக் கையாள வேண்டும்.

ஒரு இடத்தில் பூட்டி வைப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல பணம். வியாபாரப் பரிவர்த்தனைகளை நடத்துவதற்கே அதனை முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி கைக்குக் கை மாறு ம் பணம் ஒரு கால் கேர்ளைப் போல என்பதை உணர வேண்டும்.

எளிமையான ஒரு கணக்கு. டிகிரி முடித்தவுடன் 21 வயதில் வேலைக்குப் போகிறீர்கள். பாட்டியான பிறகு 58 வயதில் ரிட்டையர்ட் ஆகிறீகள். இடைப்பட்ட காலத்தில் மாதாமாதம் வெறும் ஆயிரம் ரூபாய் உண்டியலில் போட்டு வைக்கிறீர்கள். கடைசியில் உண்டியலை உடைத்துப் பார்த்தால் ரூ 4.44 இலட்சம் சேர்ந்திருக்கும். மாதம் ஆயிரம் ரூபாய் என்பது பெரிய விஷயமில்லை. அது கிட்டத்தட்ட நாலரை இலட்சமாவது அருமையான மேட்டர். சேமிப்பு என்பது நல்ல விஷயம்தான். ஒன்றுமே சேர்க்காமல் இருப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

அதே ஆயிரம் ரூபாயை உண்டியலில் போடுவதற்குப் பதிலாக 8 % வட்டி தரும் பேங்க் RD இல் போட்டு வைக்கிறீர்கள். எட்டு சதவீதம் ஒன்றும் அசாதாரணமான வருவாயல்ல. எனினும் 58 ஆவது வயதில் உங்கள் பணம் ரூ 27.16 இலட்சம் ஆகியிருக்கும். வெறும் 8% என நினைத்தது முடிவில் 612 % கூடுதல் தொகையைக் கொடுக்கிறது. சரி, RD க்குப் பதிலாக அதே ஆயிரம் ரூபாயை Systematic Investment Plan மூலம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்கிறீர்கள் என்று
வைத்துக் கொள்ளுங்கள். அது ஆண்டுக்கு 15% சதவீதம் வளர்கிறது என்போம். முடிவில் உங்கள் ரூ 4.44 இலட்சம் ரூ 1.98 கோடி ஆகியிருக்கும். 15% வளர்ச்சி என்பது சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால் இறுதியில் கிடைக்கும் ஆதாயம் 4460% அதிகமாகும்.

இன்னுமொரு சங்கதி சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உபரிச் செலவைக் குறைத்துக்கொண்டு ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக மாதம் இரண்டாயிரம் முதலீடு செய்கிறீர்கள் என்று கருதுவோம். அப்படிச் செய்யும் போது 58 வயதில் நீங்கள் ரூ 3.96 கோடிக்குச் சொந்தக்காரர்.

சிறு துளி பெரு வெள்ளம் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

விதை ஒன்று விருட்சமாவது ஓரிரவில் நடக்கும் காரியமில்லை. திட்டமிடலும், நிதானமும் இருந்தால் நீண்ட கால பினான்சியல் பிளான்னிங் ஒன்றும் செப்படி வித்தையல்ல.

காலம் நல்ல முதலீட்டின் நண்பன். மோசமான முதலீட்டின் எதிரி என்றார் வாரன் பஃபட். பணத்துக்கு ஒரு பவர் இருக்கிறது. காலத்துக்கும் ஒரு பவர் இருக்கிறது. இவை இரண்டும் சேர்ந்தால் சூப்பர் பவர்.

தொடர்ந்து பேசுவோம்..

Sunday, January 06, 2013

5 பில்லியன் பத்திரமும், அப்பாவி முகமும்


ஒரு ஊருக்கு பல காரணங்களுக்காக பெயர் கிடைக்கலாம். தாராபுரம் பழமையான ஒரு நகரம். கடந்த நூறு ஆண்டுகளாக வளர்ச்சியடையாத ஒரு நகரம்.

கொங்கு நாட்டில் கோவையும், தாராபுரமும் ஒரே நாளில் முனிசிபாலிட்டி அந்தஸ்து பெற்றவை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தாராபுரம் தெற்கு நொய்யல் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. இன்று கோவை இந்திய அளவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெரு நகரமாக வளர்ந்திருக்கிறது. ஆனால் தாராபுரம் தமிழக அளவில் கூட பிரபலமாக அறியப்படாத ஒரு ஊராகத்தான் இன்னமும் உள்ளது.


அதனால்தானோ என்னவொ அந்த ஊரை பிரபலமாக்கும் முயற்சியில் T.M.ராமலிங்கம் என்பவர் ஈடுபட்டிருக்கிறார். நாகேஷ் பிறந்த அக்ரஹாரத்திலிருந்து நடந்து போகும் தூரத்தில் இருக்கும் உப்புத்துறைப் பாளயத்தில் வசிக்கும் ராமலிங்கம், நிலக்கடலை (கடலைக்காய்) வியாபாரம் செய்து வந்தவர், சுமார் 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய முதலீட்டுப் பத்திரங்களை வைத்திருக்கிறார் என்ற செய்தி ஊருக்கே ஒரு செலிபிரிட்டி ஸ்டேட்டஸை தந்துள்ளது.

அவர் யாரின் பினாமி என்பது வெளிச்சத்துக்கு வராமலேயே போகலாம் என்பதுதான் நாம் இப்போது கணிக்கும் ஒரே விஷயம்.