Friday, June 14, 2013

சிறுதொழில்களின் மீதான புறக்கணிப்பும் பன்னாட்டு நிறுவங்களுக்கு ஆதரவும்

பொருளாதாரத்திலே எகானமீஸ் ஆஃப் ஸ்கேல்என்றொரு கோட்பாடு உண்டு. பொருளின் உற்பத்தி அளவு அதிகரிக்கும் போது அதன் விலை குறையும் என்பதை அது குறிப்பிடுகிறது. ஆயிரம் கல்யாணப் பத்திரிக்கை அடிப்பதற்கும், ஒரு கல்யாணப் பத்திரிக்கை அடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை டை எல்லாம் கட்டி எம்.பீ.ஏ வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் சமாச்சாரம்.

பெரிய அளவில் தொழில்களும், தொழிற்சாலைகளும் அமைந்தால் உற்பத்தி பெருகும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அவை தொடர்பான உப தொழில்கள் முளைக்கும். குறிப்பிட்ட அந்தப் பகுதியின் பரவலான பொருளாதார நிலை மேம்படும். அரசாங்கத்துக்கும் வரிகள் மூலம் வருமானம் பெருகும். இவை எல்லாவற்றுக்கும் அடித்தளமாக அமைவது மூலதனம் அல்லது முதலீடு.

முதலீடு என்றால் அந்நிய முதலீடு என்ற வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்க்க முடிவதில்லை. மத்திய அரசாகட்டும் அல்லது மாநில அரசுகள் ஆகட்டும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டாதவை குறைவு. மாநிலங்களுக்கு இடையே மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை ஆண்ட/ஆளும் கட்சிகளுக்கு இடையே கூட இந்த விஷயத்தில் போட்டிதான்.

அதே நேரத்தில் அரசாங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் ஆர்வம் வெறும் பொருளாதார நோக்கில் மட்டுமே அமைந்ததென்று நம்புவது அறிவீனம். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் வாரிக் கொடுக்கும் அரசாங்கம் வேளாண்மை மேம்பாட்டுக்கு காட்டும் அக்கறை கொஞ்சமே. எல்லாமே இங்கே பர்சென்டேஜ் கணக்கில் இயங்குவதால் டீல் சைஸ் பெரிதாக இருப்பது ஆட்சியாளர்களுக்கு ஏதுவாக இருக்கிறது.

மீனவர்களை எல்லாம் பலவீனப்படுத்தி துரத்தி விட்டு மீன் பிடிக்கும் உரிமையை பன்னாட்டு நிறுவன்ங்களுக்கு வழங்கி, அதே மீனவர்களை அதில் வேலைக்காரர்கள் ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற ரீதியில் இருக்கிறது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான முன்னுரிமை.

கடந்த சில மாதங்களில் திருப்பூரில் எத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள் என்பதைக் காட்டிலும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி நூறு பேரை வேலையை விட்டுத் தூக்கும் செய்தி முதன்மையாகத் தெரிகிறது.

சிறு தொழில்களைப் புறக்கணித்து விட்டு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்கள், மெய்யான பொதுவுடமைவாதிகளால் முன் வைக்கப்படுகிறது.

அரசாங்கம் தர வேண்டிய கல்வியும், மருத்துவமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு தனியார் செய்ய வேண்டிய மதுபான வியாராபத்தை அரசாங்கும் செய்கிற யுகத்தில் இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

இருந்த போதும், வலிமையில்லாத சிறு தொழில் முனைவோரைக்காட்டிலும் கார்ப்பரேட் நிறுவன்ங்களுக்கு அதிக முக்கியத்தும் கிடைப்பது இந்தியாவில் மட்டும் உள்ள நிலைமையல்ல. பலம் பொருந்தியவர்கள் ஆட்சியாளர்களோடு அதிகமாக உறவாடுவதும், அரசின் கொள்கைகளை தமக்குச் சாதமாக வகுப்பதும் காலங்காலமாக உலகெங்கும் நடப்பதுதான்.

சென்னையில் இருந்து கோவைக்கு காரில் பயணிக்கும் போது சாலைப் பயன்பாட்டிற்காக செலுத்தும் சுங்கக் கட்டணம் ரயிலில் செல்ல ஆகும் செலவை விட அதிகமாக இருக்கிறது. பிறகெதற்கு ரோடு டாக்ஸ் வாங்கறாங்கனு கேட்கவா முடிகிறது? நெடுஞ்சாலைகளை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவன்ங்களா அமைத்திருக்கின்றன?

Survival of the fittest என்றுதான் பரிணாமக் கோட்பாடு சொல்கிறது. அரசியல், பொருளாதாரம் மட்டும் விதிவிலக்கா என்ன?

(2011 தீபாவளிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட சிறப்பு தமிழ் இதழில் எழுதியது)

No comments: