Thursday, June 13, 2013

நுகர்வுக் கலாச்சாரம், குடி, குற்றம்

மனிதனின் தேவைகளை அத்தியாவசியத் தேவைகள், ஆடம்பரத் தேவைகள் என இரு வகையாகப் பிரிக்கலாம். அவற்றில் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும், ஆடம்பரத் தேவைகளைத் தவிர்க்க வேண்டும். இதில் பலருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

அதே நேரம் அத்தியாவசியத் தேவைகள் எவை, ஆடம்பரத் தேவைகள் எவை என்பதைத் தீர்மானிப்பதில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அபிப்ராயம் உண்டு. ஒரு காலத்தில் ஆடம்பரமாக்க் கருதிய பொருட்கள் இன்று அத்தியாவசியமானவை ஆகி விட்டன. பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன், மோட்டார் சைக்கிள் என பட்டியல் அவரவர் வசதி வாய்ப்புக்கு ஏற்ப நீளும்.

இங்குதான் பிரச்சினையே. பஸ்ஸில் ஏற முடியாமல் தத்தளிக்கும் மக்களுக்கு மத்தியிலே கப்பல் மாதிரி முப்பது இலட்ச ரூபாய் காரில் ஒற்றை மனிதன் செல்லும் போதும், ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் தெருவில் படுத்திருக்கும் ஆட்கள் உள்ள ஊரில் ஆயிரக் கணக்கில் செலவழித்து பார்ட்டி வைத்து அதில் பாதியை வீணடிக்கும் போதும், ஐம்பது ரூபாய்க்கு மருந்து வாங்க முடியாமல் ஒருவன் தவிக்கும் இடத்தில் ஒருவன் ஆயிர ரூபாய் செலவழித்து ஆயில் மசாஜ் செய்துகொள்ளும் போதும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அப்பட்டமாக வெளிப்படுகிறது.

செலவிடப்படும் பெருந்தொகை ஆரம்பரத் தேவைகளுக்கானவை எனும் போது சமூகத்தின் அடி மட்டத்தில் பொருளாதாரக் குற்றங்கள் பெருகுவது இயல்பே. நாள் முழுவதும் உயிரைக் கொடுத்து கடுமையாக வேலை செய்தால் அன்றாடங்காய்ச்சியாகவே வாழலாம். ஐந்து பவுன் செயினை அறுத்தால் ஒரு இலட்ச ரூபாய். ஏன் பெருகாது குற்றங்கள்?

நுகர்வுக் கலாச்சாரத்தின் இன்னொரு அங்கம் குடிப் பழக்கம். நாம் சொல்வது சராசரிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டக் கூடிய வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கும் குடிப் பழக்கம். அதன் முக்கிய விளைவு போக்குவரத்துக் குற்றங்கள் மற்றும் விபத்துகள். பெண்களிடம் அத்து மீறி நடந்து கொள்வதும், வீண் சண்டைக்குப் போவதும் அதிகரிக்கின்றன.

குறைவான வருமானம் ஈட்டக் கூடிய வட்டாரங்களில் குடிப்பழக்கம் நுகர்வுக் கலாச்சாரத்தின் நேரடியான பிரதிபலிப்பில்லை என்றாலும் கூட சமூகத்தில் நிலவும் அதிகரித்த பணப் புழக்கத்தின் ஓட்டம் அடித் தட்டு மக்களையும் சென்றடைவதை மறுப்பதற்கில்லை. அதனால் இம்மக்கள் குடிக்கும் இடைவெளி குறைகிறது. இந்த மட்ட்த்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடங்கி போதையினால் உணர்ச்சி வேகத்தில் செய்து விடவல்ல பெரிய தவறுகள் வரை நிகழும் அபாயம் உண்டு.

நுகர்வுக் கலாச்சாரத்தின் பல நீட்சிகள் கவனிக்காமல் விடப்படுகின்றன. முடிந்த வரை ஆடம்பரத் தேவைகளைக் குறைத்து அத்தியாவசியத் தேவைகளோடு வாழப் பழகிக் கொண்டால் நல்லது. கூடவே அத்தியாவசிய/ஆடம்பரத் தேவை வரையறையை மறுபரிசீலனை செய்வதுந்தான்.

(நன்றாகப் படிக்கிற கல்லூரி மாணவர்களே திருட்டு முதலிய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என ஒரு விஷயத்தை இன்று காலை FM இல் பேசினார்கள். அது தொடர்பாக 2011 தீபாவளிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட சிறப்பு தமிழ் இதழில் எழுதியது)

No comments: