Monday, June 24, 2013

சமூகம் மதிக்காத படைப்பாளியும், சைனாமேனும்

தமிழ்நாட்டில் ஒரு பிரலபமான எழுத்தாளர் இருக்கிறார். முப்பது வருடத்திற்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறார். பல விதமான சர்ச்சையில் சிக்கியவர். தனது எழுத்தை இந்தச் சமூகம் கொண்டாடவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு. அப்படிப்பட்டவருக்கு ஒரு பெண்ணோடு சினேகம் ஏற்படுகிறது.

அவள் பிரான்ஸில் இருக்கிறாள். ஏற்கனவே கல்யாணமாகி மூன்று குழந்தைகளின் தாய். வறட்சியான செக்ஸ் வாழ்க்கை அவளுக்கு. அப்படிப்பட்டவளுக்கும் நம்ம எழுத்தாளனுக்கும் ஒரு புத்தகக்கடையில் அறிமுகம் ஏற்படுகிறது. இருவரும் சல்சா பண்ணுகிறார்கள். ஒரு காதலை அடைய பல காமம் கடந்து வந்த கவிதைகளுக்கு நடுவே பல காமம் கடந்து கண்டறிந்த காமத்தின் கதைதான் இது.

டைரிக்குறிப்புகளை எல்லாம் சேர்த்து வைத்து, தனது வெப்சைட்டில் எழுதிய கட்டுரைகளையும் இடையிடையே செருகி, வாசகிகளுடனான தனது ஈமெயில் எல்லாம் கலந்து, தன்னைக் கொண்டாடாத தமிழ்ச் சமூகத்தினை இடையிடையே திட்டி அதை நாவலாக வெளியிட்டும் இருக்கிறார் அந்த எழுத்தாளர். சமீபத்தில் அதை வாசிக்கும் பேறு பெற்றேன். தமிழின் ஆகச் சிறந்த ஆட்டோபிக்சன் (autofiction) எனச் சிலர் அதைக் கொண்டாடவும் செய்கிறார்கள்.

ஆட்டோபஃபிக்சஷக்கும் ஆட்டோபயோகிராபிக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. தன் வாழ்க்கையில் தான் செய்த விஷயங்களை, கடந்து வந்த அனுபவங்களை அப்படியே சொல்லுவது ஆட்டோ பயோகிராபி. அதை வேறொருவன் பெயரைப் போட்டு கதை மாதிரிச் சொல்வது ஆட்டோஃபிக்‌ஷன். அது புனைவு என்பதால் எப்படி வேண்டுமானாலும் முன்னுக்குப் பின் தாவும் செலகர்யம்.. சாரி.. செளகர்யம்..உண்டு. ..இரண்டுக்குமான வித்தியாசம் அப்படித்தான் இருக்க வேண்டும்.

எக்சைஸ் ஒரு துணிச்சலான முயற்சி என்ற போதும் இதை ஷீகன் கருணதிலகாவின் சைனாமேன் நாவலோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அப்படிச் செய்தாலும் ஆப்பிளையும் அவரைக்காயையும் கம்பேர் பண்ணுவது போலத்தான் அது அமையும் என்றாலும் கூட.

சைனாமேன் ஒரு மாஸ்டர் பீஸ். நவீன தெற்காசிய இலக்கியத்தின் மீதும், கிரிக்கெட் மீதும் ஆர்வம் இருக்கிற அத்தனை பேரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

சைனாமேன் நாவலுக்கான கார்டியன் விமர்சனம்

ஒரு தமிழனாகப் பிறந்த காரணத்தால், யாருக்கும் வளைந்து கொடுத்துப் போக விரும்பாததால் காணமால் போன உலகின் தலை சிறந்த ஸ்பின் பவுலர் குறித்த நாவல். ஆனால் இது சிங்களர் ஒருவரால் எழுதப்பட்டது. வாசிக்க வாசிக்க நம்மை உள்ளே ஈர்க்க வைக்கும் லயிப்பான மொழி. காமன்வெல்த் பிராந்தியப் படைப்புக்கான விருது பெற்ற நாவல்.

முடிந்தால் வாசித்துப் பாருங்கள். எப்போதாவதுதான் இந்த மாதிரி புத்தகங்களை வாசிக்க நேரிடும்.

கூடுதல் தகவல்:
அப்புறம் அதென்ன சைனாமேன் என்று கேள்வி எழுந்தால் இங்கே போய் ஒரு எட்டு பாருங்கள். கிரிக்கெட் ஒன்னும் சீனாக்காரனுக்கு புதிதல்ல. அவர்களுக்கு கொஞ்சம் ஆங்கிலமும், சாஃப்ட்வேரும், கிரிக்கெட்டும் தெரிந்தால் இன்னும் என்ன செய்வார்களோ....

No comments: