Wednesday, January 23, 2013

தமிழ் சினிமாவும் திக்குவாயும்

சினிமா என்பது கிட்டத்தட்ட நாம் வாழும் சமூகத்தின் கண்ணாடி மாதிரி. சமூகம் என்ன மாதிரியான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறதோ அதைப் பிரதிபலிப்பதுதான் சினிமா. இல்லையென்று யாராவது சொல்லுபவர்கள் இருக்கலாம். அப்படியே இருந்தாலும் சமூகம் ஒரு விஷயத்தை அல்லது பிரச்சினையை நோக்கும் கண்ணோட்டத்தை சினிமா வெகுவாகத் தீர்மானிக்கிறது என்பதையாவது அவர்கள் ஓரளவுக்கு ஒப்புக்கொள்வார்கள். நமது சமூகத்தில்
சினிமா செலுத்தும் தாக்கமும், செல்வாக்கும் தவிர்க்க இயலாதவை. அப்படி இருக்கையில் என்ன மாதிரியான சினிமாவை நாம் எடுக்கிறோம் என்பதும், என்ன மாதிரியான விஷயங்கள் அந்த சினிமாவில் வெளிப்படுகின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய சங்கதிகள்.

தமிழ் சினிமாவில் திருநங்கைகளுக்கும், தமிழ் வாத்தியார்களுக்கும் அடுத்தபடியாக கேலி செய்யப்படுவது திக்குவாயர்கள் என்றால் அது மிகையல்ல. நகைச்சுவை என்பதே இங்கே பிறரை கேலி செய்வதும், அவர்களைச் சிறுமைப்படுத்துவமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. மனிதனின் தோற்றம் மற்றும் அசிங்கமான உருவம் ஆகியன இங்கே நிரந்தரமான கேலிப் பொருளாக இருந்து வந்திருக்கின்றன. அதை நாமும் தொடர்ந்து ரசித்து வந்திருக்கிறோனம். அது நமது ரசனையின் தரத்தை, நமது சமூகத்தின் முதிர்ச்சி எந்த மட்டத்தில் உள்ளதென்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

அபூர்வமாக விரல் விட்டு எண்ணும் படியாக சில படங்களே உடல் குறைபாடு உள்ளவர்களை சரியான நோக்கில் காட்டியுள்ளன. எனினும் விதிவிலக்குகள் என்பதால் அவற்றை ஒரு அளவுகோலாகக் கருத இயலாத சூழல் நிலவுகிறது. ஒரு சமுதாயம் எம்மாதிரி மாந்தர்களையும், அவர்தம் பிரச்சினைகளையும் அக்கறையுடன் அணுக வேண்டுமோ அவர்களையெல்லாம் வரைமுறை இல்லாமல் எள்ளி நகையாடுவதில் அலாதி இன்பம் நமக்கு.

திக்குவாய் மிகவும் நுட்பமான பிரச்சினை. இது வியாதில்ல. உடல் ஊனமும் அல்ல. ஒரு வகையான மனச்சிக்கல். திக்குவாய் பிரச்சினை வாயில் இல்லை; அது மூளையில் உள்ளது. நம்மை எல்லோரும் கவனிக்கிறார்களே பதற்றமும், சரியாகப் பேசுவோமோ என்ற பயமும், சீக்கிரமாகப் பேசி முடித்து விட வேண்டும் என்ற அவசரமும் இந்தப் பிரச்சினையின் ஆணிவேர். மேற்கொண்டு பேசுவதற்கு முன் ஒரு விஷயத்தை நான் இங்கே தயக்கமில்லாமல் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

திக்குவாய்ப் பிரச்சினை எனக்கு இருந்தது, இன்னும் இருக்கிறது என்பதே அது.

இதை நான் இங்கே அனுபாதத்துக்காகவோ அல்லது விளம்பரத்துக்காகவோ குறிப்பிடவில்லை. Stammering cure எனப்படும் திக்குவாய்ச் சிகிச்சையில் மிக முக்கியான விஷயம் இந்தப் பிரச்சினை நமக்கு உள்ளது என்பதை மறைப்பதையும், மறுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதே. அதுதான் இதிலிருந்து மீளும் பயணத்தின் முதல் படி. நாம் எல்லோருக்கும் ஒரு
திக்குவாயரையாவது தெரிந்திருக்கும். அது நம் பள்ளி, கல்லூரியில் உடன் படித்த நண்பராக இருக்கலாம். உடன் பணியாற்றும் சக ஊழியராக இருக்கலாம். நமது ஏரியாவில் வசிக்கும் ஒரு நபராக இருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் நாம் பார்த்த படங்களில் மறக்க முடியாத பாத்திரமாக இருக்கலாம், காதலா காதலா பிரபுதேவா போல. மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் கூடுதலான திக்குவாய்ச் சிக்கல் உடையோர் உள்ளதாக ஒரு கணிப்பு சொல்கிறது.

இந்தியாவில் ஒன்னேகால் கோடிப் பேர். அவர்கள் அத்தனை பேரும் இதிலிருந்து மீள முடியும். அப்படி மீள்வதற்கு முதல் படி, தமக்ககிருக்கும் பிரச்சினையை ஒப்புக்கொண்டு அதைத் தைரியமாக எதிர்கொள்வது மட்டுமேயாகும்.

இதை வாசிக்க நேரிடுகிற யாருக்காவது திக்குவாய் பிரச்சினை இருக்குமானால், அதைப் பற்றிக் கவலைப்படுவதை முதலில் நிறுத்திக்கொள்ளலாம். ஏனேன்றால், இந்த உலகத்தில் நீங்கள் தனியாக இல்லை. பல பிரபங்கள் திக்குவாயர்களாக இருந்திருக்கிறார்கள். உலகப் புகழ் பெற்ற நடிகை மர்லின் மன்றோ, பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், பரிணாமக் கோட்பாட்டை உலகுக்குத் தந்த டார்வின், விஞ்ஞானி ஐசக் நியூட்டன், அமெரிக்க அதிபர் தியோடர்
ரூஸ்வெர்ல்ட்,இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தை வழி நடத்திய மன்னர்
ஆறாம் ஜார்ஜ் மற்றும் அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த சர்ச்சில், கேரளாவில் முதல் கம்யூனிஸ்ட் முதலமைச்சர் நம்பூதிரிபாத் ஆகியோர் திக்குவாய்ப் பிரச்சினையைக் கடந்து வந்த சில பிரபலங்கள்.

அதனால் கவலைப்பட ஒன்றுமில்லை. சராசரி மனிதர்களை விட திக்குவாயர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்பது இன்னொரு நல்ல செய்தி. அவர்களது மூளை செயல்படும் வேகத்துக்கு பேச்சை வெளிப்படுத்தும் உடல் உறுப்புகள் ஈடுகொடுக்க முடிவதில்லை. அவ்வளவுதான். அது குறித்த குற்ற உணர்ச்சியே தேவையில்லை. மூளை கூர்மையாக செயல்படுகிறது என்பது பெருமையான ஒரு விஷயம்தான்.

திக்குவாய் வியாதி இல்லை என்று சொல்லியாகிவிட்டது. அது ஒரு கெட்ட பழக்கம். புகை பிடிப்பதைப் போல, மது அருந்துவதைப் போல, காலையில் பத்து மணி வரைக்கும் தூங்குவதைப் போல அது ஒரு கெட்ட பழக்கம். அதை மருந்து, மாத்திரைகளால் சரிப்படுத்த முடியாது. நீ திக்குவாயன் என நமது மூளையில் நாமே எழுதி வைத்திருக்கும் புரோகிராமை அழித்து விட்டு, என்னால் தடையில்லாமல்  சரளமாகப் பேச இயலுமென இன்னொரு புரோகிராமை எழுத வேண்டும்.

அதற்கு கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும், ஊக்குவிப்பும் வேண்டும்.  The Indian Stammering Association(TISA) மாதிரியான அமைப்புகள் தன்னார்வ அடிப்படையிலும், stammering cure center என்ற பெயரில் சில தனி நபர்கள் வர்த்தக ரீதியிலும் இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்ற உதவுகிறார்கள்.

மெதுவாகப் பேசுவது, தினமும் சீரான வேகத்தில் வாசிப்பது, பிரச்சினையை மறைப்பதற்கான குறுக்கு வழிகளைத் தவிர்த்து அதைத் துணிச்சலாக எதிர்கொள்வது, பேசும் போது மூச்சு அடைத்துக் கொள்ளாமல் அவ்வப்போது நிறுத்தி மூச்சு விட்டுக்கொள்வது முதலின சில மேம்பாட்டு டெக்னிக்குகள். 

மல்டி லெவல் மார்க்கெட்டிங் எங்கே வெற்றிகரமாகச் செயல்படு முடியுமோ தெரியாது. அது திக்குவாய்ச் சிகிச்சையில் அதிசயங்களை நிகழ்த்தும் என்பது நிச்சயம். இதிலிருந்து விடுபட்டவர்களோடு தொடர்பில் இருங்கள். நீங்கள் செய்யாத தவறுக்காக நீங்கள் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனையில் இருந்து விடுபட்டது போல உணர்வீர்கள்.

தமிழ் சினிமா தான் செய்த தவறுகளுக்காக சாட்டை மாதிரி சில படங்களையாவது எடுக்கட்டும்.

3 comments:

Anonymous said...

Very good Article for those who have the problem. Suggest to give some consultants' address/exercises etc.

perumal karur said...

சத்தியமாக சொல்கிறேன் எனக்கு திக்குவாய் பிரச்சனை உள்ளவர்களை கண்டால் பொறாமைதான் ஏற்ப்படுகிறது ..

ஆச்சர்யமாக உள்ளதா ? ஆம் திக்குவாயே ஒரு கவர்ச்சிதான் ..திக்குவாய் உள்ளவர்களுடன் பேச பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் தெரியுமா?.. உணமையிலேயே அது ஒரு கவர்ச்சிதாங்க...

Chellamuthu Kuppusamy said...

அனானி,

TISA இணைய தள முகவரியும், stammering cure center பற்றிய ஒரு முந்தைய பதிவின் முகவரியையும் இந்தப் பதிவின் லிங்கிலேயே குறிப்பிட்டுள்ளேன். மேலும் தகவல் தேவைப்பட்டால் எனக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்புங்கள்

பெருமாள்: இதில என்னங்க கவர்ச்சி?