Friday, May 31, 2013

விண்ணை முட்டும் விலைவாசி

இந்தியாவின் ஆளும் வர்க்கம் மொத்த விலைக் குறியீட்டின் (Wholesale Price Index - WPI) அடிப்படையில் பணவீக்கத்தைக் குறிக்கிறார்கள். இது உணவு சாராத உற்பத்திப் பொருட்களின் அடிப்படையில் நிர்ணயம் ஆகிறது. உண்மையில் மக்களைப் பாதிப்பது சில்லறை விலைக் குறியீடு (Consumer Price Index CPI) தானே தவிர WPI அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் அல்ல. பணவீக்கம் குறைகிறது என்று செய்திகள் சொன்னாலும் அதை நாம் நம்ப முடியாமல் இருப்பதற்குக் காரணம் இதுவே.

முன்னேறிய மேலை நாடுகளில் நுகர்வோர் விலைவாசியே பிரதாரனக் காரணியாக இருக்கிறது. இந்தியாவில் அப்படியொரு நாள் வருமா தெரியவில்லை.

பணவீக்கம் தொடர்பாக முன்பொரு காலத்தில் 2006 இல் எழுதிய கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறேன்.
******

"இந்தியர்கள் வலிமையுள்ளவர்களாக மாறி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ரூ.200 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை தூக்கி வர இரண்டு திடகாத்திரமான வாலிபர்களைத் தேட வேண்டி இருந்தது. ஆனால், இன்றோ 5 வயது சிறுவன் அதே இருநூறு மதிப்புள்ள பொருட்களை தூக்கி வர இயல்கிறது."

மேற்கூறிய துணுக்கிலிருந்து நாம் அறிவது என்ன? காலப்போக்கில் நாமும் நம் சந்ததியினரும் உடல் வலிமையில் மெருகேறியிருக்கிறோமா? அல்லது யாரின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் விலைவாசி விண்ணை நோக்கி நகர்கிறதா? அல்லது யாரோ தங்களுடைய நகைச்சுவை உணர்ச்சியை வெளிப்படுத்தும் முயற்சியில் வெளியிட்ட துணுக்கா? சற்றே யோசித்து பார்க்கும் பொது நகைச்சுவை இல்லை என்பதை உணர்வதோடு மட்டும் இல்லாது ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம் என்பதும் புலனாகிறது. 'விலைவாசி என்னும் விஷயம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏறத்தான் செய்யும். இதில் நகைச்சுவை என்ன வேண்டி கிடக்கிறது?' என்று யாரோ முனகும் குரல் காதில் விழாமல் இல்லை.

கண் கூடாக நாம் காணும் இத்தகு விலைவாசி உயர்வு பொருளாதார நிபுணர்களால் அவ்வளவு எளிதாக அலட்சியப் படுத்திவிடக் கூடிய ஒரு அம்சம் அல்ல. இதை அந்த மேதைகள் 'பணவீக்கம்' என்று பந்தாவாகக் குறிப்பிடுகின்றனர். உலகெங்கும் பெரும்பாலான வல்லுனர்களால் அடிக்கடி விவாதிக்கப்படும் இந்த பணவீக்கம் பற்றி மேலொட்டமாக எடுத்தியம்பும் முயற்சியே இந்தக் கட்டுரை!

பணவீக்க விகிதம் அனைத்து நாடுகளிலும் சதவிகித்தில் (%) குறிப்பிடப் படுகிறது. இவ்வாண்டுப் பணவீக்க விகிதம் 5% என்று மேதாவித்தனமாக யாரேனும் பேசுவார்களேயானால், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பொருட்களின் விலை 5 % அதிகரித்துள்ளது என்பதே அதன் பொருள். உதாரணமாக, பொன வருஷம் ரூ.100 க்கு வாங்கிய ஒரு பொருளை இவ்வாண்டு வாங்க ரூ. 105 செலவிட வேண்டி இருக்கும். நம்மில் எத்தனை பேருக்கு பத்து ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கிய தினங்கள் நினைவிருக்கின்றன? எனில் இப்போது எதற்காக ஐந்து மடங்கு பணம் செலுத்துகிறோம்? 'எனக்கு தெரியும். ஏன்னா பணவீக்கம் அதிகமாயிருச்சு' என ஒலிக்கும் ஓசை கேட்கிறது. உண்மை என்னவென்றால், பணவீக்கம் ஏறியதால் விலை ஏறவில்லை; மாறாக விலை ஏறியதால் தான் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பல அத்தியாவசிய பொருட்களின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொரு வாரமும், சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடப்பட்டு, இந்த வாரத்தின் பணவீக்கம் எந்த அளவில் உள்ளது என நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மகத்தான பணியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செவ்வனே ஆற்றி வருகின்றது.

பணவீக்க விகிதம் ஒரு குறிப்பிட்ட தேசத்தையும் அதன் குடிமக்களையும் எங்கனம் பாதிக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா? சுருக்கமாக அதை சுட்டிக்காட்டாவிடில் இக்கட்டுரை முழுமை பெறாது என்பதில் தெளிவாகவே உள்ளோம்.

பணவீக்கமும் வட்டி விகிதமும்:
மெகா சீரியல் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் பார்த்து உங்கள் மேல் வெறுப்பிலிருக்கும் மனைவியை சமாதானப்படுத்த கலர் டி.வி. வாங்க முடிவு செய்து ஐந்தாறு கடைகளில் விசாரித்து அதன் விலை ரூ.10,000 என அறிகிறீர்கள். இத்தகு தருணத்தில் உயிர் நண்பர் ஒருவர் குடும்பச் சிக்கலின் காரணமாகப் பத்தாயிரம் வேண்டும் என்றும், அதனை ஒரு வருஷத்தில் வட்டியுடன் திருப்பி தருவதாகவும் உறுதி அளிக்கிறார். கலர் டி.வி. வாங்கும் எண்ணத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்து விட்டு (மனைவி சம்மதத்துடன்), நண்பருக்கு உதவ முடிவு செய்கிறீர்கள். அடுத்த ஆண்டு பண வீக்கம் 5% இருக்கும் என எங்கோ படித்தது நினைவு வர, டி.வி. விலை ரூ.10,500 (5 % அதிகம்) உயருமென மதிப்டுகிறீர்கள். பணவீக்கம் காரணமாக இதே பொருளை அடுத்த ஆண்டு வாங்க ரூ.500 கூடுதலாக செலவிட நேரிடும். உங்களுக்கும் பாதகமின்றி, உங்கள் நண்பருக்கும் பாதகமின்றி இருவரும் லாப நஷ்டமின்றி இருக்க, நண்பர் குறைந்தபட்சம் பணவீக்கத்தை ஈடுகட்டும் அளவிற்காவது வட்டி தர வெண்டும் (அதாவது ரூ. 500). பணவீக்கத்தை விட குறைவான வட்டியை நீங்கள் ஒப்புக்கொள்வது நிச்சயம் அறிவார்ந்த செயலாகாது.

இதிலிருந்து வட்டி விகிதம் பணவீக்கத்துடன் எவ்வாறு பயணிக்கிறது என அறிந்தோம். பணவீக்கம் அதிகமானால் வட்டி வீதமும் அதிகரிக்கும்; பணவீக்கம் குறைந்தால் வட்டி வீதமும் குறையும். இது உலக நியதி.

நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் உங்கள் சம்பளம் 2% அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 6% பணவீக்கம் உள்ள ஆண்டில் நிகழ்கிறது. மற்றுமோர் ஆண்டு முதலாளி உங்கள் சம்பளத்தை 2% குறைக்கிறார் (-2% அதிகரிப்பு). இப்போது பணவீக்கம் 0% ஆக உள்ளது. குறிப்பிட்ட இந்த இரண்டு ஆண்டுகளில் எந்த ஆண்டு உங்களை மகிழ்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தும்? மனோதத்துவ ரீதியாக 2% அதிகரிப்பு கிட்டிய ஆண்டு உங்களை மகிழ்ச்சியிலும், 2% சம்பள குறைப்பு சோகத்திலும் ஆழ்த்தியிருக்கும். ஆனால் இதனைச் சற்றே உற்று நோக்கினால் சம்பளம் அதிகரிக்கப்பட்ட ஆண்டு, உங்களிடம் இருந்த பணத்தின் வாங்கும் திறன் (purchasing power) ஊதிய அதிகரிப்பு நிகழாத ஆண்டை விட குறைவாகவே இருந்தது என்னும் உண்மை புலனாகும். கைக்கு வரும் காசு கூடுதலாக இருப்பினும், அதனின் மதிப்பு குறைவாகவே இருக்கும் இந்த நிலையை தான் பொருளாதார நிபுணர்கள் 'பண மாயை' (money illusion) எனக் குறிப்பிடுகின்றனர். 25% பணவீக்கம் இருந்த காலத்தில் வங்கிகள் கொடுத்த 12% வட்டியை குதூகலத்துடன் வாங்கியவர்கள், 6% பணவீக்கம் காலத்தில் 6% வட்டியை கண்டு பின் வாங்குவது ஏன்? சிந்தியுங்கள் தோழர்களே!

பணவீக்கம், வட்டி விகிதம் மற்றும் பங்கு சந்தை:
சமீப ஆண்டுகளில் (3-4) அநேகம் பேர் பங்கு சந்தையில் நுழைந்து தங்கள் திறமையை நிரூபிப்பது மட்டுமின்றி, மிகுந்த பணமும் ஈட்டி வருகின்றனர். மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் (SENSEX) அபார வளர்ச்சியை இந்தக் கால கட்டத்தில் எட்டியிருப்பதும் அனைவரும் அறிந்தது தான். இதற்கு முதன்மையான காரணியாக இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் நிலவி வந்த அடி மாட்டு வட்டி வீதத்தை பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். கடந்த 10 ஆண்டகளாக ஜப்பானின் வட்டி விகிதம் 0 % ஐ விட சற்றே அதிகமான அளவிலியே இருந்தது குறிப்பிடத் தக்கது.

வங்கி வைப்பீட்டு கணக்குகளிலும், கடன் பத்திரங்களிலும் (debt bond) கிடைக்கும் வருமானம் நிலையானது; எந்த விதமான கவலையும் இன்றிக் கிடைக்ககூடியது. Risk free return என்று இதை ஆங்கிலத்தில் அழைக்கலாம். இதற்கு நேர் மாறாக பங்கு சந்தையில் கிடைக்கும் வருவாய் நிலையற்றது. அதே சமயத்தில் வங்கியில் கிடைக்கும் வட்டியை விட பல மடங்கு இதில் கிடைக்கலாம். ஆனால் யாராலும் இதை உறுதியாக கூற இயலாது. உலகெங்கும் மிகக் குறைந்த வட்டி வீதம் இருந்ததை பார்த்தோம் இல்லையா? இந்த சூழ்நிலையில் நிலையான வருமானம் குறைவாக இருந்த காரணத்தால், அதிக வருவாய் கிடைக்க வேண்டி பங்கு சந்தையை நோக்கி தங்கள் பணத்தை உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் திருப்பினர். நிறைய பணம் உள்ளே வர வர SENSEX வளர்ந்து கொண்டு போனதில் வியப்பில்லை.

பணவீக்கமும் அதன் விளைவாக வட்டி விகிதமும் அதிகரிக்கும் ஒரு சூழலில், நிலையான வருவாயும் அதிகரிக்கும். பாதுகாப்பான நிலையான வருவாய் அதிகரிப்பதன் காரணமாக முதலீட்டாளர் சமுதாயம் பங்கு சந்தையில் இருக்கும் பணத்தின் ஒரு பகுதியை கடன் பத்திரங்களில் பொடுவது எதிர்பார்க்க கூடிய செயல் தான். நம்மைப் போன்ற தனி மனிதர்கள் மட்டுமின்றி, பரஸ்பர நிதி (mutual fund) மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் (foreign institutional investors) இதே செயலை பின்பற்றுவார்கள் என எதிர் பார்க்கலாம். அதிகரித்த வட்டி விகிதத்தினால் பங்கு சந்தைக்கு வரும் பணத்தின் அளவு குறையும். இதனால் பங்குகளின் வளர்ச்சி நாம் ஆசைப் படும் அளவு இருக்காது. ஏறுமுகமான பணவீக்கத்தினால் பங்கு சந்தைக்கு நிகழம் பாதிப்பின் ஒரு கோணம் இது.

பல நிறுவனங்கள் தங்கள் தொழிலை நடத்தக் கடன் வாங்கித்தான் காலம் தள்ளுகின்றன. அதிகரித்த வட்டி விகிதத்தினால் நிறுவனங்களின் வட்டிச் சுமை கூடுகிறது. இலாபத்தில் பெரும் பகுதி வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவே சரியாய்ப் போய் விடுவதால், பங்குதாரர்களுக்கு கடைசியில் மிஞ்சுவது குறைகிறது. இவ்வாறு வெளிடப்படும் நிறுவன முடிவுகள் குறைவான 'அலகு பங்கின் வருவாய்' (EPS - Earlings per Share) என்கிற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனாலும் பங்குகளின் விலை குறையலாம். எனவே அதிக கடன் வாங்கிக் காலம் தள்ளும் நிறுவனங்களை அதிக பணவீக்க காலங்களில் தவிர்ப்பது உசிதம்.

முடிவிற்கு வந்துவிட்ட இக்கட்டுரையைப் படித்தவர்களிடம் இனி மேல் யாரும் பணவீக்கம் குறித்து பேசி ஏமாற்ற முடியாத அளவு பொருளாதார துறை அறிமுகம் கிடைத்தால் அதை விட மகிழ்ச்சி எமக்கு இருக்க வாய்ப்பில்லை. அது கூடப் பரவாயில்லை. எவரேனும் 'பணவீக்கம்னா... பணத்தை எங்க மாமா பணத்தை அடிச்சுட்டாரு. அதனால அதுக்கு வீங்கிருச்சு' என்று கடி ஜொக் சொன்னால், அதை ஊக்குவிக்காதீர்.

No comments: