Monday, June 10, 2013

பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

என் நண்பர் ஒருவர் சொன்னார்: “கடந்த 10-15 ஆண்டுகளில் ஆண்கள் சமைப்பதற்குக் கற்றிருக்கிறார்கள். மாறாக பெண்கள் சமைக்காமல் இருப்பதற்குக் கற்றிருக்கிறார்கள்
பல செய்திகளை இது சொல்லாமல் சொல்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் நகர்ப்புறங்களில் விவாகரத்து விகிதம் அதிகரித்து வருவதை வாசிக்க நேரிடுகிறது. பெண்களுக்கு சம உரிமை, ஆணுக்கு நிகராக பெண்ணும் சம்பாதிக்க இயலுகிற சாத்தியம், பெண் கல்வியில் முன்னேற்றம் ஆகியன காலங்காலமாக அடங்கிப் போன இந்தியப் பெண்களில் ஒரு பிரிவினருக்கேனும் சுயமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

எல்லாக் காலத்திலும் பெண் ஆணைச் சார்ந்தே வாழ்ந்து வந்திருக்கிறாள். தகப்பன், கணவன், மகன் என ஒருவனைச் சார்ந்தே இருந்திருக்கிறாள். பொருளாதார ரீதியான தற்சார்பு என்பது அவர்களுக்கு ஒரு கனவாகவே நீடித்து வந்தது. அதனால் ஆணை அனுசரித்து, ஆணாதிக்கத்தின் பல அம்சங்களை அங்கீகரித்து அவற்றைச் சகித்து வந்திருக்கிறாள் பெண்ணானவள்.

இன்றைக்கு நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கிறது. காலங்காலமாக ஆண் செய்து வந்து பொருளீட்டும் பணியை பெண் பகிர்ந்து கொள்ளும் போது, பெண்கள் மட்டுமே பன்னெடுங்காலமாகச் செய்த குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் வேலையை ஆண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஓரளவுக்கு கல்வியும், உலக அனுபவமும் பெற்ற நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தில் பெரும்பாலான குடும்பங்கள் இப்படித்தான் உள்ளன. ஆண்கள் விட்டுக்கொடுத்து வாழப் பழகியிருக்கிறார்கள். சொல்லப் போனால் பெண்களுக்கான பிரச்சினை என்பது ஆண்களால் ஏற்படுகிறது என்று சொல்வதை விட அந்தந்த வீடுகளில் உள்ள மூத்த பெண்களால்தான் என்பதே பொருத்தமாக இருக்கும்.

வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் அது கழுத்தில் ID கார்ட் மாட்டிக்கொண்டு IT கம்பெனியில் பணியாற்றும் பெண்கள் மட்டுந்தான் என்றில்லை. எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு செல்வோர், கட்டிட வேலை செய்வோர், கிராமங்களில் விவசாயக் கூலிகள், சொந்த நிலத்தில் வேலை செய்யும் விசாயத்துக் குடும்ப்ப் பெண்கள் என அனைவருமே ஒர்க்கிங் விமென்’. மேலும் வேலை செய்யாத பெண்கள் என யாருமில்லை. குறைந்த பட்சம் அவர்கள் வீட்டிலாவது ஏதாவது வேலை செய்தபடியேதான் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் பொதுவான பிரச்சினை சச்சரவில்லாமல் குடும்பத்தை நகர்த்துவது. அவர்கள் சுலபமாகக் கையாள்வது மாமனாரை. கையாளச் சிரமப்படுவது மாமியாரையும், கணவனோடு கூடப் பிறந்த சகோதரிகளையுமே.

இப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாக இல்லாமல் இருப்பதால் பிரச்சினைகள் முன்பு போல இல்லை. அதனால் அரசு கேபிளில் குறிப்பிட்ட மெகா சீரியல் வராமல் இருப்பதுதான் தமிழகப் பெண்கள் சந்திக்கும் முதன்மையாக பிரச்சினையென யாராவது சொன்னால் சிரித்துத்தான் வைப்போமே!

(2011 தீபாவளிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட சிறப்பு தமிழ் இதழில் எழுதியது

No comments: