Friday, June 07, 2013

தங்கம் வாங்குவது முதலீடு அல்ல

மல்லிகை மகள் மே மாத இதழுக்கு எழுதியது

2012 நவம்பர் இதழிலிருந்து
2013 மார்ச் இதழிலிருந்து
2013 ஏப்ரல் இதழிலிருந்து

தண்ணீரைக் காதலிக்காத மீன்களுமில்லை, தங்கத்தைக் காதலிக்காத பெண்களுமில்லை. நாலு பேர் கூடும் நிகழ்வுகளில் கழுத்து நிறைய பொன்னகை அணியும் மங்கையருக்குக் கிடைக்கும் செல்வாக்கு அலாதியானது. ஆடம்பரச் சின்னம், சமூக அந்தஸ்தை வெளிப்படுத்தும் சாதனம் எனப்தைக் கடந்து தங்கத்தின் பயன்பாடு நமது தேசத்தில் உண்டு. குழந்தையைக் கொஞ்சும் போது ‘தங்கக் குட்டி’ என்று கொஞ்சுகிறோம். செழிப்பான பூமியை பொன்னு விளையும் பூமி என்கிறோம். நேர்மையான மனிதனை சொக்கத் தங்கம் எனக் குறிப்பிடுகிறோம். தங்க ஆபரணங்களுக்கு இருக்கும் கிராக்கியும், திருமணச் சந்தையில் அவை வகிக்கும் முக்கியத்துவமும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

குடும்பத்தில் ஒரு அவசரச் செலவு என்றால் உடனடியாகக் கை கொடுப்பது தங்க நகைகள் தவிர வேறொன்றுமில்லை. நேராக மார்வாடி கடையிலோ அல்லது கோல்டு லோன் வழங்கும் நிறுவனத்திலோ வைத்தால் உடனடிப் பணம். இவ்வளவு ஏன், 1991 ஆம் வருடம் வெறும் இரண்டு வார எண்ணெய் இறக்குமதியைச் சமாளிக்கும் அளவு மட்டுமே இந்தியாவிடம் அன்னியச் செலவாணி கையிருப்ப்பு இருந்த போது நமது ரிசர்வ் வங்கி அவசர அவசரமாக தங்கத்தை அடகு வைத்துத்தான் இங்கிலாந்திடம் பணம் பெற்றது. நினைத்தவுடன் எளிதில் பணமாக மாற்றும் வசதி, சுலபமாக எடுத்துச் செல்லக் கூடிய அசையும் சொத்து, காலத்தால் அழியாத தன்மை ஆகியன இந்த மஞ்சள் உலோகத்தினை மற்ற எல்லா வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு உபகரணங்களை விட சிறப்பானதாக ஆக்குகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தங்கத்தின் விலை 6 மடங்கு ஏறியது. ஒரு கிராம் ரூ 3,300 வரை போனது.  கல்யாணத்துக்கும், காது குத்துக்கும் கோல்டு வாங்கியதால் மட்டுமே இப்படி தாறுமாறாக விலை ஏறவில்லை. அதற்கு பல வகையான காரணங்கள் இருந்தன.

நாடுகளுக்கு இடையே நடக்கும் சர்வதேச வர்த்தகம் தங்கத்தின் அடிப்படையிலேயே பல காலம் நடந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் சோர்வுற்றுப் போயிருந்த காரணத்தினாலும், போரில் ஈடுபட்ட பல நாடுகள் தமது தங்கத்தை அமெரிக்காவிடம் கொடுத்து ஆயுதம் வாங்கியிருந்ததாலும், சுதந்திரம் அடையும் நிலையில் இருந்த அடிமை நாடுகள் வறுமையின் பிடியில் இருந்ததாலும், பெரும்பாலான தங்கக் கையிருப்பு அமெரிக்காவிடம் குவிந்திருந்ததாலும் 1945 க்குப் பிறகு சர்வதேச வணிகம் அமெரிக்க டாலரில் நடந்தேறியது. அதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது.

நம்ம ஊர் ரிசர்வ் வங்கியைப் போல அமெரிக்காவின் மத்திய வங்கி ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கத்தின் மதிப்பு 35 டாலர் என நிர்ணயித்து வைத்திருந்தது. 35 டாலர் பணத்தை யார் கொண்டு வந்து கொடுத்தாலும் அதற்குப் பதிலாக ஒரு அவுன்ஸ் தங்கத்தை அமெரிக்க அரசாங்கம் கொடுக்கும். இது Gold Standard எனப்பட்டது. தங்கமும் டாலரும் வெவ்வேறல்ல என்பதனால் சர்வதேச வணிகம் முழுவதும் டாலரில் நடந்தேறியது. 1971 ஆம் ஆண்டு அமெரிக்கா இந்த கோல்டு ஸ்டாண்டர்டை முடித்துக் கொண்டது.

அதன் பிறகும் சர்வதேச வணிகம் டாலரில் நடந்தது. எனினும் கோல்டு ஸ்டாண்டர்டு இல்லாமையால் தங்கத்தின் முக்கியத்துவம் சர்வதேச அரங்கில் கூடியது. அமெரிக்க டாலரில் குறிப்பிடப்படும் தங்கத்தின் விலை ஏறியது. சுமார் ஒன்பது வருடத்தில், அதாவது 1980 இல், ஒரு அவுன்ஸ் $835 ஆக - கிட்டத்தட்ட 24 மடங்கு - உயர்ந்தது. தங்கத்தின் விலை எப்போதும் மேல் நோக்கியே செல்லும் என்ற கணிப்பும், நினைப்பும் அனைவரையும் ஆட்கொண்டது.

ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் நடந்தது வேறு. சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை தங்கம் முற்றிலுமாக பின்னுக்குத் தள்ளி விடும் என்ற கணிப்பு பொய்த்துப் போனது. கூடவே அமெரிக்கப் பொருளாதாரம் வலுவடைந்து கொண்டே சென்றது. இடையில் சோவியத் யூனியன் சுக்கு நூறாக உடைந்து போனதால் உலகின் ஒரே பொருளாதார மற்றும் இராணுவ வல்லரசாக அமெரிக்கா தன்னை நிறுவிக்கொண்டது. தங்கத்தின் ஒரே பயன்பாடு ஆபரணத்திற்காக மட்டுமே என நிரூபணமானது. இதனால் 2001 இல் ஒரு அவுன்ஸ் தங்கம் வெறும் $250 க்கு சறுக்கியது.

அதன் பிறகு டாட் காம் குமிழ் உடைவு உள்ளிட்ட பல பிரச்சினைகளை அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் எதிர்க்கொண்டது. தமது அந்நியச் செலவாணியை அமெரிக்க டாலரில் வைத்திருந்த பல நாடுகள் கூடவே கொஞ்சம் தங்கமும் வைத்திருந்தால் பரவாயில்லை எனக் கருதின. எல்லா நாடுகளும், எல்லா நாட்டு மத்திய வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கத்தை வாங்கிக் குவித்தன. பத்து ஆண்டுகளில், அதாவது 2001 - 2011 இல், ஒரு அவுன்ஸ் $250 இல் இருந்து $ 1,890 வரை ஏறியது. அதன் பிறகு மெதுவாகக் குறைந்து இந்த ஏப்ரல் மாதம் தடாலடியாகச் சரிந்து $ 1,400 க்கும் கீழே இறங்கியுள்ளது.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் தங்கத்தின் விலை உண்மையில் தங்கத்தின் விலையை மட்டும் குறிக்காமல் ரூபாயின் மதிப்பையும் சேர்த்தே குறிக்கிறது. 2011 க்குப் பிறகு தங்க விலை சர்வதேசச் சந்தையில் இறங்கினாலும், ரூபாயின் மதிப்பும் கூடவே சரிந்ததால் நமக்கு விலை குறைந்தது போலவே தெரியவில்லை. தங்கத்தின் விலை சரிவதை இப்போதுதான் உணர்கிறோம். ஒரு கிராம் ரூ 3,300 லிருந்து இப்போது ரூ 2,600 இல் ஊசலாடுகிறது.

ஏறிக்கொண்டே போன தங்கம் இப்போதுதான் கொஞ்சம் குறைய ஆரம்பித்திருக்கிறது என்பது ஆறுதல் அளிக்கிறது.  அதே நோக்கில்  இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஓன்றுண்டு. தங்கத்தின் மதிப்பு எப்போதுமே ஏறிக்கொண்டே போகும் என்கிற நினைப்பு தவறானது. அது மிகவும் பாதுகாப்பானது எனக் கருதுவதும் மாயை. அமெரிக்காவில் வேண்டுமானால் குறையலாம், இங்கே குறையாது என நினைக்க வேண்டாம். 1980 – 2000 கால கட்டத்தில் வெறும் 3.3 மடங்கு மட்டுமே இந்தியாவில் விலை ஏறியது. ஆண்டுக்கு சராசரியாக 6 அல்லது 7 சதவீத இலாபம் மட்டுமே இலாபம் தந்தது. இந்தக் கால கட்டத்தில் நமது வங்கிகள் இதை விட அதிகமான வட்டி கொடுத்தன என்பதைக் கவனிக்க வேண்டும்.

முன்பெல்லாம் பொருளாதாரப் பாடத்தில் ஒரு பொருளின் விலையை அதற்கான தேவையும், அதன் உற்பத்தியும் தீர்மானிப்பதாகச் சொல்லுவார்கள். இப்போது இந்தச் சமன்பாடெல்லாம் வெகு சிக்கலாகியுள்ளது. பங்குச் சந்தையைப் போல தங்கச் சந்தையிலும் கூட விலையை, அதன் போக்கை நிர்ணயிக்கும் முக்கியக் காரணியாக இன்றைக்கு ஊக வணிகம் இருக்கிறது. தங்கத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்ற 2010 மற்றும் 2011 இல் மட்டும் $ 26 பில்லியன் (சுமார் ரூ 1.35 இலட்சம் கோடி) தொகை தங்க ஊக வணிகத்தில் புரண்டது. ஆரம்பத்திலேயே சொன்னது போல கல்யாணத்துக்கும், காது குத்துக்கு கோல்டு வாங்கியதால் மட்டுமே தாறுமாறாக விலை ஏறவில்லை.

தங்கத்தில் பணம் போடுவது முதலீடா அல்லது சேமிப்பா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. பணம் வீக்கத்திற்கு இணையாக வளர்வது சேமிப்பு. பண வீக்கத்தை விடக் குறைவாக வளர்ந்தாலும் அப்படித்தான். பண வீக்கத்தை விடக் கூடுதலாக வளர்ந்தால் அது முதலீடு. எனவே தங்கம் கண்டிப்பாக சேமிப்புத்தான். ஆனால் பல்வேறு காரணிகளால் முதலீடு போன்ற ஒரு தோற்றம் கடந்த சில ஆண்டுகளில் உருவானது.

சிக்கலான, நிச்சயமற்ற காலங்களில் தங்கத்தில் கொஞ்சம் வைத்திருப்பது நல்லது. ஒன்றுமே இல்லாமல் கழுத்தும், காதும் மொட்டையாக இருப்பதும் சரியல்ல. இருக்கிற பணம் எல்லாவற்றிற்கும் பவுன் வாங்குவதோ, பர்சனல் லோன் போட்டு அதில் கோல்டு வாங்குவதோ தேவையில்லை.

அடுத்த பாகம்

No comments: