Thursday, June 20, 2013

பில் கேட்ஸ் த பிசினஸ்மேன்

எதிர்காலத்தைக் கணிப்பது என்பது வேறு. அந்த எதிர்காலத்தையே உருவாக்குவது என்பது வேறு. உலகம் முழுவதும் பில் கேட்ஸ் என்று அழைக்கப்படும் வில்லியம் ஹென்றி கேட்ஸ் III இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் அவர் அளவுக்கு உலக மக்களிடம் தாக்கத்தை உண்டாக்கிய மனிதர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே உரித்தானது எனக் கருதப்பட்ட மோட்டார் வாகனத்தை அனைத்துத் தரப்பு மக்களிடமும் மாடல்-டி கார் மூலம் எடுத்துச் சென்ற ஹென்றி ஃபோர்டைப் போல, அறிவுஜீவிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த கம்யூட்டரை எல்லோரிடமும் எடுத்துச் சென்று புரட்சியை உண்டாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் கேட்ஸ்.

படிப்பை பாதியிலேயே கைவிட்டு ஓய்வில்லாமல் உழைத்தவர். 'சாலை விதிகளை மதித்து மெதுவாகச் செல்வதைக் காட்டிலும், விதிகளை மீறிவிட்டு சீக்கிரம் ஆபீஸுக்குப் போய் வேலை செய்யலாம். அபராதம் வந்தால் கட்டிக் கொள்ளலாம்' என்று ராப்பகலாக உழைத்தவர். நூறு டாலர் நோட்டு கீழே கிடந்தால் கூட அதை எடுக்க மாட்டார். குனிந்து எடுப்பதற்கு ஆகும் நேரத்தில் அதை விட அதிகமாக சம்பாதிப்பார் என்றெல்லாம் பேசப்பட்டவர். அவருடைய சொத்து மதிப்பு உலகில் பல நாடுகளின் வருமானத்தை விட அதிகம். அவருடைய செல்வத்தை ஒரு டாலர் நோட்டாக மாற்றி அடுக்கினால் கூட மூவாயிரத்து இருநூறு கிலோ மீட்டர் நீளும். நாமெல்லாம் எதிரிகளை கையால் அடிப்போம், தடியால் அடிப்போம், கல்லால் அடிப்போம், மீறிப் போனால் செருப்பாலும் விளக்குமாறாலும் அடிப்போம். ஆனால் பில் கேட்ஸ் பணத்தால் அடிப்பார்.

இதற்கு மேல் சாதிப்பதற்கு எதுவுமில்லை என்று நினைத்தாரோ என்னவோ, பில் கேட்ஸ் 5 வருடம் முன் ஓய்வு பெற்றார். சொல்லப் போனால் 52 வயது பில் கேட்ஸின் இந்த முடிவு யாருக்கும் அதிர்ச்சியோ ஆச்சரியமோ அளிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்ட முடிவுதான். 2008 இல் நடைமுறைப்படுத்தியிருக்கிறார். இளம் வயதில் பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் மீது ஈர்ப்பு கொண்டிருந்த பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியமாகத் திகழும் மைக்ரோசாஃப்டைக் கட்டி அதன் சக்கரவர்த்தியான கதை சுவாரசியமானது.

மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த சிறுவன் பில் கேட்ஸை சியாட்டில் நகரின் லேக்சைட் (lake side) பள்ளியில் அவனது பெற்றோர் சேர்த்தனர். அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர் என்பது வெறும் ராட்சத சைஸில் பூதம் போல இருக்கும். விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். மற்றவர்களுக்கு அவை அரிதானவை. இப்படிப்பட்ட காலத்தில் லேக்சைட் பள்ளியில் இருந்த கம்ப்யூட்டர் அவனை ஈர்த்தது. இரவு பகலாக அதன் முன்னர் தவம் கிடந்தான். தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து BASIC மொழியில் புரோகிராம் எழுதி விளையாடுவான். கிட்டத்தட்ட கம்ப்யூட்டரோடு இரண்டறக் கலந்திருந்தான். திடீரென்று ஒரு நாள், இனிமேல் மாணவர்கள் இலவசமாகப் பயன்படுத்த முடியாது என்ற அறிவிப்பு வந்தது. பில் கேட்ஸ் கவலைப்பட்டான், கூடவே கம்ப்யூட்டர் பைத்தியமாக இருந்த பால் ஆலென் என்ற சிறுவனும்.

ஆனாலும் தளரவில்லை. வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் ஏதாவது குறை இருந்தால் பணம் தர வேண்டியதில்லை என்று விற்பனையாளர்கள் உத்திரவாதம் கொடுத்த காலம் அது. கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியிடம் சென்று, "நான் பிரச்சினைகளைக் கண்டு பிடித்துச் சொல்கிறேன்" என்று சொல்லி அவர்களுக்கு ஏராளமான பணம் மிச்சம் செய்து கொடுத்தான் பில். பதிலுக்கு கணினிகளை இலவசமாகப் பயன்படுத்த அவனுக்கு அனுமதி கிடைத்தது, அந்த நிறுவனம் நட்டத்தைச் சந்தித்து திவாலாகும் வரை.

வாகனப் போக்குவரத்து விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளிடும் டேட்டா என்ட்ரி வேலை 17 வயது பள்ளி மாணவனாகிய பில் கேட்ஸுக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனம் கடந்து செல்லும் போதும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த காகிதச் சுருளில் ஒரு துளை போடப்பட்டிருக்கும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை. துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டு பிடித்து டிராஃப்-ஓ-டேட்டா (Traf-O-Data) என்று பெயரிட்டான். நல்ல இலாபம். போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடிய போது, இனி மேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்து தருவோம் என்று அமெரிக்க மத்திய அரசு அறிவித்து பில் கேட்ஸின் பிசினஸ் முயற்சிக்கு சாவு மணியடித்தது.

இந்தப் பின்னணியில்தான் அவர் ஹார்ட்வர்ட் கல்லூரியில் இணைந்தார். அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர்.  1975 ஜனவரி மாதம் பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழில் 'உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் - அல்டெய்ர் 8800' என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில் கேட்ஸிடம் ஓடி வந்தார் அலென். அதைத் தயாரித்த MITS நிறுவனத்தை கேட்ஸ் & அலென் தொடர்பு கொண்டனர். அதில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கக் கூடிய பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித் தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது என்று அள்ளி விட்டனர். ஆனால் அவர்களிடம் அல்டெய்ர் இல்லை. எனினும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இருந்த பழைய கணினியை அல்டெய்ர் போல மாற்றி அதை வைத்து இன்டர்பிரட்டர் உருவாக்கினார்கள். சக்சஸ்!!

MITS இன் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும் என்ற ஒப்பந்தம் போட்டார் பில் கேட்ஸ். கல்லூரியில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் மைக்ரோ-சாஃப்ட் நிறுவனம் உருவானது. ஒரு வருடம் கழித்து "-" ஐத் தவிர்த்து விட்டு மைக்ரோசாஃப்ட் என்று பெயர் மாற்றம் கண்டது. வெறும் MITS உடன் நிறுத்திக்கொள்ளாமல் மற்ற மைக்ரோ கம்ப்யூட்டர் உற்பத்தியாளர்களோடும் ஒப்பந்தம் போட்டார். இதில் MITS அதிருப்தியுற்றாலும், கோர்ட்டுக்கு இழுத்தாலும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. வெறும் பேசிக் புரோகிராமோடு நில்லாமல் ஃபோர்ட்ரான், கோபால் ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார். அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும் படி ஒப்பந்தம் போட்டார்.

திடீரென்று ஒரு நாள் அதிர்ஷ்ட தேவதை IBM வடிவில் வந்து மைக்ரோசாஃப்டின் கதவைத் தட்டினாள். குட்டி கம்பெனிகள் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும் போது தான் பின் தங்கிவிடக் கூடாது என்று தாமதமாக விழித்துக் கொண்ட IBM நெருக்கடியான கெடு வைத்திருந்தது. அதற்குள்ளாக ஹார்ட்வேர் உருவாக்கி விடலாம். ஆனால் அதில் இயங்கக் கூடிய சாஃப்ட்வேர்? மேலும் சாஃப்ட்வேர்களை ஹார்ட்வேருக்குப் புரிய வைக்கும் பிரத்யேக சாஃப்ட்வேர்? (அதுதான் ஆபரேடிங் சிஸ்டம்) சாஃப்ட்வேரை மைக்ரோசாஃப்ட் எழுதித் தர ஒப்புக்கொண்டது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கும் திறமை அதனிடம் இல்லை. அதனால் டிஜிட்டல் ரிசர்ச் என்ற நிறுவனம் தயாரித்திருந்த CP/M என்ற ஆபரேட்டிங் சிஸ்டம் பற்றி பில் கேட்ஸ் சிபாரிசு செய்தார். எனினும் ஒரு தெளிவான உடன்பாட்டுக்கு IBM & டிஜிட்டல் ரிசர்ச் நிறுவனங்களால் வர முடியவில்லை. மறுபடியும் பில் கேட்ஸின் கதவை IBM தட்டியது.

"சரி" என்றார் கேட்ஸ். அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கிய வார்த்தை அதுதான். ஆனாலும் புதிதாக ஆபரேட்டிங் சிஸ்டம் எழுதுவது இயலாது. எனவே, சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ் (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த QDOS என்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தை, இது IBM கம்ப்யூட்டருக்குத்தான் என்று சொல்லாமல், வெறும் இருபத்தைந்தாயிரம் டாலருக்கு சத்தமில்லாமல் வாங்கினார். அதில் மராமரத்து வேலைகள் செய்து டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம் (டாஸ் - DOS) என்ற பெயரில் IBM கம்ப்யூட்டரோடு சேர்ந்து உலகமெங்கும் பரப்பினார். பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி என்று சொல்லும் நிகழ்வாக இது 1981 இல் அமைந்தது. குய்யோ முறையோ என்று SCP புலம்பிய போது பில் கேட்ஸ் அதை பணத்தால் அடித்து சரி செய்து விட்டார்.

பாரம்பரியம் மிக்க IBM நிறுவனம் இங்குதான் சறுக்கியது. என்னதான் அது கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கியிருந்தாலும், மற்ற யார் வேண்டுமானாலும் அதை காப்பியடிக்க முடியும். ஆனால் அதில் இயங்கும் சாஃப்ட்வேர் மைக்ரோசாஃப்டிடம் மட்டுமே இருந்தது. IBM க்குப் போட்டியாக பல கம்பெனிகள் இறங்கிய போது அவை பில் கேட்ஸை நாடின. மேலும் தனது ஆபரேட்டிங் சிஸ்டத்தை IBM க்கு மட்டுந்தான் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதிலும் அவர் சிக்காமல் ஒப்பந்தம் போட்டிருந்தார். பிறகென்ன, அவர் காட்டில் மழை நிற்கவேயில்லை.

ஆனாலும் டாஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் கட்டளையை ஒட்டி இயங்குவது. அதில் மவுஸ் எல்லாம் இல்லை. என்ன செய்ய வேண்டுமானாலும் கட்டளைகளை உள்ளிட வேண்டும். கம்ப்யூட்டர் இயக்க வேண்டுமானால் அதற்கான கையேட்டை வைத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக கணினித் திரையில் பொம்மை மீது கிளிக் செய்தால் போதும் என்றால் எப்படி இருக்கும்? இந்த யோசனையைப் பின்பற்றி எழுந்த Graphical User Interface - GUI(குய்) ஆபரேட்டிங் சிஸ்டம்தான் பிற்காலத்தைய விண்டோஸ். குய் அடிப்படையிலான 'மேக்' (Mac) ஆபரேட்டிங் சிஸ்டத்தை முதலில் வணிக ரீதியாகக் கொண்டு வந்தது ஆப்பிள் நிறுவனம்தான். 1984 இல் அதன் மேகின்டாஷ் கணினி 'மவுஸ்' உடன் வெளி வந்தது.

மேக் சிஸ்டத்தை மேகின்டாஷ் கம்ப்யூட்டரோடு நிறுத்திக் கொள்லாமல் மற்ற கணினி உற்பத்தியாளர்களிடமும் விற்கலாம் என்று ஆப்பிள் கருதியிருக்கவில்லை. டாஸ் வெற்றியில் திளைத்திருந்த மைக்ரோசாஃப்ட் இன்னமும் GUI ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கியிருக்கவில்லை. மாறாக மேகின்டாஷ் கம்ப்யூட்டரில் இயங்குவதற்கு ஏற்ப 'வேர்ட்' (MS word) மட்டும் உருவாக்கிக் கொடுத்தது. அந்த முயற்சியின் போது மேக் சிஸ்டத்தின் நுணுக்கங்களைக் காப்பியடித்து, அதை வைத்து விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் தயாரித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையும், அதை நீதி மன்றமே உறுதிப்படுத்தியதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

1990 இல் விண்டோஸ்-3.0 வரும் வரையிலும் மைக்ரோசாஃப்ட்டின் 'குய்' ஆபரேட்டிங் சிஸ்டம் வெற்றி பெற்றிருக்கவில்லை. எக்செல் (லோட்டஸுக்கு போட்டியாக உருவாக்கியது), வேர்ட், பவர் பாயிண்ட் (Fore-thought என்ற கம்பெனியை வாங்கியதன் மூலம் உட்செரித்தது) ஆகியவற்றை உள்ளடக்கிய 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' மென்பொருட்கள் ஆப்பிள் கம்ப்யூட்டரில் இயங்கி பில் கேட்ஸ் கம்பெனிக்கு நல்ல பெயர் தேடிக் கொடுத்தது. ஆரம்ப காலத்தில் 'ஆபீஸ்'தான் விண்டோஸை பிரபலப்படுத்தியதே ஒழிய விண்டோஸ் ஆபீஸைத் தூக்கி நிறுத்தவில்லை. விண்டோஸ்-3.0 நல்ல வெற்றி, 1995 இல் வந்த விண்டோஸ்-95 அதை விடக் கூடுதல் வெற்றி. அதற்குள்ளாக அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்றிருந்தார்.

ஆபரேட்டிங் சிஸ்டம் பந்தயத்தில் கவனம் செலுத்திய பில் கேட்ஸும், மைக்ரோசாஃப்ட்டும் இணையப் புரட்சியைத் தவறவிட்டார்கள். இணைய தளங்களை மேய்வதற்கு நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற உலாவி பிரபலமாக இருந்தது. சுமார் 85 சதவீதம் பேர் இந்த உலாவியைப் பயன்படுத்தியே இணையத்தில் உலாவினார்கள். பொறுக்குமா பில் கேட்ஸுக்கு? இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற உலாவியைத் தயாரித்து அதை விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தோடு இலவசமாகக் கொடுத்தார். கொஞ்ச நாளில் நெட்ஸ்கேப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. விண்டோஸ் என்ற அரக்கனை வைத்துகொண்டு எல்லா சாஃப்ட்வேர் நிறுவனங்களையும் நசுக்குவதாக பில் கேட்ஸ் நீதி மன்றத்திற்கு இழுக்கப்பட்டார். மைக்ரோசாஃப்டின் சட்ட விரோத நடவடிக்கை நிரூபிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்ட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று ஆபரேட்டிங் சிஸ்டம் தயாரிக்க. மற்றது பிற சாஃப்ட்வேர்களைத் தயாரிக்க என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், அமெரிக்காவிலும் கூட 'வலிமையுள்ளவன் கூறுவதெல்லாம் சட்டம் ஆகும்' என்பதால் அந்தத் தண்டனை வெகுவாகக் குறைக்கப்பட்டது.

பில் கேட்ஸ் என்ற தனி மனிதரின் புகழ், பணம் எல்லாமே அவருடைய சொந்த உழைப்பினால் உருவானது மட்டுமல்ல. மிகச் சாமர்த்தியமாக மற்றவர்களது உழைப்பைத் தனதாக்கிக்கொண்டு சந்தைப்படுத்திய புத்திசாலித்தனமும்தான் அவரை உயர்த்தியது. தொழில்நுட்ப அறிவு மற்றும் பிசினஸ் சூத்திரம் இரண்டும் ஒரு மாயாஜால விகிதத்தில் கலந்த அதிசயப் படைப்பு அவர். அவருக்கு உலகெங்கும் இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக எதிரிகளையும், விமர்சகர்களையும் சம்பாதித்திருக்கிறார்.

1995 முதல் 2007 வரை உலகின் முதல் செல்வந்தராக அவர் திகழ்ந்தார். அவருடை வீட்டிற்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் டாலர் சொத்து வரி கட்டுகிறார்.  சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை மக்கள் நலனுக்குச் செலவிடும் நோக்கில் 2000 ஆவது ஆண்டு பில் & மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷன் என்ற அறக்கட்டளையை நிறுவி உலகெங்கும் எயிட்ஸ் தடுப்பு (புள்ளிராஜா விளம்பரம் கூட பில் கேட்ஸ் புண்ணியம் என்கிறார்கள்) உள்ளிட்ட பல நலத்திட்டங்களைச் செய்து வருகிறார். அதைக் கண்டு மகிழ்ந்த வாரன் பஃபெட் தனது செல்வத்தின் பெரும்பகுதியை இந்த அறக்கட்டளைக்குத் தானம் கொடுத்திருக்கிறார். தான் மைக்ரோசாஃப்ட் பணியில் இருந்து வெளியேறி முழுநேர சமூகப் பணியில் கவனம் செலுத்துவதற்கு வாரன் பஃபட்தான் காரணம் என்கிறார் கேட்ஸ்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழு நேர CEO பொறுப்பிலிருந்து விலகி 2006 ல் தன்னை சேர்மன் ஆக்கிக் கொண்டு மற்றவர்களை வைத்து கம்பெனியை நடத்தி மேற்பார்வை செலுத்திய பில் கேட்ஸ் தற்போது (2008) முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். பல முனைகளிலும் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சவாலைச் சந்திக்கும் நேரத்தில் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஆனால் பில் கேட்ஸ் எனும் மனிதரும், அவர் உலக மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கமும் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்கரவர்த்தி என்ற அடையாளத்தோடு!!

(2008 ஆம் ஆண்டில் ஒரு நாணயம் விகடன் இதழுக்கு எழுதியது)

2 comments:

semmal G said...

excellent article....in simple terms

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான கட்டுரை... நன்றி...