Monday, January 14, 2013

பணத்தை சேமிப்பது எப்படி

மல்லிகை மகள் டிசம்பர் 2012 இதழுக்கு எழுதியது

முந்தைய பகுதி

கே.பி.சுந்தராம்பாள் ஒரு இலட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் என்பதைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இன்றைய கால கட்டத்தில் ஐ.டி நிறுவன இளைஞர்களும், யுவதிகளும் மாதம் ஒரு இலட்சம் சம்பளம் வாங்குவது சாதாரணம் என்பதால் கொடுமுடி கோகிலம் வாங்கிய சம்பளம் சில பேருக்கு பெரியதாகத் தெரியாமல் போகலாம். அந்நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 14 ரூபாய். அதாவது அவரது சம்பளம் 7143 சவரன். இன்றைய மதிப்பில் 17 கோடி ரூபாய்க்கும் மேலே. கிட்டபாவின் மறைவிற்குப் பின் கிட்டத்தட்ட ஒரு
துறவியைப் போல வாழ்ந்த கே.பி.எஸ் அளவுக்கு சம்பளம் வாங்கிய, வாங்கும் நடிகை இன்று வரை இந்தியாவில் யாருமில்லையென்று அடித்துக் கூறலாம்.

நம்மைச் சுற்றி யாராவது ’நானெல்லாம் அந்தக்  காலத்தில’ எனத் தொடங்கினால் அவர்கள் ‘அப்பவெல்லாம் ஒரு பவுன்’ என்று அங்கலாய்க்காமல் அவர்களது கச்சேரியை முடிப்பதேயில்லை. தங்கத்தின் மதிப்பு நம் கண் முன்னாலேயே ஏறிக்கொண்டு வருவதை நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். ஒரு நிமிடம் பொறுங்கள். இந்த இதழ் தங்கம் பற்றியதல்ல. அதிலும் ஆதாரமான ஒரு விஷயம் குறித்தது.

Appreciate என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. பொதுவாகப் புழங்கும் மொழியில் அந்தச் சொல்லுக்கு ஒரு விஷயத்தைப் பாராட்டுவது, உணர்வது, அங்கீகரித்து ஒப்புக்கொள்வது என்ற பொருள் உண்டு. இன்னொரு பக்கம் நிதித் துறையில் ஒரு முதலீட்டின் மதிப்பு உயருவதை அந்த வார்த்தையால் குறிப்பார்கள். பணத்தைப் பற்றிப் பேசும் போது நாம் இந்த இரண்டு அர்த்தங்களையும் மனதில் கொண்டாக வேண்டும். முதலில் பணம் என்ற உபகரணம் அன்றாட வாழ்வில் வகிக்கும் அங்கம், அது ஆற்றும் பாத்திரம் ஆகியவற்றை
உணராமல் நமது கையில் இருக்கும் அந்தப் பணத்தின் மதிப்பை உயர்த்துவதைப் பற்றியும், உயர்வதைப் பற்றியும் பேசுவது சரியாக இருக்காது.

கொஞ்சம் அடிப்படையாக, தியரிட்டிக்கலாக அமைந்தாலும் பரவாயில்லை.

பணம் என்பது ஒரு உபகரணம். பொருட்களை விற்று வாங்குவதற்காக மனிதன் கண்டறிந்த ஒரு உபகரணம். இந்த உபகரணம் நடைமுறைக்கு வரும் முன்னர் பண்டமாற்று முறையே புழக்கத்தில் இருந்தது. நம்மிடத்தில் உள்ள பொருளைக் கொடுத்துத்தான் நமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளும் அந்த சிஸ்டம் இன்றைக்கு உதவாது என்றாலும் பண்பமாற்று முறையில் இருந்து கிரெடிட் கார்டுக்கு நாம் ஒரு நாளில் வந்து விடவில்லை. பண்டமாற்று முறை படிப்படியாக உருமாறி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சங்கதியாக உலோகக் காசுகள் உருவாயின.அவற்றின் மதிப்பானது அந்தக் காசில் உள்ள உலோகத்தின் மதிப்பிற்குச் சமமாக இருந்தது. உதாரணத்துக்கு ஒரு பொருளின் விலை பத்து
வெள்ளிக் காசுகள் என்றால் அந்தப் பத்துக் காசுகளில் எத்தனை கிராம் வெள்ளி இருக்குமோ அதன் மதிப்புக்குச் சமமாக இருந்தது.

வெள்ளியின் மதிப்பு நிலையாக இருக்கும் பட்சத்தில் வெள்ளிக் காசின் மதிப்பு நிலையாக இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் பத்து வருடத்துக்கு முன் ஒரு பொருளின் விலை ஒரு வெள்ளிக் காசு என்றால் இப்போதும் அதே வெள்ளிக் காசுதான் இருக்கும். ஒரு வேளை அந்தப் பொருளுக்கான தேவை அதிகமானால் விலை இரண்டு வெள்ளிக்காசாக ஏறலாம். பொருளின் விலை, அதாவது மதிப்பு, உண்மையிலேயே உயர்வதை இது உணர்த்துக்கிறது. ஆனால் நாம் விலைகளை பொற்காசுகள் மற்றும் வெள்ளிக்காசுகளின் எண்ணிக்கையில் குறிப்பதில்லை.
மாறாக ரூபாயிலும், டாலரிலும், யூரோவிலும் குறிப்பிடுகிறோம்.

கரன்சி நோட்டின் மதிப்பில் குறிப்பிடும் ஒரு பொருளின் விலை ஏறுவது அந்தப் பொருளின் விலையை மட்டும் குறிப்பதில்லை. அந்தப் பொருளின் மதிப்பு, அந்தப் பொருளை விலை வைத்துக் குறிப்பிடும் கரன்சியின் மதிப்பு ஆகிய இரண்டையுமே அது பிரதிபலிக்கிறது. இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பணத்தின் மதிப்பை. பொதுவாகவே வருடாவருடம் பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே போவது அதன் இயல்பு. அதாவது பொருட்களின் விலை ஏறிக்கொண்டே போவது அல்லது விலைவாசி ஏற்றம் நீடிப்பது. இது எல்லா நாட்டு
கரன்சிகளுக்கும் பொருந்தும். ஆகையால் பணத்தை குழி தோண்டிப் புதைத்து வைத்தாலோ ஜமுக்காளத்துக்கு அடியில் மறைத்து வைத்தாலோ ஒரு பயனும் உருவாகப் போவதில்லை. அதைத் திறம்படக் கையாள வேண்டும்.

ஒரு இடத்தில் பூட்டி வைப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல பணம். வியாபாரப் பரிவர்த்தனைகளை நடத்துவதற்கே அதனை முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி கைக்குக் கை மாறு ம் பணம் ஒரு கால் கேர்ளைப் போல என்பதை உணர வேண்டும்.

எளிமையான ஒரு கணக்கு. டிகிரி முடித்தவுடன் 21 வயதில் வேலைக்குப் போகிறீர்கள். பாட்டியான பிறகு 58 வயதில் ரிட்டையர்ட் ஆகிறீகள். இடைப்பட்ட காலத்தில் மாதாமாதம் வெறும் ஆயிரம் ரூபாய் உண்டியலில் போட்டு வைக்கிறீர்கள். கடைசியில் உண்டியலை உடைத்துப் பார்த்தால் ரூ 4.44 இலட்சம் சேர்ந்திருக்கும். மாதம் ஆயிரம் ரூபாய் என்பது பெரிய விஷயமில்லை. அது கிட்டத்தட்ட நாலரை இலட்சமாவது அருமையான மேட்டர். சேமிப்பு என்பது நல்ல விஷயம்தான். ஒன்றுமே சேர்க்காமல் இருப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

அதே ஆயிரம் ரூபாயை உண்டியலில் போடுவதற்குப் பதிலாக 8 % வட்டி தரும் பேங்க் RD இல் போட்டு வைக்கிறீர்கள். எட்டு சதவீதம் ஒன்றும் அசாதாரணமான வருவாயல்ல. எனினும் 58 ஆவது வயதில் உங்கள் பணம் ரூ 27.16 இலட்சம் ஆகியிருக்கும். வெறும் 8% என நினைத்தது முடிவில் 612 % கூடுதல் தொகையைக் கொடுக்கிறது. சரி, RD க்குப் பதிலாக அதே ஆயிரம் ரூபாயை Systematic Investment Plan மூலம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்கிறீர்கள் என்று
வைத்துக் கொள்ளுங்கள். அது ஆண்டுக்கு 15% சதவீதம் வளர்கிறது என்போம். முடிவில் உங்கள் ரூ 4.44 இலட்சம் ரூ 1.98 கோடி ஆகியிருக்கும். 15% வளர்ச்சி என்பது சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால் இறுதியில் கிடைக்கும் ஆதாயம் 4460% அதிகமாகும்.

இன்னுமொரு சங்கதி சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உபரிச் செலவைக் குறைத்துக்கொண்டு ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக மாதம் இரண்டாயிரம் முதலீடு செய்கிறீர்கள் என்று கருதுவோம். அப்படிச் செய்யும் போது 58 வயதில் நீங்கள் ரூ 3.96 கோடிக்குச் சொந்தக்காரர்.

சிறு துளி பெரு வெள்ளம் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

விதை ஒன்று விருட்சமாவது ஓரிரவில் நடக்கும் காரியமில்லை. திட்டமிடலும், நிதானமும் இருந்தால் நீண்ட கால பினான்சியல் பிளான்னிங் ஒன்றும் செப்படி வித்தையல்ல.

காலம் நல்ல முதலீட்டின் நண்பன். மோசமான முதலீட்டின் எதிரி என்றார் வாரன் பஃபட். பணத்துக்கு ஒரு பவர் இருக்கிறது. காலத்துக்கும் ஒரு பவர் இருக்கிறது. இவை இரண்டும் சேர்ந்தால் சூப்பர் பவர்.

தொடர்ந்து பேசுவோம்..

4 comments:

ravi said...

money is like a call girl!
super analogue!
more over, u have enough guts to write this in a women's magazine

ravi said...

"money is like call girl"
super analogue!
more over, u have enough guts to write this in a women's magazine.

perumal karur said...

மிகத் தரமான எழுத்து ...

saravanan v said...

Nice Artricle. thanks