Thursday, January 17, 2013

வேலைக்காரியின் லீலை


இன்றைக்கு சங்கரியை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று நினைக்கவே பதட்டமாக இருந்தது. வேலைக்காரி என்றால் முனியம்மா, ராக்கம்மா இப்படித்தான் பெயர் இருக்கும் என நான் உருவாக்கி வைத்திருந்த கணிப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கியவள்தான் சங்கரி. 12 ஆம் வகுப்பு படித்த பெண். பளிச்சென்ற முகமும், திருத்தமாக உடையும், அமைதி குடிகொண்டு சாந்தமான புன்னகையை சாஸ்வதமாகத் தவழவிடும் இனிமையான முகமும், 33 வயதுக்கே உரித்தான வாளிப்பான உடலும் கலந்த உன்னதக் கலவை. சில பேர் கும்மென்று இருப்பதாக வர்ணிக்கலாம். சிலர் குடும்பப்பாங்கான பெண் எனலாம்.


எங்கள் வீட்டுக்கு வெலைக்கு வர ஆரம்பித்து சரியாக மூன்று மாதம் கூட முடியவில்லை. அதற்குள்ளாக இப்படி நிலைமைக்கு கொண்டு வந்து விடுவாள் என்று நானும் சரி, என் மனைவியும் சரி இம்மியளவும் கற்பனை செய்து பார்க்கவில்லை.

“சும்மா அவ மேல தப்பு சொல்லாதீங்க. நீங்க அந்த மாதிரி கேர்லெஸ்ஸா இருந்திருப்பீங்க. நீங்க எடம் கொடுக்காம அவ இப்படி ஒரு தப்பு செய்வாளா?”

சனிக்கிழமை அந்த சம்பவம் நடந்த போது மனைவி ரேகா ஊரில் இல்லை. அவள் ஊரில் இருக்கும் போது வேலைக்காரியை நேருக்கு நேர் பார்ப்பது கூடக் கிடையாது. சனிக்கிழமைகளில் சங்கரி மதியம் 2 மணிக்கு வருவதுதான் வழக்கம். போன சனிக்கிழமையும் அப்படித்தான் நினைத்திருந்தேன். காலை பதினொரு மணிக்கு பாத்ரூம் ஷவரில் நனைந்துகொண்டிருந்த போது காலிங் பெல் அடித்தது. யாராக இருக்கும் என்ற பதட்டத்தில் இடுப்பில் துண்டைச் சுற்றிக்கொண்டு ஈரம் சொட்டச் சொட்ட ஓடிப் போய் கதவைத் திறந்தபோது பளிச்சென்று சங்கரி நின்றிருந்தாள். இந்த மாதிரி ஒரு செக்ஸியான கோலத்தில் அவள் என்னைக் கண்டதில்லை, அன்று இப்படிக் காண்போம் என எதிர்ப்பார்த்திருக்கவுமில்லை. ஆனால் அப்படிப் பார்க்க அவளுக்குப் பிடித்திருந்தது போன்றதொரு ஒப்புதல் புன்முறுவலை அவளது இதழ்கள் சிந்தின.

அன்றைக்கு எங்கள் வீட்டை விட்டுச் செல்வதற்குள் நடக்கப் போகும் காரியம் என் மனைவிக்கு முன்னால் இப்படியொரு தர்மசங்கடத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என ஈர டவலோடு நின்ற நிமிடத்தில் நினைக்கவில்லை. வழக்கமாக வாரக்கடைசியில் பாத்திரம் கழுவுவதோடு சேர்த்து வீடெல்லாம் கூட்டி, இரண்டு பாத்ரூமையும் கழுவி, துணிகளை மடித்து வைத்து, வீடு மொத்தமும் மாப் போட்டுத் துடைப்பாள். இன்று மாஸ்டர் பெட் ரூமில்தான் அந்தத் தவறு நடந்தது.

சங்கரி வீட்டை விட்டுப் போய் மூன்று மணி நேரம் கடந்த பிறகுதான் என்ன நடந்தது என்றே என்னால் உணர முடிந்தது. அப்போதுதான் எனக்கு உரைத்தது. அதன் பிறகு மதிய சாப்பாட்டுக்கு வெளியே போகும் திட்டத்தைக் கூடக் கைவிட நேர்ந்தது. நூடுல்ஸ் வேக வைத்து சாப்பிட்டுத் தூங்க முயன்று தோற்றுப் போனேன். அன்று இரவும் தூக்கமே வரவில்லை. நான்கு மணி வரை புரண்டு படுப்பதும், ஃபேஸ்புக் பார்ப்பதும், ஆதித்யாவில் காமெடி சீன் பார்ப்பதுமாக மாறி மாறி இரவைக் கடத்தினேன். ஒரு ஆடவன் வீட்டில் யாருமற்ற நேரத்தில் ஜட்டி அணியாமல் லுங்கியுடன் படுத்துக்கொண்டு தனக்குப் பிடித்த காமெடி சேனலைப் பார்க்கும் இன்பத்தைக் கூட ரிலாக்ஸாக அனுபவிக்க முடியவில்லை. முற்பகலில் அப்படி ஒரு விஷயத்தை நடக்க விட்டது வெட்கமாக இருந்தது. எரிச்சலாகவும், ஏமாற்றமாகவும், என் மீதே வெறுப்பாகவும் இருந்தது.

இதை ரேகாவிடம் சொன்னால் நிச்சயம் திட்டுவாள். திட்டுவதென்ன, சீறிப்பாய்வாள். அதற்காக சொல்லாமலா இருக்க முடியும்? சொல்லாமல் விட்டாலும் கண்டுபிடித்து விடுவாள். எனது முக்கியமான பலவீனம் மனைவியிடம் பொய் சொல்லி ஏமாற்றத் தெடியாததுதான். அப்படியே பொய் சொன்னாலும் அது பொய்தான் என்று சிரமமில்லாமல் ரேகா கண்டுபிடிக்கும் அளவுக்கு அமெச்சூராகச் சொல்வேன். எனது பலம், இது வரைக்கும் பெரிய தப்பு எதையும் செய்யாமல் பேணிக் காத்து வருவது. அதனால் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

காலை நாலு மணிக்குத் தூங்கி ஏழு மணிக்கே எழுந்து விட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பல் கூட விளக்கவில்லை. அதற்குள்ளாக ரேகாவை அழைத்து விட்டேன். “நேத்து ஒரு விஷயம் நடந்தது. சொல்றேன். கோவப்படாமக் கேளு பிளீஸ்,” பம்மிக்கொண்டே ஆரம்பித்த மேட்டர் முடிப்பதற்குள் ரேகா வெடித்து விட்டாள். “உனக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி, புள்ள. கல்யாணமே பண்ணாம இப்படியே பொறுப்பில்லாம திரிஞ்சிருக்கணும்”

மூன்று தடவை கோபத்தில் அவள் கட் செய்தாள். ரோசத்தில் இரண்டு முறை  நான் கட் செய்தேன். ஆனாலும் ஒட்டுமொத்தமாக 148 நிமிடம் பேசினோம். அப்போதும் முடியவில்லை.

“நீங்க சொல்றத என்னால நம்பவே முடியலங்க. சங்கரியப் பாத்தா அந்த மாதிரி பொம்பள மாதிரி தெரியல. எனக்கென்னவோ உங்க மேலதான் டவுட்டா இருக்கு. அவ மாஸ்டர் பெட் ரூம் மாப் பண்ணு ஆரம்பிச்சப்ப போது நீங்க எங்க இருந்தீங்க?”

”பொம்பள வேலை செய்யும் போது கூடவே இருந்தா நல்லா இருக்காதுன்னு ஹால்ல உக்காந்து பேப்பர் படிச்சிட்டு இருந்தேன். அவ மாஸ்டர் பெட்ரூம்லயே 10 நிமிசம் வேலை செஞ்சிட்டு இருந்தா. அப்பறம்தான் உள்ளே போனேன்”

“ம்ம்”

“நான் வேணா இன்னைக்கு போன் பண்ணி வரச் சொல்லட்டுமா?”

“என்ன லூஸா நீங்க? எப்பவுமே சண்டே வேலைக்கு வராதவள இன்னைக்கு வரச்சொன்னா நீங்க நேத்து நடந்தத மனசுல வெச்சுக்கிட்டு ஏதோ பிளான் பண்ணித்தான் கூபிடறீங்கன்னு உஷார் ஆகிற மாட்டாளா?”

“எனக்கு கஷ்டமா இருக்குடா”

”நாளைக்கு நான் வந்து பாத்துக்கறேன்”. வைத்து விட்டாள்.

இன்று திங்கட்கிழமை. மனைவியும், மகனும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள். சங்கரியை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று நினைக்கவே பதட்டமாக இருந்தது. வேலைக்காரி என்றால் முனியம்மா, ராக்கம்மா இப்படித்தான் பெயர் இருக்கும் என நான் உருவாக்கி வைத்திருந்த கணிப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கியவள்தான் சங்கரி.

சரியாக 07:45 க்கு வேலைக்காரி வீடியோ காலிங் பெல்லை அடித்து விட்டாள். ரேகாதான் கதவைத் திறந்தாள். நான் ஹாலில் பேப்பர் படிப்பது போல பாவனை செய்துகொண்டே அவளை உன்னிப்பாகக் கவனித்தேன்.

“எப்ப மேடம் வந்தீங்க? ஏற்காடு எக்ஸ்பிரஸா? செரியாவே தூங்கீருக்க மாட்டீங்க. வேணா கொஞ்ச நேரம் படுத்திருங்க மேடம். நான் வேலைய முடிச்சிர்றேன்”

நடந்தது எதையும் என் மனைவியிடம் சொல்லியிருக்க மாட்டேன் என்ற தைரியத்தில் இருக்கிறாளா? இல்லை நாம் செய்த தவறுக்கு இவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்ற திமிரா? அப்படியே தவறு நடந்திருந்தாலும் வீட்ல பொம்பள இல்லாத நேரத்தில் நடந்த சம்பவத்தை என்னவென்று விசாரிப்பார்கள் என்ற அனுபவம் துணிச்சல் தந்திருக்கிறதா? சரியான கில்லாடிதான் இவள். இந்த மாதிரி லீலையெல்லாம் எத்தனை இடத்தில் செய்திருக்கிறாளோ? தனியாக ஆம்பிள்ளை மட்டும் வீட்டில் இருந்த போது செய்வதையெல்லாம் செய்து விட்டும் ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு எப்படித்தான் இவளால் சகஜமாகப் பேச முடிகிறதோ.

வார நாட்களில் பெரும்பாலும் வீட்டு வேலைகளை சங்கரி முடிப்பதற்கு முன்பாகவே ஆஃபீஸ் புறப்பட்டுவிடுவேன். ஆனால் இன்று அவள் போன பிறகுதான் கிளம்ப வேண்டும் எனக் காத்திருந்தேன்.

”போய்ட்டு வர்ரேன் மேடம்”

சங்கரி போயும் போகாததுமாக என்னிடம் திரும்பினாள் ரேகா.

“ஏங்க. அவ மொகத்தப் பாத்தீங்களா? பாத்தா தப்பு பண்ற மூஞ்சி மாதிரியா இருக்கு? நீங்க சொன்ன மாதிரியெ பெட் மேல வேலட் நீங்க வெச்சிருந்தாலும், அவ எடுத்திட்டுப் போயிருந்தா அவதான் எடுத்திருப்பானு நமக்குத் தெரியும்னு அவளுக்கு தெரியாதா? இப்பவும் உங்க மேலதான் எனக்கு டவுட்டு. பெட் மேலதான் வெச்சீங்களான்னு யோசிச்சு பாருங்க. வேற எங்கயாச்சும் இருக்கும். தேடிப்பாக்கலாம். வேலட்டுக்குள்ளயே வெச்சிக்கிட்டு கிரெடிட் கார்ட் தொலஞ்சு போச்சுன்னு பேங்குக்கு போன் பண்ணை கார்ட பிளாக் பண்ணின ஆளுதான் நீங்க”

என்னால் இன்னமும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. சனிக்கிழமை தட்கால் டிக்கெட் புக் பண்ணி விட்டு பெட் மீதுதான் வேலட்டை வைத்திருந்தேன். கட்டின பொண்டாட்டியே நம்மை நம்பவில்லையென்றால் யார் நம்புவார்கள்?

“தேடிப்பாரு ரேகா. கிடைச்சா நீ சொல்றத ஓத்துகறேன்”

“கெடக்கலன்னா”

“ஒரு டெபிட் கார்ட், ஒரு ஆக்சஸ் கார்ட், டிரைவிங் லைசன்ஸ், 4360 ரூபா பிள்ஸ் துபாய்ல வாங்கின லெதர் வேலட்.....இது வரைக்கும் நான் எழுதின காஸ்ட்லியான கதை இதுவா இருந்துட்டுப் போகட்டும்”

4 comments:

kamalakkannan said...

மரண மொக்க கதை.

kamalakkannan said...

மரண மொக்க கதை.

kamalakkannan said...

மரண மொக்க கதை.

perumal karur said...

ஆரம்பத்துலையே எதோ திருட்டா தான் இருக்கும்னு நினச்சேன்..

:-)