Friday, June 21, 2013

முயற்சி பண்ணுவோம் பாஸ்

சதீஷ் மாதிரி ஒருவன் கூடவே இருக்கும் போது வேறு வினையே வேண்டியதில்லை. நானும் அவனும் ஒரே கல்லூரியில் படித்தோம். இப்போது ஐதராபாத்தில் ஒரே கம்பெனியில் பணியாற்றுகிறோம். நாங்கள் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதமே ஆனது. சதீஷ் மிக வேடிக்கையானவன், காலேஜிலும் அப்படித்தான் இருந்தான், சம்பாதிக்க ஆரம்பித்த பிறகும் அப்படியேதான் இருக்கிறார். உதராணத்திற்கு ஒன்றிரண்டு சொல்கிறேன் கேளுங்கள்

குளித்து முடித்த பின்னர் அணிந்து கொள்வதற்காக புது பனியன், ஜட்டி எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போவான். ஆனால் ஏற்கனவே அணிந்திருந்ததைக் கழட்டித் துவைக்காமல் புதிதாக எடுத்துச் சென்றதைத் துவைத்து விடுவான். வேறு வழியின்றி குளித்த பின் பழையதையே மீண்டும் அணிந்து கொள்வான். எதில் கவனமாக இருக்க வேண்டுமோ அதைத் தவிர மற்ற அனைத்திலும் அவனது சிந்தனை மேயும். ஒரு முறை வெளியே போகும் போது வீட்டைப் பூட்டி விட்டு சாவியைக் கதவுக்கடியில் வைத்து, "சாவி கதவுக்குக் கீழே" என்று ஒரு காகிதத்தில் எழுதி எல்லோருக்கும் தெரியும்படி ஒட்டி விட்டிருந்தான். 'ஷாம்பு'வில் பல் துலக்கியது, குளிப்பதற்கு சுடு தண்னி போட வாளியில் ஹீட்டரை வைத்து விட்டு குளிக்காமல் ஆபீஸ் போய் வாளியை உருக வைத்தது, பக்கத்து வீட்டுக் குட்டிப் பையனிடம் தெலுங்கில் பேசுகிறேன் என்று வம்புக்கு வாதம் செய்து "போரா வெதவா" என்று திட்டு வாங்கியது, வாழைப்பழம் வாங்கப் போய் 'கேலா சாயியே' என்று அரைகுறை இந்தியில் பேசி கடைசியில் 'கேலா'விற்குப் பதில் அடி 'ஸ்கேல்' வாங்கிக் கொண்டு வந்தது, தெரியாத்தனமாக பெண்கள் ஜீன்ஸ் பேன்ட் வாங்கிப் போட்டுக்கொண்டு தொடையை இறுக்கிப் பிடிக்கிறது என்று அலறியது என்று அவனுடைய கோமாளித்தனத்தைப் பற்றிப் பேசினால் நாள் கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம்

நாங்கள் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சதீஷ் புது பைக் வாங்கி விட்டான். கம்பெனியில் லோன் கொடுத்தார்கள். பைக் என்றால் அவனுக்கு மிகவும் பாசம். இரன்டு நாளுக்கு ஒரு தடவை தண்ணீர் ஊற்றிக் கழுவி விடுவான். தினமும் காலையில் எழுந்து பல் விளக்குகிறானோ இல்லலையோ பைக்கைத் துடைக்காமல் இருக்க மாட்டான். இருக்காதா பின்னே? போன மாத வரையிலும் தங்கம் பேக்கரியில் ஒரு தேங்காய் பன்னை நான்காகப் பங்கு போட்டுத் தின்றவன், இன்று சுயமாக பைக் ஓட்டுவது என்றால் சொல்லவும் வேண்டுமா!! என்னைப் பற்றிக் கேட்காதீர்கள். நான் பேருந்தில் பயணிக்கிறேன். னவே இந்த தேங்காய் பன் அளவுகோல் எனக்கு ஒத்துவராது

இப்படித்தான் ஒரு நாள் ஆபீஸ் முடிந்ததும் பைக்கில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினான். நாகார்ஜுனா சர்க்கிளுக்கும் பஞ்சகுட்டா சிக்னலுக்கும் இடையில் நிலை கொண்டிருந்த நேரத்தில் அவன் வண்டியில் இருந்து விநோதமான சப்தம் உயிர்த்தது. இன்டிகேட்டரில் இருந்து வழக்கமாக வருவதுதான். உடனே இன்டிகேட்டர் சுவிட்சை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாகத் திருப்பினான். சத்தம் வருவது நிற்கவில்லை. மறுபடியும் வலது பக்கம் திருப்ப, அப்போதும் நிற்கவில்லை. மாற்றி மாற்றி இன்டிகேட்டர் போட்டதில் இவனுக்குப் பின்னால் வந்த வாகனங்களில் இருந்தவர்கள் எல்லாம் குழம்பிப்போய் கையை நீட்டி தெலுங்கிலும் இந்தியிலும் திட்டினார்கள். அதையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. இவனுக்குத்தான் அந்த மொழியெல்லாம் தெரியாதே!! 

சத்தம் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. வண்டி தடுமாறியது. பொறுமை இழந்தவனாக சாவியைத் திருப்பி வண்டியை அணைத்தான். ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். அதற்குள் சுற்றிலும் நிறையக் கூட்டம் கூடியிருந்தது. அந்தக் கூட்டத்தில் அபர்ணாவும் ஒருத்தி. அலுவலகத்தில் அவனுக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்திருப்பவள். இவனுக்கு வெட்கமாக இருந்தது. "ஒரு இன்டிகேட்டரைக் கூட ஆஃப் செய்யத் தெரியாதவன், இவனுக்கெல்லாம் எதுக்கு வண்டி?" என்று அவள் பார்வை துளைப்பதைப் போல உணர்ந்தான். ஐயகோ... பலனில்லை. சத்தம் வந்தபடியே இருந்தது. பழைய ரேடியோவைத் தட்டினால் பாடுமே, இல்லை இல்லை பாடுகிற ரேடியோவைத் தட்டினால் நிற்குமே..அது போல பைக்கை நான்கு முறை தட்டிப் பார்க்கிறான். பிறகு உதைக்கிறான். ஒன்றும் நடக்கவில்லை.

வண்டிக்கு முன்னால் போய் நின்றும், உட்கார்ந்தும் பார்த்தான். எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. இன்டிகேட்டர் விளக்கு ஒளிரவில்லை. பக்கவாட்டில் வந்து கீழே குனிந்து எஞ்சினில் காது வைத்துக் கேட்டான். ஆனால் அந்தச் சத்தம் மட்டும் எங்கிருந்து வருகிறது என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. குரங்காட்டி வித்தை காட்டுபவனைப் போல இவனைக் கூட்டம் இரசித்தது. கூட்டத்தைக் கவனித்த போக்குவரத்துக் காவலர் குடையில் இருந்து இறங்கி இவனை நோக்கிக் கோபமாக வருவதைப் பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. தன் பைக்கில் தனக்கே தெரியாமல் யாரோ டைம்பாம் வைத்து விட்டதாக நினைத்தானோ என்னவோ, போலீசில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற உந்துதலினால் வண்டியைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பி ஓட ஆரம்பித்தான்

என்ன வேகத்தில் ஓடினான் என்று சொல்ல முடியாது. அவ்வளவு வேகமாக அதுவரை அவன் பைக் கூட ஓட்டியதில்லை. ஓடியதில் ஒரு கிலோ மீட்டர் கடந்திருப்பான். அதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. நின்று லேசாகத் திரும்பிப் பார்த்தான், அதே 'பீப் பீப்' சத்தம் இன்னும் வந்து கொண்டே இருந்தது. வந்து சேர்ந்த இடம் ஒரு முச்சந்தி போலக் காட்சியளித்தது. பழைய குப்பைத் தொட்டி ஒன்று ராட்சத வடிவில் இருந்தது. சாக்கடை வாசமோ அல்லது எலி செத்த வாசமோ ஏதோ ஒன்று மூச்சு விடவே முடியாதபடி இடைஞ்சல் கொடுத்தது. ஓட்டம் பிடிக்க ஆரம்பித்து ஐந்து நிமிடம்தான் இருக்கும், அதற்குள் எப்படி இருட்டியது என்று அவனுக்கு விளங்கவில்லை. அந்த இடத்தில் தெருநாய்கள் நிறைய உலவிக் கொன்டிருந்தன. அவனைத் தவிர அங்கே நாய்கள் மட்டுமே தென்பட்டன. ஆனால் அந்த ஓசை மட்டும் இன்னமும் தேயாமல் பெருத்த டெசிபலில் கேட்டுக்கொண்டே இருந்தது

நாய்கள் குரைத்தன. அந்தச் சத்தம் 'லொள் லொள்'என்று இல்லாமல் 'பீப் பீப்' என்று இருந்தது. அவனுக்கு எதுவுமே புரியவில்லை. பயம், குழப்பம், இயலாமை, சோர்வு, தவிப்பு என்று பலவிதமான உணர்ச்சிகள் ஒருசேர அவனைக் கவ்வின. செம்பழுப்பு நிற நாய் ஒன்று ஓடி வந்து அவன் யாரையோ அழைப்பதற்காக எடுத்த செல்போனைக் கவ்வியது. அவனுக்கு இருந்த ஒரேயொரு கதவும் மூடப்பட்டு விட்டது. எல்லோரும் பூனைக்கு மணி கட்டுவதைக் கதையாகப் பேச இவனும், வேலனும் சின்ன வயதில் நாய்க்கு மணி கட்டி விளையாடினார்களே, அதற்குப் பழி வாங்கத்தான் நாய்கள் எல்லாம் கூடி இப்படிச் சித்தரவதை செய்கின்றனவா? விளங்க முடியாத பெருங்குழப்பம் ஒன்று அவனை ஆட்கொண்டது.

தான் என்னவோ சோழ மாமன்னன் போலவும், தன்னால் அந்நிதி இழைக்கப்பட்ட மக்கள் அனைவரும் அரண்மனை வாசலில் உள்ள ஆரய்ச்சிமணியை 'பீப் பீப்' என்று அடிப்பது போலவும் வெவ்வேறு விதமான கற்பனைகள் கண் முன் விரிந்தன. இது போன்ற மன உளைச்சலை அவன் அனுபவித்ததே இல்லை. உடலெல்லாம் வேர்த்திருந்தது. சத்தமாகக் கத்தி அழ வேண்டும் போல இருந்தது. அப்பத்தாவின் மடியில் ஒரு முறை படுத்துக் கொள்ள விரும்பினான். அவன் அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பானே..இறக்கை இல்லாமலேயே கையை அசைத்து வானில் பறப்பது போல. அது மட்டும் நிஜமாகவே இப்போது நடந்தால் எப்படி இருக்கும். நாய்களிடும் விநோத ஓசை இல்லாத ஊருக்குப் பறந்து விடலாம்

அதில் எதுவுமே நடக்கப் போவது இல்லை என்று எதார்த்தம் உணர்த்தியது. யாரையாவது கூப்பிட்டுப் பார்க்கலாம். உதவி கிடைக்க அது மட்டுமே வழி என்பதைத் தீர்மானித்தான். "எக்ஸ்கியூஸ் மீ. இஸ் தேர் எனி ஒன்?" என்று முதலில் நாகரீகமாக மெதுவாகக் குரல் தந்து பார்த்தான். எந்த உதவியும் வருவதாக இல்லை. யாரையும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை. இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்தவனாய் "காப்பாத்துங்க..காப்பாத்துங்க" என்று உரத்த குரலில் அடித் தொண்டையில் இருந்து கத்தினான். எவராவது வந்து காப்பாற்ற வேண்டும். இல்லையானால் இப்படிக் கத்தியே மூர்ச்சையாக வேண்டும் என்று தீர்மானித்திருந்தான்.

எனது உறக்கம் அப்போது தான் கலைந்திருந்தது என்று சொல்லி விட முடியாது. கிட்டத்தட்ட இன்னும் அரை மயக்கத்தில்தான் இருந்தேன். வழக்கமாக இன்னும் நாற்பது நிமிடம் தூங்குவேன். இன்று தொலை பேசி மணி விடாமல் அடித்துக்கொண்டே இருப்பதால் சீக்கிரம் எழ வேண்டியதாகி விட்டது

படுக்கையறையில் இருந்து பாதி தூக்கத்தில் எழுந்து ஹாலுக்குப் போய் போய் ரிசீவரில் கையை வைக்கும் தருணம். சதீஷ் போடும் "காப்பாத்துங்க..காப்பாத்துங்க" சத்தம் பலமாகக் கேட்டது. ஏதோ பேராபத்தில் மாட்டியவனைப் போலக் கத்தினான். போனை பிறகு பார்த்துக்கொள்ளலாம். இவனை இப்போது காப்பாற்றியாக வேண்டும். ஹாலைக் கடந்து அவனது அறைக் கதவைத் திறந்து அவனைக் குலுக்கி எழுப்பினேன்

திடுக்கிட்டு எழுந்தவன் 'பீப் பீப்' என்று கத்திக் கொண்டிருந்த அலாரம் கடிகாரத்தை நிறுத்தி விட்டு, "அடச்சே..அலாரம் டா" என்று பெருமூச்சு விட்டான். ஆயினும் அனிச்சையாக அவனது கை தலையணைக்குப் பின்னால் இருந்த செல்போனைத் தேடியது. நாய் தூக்கிச் செல்லவில்லை என்பதை உறுதி செய்துகொண்டான். பெரு மூச்சோடு கூடவே சேர்த்து புன்னகையும் விட்டான்.


ஒரு சங்கதி தெரியுமா? அவன் அலாரத்தை ஆஃப் செய்த போது ஹாலில் போன் அடிக்கும் ஓசையும் நின்று விட்டது. எங்களது போன் 'பீப் பீப்' என்று அடிக்குமா அல்லது டிரிங் டிரிங் அன அடிக்குமா என்று தானே கேட்க விரும்புகிறீர்கள்

ஏன் உங்களுக்கெல்லாம் கனவே வராதா?

(ஒரு பரிட்சார்த்த முயற்சியாக சுமார் 10 வருடம் முன் எழுதியது. இப்போது இதே கதையை வேறு மாதிரியான வடிவத்தில் முற்றிலும் வேறுபட்ட வார்த்தைகளில் எழுதியிருக்கக் கூடும். ஆனாலும் பழையதை அப்படியே வெளியிடுகிறேன்)

No comments: