Saturday, May 04, 2013

வருமான வரி சேமிப்பு

மல்லிகை மகள் ஏப்ரல் 2013 இதழுக்கு எழுதியது
இரண்டு விஷயங்களைத் தவிர்க்க முடியாது - வேண்டுமானால் தள்ளிப் போடலாம் - என்று சொல்வார்கள். ஒன்று மரணம். இன்னொன்று வரி. முறையான வருமானம் என்ற ஒன்றிருந்தால் வருமான வரி இருக்கத்தான் செய்யும். இதை நாம் மாற்றவே முடியாது.

பர்சனல் ஃபைனான்ஸ் என்றாலே அதில் குறிப்பாகக் கவனிக்கப்படும் விஷயம், கூடுதலாக விவாதிக்கப்படும் விஷயம் வருமான வரியை எப்படிக் குறைப்பது என்பது குறித்துத்தான் இருக்கும்.

பெரும்பாலும் நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் பரவலாக விவாதிக்கப்படும் விஷயம் இது. நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி, இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருக்கும் ஒன்று விட்ட சித்தப்பாவின் மருமகள், சக ஊழியர்கள், வாக்கிங் போகும் போது கூட வரும் அக்கா என அத்தனை பேரும், ”டாக்ஸ் பிளானிங் பண்ணிட்டீங்களா?” என சொல்லி வைத்தாற்போல டிசம்பரில் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

வருமான வரியைக் குறைப்பதற்காக செய்யப்படும் முதலீடுகள் மிகவும் பிரபலமானவை. இன்றைய கால கட்டத்தில் பல முதலீட்டு உபகரணங்கள் வந்துள்ளன. ஆனால் பல வருடமாக நமக்குத் தெரிந்தது இன்சூரன்ஸ் மட்டுமே. நம் அனைவர் நாவிலும் புரளும் ஒரு சொல் இன்சூரன்ஸ். அதே நேரத்தில் மிகக் குறைவாக புரிந்துகொள்ளப்படும் ஒரு சங்கதி இன்சூரன்ஸ்.

எனக்கு இன்சூரன்ஸ் துறையில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். தொழில் முறையான சில தொடர்புகளும் உண்டு. இதை எழுதுவதற்காக என் மீது அவர்கள் வருத்தப்படக் கூடும். எனினும் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வில் முக்கியமான அம்சம் எனப்தால் இதைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

நீங்கள் ஜனவரி முதல் வாரம் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்டைப் பார்க்கிறீர்கள். கீழ்க்கண்ட உரையாடல் நிகழ்கிறது.

”சார் இன்கம் டாக்ஸ் இன்வெஸ்ட்மெண்ட் செய்யணும். என்ன பிளான் இருக்கு சொல்லுங்க”

“அப்டிக்கா ஜீவன் அப்படீன்னு ஒரு புது பிளான் இருக்கும் மேடம். ரொம்ப நல்ல பிளான். உங்களுக்கு எவ்வளவு மேடம் இன்வென்ஸ்ட் செய்யணும்”

“ஆபீஸ்ல 45 ஆயிரம் முதலீடு பண்ணனும்னு சொல்றாங்க”

“நல்லது மேடம். வருசம் 45 ஆயிரம் கட்டுங்க மேடம். 16 வருஷம் கட்டணும். கடைசில நீங்க கட்டின பணம் சுமார் 7.2 இலட்சம், அப்புறம் ஒரு ஏழரை இலட்சம் மொத்தம் சுமார் 15 லட்சம் திரும்பக் கிடைக்கும்.”

“ஓ..”

“இடையில உங்களுக்கு எதாவது ஆச்சுன்னா உங்க ஃபேமிலிக்கு 5 இலட்சம் கிடைக்கும். இன்னிக்கு 45 ஆயிரம் கட்டினா நாளையிலிருந்தே உங்களுக்கு இன்சூரன்ஸ் கவர் ஆரம்பிச்சிரும்”

”சரி சார். எங்கே சைன் பண்ணனும்? செக் என்ன பேருக்கு எழுதணும்?”

இப்படித்தான் வருமான வரிக்காகச் செய்யப்படும் முதலீடுகள் பெரும்பாலும் அமைகின்றன.
இன்சூரன்ஸ் என்பது எதிர்பாராத அசம்பாவிதம் எதாவது நிகழ்ந்தால் நமது குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாகி விடக்கூடாது என்பதற்காகச் செய்யும் ஒரு ஏற்பாடு. குடும்பத்தில் முதன்மையான வருமானம் ஈட்டும் நபருக்கு போதுமான அளவுக்கு இன்சூரன்ஸ் இருப்பது அவசியம்.

உங்கள் கணவரின் ஆண்டு வருமானம் சுமார் ஐந்து இலட்ச ரூபாய் என வைத்துக்கொள்வோம். ஒரு வேளை எதிர்பாராமல் அவர் இறக்க நேர்ந்தால் ஐந்து இலட்ச ரூபாய் வருமானம் அப்படியே நின்று போகும். உங்களால் அதே அளவு வாழ்க்கைத் தரத்தைப் பேண முடியாது. பணக்கார வீட்டுக் குழந்தைகள் படிக்கும் ஸ்கூலில் உங்கள் மகன் தொடர முடியாமல் போகலாம்.

அதே வாழ்க்கைத் தரத்தைப் பேண வேண்டுமானால் உங்கள் கணவரின் வருமானம் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்காவது வர வேண்டும். அதாவது 25 இலட்ச ரூபாயாவது அவர் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் 5 இலட்ச ரூபாய்க்கு இன்சூர் செய்வதற்கே 45 ஆயிரம் பிரீமியம் கேட்கும் உலகம் 25 இலட்சம் காப்பீட்டிற்கு இரண்டே கால் இலட்சம் பிரீமியம் கேட்குமே ! சம்பாதிக்கிற ஐந்து இலட்சத்தில் இரண்டே கால் இலட்சம் இன்சூரன்ஸுக்கே போனால் குடும்பத்தை எப்படி ஓட்டுவது என்ற குழப்பம் வரலாம்.

ஆனால் உண்மை அதுவல்ல. சொல்லப் போனால் வருடம் ஐயாயிரம் பிரீமியம் கட்டினாலே 25 இலட்சம் காப்பீடு கிடைக்கும் (இது காப்பீடு எடுப்பவரின் வயதுக்கு ஏற்ப மாறும்). அப்படி நிறைய பிளான்கள் உள்ளன. அவை டெர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள் எனப்படுகின்றன.

வழக்கமான இன்சூரன்ஸ் திட்டங்களில் வருடா வருடம் பணம் கட்டுவோம். இழப்பு நேர்ந்தால் இழப்பீட்டுத் தொகை குடும்பத்திற்குக் கிடைக்கும். திட்டம் முடியும் வரை எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்றால் முடிவில் ஒரு தொகையைத் தருவார்கள். இது மெசூரிட்டி தொகை எனப்படுகிறது.

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் அப்படியல்ல. இது கார் இன்சூரன்ஸ் மாதிரி. பிரீமியம் கட்டுவோம். கார் விபத்து நடந்தால் இன்சூரன்ஸ் கம்பெனியே பார்த்துக்கொள்வார்கள். இல்லையென்றால் பிரீமியம் தொகை இன்சூரன்ஸ் கம்பெனிக்கு. டெர்ம் இன்சூரன்ஸிலும் கட்டும் பிரீமியம் திரும்பக் கிடைக்காது. மரணம் ஏற்பட்டால் மட்டும் குடும்பத்திற்குப் பணம்
கொடுப்பார்கள்.

கட்டும் பணம் திரும்பக் கிடைக்காதென்றால் எதற்காக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என சிறு பிள்ளைத்தனமாக நினைக்காமல் இதை அணுக வேண்டும். வெறும் 5 இலட்ச ரூபாய் காருக்கே வருடம் 10-12 ஆயிரம் பிரீமியம் கட்டுகிறோம். விலை மதிப்பற்ற குடும்பத் தலைவரின் உயிருக்காக இந்தத் தொகையைச் செலுத்துவதில் ஒன்றும் தவறில்லை.

25 இலட்சம் காப்பீட்டிற்கு ரூ 2,25,000 கட்டுவதற்குப் பதில் அதில் பத்தாயிரத்தை மட்டும் இன்சூரன்ஸுக்கு ஒதுக்கி விட்டு மிச்சத்தை வேறு எதற்காவது முதலீடு செய்யலாம், அல்லது அத்தியாவசியமான தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். அதுதான் புத்திசாலித்தனம்.

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் மிகவும் பயனுள்ளவை. ஆனால் இவற்றை எடுக்கும் ஆட்கள் மிகவும் குறைவு. பத்தில் ஒன்பது பேருக்கு டெர்ம் திட்டங்கள் இருப்பதே தெரியாது. பணத்தை மதிப்பை முழுமையாக உணர்ந்தவர்கள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கொண்டவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.

மக்களுக்கு இத்தகைய திட்டங்கள் ஏன் தெரிவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது சுயநலம் சார்ந்தது. டெர்ம் திட்டங்களில் பிளான் எடுப்பவருக்கும், அவரது குடும்பத்திற்கும் தவிர வேறு யாருக்கும் பயன் கிடையாது. மற்ற திட்டங்களோடு ஒப்பிடும் போது இன்சூரன்ஸ் ஏஜெண்ட், இன்சூரன்ஸ் கம்பெனி என யாருமே டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களால் பயனடைவதில்லை.

எனவே இத்தகைய திட்டங்கள் மார்க்கெட் செய்யப்படுவதேயில்லை. இரண்டே கால் இலட்சம் பிரீமியம் சேகரிக்கும் ஏஜெண்டுக்கு கமிஷன் அதிகமாகக் கிடைக்குமா, வெறும் பத்தாயிரம் பிரீமியம் சேகரிக்கும் ஏஜெண்டுக்கு கமிஷன் அதிகமாகக் கிடைக்குமா என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. அதே போல இன்சூரன்ஸ் கம்பெனியைப் பொறுத்த வரை ஒரு மனிதன் இறக்கும் போது 25 இலட்சம் கொடுக்க வேண்டும். அதற்கு இரண்டே கால் இலட்சம் பிரீமியம் உகந்ததா அல்லது வெறும் பத்தாயிரம் உகந்ததா என்பதையும் யூகிக்க முடிகிறது.

அதனால், இன்னொரு முறை நமக்கு என்ன திட்டம் வேண்டும் என்பதை இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் அல்லது முதலீட்டு ஆலோசகர்கள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. இன்சூரன்ஸ் ஏஜெண்ட் தனக்கு எந்தத் திட்டத்தில் அதிகமான கமிஷன் கிடைக்குமோ அதை நம்மிடம் விற்பதற்குத்தான் முயற்சிப்பார். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.

ஒரு நபரின் மற்றும் குடும்பத்தின் பல வகையான இன்சூரன்ஸ் தேவைகளை இன்னொரு இதழில் காண்போம். அதே போல எப்படிப்பட்ட முதலீட்டு ஆலோசகரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசுவோம். இந்த அத்தியாயத்தின் நோக்கம் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி அறிமுகம் செய்வதுதான்.

அதிலும் குறிப்பாக இப்போது புதிய நிதியாண்டில் நுழைகிறோம். இப்போதே வருமான வரியைச் சமாளிப்பதற்குச் செய்ய வேண்டிய முதலீடுகளைத் திட்டமிடுவது நல்லது. கடைசி நிமிடத்தில் அடுத்த ஜனவரி மாதம் உங்கள் அலுவலக அக்கவுண்ட் டிபார்ட்மெண்ட் கொடுக்கும் கெடுவுக்குள் ஏனோதானோவென்று ஏதாவது திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க இது உதவும்.

தொடர்ந்து பேசுவோம்.

1 comment:

perumal karur said...

நேர்மையான பதிவு

டேர்ம் இன்சூரன்ஸ் என்று ஒன்று இருப்பதே முந்தைய எதோ ஒரு பதிவில் நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும்