Friday, May 31, 2013

விண்ணை முட்டும் விலைவாசி

இந்தியாவின் ஆளும் வர்க்கம் மொத்த விலைக் குறியீட்டின் (Wholesale Price Index - WPI) அடிப்படையில் பணவீக்கத்தைக் குறிக்கிறார்கள். இது உணவு சாராத உற்பத்திப் பொருட்களின் அடிப்படையில் நிர்ணயம் ஆகிறது. உண்மையில் மக்களைப் பாதிப்பது சில்லறை விலைக் குறியீடு (Consumer Price Index CPI) தானே தவிர WPI அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் அல்ல. பணவீக்கம் குறைகிறது என்று செய்திகள் சொன்னாலும் அதை நாம் நம்ப முடியாமல் இருப்பதற்குக் காரணம் இதுவே.

முன்னேறிய மேலை நாடுகளில் நுகர்வோர் விலைவாசியே பிரதாரனக் காரணியாக இருக்கிறது. இந்தியாவில் அப்படியொரு நாள் வருமா தெரியவில்லை.

பணவீக்கம் தொடர்பாக முன்பொரு காலத்தில் 2006 இல் எழுதிய கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறேன்.
******

"இந்தியர்கள் வலிமையுள்ளவர்களாக மாறி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ரூ.200 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை தூக்கி வர இரண்டு திடகாத்திரமான வாலிபர்களைத் தேட வேண்டி இருந்தது. ஆனால், இன்றோ 5 வயது சிறுவன் அதே இருநூறு மதிப்புள்ள பொருட்களை தூக்கி வர இயல்கிறது."

மேற்கூறிய துணுக்கிலிருந்து நாம் அறிவது என்ன? காலப்போக்கில் நாமும் நம் சந்ததியினரும் உடல் வலிமையில் மெருகேறியிருக்கிறோமா? அல்லது யாரின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் விலைவாசி விண்ணை நோக்கி நகர்கிறதா? அல்லது யாரோ தங்களுடைய நகைச்சுவை உணர்ச்சியை வெளிப்படுத்தும் முயற்சியில் வெளியிட்ட துணுக்கா? சற்றே யோசித்து பார்க்கும் பொது நகைச்சுவை இல்லை என்பதை உணர்வதோடு மட்டும் இல்லாது ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம் என்பதும் புலனாகிறது. 'விலைவாசி என்னும் விஷயம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏறத்தான் செய்யும். இதில் நகைச்சுவை என்ன வேண்டி கிடக்கிறது?' என்று யாரோ முனகும் குரல் காதில் விழாமல் இல்லை.

கண் கூடாக நாம் காணும் இத்தகு விலைவாசி உயர்வு பொருளாதார நிபுணர்களால் அவ்வளவு எளிதாக அலட்சியப் படுத்திவிடக் கூடிய ஒரு அம்சம் அல்ல. இதை அந்த மேதைகள் 'பணவீக்கம்' என்று பந்தாவாகக் குறிப்பிடுகின்றனர். உலகெங்கும் பெரும்பாலான வல்லுனர்களால் அடிக்கடி விவாதிக்கப்படும் இந்த பணவீக்கம் பற்றி மேலொட்டமாக எடுத்தியம்பும் முயற்சியே இந்தக் கட்டுரை!

பணவீக்க விகிதம் அனைத்து நாடுகளிலும் சதவிகித்தில் (%) குறிப்பிடப் படுகிறது. இவ்வாண்டுப் பணவீக்க விகிதம் 5% என்று மேதாவித்தனமாக யாரேனும் பேசுவார்களேயானால், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பொருட்களின் விலை 5 % அதிகரித்துள்ளது என்பதே அதன் பொருள். உதாரணமாக, பொன வருஷம் ரூ.100 க்கு வாங்கிய ஒரு பொருளை இவ்வாண்டு வாங்க ரூ. 105 செலவிட வேண்டி இருக்கும். நம்மில் எத்தனை பேருக்கு பத்து ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கிய தினங்கள் நினைவிருக்கின்றன? எனில் இப்போது எதற்காக ஐந்து மடங்கு பணம் செலுத்துகிறோம்? 'எனக்கு தெரியும். ஏன்னா பணவீக்கம் அதிகமாயிருச்சு' என ஒலிக்கும் ஓசை கேட்கிறது. உண்மை என்னவென்றால், பணவீக்கம் ஏறியதால் விலை ஏறவில்லை; மாறாக விலை ஏறியதால் தான் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பல அத்தியாவசிய பொருட்களின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொரு வாரமும், சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடப்பட்டு, இந்த வாரத்தின் பணவீக்கம் எந்த அளவில் உள்ளது என நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மகத்தான பணியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செவ்வனே ஆற்றி வருகின்றது.

பணவீக்க விகிதம் ஒரு குறிப்பிட்ட தேசத்தையும் அதன் குடிமக்களையும் எங்கனம் பாதிக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா? சுருக்கமாக அதை சுட்டிக்காட்டாவிடில் இக்கட்டுரை முழுமை பெறாது என்பதில் தெளிவாகவே உள்ளோம்.

பணவீக்கமும் வட்டி விகிதமும்:
மெகா சீரியல் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் பார்த்து உங்கள் மேல் வெறுப்பிலிருக்கும் மனைவியை சமாதானப்படுத்த கலர் டி.வி. வாங்க முடிவு செய்து ஐந்தாறு கடைகளில் விசாரித்து அதன் விலை ரூ.10,000 என அறிகிறீர்கள். இத்தகு தருணத்தில் உயிர் நண்பர் ஒருவர் குடும்பச் சிக்கலின் காரணமாகப் பத்தாயிரம் வேண்டும் என்றும், அதனை ஒரு வருஷத்தில் வட்டியுடன் திருப்பி தருவதாகவும் உறுதி அளிக்கிறார். கலர் டி.வி. வாங்கும் எண்ணத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்து விட்டு (மனைவி சம்மதத்துடன்), நண்பருக்கு உதவ முடிவு செய்கிறீர்கள். அடுத்த ஆண்டு பண வீக்கம் 5% இருக்கும் என எங்கோ படித்தது நினைவு வர, டி.வி. விலை ரூ.10,500 (5 % அதிகம்) உயருமென மதிப்டுகிறீர்கள். பணவீக்கம் காரணமாக இதே பொருளை அடுத்த ஆண்டு வாங்க ரூ.500 கூடுதலாக செலவிட நேரிடும். உங்களுக்கும் பாதகமின்றி, உங்கள் நண்பருக்கும் பாதகமின்றி இருவரும் லாப நஷ்டமின்றி இருக்க, நண்பர் குறைந்தபட்சம் பணவீக்கத்தை ஈடுகட்டும் அளவிற்காவது வட்டி தர வெண்டும் (அதாவது ரூ. 500). பணவீக்கத்தை விட குறைவான வட்டியை நீங்கள் ஒப்புக்கொள்வது நிச்சயம் அறிவார்ந்த செயலாகாது.

இதிலிருந்து வட்டி விகிதம் பணவீக்கத்துடன் எவ்வாறு பயணிக்கிறது என அறிந்தோம். பணவீக்கம் அதிகமானால் வட்டி வீதமும் அதிகரிக்கும்; பணவீக்கம் குறைந்தால் வட்டி வீதமும் குறையும். இது உலக நியதி.

நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் உங்கள் சம்பளம் 2% அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 6% பணவீக்கம் உள்ள ஆண்டில் நிகழ்கிறது. மற்றுமோர் ஆண்டு முதலாளி உங்கள் சம்பளத்தை 2% குறைக்கிறார் (-2% அதிகரிப்பு). இப்போது பணவீக்கம் 0% ஆக உள்ளது. குறிப்பிட்ட இந்த இரண்டு ஆண்டுகளில் எந்த ஆண்டு உங்களை மகிழ்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தும்? மனோதத்துவ ரீதியாக 2% அதிகரிப்பு கிட்டிய ஆண்டு உங்களை மகிழ்ச்சியிலும், 2% சம்பள குறைப்பு சோகத்திலும் ஆழ்த்தியிருக்கும். ஆனால் இதனைச் சற்றே உற்று நோக்கினால் சம்பளம் அதிகரிக்கப்பட்ட ஆண்டு, உங்களிடம் இருந்த பணத்தின் வாங்கும் திறன் (purchasing power) ஊதிய அதிகரிப்பு நிகழாத ஆண்டை விட குறைவாகவே இருந்தது என்னும் உண்மை புலனாகும். கைக்கு வரும் காசு கூடுதலாக இருப்பினும், அதனின் மதிப்பு குறைவாகவே இருக்கும் இந்த நிலையை தான் பொருளாதார நிபுணர்கள் 'பண மாயை' (money illusion) எனக் குறிப்பிடுகின்றனர். 25% பணவீக்கம் இருந்த காலத்தில் வங்கிகள் கொடுத்த 12% வட்டியை குதூகலத்துடன் வாங்கியவர்கள், 6% பணவீக்கம் காலத்தில் 6% வட்டியை கண்டு பின் வாங்குவது ஏன்? சிந்தியுங்கள் தோழர்களே!

பணவீக்கம், வட்டி விகிதம் மற்றும் பங்கு சந்தை:
சமீப ஆண்டுகளில் (3-4) அநேகம் பேர் பங்கு சந்தையில் நுழைந்து தங்கள் திறமையை நிரூபிப்பது மட்டுமின்றி, மிகுந்த பணமும் ஈட்டி வருகின்றனர். மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் (SENSEX) அபார வளர்ச்சியை இந்தக் கால கட்டத்தில் எட்டியிருப்பதும் அனைவரும் அறிந்தது தான். இதற்கு முதன்மையான காரணியாக இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் நிலவி வந்த அடி மாட்டு வட்டி வீதத்தை பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். கடந்த 10 ஆண்டகளாக ஜப்பானின் வட்டி விகிதம் 0 % ஐ விட சற்றே அதிகமான அளவிலியே இருந்தது குறிப்பிடத் தக்கது.

வங்கி வைப்பீட்டு கணக்குகளிலும், கடன் பத்திரங்களிலும் (debt bond) கிடைக்கும் வருமானம் நிலையானது; எந்த விதமான கவலையும் இன்றிக் கிடைக்ககூடியது. Risk free return என்று இதை ஆங்கிலத்தில் அழைக்கலாம். இதற்கு நேர் மாறாக பங்கு சந்தையில் கிடைக்கும் வருவாய் நிலையற்றது. அதே சமயத்தில் வங்கியில் கிடைக்கும் வட்டியை விட பல மடங்கு இதில் கிடைக்கலாம். ஆனால் யாராலும் இதை உறுதியாக கூற இயலாது. உலகெங்கும் மிகக் குறைந்த வட்டி வீதம் இருந்ததை பார்த்தோம் இல்லையா? இந்த சூழ்நிலையில் நிலையான வருமானம் குறைவாக இருந்த காரணத்தால், அதிக வருவாய் கிடைக்க வேண்டி பங்கு சந்தையை நோக்கி தங்கள் பணத்தை உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் திருப்பினர். நிறைய பணம் உள்ளே வர வர SENSEX வளர்ந்து கொண்டு போனதில் வியப்பில்லை.

பணவீக்கமும் அதன் விளைவாக வட்டி விகிதமும் அதிகரிக்கும் ஒரு சூழலில், நிலையான வருவாயும் அதிகரிக்கும். பாதுகாப்பான நிலையான வருவாய் அதிகரிப்பதன் காரணமாக முதலீட்டாளர் சமுதாயம் பங்கு சந்தையில் இருக்கும் பணத்தின் ஒரு பகுதியை கடன் பத்திரங்களில் பொடுவது எதிர்பார்க்க கூடிய செயல் தான். நம்மைப் போன்ற தனி மனிதர்கள் மட்டுமின்றி, பரஸ்பர நிதி (mutual fund) மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் (foreign institutional investors) இதே செயலை பின்பற்றுவார்கள் என எதிர் பார்க்கலாம். அதிகரித்த வட்டி விகிதத்தினால் பங்கு சந்தைக்கு வரும் பணத்தின் அளவு குறையும். இதனால் பங்குகளின் வளர்ச்சி நாம் ஆசைப் படும் அளவு இருக்காது. ஏறுமுகமான பணவீக்கத்தினால் பங்கு சந்தைக்கு நிகழம் பாதிப்பின் ஒரு கோணம் இது.

பல நிறுவனங்கள் தங்கள் தொழிலை நடத்தக் கடன் வாங்கித்தான் காலம் தள்ளுகின்றன. அதிகரித்த வட்டி விகிதத்தினால் நிறுவனங்களின் வட்டிச் சுமை கூடுகிறது. இலாபத்தில் பெரும் பகுதி வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவே சரியாய்ப் போய் விடுவதால், பங்குதாரர்களுக்கு கடைசியில் மிஞ்சுவது குறைகிறது. இவ்வாறு வெளிடப்படும் நிறுவன முடிவுகள் குறைவான 'அலகு பங்கின் வருவாய்' (EPS - Earlings per Share) என்கிற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனாலும் பங்குகளின் விலை குறையலாம். எனவே அதிக கடன் வாங்கிக் காலம் தள்ளும் நிறுவனங்களை அதிக பணவீக்க காலங்களில் தவிர்ப்பது உசிதம்.

முடிவிற்கு வந்துவிட்ட இக்கட்டுரையைப் படித்தவர்களிடம் இனி மேல் யாரும் பணவீக்கம் குறித்து பேசி ஏமாற்ற முடியாத அளவு பொருளாதார துறை அறிமுகம் கிடைத்தால் அதை விட மகிழ்ச்சி எமக்கு இருக்க வாய்ப்பில்லை. அது கூடப் பரவாயில்லை. எவரேனும் 'பணவீக்கம்னா... பணத்தை எங்க மாமா பணத்தை அடிச்சுட்டாரு. அதனால அதுக்கு வீங்கிருச்சு' என்று கடி ஜொக் சொன்னால், அதை ஊக்குவிக்காதீர்.

Thursday, May 16, 2013

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு - இலவசப் பிரதி

'Prabhakaran: The Story of his Struggle for Eelam’என்ற Kindle புத்தகம் மே 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இலசவமாகக் கிடைக்கிறது.

The special FREE offer will start at 17-May-2013 12:00 am PST to 18-May-2013 11:29 pm PST.
In other time zones:
Singapore Time:  17-May-2013 03:00 pm to 19-May-2013 2:59 pm
Indian Standard Time: 17-May-2013 12:30 pm to 19-May-2013 12:29 pm
Central European Time: 17-May-2013 09:00 am to 19-May-2013 08:59 am
UK time: 17-May-2013 08:00 am to 19-May-2013 07:59 am
East Coast Time: 17-May-2013 03:00 am to 19-May-2013 02:59 am

(preview version of Prabhakaran biography in pdf format)

Saturday, May 11, 2013

The Science of Stock Market Investment இலவச மின்னூல் Download


The Science of Stock Market Investment இலவச மின்னூல் Download

The Science ofStock Market Investment - Practical Guide to Intelligent Investors ஷேர் மார்க்கெட் புத்தகத்தை மே 15 ஆம் தேதியன்று இலசவமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The special FREE offer will be on 15-May-2013 12:00 am PST to 15-May-2013 11:29 pm PST.
In other time zones:
Singapore Time >  15-May-2013 03:00 pm onwards
Indian Standard Time > 15-May-2013 12:30 pm onwards
Central European Time > 15-May-2013 09:00 am onwards
UK time > 15-May-2013 08:00 am onwards
East Cost Time > 15-May-2013 03:00 am onwards

Note: The free download may be applicable for Kindle owners

Thursday, May 09, 2013

தமிழ் செக்ஸ் கதைகள்

தமிழ் செத்துக்கொண்டிருக்கும் ஒரு மொழி. அதிலெதையாவது எழுதுவதும், நாலு பேரையாவது அதை வாசிக்க வைப்பதும் பாராட்டுக்குரிய செயல். அது பத்து வரி படித்தவுடன் கண்ணைக் கட்டும் கடின இலக்கியமாக இருந்தாலும் சரி, சும்மா டைம் பாஸாக போகிற போக்கில் வாசித்துக் கடந்து போகும் எழுத்தாக இருந்தாலும் சரி, இல்லை கில்மா எழுத்தாக இருந்தாலும் சரிஆனால் எழுத்தாளர்களுக்கு போதுமான அங்கீகாரமும், வெகுமானமும் கிடைப்பதில்லை என்ற குறையும், குற்றச்சாட்டும் இங்கே நீண்ட காலமாக நிலவுகிறது. 

இதைப் பற்றி தமிழ் எழுத்தாளன் என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு குறிப்பு:
//ஒரு வகையில் சொன்னால் தமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளனுக்குக் கிட்டும் சன்மானம் பொருளாதார ரீதியாம அமைவதை விட சமூக அங்கீகாரம் மூலமாகவே கூடுதலாகக் கிடைக்கிறது. பல நேரங்களில் சமூக அங்கீகாரமும், சில தருணங்களில் ரசிகைகளின் நெருக்கமும் அந்தக் காயத்திற்குக் களிம்பு பூசுகின்றன. வெறும் பொருளாதார அனுகூலம் என்ற காரணி அவனது உழைப்பை ஈடு செய்வதாக இல்லை. முழு நேர எழுத்தாளனாக இருக்க முயல்வதின் முட்டாள்தனத்தையும், எழுத்தின் மீது அந்த நபருக்கு இருக்கும் தீராத காதலையுமே அது வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்துகிறது.//

இந்த சப்ஜக்டை எடுத்தாலே இணையத்தில் பரவலாகப் புழங்குகிற எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சாரு நிவேதிதா. சாரு தனது வெப்சைட்டில் ICICI bank அக்கவுண்ட் நம்பரையெல்லாம் கொடுத்து காசு அனுப்பச் சொல்லிக் கேட்டிருப்பார்.

எனது புத்தகத்தை யாரும் வாசிப்பதில்லை என்று புலம்புவார். புத்தகத் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் எழுதிய இலட்சக் கணக்கான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் என் புத்தகத்தை நீ ஏன் வாங்கவில்லை, வாங்கி வாசிக்கவில்லை, வாசித்து சாருஆன்லைனில் விமர்சனம் எழுதவில்லை என யாரும் கேட்டதாத் தெரியவில்லை.

தான் எழுதுவது மட்டுந்தான் இலக்கியம், மற்றதெல்லாம் குப்பை என்கிற நினைப்பு சில எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அவர்கள் நினைப்பது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதற்காக காசு கொடுத்து வாங்கி சாருவை கோடீஸ்வரன் ஆக்க வேண்டும் என்றோ, ஏ.கே.செட்டியார் அமெரிக்காவில் பார்த்த ஊர்களையெல்லாம் பார்க்க வைக்க வேண்டும் என்றோ, சிட்டி செண்டரில் அவர் பிட்சா சாப்பிடவும், மிருதுவாக இருக்கிற எலாஸ்டிக் ஜட்டி வாங்கவும் பணம் அனுப்ப வேண்டும் என்றோ அவசியம் இல்லை.

இத்தனை நாள் தனது இணைய தளத்திலும், தமிழ் இதழ்களிலும் புலம்பிக்கொண்டிருந்த சாரு அண்மையில் ஆங்கிலத்திலும் புலம்பியிருக்கிறார்.

எழுதுவது பணத்துக்காகத்தான் என்றால் இப்படியெல்லாம் புலம்ப வேண்டிய அவசியம் இல்லை. கக்கூஸ் கழுவுவதைப் போல, பஸ் கண்டெக்டராக இருப்பதைப் போல, கால் செண்டரில் வேலை செய்வதைப் போல இதுவும் ஒரு தொழில். அதில் போதுமான வருமானம் இல்லையெனில் வேறு வேலைக்குப் போகலாம்.
அப்படியெல்லாம் இல்லை, நான் சமூகத்தை மேம்படுத்தத்தான் எழுதுகிறேன். மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லி நல்வழிப்படுத்தவே எழுத்தாளனாக என்னை அர்ப்பணித்துள்ளேன் என்றால் காசைப் பற்றி வாய் திறக்கவே கூடாது.
//எழுதுவதெல்லாம் பணம் சம்பாதிக்கத்தான் என்றால் அதற்கு வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எதற்காக எழுத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?  ஒருவன் எழுதவில்லையென்றால் யாருமே தூக்கு போட்டு சாகப் போவதில்லை, ஒருவனும் தீக்குளிக்க போவதில்லை, அதிகபட்சமாகஏன் எழுதுவதை குறைத்துக் கொண்டீர்கள்என கேட்பார்கள். அதற்கும் பதிலை எதிர்பார்க்க மாட்டார்கள். என்ன பதிலைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள். அவ்வளவுதான்.

மாறாக, எழுதினால்தான் டென்ஷன் ஆவார்கள். நான்கு வருடமாக வலைப்பதிவு வைத்திருப்பவர்களெல்லாம் பெரிய ரைட்டர் ஆகி அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். பூனை குட்டி போடுவது போல எழுதுகிறான்; புலி ஆய் போவது போல எழுதுகிறான் என்பார்கள். அடுத்தவன் காலில் விழுந்தோ கையைப் பிடித்தோ வாரப்பத்திரிக்கையில் தொடர் எழுதுபவர்களெல்லாம் உன் ஹேர்ஸ்டைல் சரியில்லை என்று அலம்பல் செய்வார்கள். (இங்கு ஹேர்ஸ்டைல் என்ற சொல்லை நாகரீகம் கருதி பயன்படுத்தியிருக்கிறேன்). எழுதுவதையும் எழுதிவிட்டு இந்த ஆட்கள் பேசுவதையும் கேட்டுத் தொலைக்க வேண்டும்.

சாரு எழுத ஆரம்பித்த போது நான் பிறந்திருக்க கூட மாட்டேன். ஆனால் கலாய்த்துக் கொண்டு திரிகிறேன். இப்படித்தான் எழுதுவதற்கு பணமும் கிடைப்பதில்லை, ஆளாளுக்கு லோலாயமும் செய்கிறார்கள். பிறகு எதற்கு சார் எழுத வேண்டும்?//

அடுத்த முறை ஏதாவது மலையாள பேப்பரில் போய், ’எனக்கு தமிழ் நாட்டில் காசு கிடைப்பதில்லை’ என்று புலம்பாதீர்கள். நிஜமாகவே வறுமையில் வாடும் எழுத்தாளர்களும், உங்களை விட நன்றாக எழுதும் ஆட்களும் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்.

தமிழ் வாசகர்களை இன்றைக்கு வாசிக்க வைத்துக்கொண்டிருப்பதில் இணைய தளங்களுக்கு பெரும் பங்கு உண்டு.  நீங்கள் நிஜமாகவே தமிழுக்கும், தமிழர்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் தமிழ் விக்கிபீடியாவில் பல கட்டுரைகளைத் தொகுத்து உதவுங்கள். உங்களுக்கு எவன் சரக்கு வாங்கி ஊற்றுகிறானோ அவனைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல், தமிழில் வரும் (உண்மையிலேயே) சிறந்த படைப்புகளை வாரம் ஒன்றாக வாரம் ஒன்றாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

இல்லையெனில் ஒரு கில்மா வைப்சைட் ஆரம்பித்து தமிழ் செக்ஸ் கதைகளை எழுதுங்கள். அண்ணி செக்ஸ் கதை, சித்தியுடன் தகாத உறவு, ஆபீஸ் செக்ஸ், கல்லூரியில் காமம், அத்தையுடன் ஆட்டம், மனைவியான மாணவி, முதலாளியம்மாவின்முனகல் என எழுதுவதில் உங்களுக்குச் சிரமம் இருக்காது. 

Wednesday, May 08, 2013

ஷேர் மார்க்கெட் மற்றும் வாரன் பஃபட் புத்தகம் அதிரடி தள்ளுபடி

எனது கீழ்க்கண்ட Kindle புத்தகங்களின் விலை அதிரடியாக $1.78 ஆக, அதாவது ரூ 99 க்கும் குறைவாக இப்போது கிடைக்கிறது.


The Science of Stock Market Investment - Practical Guide to Intelligent InvestorsWarren Buffett - an Investography

Saturday, May 04, 2013

சுஜாதா விருதுகள்


திரும்பத் திரும்ப எழுதுவதைக் காட்டிலும் சிறந்த பயிற்சி ஒரு எழுத்தாளனுக்கு இருக்க முடியாது.

மாதம் சராசரியாக 20-25 பதிவுகளை எழுதிக் குவித்து, சுஜாதா விருது வாங்கியிருக்கும் வா.மணிகண்டனுக்கும், அவரது நிசப்தம் இணைய தளத்துக்கும் வாழ்த்துக்கள்.

சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் வாய்ப் பழக்கம்.
தொடர்ந்து எழுதுங்கள் மணி.

வருமான வரி சேமிப்பு

மல்லிகை மகள் ஏப்ரல் 2013 இதழுக்கு எழுதியது
இரண்டு விஷயங்களைத் தவிர்க்க முடியாது - வேண்டுமானால் தள்ளிப் போடலாம் - என்று சொல்வார்கள். ஒன்று மரணம். இன்னொன்று வரி. முறையான வருமானம் என்ற ஒன்றிருந்தால் வருமான வரி இருக்கத்தான் செய்யும். இதை நாம் மாற்றவே முடியாது.

பர்சனல் ஃபைனான்ஸ் என்றாலே அதில் குறிப்பாகக் கவனிக்கப்படும் விஷயம், கூடுதலாக விவாதிக்கப்படும் விஷயம் வருமான வரியை எப்படிக் குறைப்பது என்பது குறித்துத்தான் இருக்கும்.

பெரும்பாலும் நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் பரவலாக விவாதிக்கப்படும் விஷயம் இது. நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி, இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருக்கும் ஒன்று விட்ட சித்தப்பாவின் மருமகள், சக ஊழியர்கள், வாக்கிங் போகும் போது கூட வரும் அக்கா என அத்தனை பேரும், ”டாக்ஸ் பிளானிங் பண்ணிட்டீங்களா?” என சொல்லி வைத்தாற்போல டிசம்பரில் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

வருமான வரியைக் குறைப்பதற்காக செய்யப்படும் முதலீடுகள் மிகவும் பிரபலமானவை. இன்றைய கால கட்டத்தில் பல முதலீட்டு உபகரணங்கள் வந்துள்ளன. ஆனால் பல வருடமாக நமக்குத் தெரிந்தது இன்சூரன்ஸ் மட்டுமே. நம் அனைவர் நாவிலும் புரளும் ஒரு சொல் இன்சூரன்ஸ். அதே நேரத்தில் மிகக் குறைவாக புரிந்துகொள்ளப்படும் ஒரு சங்கதி இன்சூரன்ஸ்.

எனக்கு இன்சூரன்ஸ் துறையில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். தொழில் முறையான சில தொடர்புகளும் உண்டு. இதை எழுதுவதற்காக என் மீது அவர்கள் வருத்தப்படக் கூடும். எனினும் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வில் முக்கியமான அம்சம் எனப்தால் இதைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

நீங்கள் ஜனவரி முதல் வாரம் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்டைப் பார்க்கிறீர்கள். கீழ்க்கண்ட உரையாடல் நிகழ்கிறது.

”சார் இன்கம் டாக்ஸ் இன்வெஸ்ட்மெண்ட் செய்யணும். என்ன பிளான் இருக்கு சொல்லுங்க”

“அப்டிக்கா ஜீவன் அப்படீன்னு ஒரு புது பிளான் இருக்கும் மேடம். ரொம்ப நல்ல பிளான். உங்களுக்கு எவ்வளவு மேடம் இன்வென்ஸ்ட் செய்யணும்”

“ஆபீஸ்ல 45 ஆயிரம் முதலீடு பண்ணனும்னு சொல்றாங்க”

“நல்லது மேடம். வருசம் 45 ஆயிரம் கட்டுங்க மேடம். 16 வருஷம் கட்டணும். கடைசில நீங்க கட்டின பணம் சுமார் 7.2 இலட்சம், அப்புறம் ஒரு ஏழரை இலட்சம் மொத்தம் சுமார் 15 லட்சம் திரும்பக் கிடைக்கும்.”

“ஓ..”

“இடையில உங்களுக்கு எதாவது ஆச்சுன்னா உங்க ஃபேமிலிக்கு 5 இலட்சம் கிடைக்கும். இன்னிக்கு 45 ஆயிரம் கட்டினா நாளையிலிருந்தே உங்களுக்கு இன்சூரன்ஸ் கவர் ஆரம்பிச்சிரும்”

”சரி சார். எங்கே சைன் பண்ணனும்? செக் என்ன பேருக்கு எழுதணும்?”

இப்படித்தான் வருமான வரிக்காகச் செய்யப்படும் முதலீடுகள் பெரும்பாலும் அமைகின்றன.
இன்சூரன்ஸ் என்பது எதிர்பாராத அசம்பாவிதம் எதாவது நிகழ்ந்தால் நமது குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாகி விடக்கூடாது என்பதற்காகச் செய்யும் ஒரு ஏற்பாடு. குடும்பத்தில் முதன்மையான வருமானம் ஈட்டும் நபருக்கு போதுமான அளவுக்கு இன்சூரன்ஸ் இருப்பது அவசியம்.

உங்கள் கணவரின் ஆண்டு வருமானம் சுமார் ஐந்து இலட்ச ரூபாய் என வைத்துக்கொள்வோம். ஒரு வேளை எதிர்பாராமல் அவர் இறக்க நேர்ந்தால் ஐந்து இலட்ச ரூபாய் வருமானம் அப்படியே நின்று போகும். உங்களால் அதே அளவு வாழ்க்கைத் தரத்தைப் பேண முடியாது. பணக்கார வீட்டுக் குழந்தைகள் படிக்கும் ஸ்கூலில் உங்கள் மகன் தொடர முடியாமல் போகலாம்.

அதே வாழ்க்கைத் தரத்தைப் பேண வேண்டுமானால் உங்கள் கணவரின் வருமானம் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்காவது வர வேண்டும். அதாவது 25 இலட்ச ரூபாயாவது அவர் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் 5 இலட்ச ரூபாய்க்கு இன்சூர் செய்வதற்கே 45 ஆயிரம் பிரீமியம் கேட்கும் உலகம் 25 இலட்சம் காப்பீட்டிற்கு இரண்டே கால் இலட்சம் பிரீமியம் கேட்குமே ! சம்பாதிக்கிற ஐந்து இலட்சத்தில் இரண்டே கால் இலட்சம் இன்சூரன்ஸுக்கே போனால் குடும்பத்தை எப்படி ஓட்டுவது என்ற குழப்பம் வரலாம்.

ஆனால் உண்மை அதுவல்ல. சொல்லப் போனால் வருடம் ஐயாயிரம் பிரீமியம் கட்டினாலே 25 இலட்சம் காப்பீடு கிடைக்கும் (இது காப்பீடு எடுப்பவரின் வயதுக்கு ஏற்ப மாறும்). அப்படி நிறைய பிளான்கள் உள்ளன. அவை டெர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள் எனப்படுகின்றன.

வழக்கமான இன்சூரன்ஸ் திட்டங்களில் வருடா வருடம் பணம் கட்டுவோம். இழப்பு நேர்ந்தால் இழப்பீட்டுத் தொகை குடும்பத்திற்குக் கிடைக்கும். திட்டம் முடியும் வரை எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்றால் முடிவில் ஒரு தொகையைத் தருவார்கள். இது மெசூரிட்டி தொகை எனப்படுகிறது.

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் அப்படியல்ல. இது கார் இன்சூரன்ஸ் மாதிரி. பிரீமியம் கட்டுவோம். கார் விபத்து நடந்தால் இன்சூரன்ஸ் கம்பெனியே பார்த்துக்கொள்வார்கள். இல்லையென்றால் பிரீமியம் தொகை இன்சூரன்ஸ் கம்பெனிக்கு. டெர்ம் இன்சூரன்ஸிலும் கட்டும் பிரீமியம் திரும்பக் கிடைக்காது. மரணம் ஏற்பட்டால் மட்டும் குடும்பத்திற்குப் பணம்
கொடுப்பார்கள்.

கட்டும் பணம் திரும்பக் கிடைக்காதென்றால் எதற்காக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என சிறு பிள்ளைத்தனமாக நினைக்காமல் இதை அணுக வேண்டும். வெறும் 5 இலட்ச ரூபாய் காருக்கே வருடம் 10-12 ஆயிரம் பிரீமியம் கட்டுகிறோம். விலை மதிப்பற்ற குடும்பத் தலைவரின் உயிருக்காக இந்தத் தொகையைச் செலுத்துவதில் ஒன்றும் தவறில்லை.

25 இலட்சம் காப்பீட்டிற்கு ரூ 2,25,000 கட்டுவதற்குப் பதில் அதில் பத்தாயிரத்தை மட்டும் இன்சூரன்ஸுக்கு ஒதுக்கி விட்டு மிச்சத்தை வேறு எதற்காவது முதலீடு செய்யலாம், அல்லது அத்தியாவசியமான தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். அதுதான் புத்திசாலித்தனம்.

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் மிகவும் பயனுள்ளவை. ஆனால் இவற்றை எடுக்கும் ஆட்கள் மிகவும் குறைவு. பத்தில் ஒன்பது பேருக்கு டெர்ம் திட்டங்கள் இருப்பதே தெரியாது. பணத்தை மதிப்பை முழுமையாக உணர்ந்தவர்கள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கொண்டவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.

மக்களுக்கு இத்தகைய திட்டங்கள் ஏன் தெரிவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது சுயநலம் சார்ந்தது. டெர்ம் திட்டங்களில் பிளான் எடுப்பவருக்கும், அவரது குடும்பத்திற்கும் தவிர வேறு யாருக்கும் பயன் கிடையாது. மற்ற திட்டங்களோடு ஒப்பிடும் போது இன்சூரன்ஸ் ஏஜெண்ட், இன்சூரன்ஸ் கம்பெனி என யாருமே டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களால் பயனடைவதில்லை.

எனவே இத்தகைய திட்டங்கள் மார்க்கெட் செய்யப்படுவதேயில்லை. இரண்டே கால் இலட்சம் பிரீமியம் சேகரிக்கும் ஏஜெண்டுக்கு கமிஷன் அதிகமாகக் கிடைக்குமா, வெறும் பத்தாயிரம் பிரீமியம் சேகரிக்கும் ஏஜெண்டுக்கு கமிஷன் அதிகமாகக் கிடைக்குமா என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. அதே போல இன்சூரன்ஸ் கம்பெனியைப் பொறுத்த வரை ஒரு மனிதன் இறக்கும் போது 25 இலட்சம் கொடுக்க வேண்டும். அதற்கு இரண்டே கால் இலட்சம் பிரீமியம் உகந்ததா அல்லது வெறும் பத்தாயிரம் உகந்ததா என்பதையும் யூகிக்க முடிகிறது.

அதனால், இன்னொரு முறை நமக்கு என்ன திட்டம் வேண்டும் என்பதை இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் அல்லது முதலீட்டு ஆலோசகர்கள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. இன்சூரன்ஸ் ஏஜெண்ட் தனக்கு எந்தத் திட்டத்தில் அதிகமான கமிஷன் கிடைக்குமோ அதை நம்மிடம் விற்பதற்குத்தான் முயற்சிப்பார். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.

ஒரு நபரின் மற்றும் குடும்பத்தின் பல வகையான இன்சூரன்ஸ் தேவைகளை இன்னொரு இதழில் காண்போம். அதே போல எப்படிப்பட்ட முதலீட்டு ஆலோசகரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசுவோம். இந்த அத்தியாயத்தின் நோக்கம் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி அறிமுகம் செய்வதுதான்.

அதிலும் குறிப்பாக இப்போது புதிய நிதியாண்டில் நுழைகிறோம். இப்போதே வருமான வரியைச் சமாளிப்பதற்குச் செய்ய வேண்டிய முதலீடுகளைத் திட்டமிடுவது நல்லது. கடைசி நிமிடத்தில் அடுத்த ஜனவரி மாதம் உங்கள் அலுவலக அக்கவுண்ட் டிபார்ட்மெண்ட் கொடுக்கும் கெடுவுக்குள் ஏனோதானோவென்று ஏதாவது திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க இது உதவும்.

தொடர்ந்து பேசுவோம்.