Wednesday, June 19, 2013

மயில் கெண்டையின் எழுதப்படாத வரலாறு

இப்போதெல்லாம் ஊருக்குப் போவது மிகவும் அரிதாகப் போய்விட்டது. முன்பெல்லாம் கல்யாணம், காது குத்து, பெரிய காரியம் என எல்லாத்துக்கும் உடனே போய் விடுவேன். இப்போது ஊருக்குப் போகும் போது என்னென்ன backlog இருக்கோ அதெல்லாம் கவர் பண்ணிட்டு வரவேண்டியதா இருக்குது. ஒரு நாள் லீவ் கிடைத்தேலே பெரிய விஷயம். ஒரு வாரம் லீவ் அப்ரூவ் ஆவது ஃபேஸ்புக்கில் ஆயிரம் லைக் வாங்குவது போல. அப்படி ஒரு அபூர்வம் நிகழ்ந்து ஒரு வாரம் லீவ் போட்டு விட்டு ஊருக்குப் வந்திருக்கிறேன்.

பெரிதாக ஒன்றும் திட்டமில்லை. சும்மாதான் ஊரைச் சுற்றிக்கிடந்தேன். தினம் ஒரு சொந்தக்காரர் வீட்டுக்குப் போவதும், மூன்று இளநீர் குடிப்பதுமாக பாதி லீவ் கழிந்த போதுதான், எலந்தக்காட்டு அய்யன் கெடையா கெடக்குறார், போய் ஒரு எட்டு பாத்துட்டுப் போன்னு அப்பா சொன்னார். அவரது உண்மையான பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் இன்று உயிரோடு இல்லை. அவர் வைத்திருந்த எலந்தக் காட்டை அவரது மகன் திருப்பூர்க்காரன் யாரோ ஒருத்தனுக்கு விற்று அதில் காத்தாடி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதாங்க windmill.

எலந்தக்காட்டு ஐயன் எங்களது சின்ன வயதில் ஹீரோ. கோவணம்தான் கட்டியிருப்பார். அவருக்குத் தெரியாத வேலையுமில்லை, விஷயமுமில்லை. ஆட்டுப் பொச்சில் அலுங்காமல் கையை விட்டு கழுத்துத் திரும்பிய குட்டியை அலேக்காக வெளியே எடுத்து டெலிவரி பார்ப்பதில் கில்லாடி. ‘மல பேயுமுங்களாங்கய்யா’ என யாராவது கேட்டால் அதற்கு அவர் சொல்லும் பதில் இது வரை பொய்த்து இருபது வருடத்தில் நான் கண்டதில்லை. எதைவாயது வாசிக்கக் கொடுத்தால் ராகம் போட்டுத்தான் படிப்பார். அது தினத்தந்தியாக இருந்தாலும். அவருக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த வாத்தியார் எல்லாமே ரைம்ஸ் ஸ்டைலில் கடிக்கக் கற்றுக்கொடுத்திருந்தார் போலும்.

ஒரு தடவை இப்படித்தான் ஒரு பெண் மாவாட்டும் செக்கில் மாட்டுக்கு பருத்திக்கொட்டை ஆட்டிக்கொண்டிருந்த போது எலந்தக்காட்டு அய்யன் அந்த வழியாக வந்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு பொம்பளைப் புள்ளைங்க அந்த அம்மணிக்கு. இப்ப மூனாவது வயித்துல. ‘ஏனுங்கய்யா, எனக்கு பையன் பொறக்குமா புள்ள பொறக்குமுங்களா?’ என அந்தம்மா கேட்கவும் இவர் ஒரு கணம் கூட யோசிக்காமல், ‘கொட்டை ஆட்டிக்கிட்டே கேக்கறே… உனக்கு கொட்டைய ஆட்டிக்கிட்டு ஆம்பளப் பையன் பொறப்பாம்போ’ என்று சொன்ன வாக்கு மிகவும் பிரபலம். கொட்டையை ஆட்டிக்கொண்டு பிறந்த அந்தப் பையன் இப்போது பெங்களூரில் பொட்டி தட்டிக்கொண்டிருக்கிறான்.

நான் அவரைப் பார்க்கப் போனது போது அவரால் என்னை சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஒரு கால் விளங்கவில்லை. எல்லாமே அந்தக் கயிற்றுக் கட்டலில்தான். அவர் பெயரில் சொத்துபத்தெல்லாம் ஒன்றுமில்லை. அதனால்தானோ என்னவோ மகனோ மருமகளோ அவரைக் கவனிப்பதில்லை. கேரளாவில் கந்து வட்டிக்கு விடும் பேரன் எப்போதாவது வருவானாம். அவர் படுத்திருந்த கட்டிலைச் சுற்றி ஒரே நாற்றம். அரு ஆள் விட்டு டெட்டால் போட்டு வழித்திருக்கலாம்.

‘ஆரப்பா அது?’ என்றார்.

விளக்கம் சொன்னது போது, ”அட போட்டாகாரனா? புடுக்க ஆட்டிக்கிட்டு மெட்ராஸ்லயே படுத்துக்க. நாங்கல்லாம் செத்தமா பொழச்சமானு எட்டிப் பாத்தராத” என்று சிரித்தார். ஒரு 13 வருடத்துக்கு முன் அவரை போட்டோ எடுத்தேன். அப்போதெல்லாம் டிஜிடல் கேமிரா இல்லை. ஃபிலிம் ரோல் போட வேண்டும். கேமிராவோடு சுற்றிக்கொண்டிருந்த என்னைப் பார்த்ததும், ‘அட என்னைய ஒரு போட்டா புடியப்பா’ என குழந்தையைப் போல ஆசைப்பட்டார். என்னிடம் ரோல் இல்லை. அதைச் சொன்னால் பொக்குனு போய் விடுவார் எனபதால் சும்மா பிளாஷ் போட்டு ஓரு கிளிக் செய்தேன். இந்தப் பதிமூனு வருடமாக பார்க்கும் போதெல்லாம் கிண்டல் செய்கிறார்.

‘சேரி.. இந்த தொறப்புக் குச்சியை எடுத்து பொட்டிய நீக்கு’ - அய்யன் தனது அரணாக்கயிற்றில் தொங்க விட்டிருந்த சாவியைக் காட்டினார். துருவேறிப்போன பழைய இரும்புப் பெட்டி. என்ன வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. ”கீழாப்பல ஒரு பொஸ்தகம் தட்டுப்படுதா பாரு”

கோடு போடாத நோட்டு அது. கருப்பு மையில் calligraphy ஸ்டைலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மிக அழகான கையெழுத்து. பச்சை மையில் படங்கள் வரைந்திருந்தது. அந்த நோட்டில் கால்வாசியை கரையான் அரித்திருந்தது.

”அப்ப எனக்கு பதனேழு வயசு. பெராயத்துல(பிராயம்) குருதையெல்லாம் வெச்சிருந்தன்” என்று ஆரம்பித்தார். மற்றவர் சொன்னால் பில்ட்-அப். எலந்தக்காட்டு அய்யன் இது வரைக்கும் புல்ஷிட்டிங் செய்ததில்லை.

சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரருக்கு அப்புறம் சுற்று வட்டாரக் கிராமங்களியேலே குதிரை வைத்திருந்தது இவர்தான். ஒரு நாள் புல்லாச்சியிலிருந்து (பொள்ளாச்சியை அவர் அப்படித்தான் சொல்வார்) டொக் டொக் டொக் டொக் என திரும்பி வந்துகொண்டிருந்த போது குத்துயிராக ஒரு வெள்ளைக்காரன் கிடந்திருக்கிறான். அவன் கால் முறிந்திருந்தது. சுய நினைவும் இல்லை.

அவனை தனக்கு முன்னால் உட்கார வைத்து துண்டு கொண்டு தன்னோடு சேர்த்துக்கட்டி அப்படியே சின்னியாம்வலசு பண்டுதகாரர் மடத்தில் சேர்த்து விட்டார். பண்டுதகாரர் குடும்பத்தில் அனைவரும் குடியானவர்கள். பல பரம்பரையாக ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் அவர்கள். தேறாது என இங்கிலீஷ் டாக்டர்கள் கைவிட்ட கேஸ்களையெல்லாம் குணப்படுத்தி நடமாட வைத்திருக்கிறார்கள். யாருக்கும் கட்டணம் கிடையாது. குணமானால் சென்னிமலை உண்டியலில் காசு போடுங்கள் என்று சொல்லுவார்கள். அவ்வளவுதான்.

அங்கு அந்த வெள்ளைக்காரன் நாலு மாதம் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தான். நடுவே வந்து அவனைப் பார்த்து விட்டுப் போவார். கூடிய விரைவில் இருவரும் ஃபிரண்ட் ஆகிப் போனார்கள். அவன் யாரென்ற விவரம் அப்போதுதான் அய்யனுக்குத் தெரிந்தது.

இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த சமயம். பிரிட்டிஷ் போர் விமானம் ஒன்று தாராபுரத்துக்குப் பக்கத்தில் விழுந்து நொறுங்கியது. இரண்டு பேர் ஸ்பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உயிரோடு மீட்கப்ப்பட்டனர். மூன்றாவதாக நம்ம ஆள். அவன் விமானம் விழப்போகிறது என்பதைத் தெரிந்து மூன்று கிலோ மீட்டருக்கு முன்பாகவே குதித்து விட்டான். தாழ்வாகப் பறந்ததால் கால் முறிந்ததோடு தப்பித்தான். அதுவும் பொள்ளாச்சியிலிருந்து ரிட்டர்ன் ஆன அய்யன் கண்ணில் பட்டதால். தாரபுரம் போலீஸ் மூன்று மாதம் தேடிய பிறகுதான் மூன்றாவது ஆள் பண்டுதகாரர் மடத்தில் உயிரோடு இருக்கிறான் என்பதையே கண்டுபிடித்தார்கள்.

எலும்பு சரியான பிரிட்டிஷ்காரனும், எலந்தக்காட்டு அய்யனும் குளோஸ் பிரண்ட்ஸ் ஆகி விட்டனர். ஒரே குதிரையில் இரண்டு பேரும் சவாரி போவார்கள். வேட்டைக்குப் போவார்கள். அதை விட முக்கியமாக அமராவதி ஆற்றிலேயே கிடப்பார்கள். ’உங்கூட்டாளிக்கு காத்தாலயே சொரந்துக்கிச்சா?’ என்று கூட அய்யனின் மனைவி கிண்டல் செய்யுமளவு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். நம்ம ஆளுக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. அவன் தமிழ் கற்றுக்கொண்டானா தெரியாது. ஆனால் மொழி ஓரு பிரச்சினையாக இருந்ததில்லையாம்.

வெள்ளைக்காரனுக்கு மீன் பிடிப்பதில் ஆர்வம் அதிகம். அப்போது மயில் கெண்டை என்ற மீன் இருந்தது. மயிலைப் போல ஊதாவும், பச்சையும் கலந்த வண்ணத்தில் இருக்கும்.  நல்ல தண்ணீரில் வாழும் மீன் அது. கடலில் இருக்காது. அமராவதி ஆறு மயில் கெண்டைக்குப் பேர் போனது. வட இந்தியாவில் இருந்தெல்லால் ராஜவம்சத்தினர் மயில் கெண்டை பிடிப்பதற்காக அமராவதிக்கு வருவது வழக்கமாக இருந்ததாம்.

அய்யனின் பிரிட்டிஷ் ஃபிரண்ட் மயில் கெண்டையில் வெகுவாகக் கவரப்பட்டான். அதைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆராய்ச்சி செய்தான். உலகத்துக்கு மயில் கெண்டையை அறிமுகப்படுத்துவேன் என சபதம் எடுத்தான். ஆராய்ச்சிக் குறிப்புகளை எழுதி வைத்துக்கொண்டான். அதற்குள் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பதும் உறுதியாகி விட்டது. ஆனாலும் அவன் இன்னும் சில ஆண்டுகள் இங்கிருக்க விரும்பினான். உலகத்துக்கு ஒப்பற்ற ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டான். எல்லாம் அவனது எடின்பர்க் காதலி திருப்பூரில் வந்து ரயில் இறங்கும் வரைதான்.

அந்த வாழைத்தண்டு தொடையழகி அவன் எழுதி வைத்திருந்த குறிப்புகளில் பாதியைக் கிழித்துப் போட்டாள். மீதியைத் தூக்கிப் போட்டாள். அதைத்தான் எலந்தக்காட்டு அய்யன் பொறுக்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.

’இது அழிஞ்சரக் கூடாது சாமி’ என்றபடி என் கையைப் பிடித்துக்கொண்டார். அதிகம் பேசவில்லை. அவரது கை நடுங்கிக்கொண்டே இருந்தது. கண்களில் ஆழமான அமைதி.

அடுத்த நாள் அமராவதி ஆத்து மேட்டில் எரிந்துகொண்டிருக்கிறது எலந்தக்காட்டு அய்யனின் கட்டை, ஒரு வழியாக இந்த போட்டாக்காரன் தன்னை போட்டா பிடித்து விட்ட திருப்தியிலும், அவன் கையில் திணித்த கால் குயர் கரையான் அரித்த காகிதம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையிலும். 

4 comments:

Senthil Kumar Balakrishnan said...

Chellamuthu, kuppusamy!
Miga arumaiyaana mozhi nadai!! Kathaiyum miga arumai!!!

ten said...

Uyirottamana nigalvugalin padivu...Vaazhtukkal Kuppusamy!

semmal G said...

Uyirottaamaana padivu..Vaazhtukkal

தாராபுரத்தான் said...

இனிக்கும் எழுத்துங்கோ...