Tuesday, June 11, 2013

காமம் சார்ந்த பிரச்சனைகள்

நான் நிதி ஆலோனை தொடர்பாக பல பேரோடு உரையாடுவதுண்டு. அப்போதெல்லாம் நமது சமூகத்தில் இரண்டு விஷயங்களைப் பற்றி பேசுவதை பெரும் பாவமாக அல்லது அருவருக்கத்தக்க ஒரு செய்கையாக்க் கருதுகிறார்கள் என்பதைத் தவறாமல் குறிப்பிடுவது வாடிக்கை. அவற்றில் ஒன்று பண மேலாண்மை, மற்றது செக்ஸ்.

இவை இரண்டிலுமே குறிப்பிடத் தகுந்த அளவு முன்னேற்றத்தை சமீப காலத்தில் காண்கிறோம். சென்ற தலைமுறைகளில் கன்னிப் பருவத்திலே ராஜேஷ் மாதிரி கிராமங்களில் எத்தனை பேர் சிகிச்சையும், ஆலோசனையும் பெறாமல் தங்கள் இளமையை வீணடித்தார்கள் எனத் தெரியாது. இன்றைக்கு பரவாயில்லை.

இயந்திரமயமாக ஓடும் பதற்றமும், அழுத்தமும் நிறைந்த நடப்பு சூழலில் காமம் சார்ந்த பிரச்சினைகளும், அவற்றின் விளைவாக குடும்ப வாழ்வில் ஏற்படும் நுட்பமான சிக்கல்களும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவை.

உடலுறவில் விருப்பமின்மை, ஒரே மாதிரி சலிப்பு ஊட்டக்கூடிய நிகழ்வாக மாறிவிடும் செக்ஸ், விருப்பமிருந்தாலும் கிளர்ந்தெழ முடியாத சிக்கல், விந்து முந்துதல் அல்லது விந்து வெளியேறாமலே இருந்தல், வலி என பலதரப்பட்ட காமம் சார்ந்த பிரச்சினைகளை முறையான குடும்ப வாழ்வில் ஈடுபடும் தம்பதியினரிடம் வெகுவாகக் காணலாம்.

உடலுறவில் முழுமையான ஈடுபாடும், திருப்தியும் ஏற்படாத போது பரஸ்பர புரிந்துணார்வு குறைந்து போக வாய்ப்புண்டு. குடும்பத்தில் தவிர்த்திருக்க இயலுகிற பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் பூதாகாரமாக மாறும் அபாயமும் ஏற்படலாம். கூடவே சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் குற்ற உணர்ச்சியையும் அது உருவாக்க்க் கூடும். பெரும்பாலும் அது கடந்த கால உறவுகள் அல்லது சுய இன்பம் சார்ந்த்தாக அத்தகைய குற்ற உணர்வு அமைகிறது.

பல குடும்பங்களில் காமம் தொடர்பான பிரச்சினைகளைச் சகித்தபடியே அனுசரித்து வாழ்ந்து விடுகிறார்கள். ஒரு சிலரே தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். மற்றவர்கள் குடும்பத்தில் கிடைக்காத திருப்தியை சந்தர்ப்பம் வாய்க்கும் பட்சத்தில் வெளியே தேடிக்கொள்கிறார்கள்.

ஆணும், பெண்ணும் பணி நிமித்தமாகவோ அல்லது வேறு பல செய்கைகளுக்காகவோ பல பேரோடு தொடர்பாட வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும் போது குடும்ப வாழ்க்கைக்கு வெளியே தகாத உறவை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஏற்படுத்திக் கொள்வது முன் எப்போதையும் விட இன்றைக்கு சுலபமாகியிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு நாளில் அது வெளியே தெரிய வரும் பட்சத்தில் சரிசெய்ய முடியாத அளவிற்கு சேதாரம் உண்டாகும்.

நான்கு சுவர்களுக்குள், இரண்டு ஜீவன்களுக்கு இடையே நடக்கும் தாம்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை இருவரும் மனம் விட்டுப் பேசி தகுந்த ஆலோசனையைப் பெறுவதே சரியான தீர்வாக இருக்கும். 

No comments: