Saturday, June 15, 2013

கார்ப்பரேட் மருத்துவ வர்த்தகம்

சில தொழில்கள் வியாபாரமாகப் பார்க்கப்படுகின்றன. வேறு சில சேவையாக்க் கருதப்படுகின்றன. மருத்துவம், கல்வி முதலியன இரண்டாம் வகையைச் சேர்ந்தவை, சில காலம் முன் வரைக்குமாவது.

இப்போது நிலைமை வேறு. அரசியலைப் போலவே கல்வியும், மருத்துவமும் வணிகமயம் ஆகி விட்டன. பலம் பொருந்தியோர் பணம் போட்டு பணம் எடுக்கும் முதன்மையான சாதனமாக அவை மாறியுள்ளன.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனை, KKR காது மூக்கு தொண்டை மருத்துவ மனை என்று பெயர்களைக் காணும் போது அவை மருத்துவர்களால் தொடங்கப்பட்டு, மூத்த மருத்துவர்களால் மேலாண்மை செய்யபடுபவை என்ற பிம்பமாவது நிலைக்கிறது. கார்ப்பரேட் மருத்துவமனைகள் இதற்கு நேர் எதிரானவை. அவற்றை இயக்குவது பெரும்பாலும் மேனேஜ்மென்ட் படித்த கணவான்களாக இருக்கும்.

இப்போதெல்லாம் மருத்துவனைக்குச் சென்றாலே என்ன வியாதி என்று கேட்கும் முன்னர், என்ன வேலை செய்கிறீர்கள், எவ்வளவு வருமானம் என்பதைத் தெரிந்துகொள்ளும் நோக்கிலேயே கேள்வி கேட்கிறார்கள். பணம் படைத்தவனுக்கு ஒரு வைத்தியம், பணம் இல்லாதவனுக்கு ஒரு வைத்தியம் என்ற நிலை.

மருத்துவர்களும், மருத்துவம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களும் சமூகத்தின் மேல் தட்டு வர்க்கத்தினராகவே ஒளிர்கிறார்கள். அதே நேரம் அவர்களும் ஒரு வகையில் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார்களோ என்ற எதார்த்தமான அச்சம் ஏற்படுவத்த் தடுக்க முடியவில்லை.

ஸ்பெஷலிட்டாக ஒரு கார்ப்பரேட் மருத்துமனையில் பணியாற்றும் ஒரு டாக்டர் தன்னால் எத்தனை பெட் நிரம்புகிறது, எத்தனை முறை ஆபரேஷன் தியேட்டர் புக் ஆகிறது, எத்தனை டெஸ்ட் எழுதுகிறோம் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். டார்கெட் என்பது இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளைப் போலவே மருத்துவர்களுக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. மருத்துவமனையில் வருமானத்தைப் பொருத்தே டாக்டர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது போலும்.

இன்னொரு பக்கம் அறிகுறிக்கு மிகத் தோதான மருந்தையும், மருத்துவ உபகரணத்தையும் பரிந்துரைப்பதை விட மருந்துக் கம்பெனியின் நிர்ப்பந்த்த்தில் நோயாளிகளுக்கு சாதமில்லாத (ஒரு வேளை முற்றிலும் பாதகமானதாக இல்லாமல் இருக்கலாம்) காரியங்களைச் செய்யவும் நேரிடுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைவது முதலீடு. மருத்துவப் படிப்புக்கும் நாற்பது, ஐம்பது இலட்சம் செலவு செய்து படித்து விட்டு அதை துரிதமாக திருப்பி எடுக்க வேண்டிய கட்டாயம். படிப்பதற்கே 5 ஆண்டுகள், அதைத் தொடர்ந்து அனுபவம் பெற சில ஆண்டுகள் என சொந்தமாக பிக்கப் ஆகவே பத்தாண்டு ஆகி விடுகிறது மருத்துவர்களுக்கு. இதற்குப் பதில் ஒரு கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் உடனே சேர்ந்து விடலாம்.

எத்தனை காசு செலவு செய்து படித்தாலும் அதை சுலபமாகத் திருப்பி ஈட்டி விடலாம் என சமூக, பொருளாதார சூழல் ஊக்குவிக்கிறது. கல்வியும், மருத்துவமும் அடிப்படையில் அத்தியாவசியத் தேவைகள் என்றாலும் கூட ஆடம்பரம் கலந்து அந்தத் தேவைகள் இப்போது விற்கப்படுகின்றன.

மிக முன்னேறிய மேலை நாடுகளை சிட இந்தியாவில் மருத்துவச் செலவு குறைவு. மெடிக்கல் டூரிசம் என்ற பெயரில் முன்னேறிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்வது அதிகரித்திருக்கிறது. ஆண்டுக்கு சுமார் ஒன்றரை இலட்சம் பேர் வருகை புரிகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். சுமார் 2,00,000 டாலர் செலவில் அமெரிக்காவில் செய்யும் இருதய வால்வு மாற்று அறுவைச்சிகிச்சையை இந்தியாவில் வெறும் பத்தாயிரம் டாலர் செலவில் செய்துகொள்ள முடிகிறது.

தட்டையாகிவிட்ட இன்றைய உலகில் அமெரிக்கர்கள் தங்கள் வேலைகளைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியர்களோடு போராடுவதைப் போல, சூப்பர் ஸ்பெஷல் மருத்துவ வசதிக்காக இந்தியர்கள் அமெரிக்கர்களோடு போட்டியிட வேண்டி வரும் போல இருக்கிறது.

மருத்துவம் என்பது வியாபாரம் என்று ஆன பிறகு நோயாளிகள் எல்லாம் வாடிக்கையாளர்கள் தானே?

(2011 தீபாவளிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட சிறப்பு தமிழ் இதழுக்கு எழுதியது)

No comments: