Monday, June 17, 2013

அடையாளச் சிக்கல்

ரஜினி நடித்த படம் ‘முத்து’. அதில் தாடி வைத்த வயதான ரஜினியிடம், “நீங்க யார்? என்ற கேள்வி கேட்கப்படும் போது, “என்னப்பா பெரிய பெரிய ஞானிகளுக்கு புரியாத கேள்வியை என்னைப் பாத்து கேக்கறே?என்று பதில் வரும்.

ஒருவனுடைய பலம் மற்றும் பலவீனங்களை அறிவது ஒரு பக்கம் இருந்தாலும், அவன் தன்னை எவ்வாறு உணர்கிறான் என்பதில் பெரும் சிக்கல் நடப்பு சூழலில் நிலவுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் ஸ்வீடனில் சில தமிழ்க் குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும், மன்னாரிலும் பிறந்து வளர்ந்த பெற்றோரின் குழந்தைகள் “நான் ஸ்வீடிஷ்என்கிறார்கள். தங்களுக்குள் ஸ்வீடிஷ் மொழியில் பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களை தமிழர்களாக உணர்வதைக் காட்டிலும் ஸ்வீடிஷ் ஆக உணர்வதே அதிகம்.

ஆனால் அவர்களுக்குத் தெரியும் அவர்கள் எக்காலத்திலும் ஸ்வீடிஷ் ஆக முடியாதென்று. இங்கிலீஷ் பேசினால் மட்டுமே செல்லமுத்து குப்புசாமி இங்கிலீஷ்காரன் ஆகிவிட முடியாதல்லவா? வட நாட்டில் வாழும் பல தமிழ் பிராமணர்கள் தம்மை தமிழர் என்பதை விட இந்தியர் என்றே கருதினாலும் வடக்கத்தியர்கள் அவர்களை மதராஸி என்ற மனநிலையிலேயே நோக்குகிறார்கள்.

ஒரு நபரின் குழந்தைப் பருவம் அல்லது பதின்ம வயதில் வாழும் சூழலே அந்நபர் தன்னை எவ்வாறு அடையாளம் காண விரும்புகிறார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கிய காரணியாகத் திகழ்கிறது.

கல்லூரி பயிலும் கிராமப்புற மாணவர்கள் தமது பின்னணியை மறைத்து ஆடம்பரமாக்க் காட்டிக்கொள்வது ஒரு வகை, இந்தியனா அல்லது தமிழனா என்று தீர்மானிக்க முடியாத குழப்பத்தில் சிலர், தமிழன் என்பதைக் காட்டிலும் இன்ன சாதியைச் சார்ந்தவன் என்பதையே முதன்மையாகக் கருதும் சிலர், முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக நாலு பேர் கூடியிருக்கும் இடத்தில் தமது கருத்தைச் சொல்லத் தயங்கும் தர்மசங்கட்த்தில் பலர், ஆஸ்திரேலியாவில் அழிச்சாட்டியம் பண்ணி அடி வாங்கிய இந்திய மாணவர்கள் என நீள்கிறது இந்தப் பட்டியல்.

திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்கள் காலங்காலமாக அடையாளச் சிக்கலை சந்தித்தே வந்திருக்கிறார்கள். மாறி வரும் சமூக, பொருளாதார சூழலின் காரணமாக திருமணத்திற்கு முன்பே பெண்களும், பெரும்பான்மையான ஆண்களும், குடும்பங்களும் இடம்பெயர நேர்வதால் அடையாளச் சிக்கல் புதிய உயரத்தை இன்று தொட்டிருக்கிறது.

இந்த சிக்கலுகான தீர்வு உள்ளிருந்துதான் உருவாக வேண்டும் என்று சொல்லி இந்தத் தலைப்பை முடிப்பதென்றால் ‘உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்என்ற எம்.ஜி.ஆர் பாடலில்தான் தொடங்க வேண்டும்.

(2011 தீபாவளிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட சிறப்பு தமிழ் இதழுக்கு எழுதியது)

No comments: