Friday, June 28, 2013

மழை வாசமும், மரணத்தின் வாசமும்

போன ஒரு மாத காலமாக சென்னையில் மழை பெய்வது போல பில்டப் கொடுத்து அப்படியே போக்குக் காட்டிக்கொண்டிருந்தது. தண்ணி லாரி ஸ்டிரைக் செய்ததால் குளிக்குக் கூடத் தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த வேளையில் நேற்று நல்ல மழை. ஓரிரு சாஃப்ட்வேர் கம்பெனிக்கு லீவ் விட்டார்களாம். சிலர் பாத்ரூம் போறதெல்லாம் வீட்டிலேயே முடித்து விட்டு வரவேண்டும் என்று சொல்லி டாய்லெட்டை பூட்டி விட்டார்களாம். சாலையோர துரித உணவகம் மாதிரி சாலையோர கழிப்பிடமும் முளைத்து விடுமோ என்றெல்லாம் சிலர் புது பிசினஸ் மாடல் உருவாவதற்கான சாத்தியத்தை அலசினார்களாம்.

அதற்குள்ளாக கொஞ்சம் மழையும், லாரி ஸ்டிரைக் முடிவும் வந்தது. மூன்றரை வயதான என் மகள் வேண்டுமென்றே அவளது விளையாட்டுப் பந்தை வெளியே வீசி விட்டு மழையில் ஆடினாள். நதிக்கரையில் வளர்ந்தவனுக்கு குழந்தையின் குதூகலத்தை மறுக்க மனமில்லை. அப்பா ஜாலி ஜாலி என குதித்தாள்.. மாமழை போற்றுதும் ! ராத்திரி 102 டிகிரி காய்ச்சல். இன்னிக்கு யூனிஃபார்ம் போடணுமா? லீவா? தாத்தா என் பிரண்டே இல்லை. கிள்ளிக் கிள்ளி வெக்கறாங்க.. என கண்டதை உளறிக்கொண்டிருந்தாள். விடிய விடிய தூக்கமில்லை. மறக்க முடியாத ஒரு இரவாக அது அமைந்தது.

அதை விட மறக்க முடியாத ஒரு துக்கமான நிகழ்வும் நேற்று நடந்தது. எங்கள் டவுன்ஷிப்பில் வசிக்கும் ஒருவர் இறந்து போனார். அவரது இரண்டு சக்கர வாகனமும், லாரியும் (தண்ணீர் லாரியாக இருக்க வேண்டும்) மோதிக்கொண்டதால் விபத்து. இன்ஃபோசிஸில் பணிபுரிகிறார். வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது டவுன்ஷிப்புக்குள் நுழையுமிடத்தில் விபத்து நடந்திருக்கிறது.

விபத்துகளும், மரணங்களும் எங்காவது நடந்தபடியேதான் உள்ளன. அவற்றை வெறும் செய்தியாகக் கடந்து போகிறோம். மரணிப்பது நமக்குத் தெரிந்தவர்கள் எனும் போது நம்மையும் அறியாமல் ஒரு சோகம் மனதை அடைக்கிறது. அதிலும் இந்த மனிதர் ஆறு மாதப் பெண் குழந்தைக்குத் தகப்பன். தான் உயிரோடு இருக்கும் போது தம் பிள்ளைகளின் மரணத்தைச் சந்திப்பவரை நீங்கள் நேராக நோக்க முடியாது. அப்படி விடுபட முடியாத சோகத்தில் அவரின் பெற்றோர் இருக்கிறார்கள். ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நாங்கள் வசிப்பது ஒன்றும் நகரின் பிசியான ஏரியா இல்லை. அரசன்கழனி ஏரியும், நூக்காம்பாளையம் மலையும் இருக்கிற ஒரு கிராமம். எங்கள் குடியிருப்புப் பகுதிக்குள்ளேயே தாறுமாறாக ஓட்டி கீழே விழுந்து கண்ணாடியை உடைத்தது, காயம் பட்டது, நெற்றியில் வெட்டிப்பட்டது என சின்னச்சின்ன விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் உயிரிழப்பு உச்சகட்ட அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகளால் மரணம் நிகழ்வது தமிழகத்தில்தான் என்ற செய்தி சில நாட்களுக்கு முன் செய்தித்தாள்களில் வெளியானது. சாலை விபத்தால் மரணிக்கும் ஏழு பேரில் ஒருவர் தமிழ்நாட்டுக்காரர். (கவனியுங்கள்: தமிழர் என்று சொல்லவில்லை, இப்போதெல்லாம் பாரதிராஜா அடுத்து என்ன சொல்வாரோ என பயமாக இருப்பதால்) ’இந்த ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான். ஆக்சிடண்ட் ஆகிட்டூ இருக்கும்,’ என்கிறார் என் நண்பர் ஒருவர்.


இந்தியாவில் உள்ள ஆறு பொறியியல் கல்லூரிகளில் ஒன்று தமிழ் நாட்டில் இருக்கிறது. சாலை விபத்துக்கும், சாஃப்வேர் கனவோடு என்சினியரிங் காலேஜில் சேர்வதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? இல்லாட்டி செலவு செய்து காலேஜ் கட்டுவதற்கும் செயலலிதாவுக்கும் கனெக்‌ஷன் இருக்குமோ?

Wednesday, June 26, 2013

ஷேர் மார்க்கெட் டிப்ஸ்

’ஓ நீங்கதானா அது? நைஸ் மீட்டிங் யூ சார்...இப்ப என்ன ஷேர் வாங்கலாம்னு சொல்லுங்க பிளீஸ்’

’சாரி சார். நான் டிப்ஸ் எல்லாம் கொடுக்கிறது இல்லை. மன்னிக்கணும்.’ எவ்வளவு நாசூக்காகச் சொன்னாலும் சிலர் விடுவதேயில்லை.

ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் ஷேரை வாங்கினால் அது நிச்சயமாக இவ்வளவு இலாபம் தரும் என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யும் அளவுக்குத் தெரிந்தால் எதற்காக மற்றவர்களுக்கும் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என யாரும் யோசிப்பதில்லை. நிஜத்தில் அந்த மாதிரி யாராலும் சொல்லிவிட முடியாது என்பதே எதார்த்தம். அப்படியே யாராவது ‘Day trading tips’ ‘Stock market tip for today’ ‘Buy/sell recommendation’ ‘Best stocks in India’ ‘Warren Buffett’s Dream portfolio for India’ ‘Weekly recommendation’ என்றெல்லாம் டைட்டில் போட்டு ஸ்டாக் மார்க்கெட் டிப்ஸ் தந்தாலும் அதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும். மிகவும் சூதானமாக கீழே கண்ணுக்குத் தெரியாத எழுத்தில் (என்னது white font ஆ) டிஸ்கி போட்டு விடுவார்கள்.

ஒரு டிப்ஸ் கூட தர முடியலைன்னா பிறகு எதைத்தான் Scienceof Stock Market Investment இல் எழுதியிருக்கிறீர்கள் என சிலர் கேட்பதுண்டு. சென்னை பங்குச் சந்தை இயக்குனர் திரு.நாகப்பனின் அணிந்துரையும், புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களும்pdf வடிவில் டவுன்லோட் செய்ய இந்த லிங்கில் கிடைக்கிறது. அது சுமாராக இருந்தால் புத்தகத்தின் அமேசான் லிங்கில் வாங்கி pdf கோப்புகளை வாசிப்பது போலவே இதை Kindlefor PC என்ற எளிய application மூலம் வாசிக்கலாம். புத்தகத்தை வாசித்து விட்டு பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை, சுமார், குப்பை, நீயெல்லாம் எழுதலைன்னு யாரு கேட்டா இப்படி எதாவது ஒரு வரியில் ரிவியூ எழுதுங்கள். (கூடவே எனக்கு ஒரு மின்னஞ்சலும் போடுங்கள். புத்தகம் வாங்குவதற்குச் செலவு செய்த பணம் வாபஸ்)

இடை விடாமல் எழுதுகிற அத்தனை பேரும், குறிப்பாக இலக்கியவாதிகள், சொல்வது அயராமல் ஒரு விஷயத்தைச் சொல்வதுண்டு. தினமும் எழுதுவதற்கு கடுமையான உழைப்பு தேவை. அத்தகைய உழைப்பை இடத் தயாராக இல்லையென்றால் காட்டாற்று வெள்ளத்தில் கரை ஒதுங்கும் கந்தைத் துணியாக காலம் நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிடும். என் மட்டில் மக்களுக்குப் பயன்படும் எல்லாமே இலக்கியம்தான். நம்மால் செய்ய வேண்டிய பங்களிப்பு எத்தனை சிறியதாக இருந்தாலும் அதைச் சரியாகச் செய்யும் போது நாம் செத்தொழியும் நாள் திருநாளாகும் என்பதில் திடமான நம்பிக்கை எனக்கு உண்டு.

எனக்கென்னவோ எழுதுவதற்குச் செலவிடும் உழைப்புக்கு நிகரான, இல்லையானால் கூடுதலான உழைப்பை, அப்படி எழுதியதை மற்றவரிடம் எடுத்துச் செல்ல ஆகும் முயற்சிக்கு செலவிட நேரிடுகிறது.  நிறைய நேரத்தையும், கொஞ்சம் தன்மானத்தையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே பிரபலமானவர் என்றாலோ பிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியாவோடு படுக்கையைப் பகிர்ந்து பரபரப்பை உண்டாக்கியவர் என்றாலோ பரவாயில்லை. மற்றபடி இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

நிஜமாவே டிப்ஸ்ன்னா என்ன? லண்டனில் மு.நித்தியானந்தம் (நித்தியானந்தா அல்ல) என்பவர் வசிக்கிறார். யாழ்ப்பாண பலகலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இனிமையான மனிதர். லண்டனில் ஏதாவது நூல் வெளியீட்டு விழாக் கூட்டமென்றால் அவரைப் பேச அழைப்பார்கள். அப்படிப் பேசும் போது ஏதாவது முக்கிய வார்த்தையை எடுத்துக்கொண்டு அதற்கு ஐந்தாறு அர்த்தம் கொடுப்பார், தமிழ் வாத்தியார் மாதிரி.

இப்போதெல்லாம் ஓட்டல் சர்வர் கூட டிப்ஸ் தாங்க என்று கேட்பதில்லை. பங்குச் சந்தைக்கு யாராவது கேட்பார்களா? நித்தியானந்தம் காதில் விழுந்தால் ஒரு காலத்தில் டிப்பு டிப் என்ற பெயரில் ஒரு ஆப்பிரிக்க அடிமை வியாபாரி இருந்தான் என்று சொன்னாலும் சொல்வார்.

Tuesday, June 25, 2013

அப்பா தேச்சிக்கிட்டு இருக்காங்க

சுவாரசியமாக எழுதுபவர்களாக இருந்தால் ஒரு கிரைம் நாவலும், திரில்லர் திரைப்படமும் எடுக்கலாம். அப்படிப்பட்ட ஒரு டவுன்ஷிப்பில் நாங்கள் வசிக்கிறோம். நான் சொல்ல வரும் மேட்டர் வேறு. அந்த டவுன்ஷிப்பில் ஒரு பார்க் இருக்கிறது. அங்கே மாலை நேரம் போனால் அப்படியொரு எண்டெர்டெயின்மெண்ட். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் போடும் சத்தம் காதுக்கு இனிமை. கூடவே கண்ணுக்கும் ;-)

அங்கே ஒரு லேடி இன்னொரு லெக்கிங்ஸ் போட்ட பெண்ணிடம் புகார் சொல்லிக்கொண்டிருந்தார். ‘’நானே டென்ஷனோட கிச்சன்ல குண்டா கழுவிக்கிட்டு இருக்கறேன். இவ வந்து அப்பா தேச்சுக்கிட்டு இருக்கறார்னு சொல்றாளுங்க. எனக்கு நெஞ்சே வெடிக்கறாப்பல ஆயிருச்சு. அடுத்த வருஷம் டெஃபனட்டா ஸ்கூல் மாத்தணும்” கொஞ்ச நேரம் உற்றுக்கேட்ட பின்னர்தான் புரிந்தது. வருடம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் செலவு செய்து எல்.கே.ஜி அனுப்புகிறார்கள். அவரது குழந்தை ’அப்பா அயர்ன் பண்றாங்கம்மா’ என்று சொல்லாமல் தேய்ச்சுக்கிட்டு இருப்பதாகச் சொல்லிவிட்டது. என்ன சொல்லிக்கொடுக்கிறார்கள் ஸ்கூலில்? இங்கிலீஷ் நாலேஜே இல்லாமல் போயிரும் போல இருக்குங்க. டோட்டல் வேஸ்ட்!!

எங்கள் கல்லூரியில் ஒரு நண்பன் இருந்தான். அவனுக்கு ஆங்கிலம் பேச வராது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவான். நாம் இடையே புகுந்து தமிழில் ஏதாவது சொன்னால் கூட, ‘யூ ஸ்டுப்பிட்’ எனத் திட்டுவான். ஒரு சில மணி நேரம் மட்டுந்தான் அப்படி. அடுத்த நாள் காலையில் தூங்கி எழுந்து தெளியும் போது நார்மலாகி விடும். இன்னொரு முறை சரக்கு உள்ளே இறங்கும் வரை காத்திருக்க வேண்டும். இப்படி ஒருவனை நம்மில் அத்தனை பேரும் நிச்சயம் கடந்து வந்திருப்போம். குறைந்த பட்சம் கேள்வியாவது பட்டிருப்போம்.

சிலருக்கு சரக்கு உள்ளே போனால் கவிதை வெளியே வரும். சிலருக்கு காதல் வரும். சிலருக்கு முனிம்மா J

பசங்களுக்கு சரக்கு உள்ளே போனால் சரளமாக ஆங்கிலம் வருவது போல பெண்களுக்கு பசங்களைக் கண்டால் ஆங்கிலம் பீறிட்டு வரும். பெண்ணியவாதிகள் மன்னிக்க. ’இவளுக ஏய் ஈறுடி.. ஒரே பேனுடி..ன்ன்னு பேசிக்கிட்டே வருவாளுக. நம்ம கிராஸ் பண்ணா மட்டும் கரெக்ட் யா.. யா யா… சோ ஃபன்னி யா ன்னு பீட்டர் விடுவாளுக’ என கல்லூரி மேடை நிகழ்ச்சிகளில் பசங்க நடித்துக்காட்டு அரங்கத்தை அதிர வைத்ததுண்டு.

ஆங்கிலம் பற்றிப் பேசும் போதெல்லாம் என் மனைவி, ‘Whose note is this, Kuppusamy?’ என்று கிண்டல் செய்வதுண்டு. முதலாமாண்டு பிசிக்ஸ் லேபில் ஒரு செய்முறைக்காகக் காத்திருந்தோம். ஒரு பேட்சுக்கு நாலு பேர். எங்கள் பேட்சில் மூன்று பாய்ஸ் கிருபா சங்கர், குப்புசாமி, குமரன். ஒரு கேர்ள் லக்ஷ்மி. எல்லோருமே புதுசு. போன வாரம் செய்த பரிசோதனையை குமரன் சிரத்தையாக எழுதி வைத்திருப்பான். ரொம்பவும் சின்சியரான பையன். நானும்தான் தவறாமல் எழுதிவிடுவேன் என்றாலும் என் கையெழுத்து எனக்கே பிடிக்காது.

குமரன் நோட்டிலிருந்து லஷ்மி காப்பி செய்துகொண்டிருக்கிறாள். அப்படியே என்னை நிமிர்ந்து பார்த்து ‘Whose note is this?’ எனக் கேட்டாள். நான் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. கொஞ்ச தூரம் தள்ளி எதையோ கையைக் காட்டி, ’அதோ அங்கிருக்கு’ என்றேன். நான் சொன்னதை நானே உள்வாங்கும் முன், ‘It’s mine’ என்றான் குமரன். கிராதகன். குமரா நீ எங்கிருந்தாலும் நலமாக இருக்கக் கடவது.  

எங்கள் அலுவலகத்தில் ஒரு பையன் இருக்கிறான்.
‘How was your vaca-son?’ என்றான்.

’You mean vacation?’ திருப்பிக் கேட்டேன்,

’ya. vaca-son’ சுப்ரீம் செல்ஃப்கான்பிடன்ஸோடு சொன்னான்.

சரளமாக ஆங்கிலம் பேசும் ஆற்றல் தன்னம்பிக்கை ஊட்டுகிறது. நம்மால் பேச முடியாதோ என்ற அச்சம் தன்னம்பிக்கையைத் தகர்க்கிறது. தப்பாப் பேசினா என்ன உயிரா போயிரும் எனத் துணியும் போது ஆங்கிலம் அறிவதால் மட்டுமே வருகிற தன்னம்பிக்கையை விடக் கூடுதலாகிறது செல்ஃப் கான்பிடன்ஸ்.

வாட் டு யூ ஸே?

Monday, June 24, 2013

சமூகம் மதிக்காத படைப்பாளியும், சைனாமேனும்

தமிழ்நாட்டில் ஒரு பிரலபமான எழுத்தாளர் இருக்கிறார். முப்பது வருடத்திற்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறார். பல விதமான சர்ச்சையில் சிக்கியவர். தனது எழுத்தை இந்தச் சமூகம் கொண்டாடவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு. அப்படிப்பட்டவருக்கு ஒரு பெண்ணோடு சினேகம் ஏற்படுகிறது.

அவள் பிரான்ஸில் இருக்கிறாள். ஏற்கனவே கல்யாணமாகி மூன்று குழந்தைகளின் தாய். வறட்சியான செக்ஸ் வாழ்க்கை அவளுக்கு. அப்படிப்பட்டவளுக்கும் நம்ம எழுத்தாளனுக்கும் ஒரு புத்தகக்கடையில் அறிமுகம் ஏற்படுகிறது. இருவரும் சல்சா பண்ணுகிறார்கள். ஒரு காதலை அடைய பல காமம் கடந்து வந்த கவிதைகளுக்கு நடுவே பல காமம் கடந்து கண்டறிந்த காமத்தின் கதைதான் இது.

டைரிக்குறிப்புகளை எல்லாம் சேர்த்து வைத்து, தனது வெப்சைட்டில் எழுதிய கட்டுரைகளையும் இடையிடையே செருகி, வாசகிகளுடனான தனது ஈமெயில் எல்லாம் கலந்து, தன்னைக் கொண்டாடாத தமிழ்ச் சமூகத்தினை இடையிடையே திட்டி அதை நாவலாக வெளியிட்டும் இருக்கிறார் அந்த எழுத்தாளர். சமீபத்தில் அதை வாசிக்கும் பேறு பெற்றேன். தமிழின் ஆகச் சிறந்த ஆட்டோபிக்சன் (autofiction) எனச் சிலர் அதைக் கொண்டாடவும் செய்கிறார்கள்.

ஆட்டோபஃபிக்சஷக்கும் ஆட்டோபயோகிராபிக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. தன் வாழ்க்கையில் தான் செய்த விஷயங்களை, கடந்து வந்த அனுபவங்களை அப்படியே சொல்லுவது ஆட்டோ பயோகிராபி. அதை வேறொருவன் பெயரைப் போட்டு கதை மாதிரிச் சொல்வது ஆட்டோஃபிக்‌ஷன். அது புனைவு என்பதால் எப்படி வேண்டுமானாலும் முன்னுக்குப் பின் தாவும் செலகர்யம்.. சாரி.. செளகர்யம்..உண்டு. ..இரண்டுக்குமான வித்தியாசம் அப்படித்தான் இருக்க வேண்டும்.

எக்சைஸ் ஒரு துணிச்சலான முயற்சி என்ற போதும் இதை ஷீகன் கருணதிலகாவின் சைனாமேன் நாவலோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அப்படிச் செய்தாலும் ஆப்பிளையும் அவரைக்காயையும் கம்பேர் பண்ணுவது போலத்தான் அது அமையும் என்றாலும் கூட.

சைனாமேன் ஒரு மாஸ்டர் பீஸ். நவீன தெற்காசிய இலக்கியத்தின் மீதும், கிரிக்கெட் மீதும் ஆர்வம் இருக்கிற அத்தனை பேரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

சைனாமேன் நாவலுக்கான கார்டியன் விமர்சனம்

ஒரு தமிழனாகப் பிறந்த காரணத்தால், யாருக்கும் வளைந்து கொடுத்துப் போக விரும்பாததால் காணமால் போன உலகின் தலை சிறந்த ஸ்பின் பவுலர் குறித்த நாவல். ஆனால் இது சிங்களர் ஒருவரால் எழுதப்பட்டது. வாசிக்க வாசிக்க நம்மை உள்ளே ஈர்க்க வைக்கும் லயிப்பான மொழி. காமன்வெல்த் பிராந்தியப் படைப்புக்கான விருது பெற்ற நாவல்.

முடிந்தால் வாசித்துப் பாருங்கள். எப்போதாவதுதான் இந்த மாதிரி புத்தகங்களை வாசிக்க நேரிடும்.

கூடுதல் தகவல்:
அப்புறம் அதென்ன சைனாமேன் என்று கேள்வி எழுந்தால் இங்கே போய் ஒரு எட்டு பாருங்கள். கிரிக்கெட் ஒன்னும் சீனாக்காரனுக்கு புதிதல்ல. அவர்களுக்கு கொஞ்சம் ஆங்கிலமும், சாஃப்ட்வேரும், கிரிக்கெட்டும் தெரிந்தால் இன்னும் என்ன செய்வார்களோ....

Friday, June 21, 2013

முயற்சி பண்ணுவோம் பாஸ்

சதீஷ் மாதிரி ஒருவன் கூடவே இருக்கும் போது வேறு வினையே வேண்டியதில்லை. நானும் அவனும் ஒரே கல்லூரியில் படித்தோம். இப்போது ஐதராபாத்தில் ஒரே கம்பெனியில் பணியாற்றுகிறோம். நாங்கள் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதமே ஆனது. சதீஷ் மிக வேடிக்கையானவன், காலேஜிலும் அப்படித்தான் இருந்தான், சம்பாதிக்க ஆரம்பித்த பிறகும் அப்படியேதான் இருக்கிறார். உதராணத்திற்கு ஒன்றிரண்டு சொல்கிறேன் கேளுங்கள்

குளித்து முடித்த பின்னர் அணிந்து கொள்வதற்காக புது பனியன், ஜட்டி எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போவான். ஆனால் ஏற்கனவே அணிந்திருந்ததைக் கழட்டித் துவைக்காமல் புதிதாக எடுத்துச் சென்றதைத் துவைத்து விடுவான். வேறு வழியின்றி குளித்த பின் பழையதையே மீண்டும் அணிந்து கொள்வான். எதில் கவனமாக இருக்க வேண்டுமோ அதைத் தவிர மற்ற அனைத்திலும் அவனது சிந்தனை மேயும். ஒரு முறை வெளியே போகும் போது வீட்டைப் பூட்டி விட்டு சாவியைக் கதவுக்கடியில் வைத்து, "சாவி கதவுக்குக் கீழே" என்று ஒரு காகிதத்தில் எழுதி எல்லோருக்கும் தெரியும்படி ஒட்டி விட்டிருந்தான். 'ஷாம்பு'வில் பல் துலக்கியது, குளிப்பதற்கு சுடு தண்னி போட வாளியில் ஹீட்டரை வைத்து விட்டு குளிக்காமல் ஆபீஸ் போய் வாளியை உருக வைத்தது, பக்கத்து வீட்டுக் குட்டிப் பையனிடம் தெலுங்கில் பேசுகிறேன் என்று வம்புக்கு வாதம் செய்து "போரா வெதவா" என்று திட்டு வாங்கியது, வாழைப்பழம் வாங்கப் போய் 'கேலா சாயியே' என்று அரைகுறை இந்தியில் பேசி கடைசியில் 'கேலா'விற்குப் பதில் அடி 'ஸ்கேல்' வாங்கிக் கொண்டு வந்தது, தெரியாத்தனமாக பெண்கள் ஜீன்ஸ் பேன்ட் வாங்கிப் போட்டுக்கொண்டு தொடையை இறுக்கிப் பிடிக்கிறது என்று அலறியது என்று அவனுடைய கோமாளித்தனத்தைப் பற்றிப் பேசினால் நாள் கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம்

நாங்கள் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சதீஷ் புது பைக் வாங்கி விட்டான். கம்பெனியில் லோன் கொடுத்தார்கள். பைக் என்றால் அவனுக்கு மிகவும் பாசம். இரன்டு நாளுக்கு ஒரு தடவை தண்ணீர் ஊற்றிக் கழுவி விடுவான். தினமும் காலையில் எழுந்து பல் விளக்குகிறானோ இல்லலையோ பைக்கைத் துடைக்காமல் இருக்க மாட்டான். இருக்காதா பின்னே? போன மாத வரையிலும் தங்கம் பேக்கரியில் ஒரு தேங்காய் பன்னை நான்காகப் பங்கு போட்டுத் தின்றவன், இன்று சுயமாக பைக் ஓட்டுவது என்றால் சொல்லவும் வேண்டுமா!! என்னைப் பற்றிக் கேட்காதீர்கள். நான் பேருந்தில் பயணிக்கிறேன். னவே இந்த தேங்காய் பன் அளவுகோல் எனக்கு ஒத்துவராது

இப்படித்தான் ஒரு நாள் ஆபீஸ் முடிந்ததும் பைக்கில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினான். நாகார்ஜுனா சர்க்கிளுக்கும் பஞ்சகுட்டா சிக்னலுக்கும் இடையில் நிலை கொண்டிருந்த நேரத்தில் அவன் வண்டியில் இருந்து விநோதமான சப்தம் உயிர்த்தது. இன்டிகேட்டரில் இருந்து வழக்கமாக வருவதுதான். உடனே இன்டிகேட்டர் சுவிட்சை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாகத் திருப்பினான். சத்தம் வருவது நிற்கவில்லை. மறுபடியும் வலது பக்கம் திருப்ப, அப்போதும் நிற்கவில்லை. மாற்றி மாற்றி இன்டிகேட்டர் போட்டதில் இவனுக்குப் பின்னால் வந்த வாகனங்களில் இருந்தவர்கள் எல்லாம் குழம்பிப்போய் கையை நீட்டி தெலுங்கிலும் இந்தியிலும் திட்டினார்கள். அதையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. இவனுக்குத்தான் அந்த மொழியெல்லாம் தெரியாதே!! 

சத்தம் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. வண்டி தடுமாறியது. பொறுமை இழந்தவனாக சாவியைத் திருப்பி வண்டியை அணைத்தான். ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். அதற்குள் சுற்றிலும் நிறையக் கூட்டம் கூடியிருந்தது. அந்தக் கூட்டத்தில் அபர்ணாவும் ஒருத்தி. அலுவலகத்தில் அவனுக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்திருப்பவள். இவனுக்கு வெட்கமாக இருந்தது. "ஒரு இன்டிகேட்டரைக் கூட ஆஃப் செய்யத் தெரியாதவன், இவனுக்கெல்லாம் எதுக்கு வண்டி?" என்று அவள் பார்வை துளைப்பதைப் போல உணர்ந்தான். ஐயகோ... பலனில்லை. சத்தம் வந்தபடியே இருந்தது. பழைய ரேடியோவைத் தட்டினால் பாடுமே, இல்லை இல்லை பாடுகிற ரேடியோவைத் தட்டினால் நிற்குமே..அது போல பைக்கை நான்கு முறை தட்டிப் பார்க்கிறான். பிறகு உதைக்கிறான். ஒன்றும் நடக்கவில்லை.

வண்டிக்கு முன்னால் போய் நின்றும், உட்கார்ந்தும் பார்த்தான். எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. இன்டிகேட்டர் விளக்கு ஒளிரவில்லை. பக்கவாட்டில் வந்து கீழே குனிந்து எஞ்சினில் காது வைத்துக் கேட்டான். ஆனால் அந்தச் சத்தம் மட்டும் எங்கிருந்து வருகிறது என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. குரங்காட்டி வித்தை காட்டுபவனைப் போல இவனைக் கூட்டம் இரசித்தது. கூட்டத்தைக் கவனித்த போக்குவரத்துக் காவலர் குடையில் இருந்து இறங்கி இவனை நோக்கிக் கோபமாக வருவதைப் பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. தன் பைக்கில் தனக்கே தெரியாமல் யாரோ டைம்பாம் வைத்து விட்டதாக நினைத்தானோ என்னவோ, போலீசில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற உந்துதலினால் வண்டியைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பி ஓட ஆரம்பித்தான்

என்ன வேகத்தில் ஓடினான் என்று சொல்ல முடியாது. அவ்வளவு வேகமாக அதுவரை அவன் பைக் கூட ஓட்டியதில்லை. ஓடியதில் ஒரு கிலோ மீட்டர் கடந்திருப்பான். அதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. நின்று லேசாகத் திரும்பிப் பார்த்தான், அதே 'பீப் பீப்' சத்தம் இன்னும் வந்து கொண்டே இருந்தது. வந்து சேர்ந்த இடம் ஒரு முச்சந்தி போலக் காட்சியளித்தது. பழைய குப்பைத் தொட்டி ஒன்று ராட்சத வடிவில் இருந்தது. சாக்கடை வாசமோ அல்லது எலி செத்த வாசமோ ஏதோ ஒன்று மூச்சு விடவே முடியாதபடி இடைஞ்சல் கொடுத்தது. ஓட்டம் பிடிக்க ஆரம்பித்து ஐந்து நிமிடம்தான் இருக்கும், அதற்குள் எப்படி இருட்டியது என்று அவனுக்கு விளங்கவில்லை. அந்த இடத்தில் தெருநாய்கள் நிறைய உலவிக் கொன்டிருந்தன. அவனைத் தவிர அங்கே நாய்கள் மட்டுமே தென்பட்டன. ஆனால் அந்த ஓசை மட்டும் இன்னமும் தேயாமல் பெருத்த டெசிபலில் கேட்டுக்கொண்டே இருந்தது

நாய்கள் குரைத்தன. அந்தச் சத்தம் 'லொள் லொள்'என்று இல்லாமல் 'பீப் பீப்' என்று இருந்தது. அவனுக்கு எதுவுமே புரியவில்லை. பயம், குழப்பம், இயலாமை, சோர்வு, தவிப்பு என்று பலவிதமான உணர்ச்சிகள் ஒருசேர அவனைக் கவ்வின. செம்பழுப்பு நிற நாய் ஒன்று ஓடி வந்து அவன் யாரையோ அழைப்பதற்காக எடுத்த செல்போனைக் கவ்வியது. அவனுக்கு இருந்த ஒரேயொரு கதவும் மூடப்பட்டு விட்டது. எல்லோரும் பூனைக்கு மணி கட்டுவதைக் கதையாகப் பேச இவனும், வேலனும் சின்ன வயதில் நாய்க்கு மணி கட்டி விளையாடினார்களே, அதற்குப் பழி வாங்கத்தான் நாய்கள் எல்லாம் கூடி இப்படிச் சித்தரவதை செய்கின்றனவா? விளங்க முடியாத பெருங்குழப்பம் ஒன்று அவனை ஆட்கொண்டது.

தான் என்னவோ சோழ மாமன்னன் போலவும், தன்னால் அந்நிதி இழைக்கப்பட்ட மக்கள் அனைவரும் அரண்மனை வாசலில் உள்ள ஆரய்ச்சிமணியை 'பீப் பீப்' என்று அடிப்பது போலவும் வெவ்வேறு விதமான கற்பனைகள் கண் முன் விரிந்தன. இது போன்ற மன உளைச்சலை அவன் அனுபவித்ததே இல்லை. உடலெல்லாம் வேர்த்திருந்தது. சத்தமாகக் கத்தி அழ வேண்டும் போல இருந்தது. அப்பத்தாவின் மடியில் ஒரு முறை படுத்துக் கொள்ள விரும்பினான். அவன் அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பானே..இறக்கை இல்லாமலேயே கையை அசைத்து வானில் பறப்பது போல. அது மட்டும் நிஜமாகவே இப்போது நடந்தால் எப்படி இருக்கும். நாய்களிடும் விநோத ஓசை இல்லாத ஊருக்குப் பறந்து விடலாம்

அதில் எதுவுமே நடக்கப் போவது இல்லை என்று எதார்த்தம் உணர்த்தியது. யாரையாவது கூப்பிட்டுப் பார்க்கலாம். உதவி கிடைக்க அது மட்டுமே வழி என்பதைத் தீர்மானித்தான். "எக்ஸ்கியூஸ் மீ. இஸ் தேர் எனி ஒன்?" என்று முதலில் நாகரீகமாக மெதுவாகக் குரல் தந்து பார்த்தான். எந்த உதவியும் வருவதாக இல்லை. யாரையும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை. இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்தவனாய் "காப்பாத்துங்க..காப்பாத்துங்க" என்று உரத்த குரலில் அடித் தொண்டையில் இருந்து கத்தினான். எவராவது வந்து காப்பாற்ற வேண்டும். இல்லையானால் இப்படிக் கத்தியே மூர்ச்சையாக வேண்டும் என்று தீர்மானித்திருந்தான்.

எனது உறக்கம் அப்போது தான் கலைந்திருந்தது என்று சொல்லி விட முடியாது. கிட்டத்தட்ட இன்னும் அரை மயக்கத்தில்தான் இருந்தேன். வழக்கமாக இன்னும் நாற்பது நிமிடம் தூங்குவேன். இன்று தொலை பேசி மணி விடாமல் அடித்துக்கொண்டே இருப்பதால் சீக்கிரம் எழ வேண்டியதாகி விட்டது

படுக்கையறையில் இருந்து பாதி தூக்கத்தில் எழுந்து ஹாலுக்குப் போய் போய் ரிசீவரில் கையை வைக்கும் தருணம். சதீஷ் போடும் "காப்பாத்துங்க..காப்பாத்துங்க" சத்தம் பலமாகக் கேட்டது. ஏதோ பேராபத்தில் மாட்டியவனைப் போலக் கத்தினான். போனை பிறகு பார்த்துக்கொள்ளலாம். இவனை இப்போது காப்பாற்றியாக வேண்டும். ஹாலைக் கடந்து அவனது அறைக் கதவைத் திறந்து அவனைக் குலுக்கி எழுப்பினேன்

திடுக்கிட்டு எழுந்தவன் 'பீப் பீப்' என்று கத்திக் கொண்டிருந்த அலாரம் கடிகாரத்தை நிறுத்தி விட்டு, "அடச்சே..அலாரம் டா" என்று பெருமூச்சு விட்டான். ஆயினும் அனிச்சையாக அவனது கை தலையணைக்குப் பின்னால் இருந்த செல்போனைத் தேடியது. நாய் தூக்கிச் செல்லவில்லை என்பதை உறுதி செய்துகொண்டான். பெரு மூச்சோடு கூடவே சேர்த்து புன்னகையும் விட்டான்.


ஒரு சங்கதி தெரியுமா? அவன் அலாரத்தை ஆஃப் செய்த போது ஹாலில் போன் அடிக்கும் ஓசையும் நின்று விட்டது. எங்களது போன் 'பீப் பீப்' என்று அடிக்குமா அல்லது டிரிங் டிரிங் அன அடிக்குமா என்று தானே கேட்க விரும்புகிறீர்கள்

ஏன் உங்களுக்கெல்லாம் கனவே வராதா?

(ஒரு பரிட்சார்த்த முயற்சியாக சுமார் 10 வருடம் முன் எழுதியது. இப்போது இதே கதையை வேறு மாதிரியான வடிவத்தில் முற்றிலும் வேறுபட்ட வார்த்தைகளில் எழுதியிருக்கக் கூடும். ஆனாலும் பழையதை அப்படியே வெளியிடுகிறேன்)