Saturday, February 02, 2013

அதிக இலாப ஆசையும் நிதி மோசடியும்

மல்லிகை மகள் ஜனவரி 2013 இதழுக்கு எழுதியது

2012 நவம்பர் இதழில் இருந்து
2012 டிசம்பர் இதழில் இருந்து

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் எழில் கொஞ்சும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இயல்பாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த ஒரு பெண்மணி. ”ஒரு இலட்ச ரூபாய் இன்வென்ஸ் பண்ணு. மாசாமாசம் 8,500 வட்டி,” என பக்கத்து வீட்டு பரமேஸ்வரி அக்கா வந்து அந்தத் திட்டம் குறித்துச் சொல்லும் வரை எல்லாம் நல்லபடியாகத்தான்
போய்க்கொண்டிருந்தது.

மாதாந்திர ரிட்டர்ன் தவிர ஐந்து வருடம் கழித்து போட்ட பணத்தை அப்படியே திருப்பித் தந்து விருவார்களாம். இதெல்லாம் ஏமாற்று வேலை என்றுதான்
முதலில் நினைத்தார் சாந்தி. அப்போது அக்கா நாலைந்து பேர் வீட்டுக்கு
அழைத்துச் சென்றார். அவர்களுக்கெல்லாம் மாதந்தோறும் 10 ஆம் தேதிக்குள்
சரியாக வட்டி வந்துகொண்டிருந்தது. நாம் கொடுக்கும் பணத்தை அவர்கள்
ஆன்லைன் மூலம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவார்கள்
என்று விளக்கம் கூறினார் அக்கா.

வீட்டுக்குத் திரும்பிய கையோடு கணவனை நச்சரித்து தனது நகையை அடகு வைத்து இரண்டு இலட்ச ரூபாயை பரமேஸ்வரி அக்கா மூலம் முதலீடு செய்தார். ஒரு மாதத்துக்கு சரியாக வட்டி வந்தது. அதன் பிறகு ஒரு நன்னாளில் பைன் பியூச்சர், பெஸ்ட் வே, குட் வேஸ், பைன் இந்தியா ஆகிய பெயர்களை கொண்ட அந்த நிறுவனம் எல்லாப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடியது.

’வடை போட்டே’ என்ற தோனியில் ’நகை போச்சே’ என்று புலம்பிக்
கொண்டிருக்கிறார் சாந்தி. சாந்தியைப் போன்றே பலரும் பரமேஸ்வரியின் வீட்டை முற்றுகையிட்டார்கள். கமிஷனுக்கு ஆசைப்பட்டு தமது உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என சகலரையும் மூளைச் சலவை செய்து பணம் போட வைத்த இந்த முகவர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். ஒருவர் தற்கொலையே செய்துகொண்டார்.

எப்போதும் போல தானாகச் சென்று மக்களை ஏமாற்றுவதை விட மக்களை வைத்தே மக்களை ஏமாற்றுவதுதான் இவர்கள் கண்டறிந்த நூதன டெக்னிக். துரிதமாக பல பேரது பணத்தைச் சுருட்ட இந்த டெக்னிக் உதவியிருக்கிறது. ரூ.10 லட்சம்வரை முதலீடு செய்தால், சேர்த்து விடும் ஏஜெண்டுகளுக்கு ரூ.2 லட்சம்வரை கமிஷனாக கொடுத்தனர். இதனால் 10 ஆயிரம் பேரை இந்த நிறுவனங்களில் முகவர்கள் சேர்த்துவிடவும் நிறுவன உரிமையாளர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பணம் போட்ட பல பேரின் நிலை பரிதாபத்துக்குரியதாகவும், பணம் போடத் தூண்டிய முகவர்களின் நிலை அதனினும் மோசமானதாகவும் ஆனதுதான் மிச்சம்.

இந்த பைன் இண்டியா நிறுவனம் போலவே வட இந்தியாவிலும் ஒரு கதை. இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் ரூ. 493 கோடி மோசடி செய்ததாக  உல்லாஸ் பிரபாகர் கரே & ரக்‌ஷா என்ற தம்பதியை தில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சமீபத்தில் கைது செய்தது. தமிழகத்தின் பிரபலமான நகைச்சுவை நடிகர்களின் பெயரைக் கொண்ட விவேக்கும், செந்திலும் ‘பைன் இந்தியா’ என்ற பெயரில் மோசடி செய்தால் இந்த வடக்கத்திய ஜோடி ‘ஸ்டாக் குரு’ என்ற பெயரில் ஏமாற்றியிருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். பல படித்தவர்கள், தத்தமது துறையில் ஜொலிப்பவர்கள் பல பேர் 11 ஆம் வகுப்பு மட்டுமே படித்த பிரபாகரிடம் ஏமாந்து போயுள்ளனர்.

நல்ல பொறுப்பான பையன்களை எல்லாம் சுவாரசியமில்லாதவன் என நிராகரிக்கும் பெண்கள், ஏற்கனவே பல பேர ஏமாற்றிய கலகலப்பான சில ஆண்களிடம் ஏமாந்து போவதுண்டு. நிதி நிர்வாகத்தில் பல பேரது நிலைமை அப்படித்தான் உள்ளது.

சீட்டுக் கம்பெனியில் பணம் போடுவது, தேக்கு மரத் திட்டம், ஈமூ கோழி
விவகாரம், சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த நாட்டுக் கோழி வளர்ப்பு மோசடி
குற்றச்சாட்டு என மக்கள் தாமாகப் போய் ஏமாந்த அனைத்து சம்பவங்களிலும்
அதீத ஆசையே அடிப்படையான காரணமாக இருந்துள்ளது. நள்ளிரவில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசையே பிரதானமான சிக்கல்.

ஒரு முறை எங்கள் ஏரியாவில் ஒரு பெண்மணிக்கு ”வீட்டிலிருந்தே வேலை செய்து பணம் பெருக்கும் அருமையான ஆப்ஷன் இல்லத்தரசிகளுக்கு” என ஒரு குறுஞ்செய்தி வந்தது. அவரும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அந்தக் கம்பெனிக்குப் போய் விட்டு வந்தார். வந்து என் மனைவியிடமும் மிக மகிழ்ச்சியாக அதைப் பற்றி விவரித்தார். நான் குறுக்குக் கேள்விகள் கேட்ட போது தெரிந்தது இதுதான்.

அந்த கம்பெனி அன்னியச் செலவாணி வர்த்தகத்தில் தின வர்த்தகம் செய்வதில் ஏதோ சாஃப்ட்வேர் செய்திருக்கிறார்களாம். இந்த அம்மா ஒரு இலட்ச ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்து, தன் சார்பாக கரன்சி டிரேடிங் செய்ய அவர்களுக்கு முழு அதிகாரமும் கொடுத்து விட வேண்டுமாம். அவர்கள் அதை வைத்து ரிடேடிங் செய்வார்களாம்.

அப்படியெல்லாம் சாஃப்ட்வேர் மூலம் கரன்சி டிரேடிங்கில் லாபம் ஈட்டுவது
இயலாத காரியம் என்று நான் எடுத்துச் சொல்லி விளக்கினேன். கொடுத்த
அப்ளிகேஷனையும், பணத்தையும் திரும்பப் பெற அடுத்த நாளே அந்த
அலுவலத்துக்கு அவரோடு சேர்ந்து நானும் போனேன். அங்கே பணியாற்றும் ஒரு பெண், ‘இப்ப யூரோ கிரைசிஸ் சார். இதெல்லாம் நாலஞ்சு நாள்ல சரியாயிரும். உங்க பணம் டபுள் ஆகிரும்’ என அள்ளி விட்டுக் கொண்டிருந்தார். டிரேடிங் செய்து பணம் சம்பாதிக்கும் சாஃப்ட்வேரைக் கண்டுபிடித்தவன் அதைத் தானே உபயோகிப்பானே தவிர மற்றவர்களின் பயன்பாட்டிற்குத் தர மாட்டான் என்கிற பகுத்தறிவு நமக்கு வேலை செய்ய வேண்டும்.

குடும்பத் தலைவிகளைக் குறிவைத்து, ஓய்வு நேரத்தில் அமோகமாகச்
சம்பாதிக்கலாம் என எஸ்.எம்.எஸ் அனுப்பி ஏமாற்றுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நலம். அதே போல, ’உங்களுக்கு ஆன்லைன் ரேண்டம் லாட்டரியில் ஐம்பது கோடி விழுந்துள்ளது’ அல்லது ’எனது முன்னூறு கோடி மொரீசியசில் மாட்டிக்கிச்சு’ என ஆரம்பித்து ‘உங்க அக்கவுண்ட் நம்பரைக் கொடுங்க’ என்று வரும் குற்ஞ்செய்திகளுக்கும், மின்னஞ்சல்களுக்கும் இரையானவர்களும் உண்டு.

நடமுறை இயல்புக்குப் புறம்பான, அதை மீறிய விஷயங்களைப் பற்றி
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வங்கியில் போட்டு வைக்கு டெபாசிட்டுக்கு ஆண்டு 8 சதவீத வட்டியெனறால் அதில் ரிஸ்க் இல்லை. பங்குசந்தையில் முதலீடு செய்தால் 25 சதவீதம் கூட இலாபம் வரலாம். அதே போல நட்டமும் ஆகலாம்.

”என்னிடம் பணம் கொடுங்கள். நான் முதலீடு செய்கிறேன். உங்களுக்கு 25
சதவீதம் தருகிறேன்” என யாராவது சொன்னால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது சாத்தியமில்லாத ஒரு விஷயம் என்பதை உணர வேண்டும்.

பணம் சம்பாதிப்பதற்கு குறுக்கு வழிகள் ஒன்றுமில்லை. அதை இழப்பதற்கு நிறைய உண்டு.  அவற்றை உணர்ந்து, கடந்து செல்லப் பழக வேண்டும். மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் ஏமாறுவதைப் போல கொடுமையான விஷயம் ஒன்றுமில்லை. அதில் ஒரு தனி நபர் மட்டும் ஏமாறுவதில்லை. தன்னைச் சேர்ந்தவர்களையும் சேர்த்து ஏமாற வைக்கும் அபாயம் அதில் உண்டு.

வங்கி தரும் ரிஸ்க் ஃபிரீ வட்டியை விடக் கூடுதலாக வருமானம்
கிடைக்குமானால் பின்வரும் மூன்று விஷயங்களில் ஒன்று கட்டாயம் இருக்கும். ஒன்று, நாம் முதலீடு செய்யும் பணத்தோடு சேர்த்து கூடவே நமது உழைப்பையும் கொஞ்சம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இரண்டு, அதிகமாக வருமானம் வருவது போலவே நமது முதலீட்டின் மதிப்பு கீழே போகவும் சாத்தியம் இருக்கும். மூன்றாவது, இப்படி கீழே போகும் ரிஸ்க் இல்லாமல் உத்திரவாதம் தருகிறேன் என்று சொல்லி நம் மொத்தப் பணத்தையும் சுருட்ட யாரோ தயாராகிறார்கள்.

மாதத்துக்கு 20 சதவீத வட்டி, ஆறு மாதத்தில் பணத்தை இரட்டிப்பது
என்பதெல்லாம் பிவியீர்ப்பு விசைக்கு எதிரான கூற்றுக்கள். உலகமே போற்றும் ஒப்பற்ற பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபட் 1965 முதல் 2011 வரை ஈட்டிய சராசரி வருடாந்திர இலாபம் 19.8 சதவீதம் மட்டுமே. அது உலகப்
பணக்காரர்கள் வரிசையில் அவரை நம்பர் 1,2,3 ஆகிய இடங்களில் வைத்துள்ளது.

19.8 சதவீதம் என்பது ஒரு சுவாரசியமில்லாத ஒன்று. எனக்கு பரபரப்பும்,
சுவாரசியமும் தான் வேண்டும் என நீங்கள் நினைத்தால்... சிரித்துப் பேசி
உங்களையும் சிரிக்க வைக்கும் சாக்லேட் பையன்களிடம் ஏமாறத் தயாராக
உள்ளீர்கள் என அர்த்தம்..

அடுத்த பாகம்