Tuesday, June 25, 2013

அப்பா தேச்சிக்கிட்டு இருக்காங்க

சுவாரசியமாக எழுதுபவர்களாக இருந்தால் ஒரு கிரைம் நாவலும், திரில்லர் திரைப்படமும் எடுக்கலாம். அப்படிப்பட்ட ஒரு டவுன்ஷிப்பில் நாங்கள் வசிக்கிறோம். நான் சொல்ல வரும் மேட்டர் வேறு. அந்த டவுன்ஷிப்பில் ஒரு பார்க் இருக்கிறது. அங்கே மாலை நேரம் போனால் அப்படியொரு எண்டெர்டெயின்மெண்ட். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் போடும் சத்தம் காதுக்கு இனிமை. கூடவே கண்ணுக்கும் ;-)

அங்கே ஒரு லேடி இன்னொரு லெக்கிங்ஸ் போட்ட பெண்ணிடம் புகார் சொல்லிக்கொண்டிருந்தார். ‘’நானே டென்ஷனோட கிச்சன்ல குண்டா கழுவிக்கிட்டு இருக்கறேன். இவ வந்து அப்பா தேச்சுக்கிட்டு இருக்கறார்னு சொல்றாளுங்க. எனக்கு நெஞ்சே வெடிக்கறாப்பல ஆயிருச்சு. அடுத்த வருஷம் டெஃபனட்டா ஸ்கூல் மாத்தணும்” கொஞ்ச நேரம் உற்றுக்கேட்ட பின்னர்தான் புரிந்தது. வருடம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் செலவு செய்து எல்.கே.ஜி அனுப்புகிறார்கள். அவரது குழந்தை ’அப்பா அயர்ன் பண்றாங்கம்மா’ என்று சொல்லாமல் தேய்ச்சுக்கிட்டு இருப்பதாகச் சொல்லிவிட்டது. என்ன சொல்லிக்கொடுக்கிறார்கள் ஸ்கூலில்? இங்கிலீஷ் நாலேஜே இல்லாமல் போயிரும் போல இருக்குங்க. டோட்டல் வேஸ்ட்!!

எங்கள் கல்லூரியில் ஒரு நண்பன் இருந்தான். அவனுக்கு ஆங்கிலம் பேச வராது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவான். நாம் இடையே புகுந்து தமிழில் ஏதாவது சொன்னால் கூட, ‘யூ ஸ்டுப்பிட்’ எனத் திட்டுவான். ஒரு சில மணி நேரம் மட்டுந்தான் அப்படி. அடுத்த நாள் காலையில் தூங்கி எழுந்து தெளியும் போது நார்மலாகி விடும். இன்னொரு முறை சரக்கு உள்ளே இறங்கும் வரை காத்திருக்க வேண்டும். இப்படி ஒருவனை நம்மில் அத்தனை பேரும் நிச்சயம் கடந்து வந்திருப்போம். குறைந்த பட்சம் கேள்வியாவது பட்டிருப்போம்.

சிலருக்கு சரக்கு உள்ளே போனால் கவிதை வெளியே வரும். சிலருக்கு காதல் வரும். சிலருக்கு முனிம்மா J

பசங்களுக்கு சரக்கு உள்ளே போனால் சரளமாக ஆங்கிலம் வருவது போல பெண்களுக்கு பசங்களைக் கண்டால் ஆங்கிலம் பீறிட்டு வரும். பெண்ணியவாதிகள் மன்னிக்க. ’இவளுக ஏய் ஈறுடி.. ஒரே பேனுடி..ன்ன்னு பேசிக்கிட்டே வருவாளுக. நம்ம கிராஸ் பண்ணா மட்டும் கரெக்ட் யா.. யா யா… சோ ஃபன்னி யா ன்னு பீட்டர் விடுவாளுக’ என கல்லூரி மேடை நிகழ்ச்சிகளில் பசங்க நடித்துக்காட்டு அரங்கத்தை அதிர வைத்ததுண்டு.

ஆங்கிலம் பற்றிப் பேசும் போதெல்லாம் என் மனைவி, ‘Whose note is this, Kuppusamy?’ என்று கிண்டல் செய்வதுண்டு. முதலாமாண்டு பிசிக்ஸ் லேபில் ஒரு செய்முறைக்காகக் காத்திருந்தோம். ஒரு பேட்சுக்கு நாலு பேர். எங்கள் பேட்சில் மூன்று பாய்ஸ் கிருபா சங்கர், குப்புசாமி, குமரன். ஒரு கேர்ள் லக்ஷ்மி. எல்லோருமே புதுசு. போன வாரம் செய்த பரிசோதனையை குமரன் சிரத்தையாக எழுதி வைத்திருப்பான். ரொம்பவும் சின்சியரான பையன். நானும்தான் தவறாமல் எழுதிவிடுவேன் என்றாலும் என் கையெழுத்து எனக்கே பிடிக்காது.

குமரன் நோட்டிலிருந்து லஷ்மி காப்பி செய்துகொண்டிருக்கிறாள். அப்படியே என்னை நிமிர்ந்து பார்த்து ‘Whose note is this?’ எனக் கேட்டாள். நான் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. கொஞ்ச தூரம் தள்ளி எதையோ கையைக் காட்டி, ’அதோ அங்கிருக்கு’ என்றேன். நான் சொன்னதை நானே உள்வாங்கும் முன், ‘It’s mine’ என்றான் குமரன். கிராதகன். குமரா நீ எங்கிருந்தாலும் நலமாக இருக்கக் கடவது.  

எங்கள் அலுவலகத்தில் ஒரு பையன் இருக்கிறான்.
‘How was your vaca-son?’ என்றான்.

’You mean vacation?’ திருப்பிக் கேட்டேன்,

’ya. vaca-son’ சுப்ரீம் செல்ஃப்கான்பிடன்ஸோடு சொன்னான்.

சரளமாக ஆங்கிலம் பேசும் ஆற்றல் தன்னம்பிக்கை ஊட்டுகிறது. நம்மால் பேச முடியாதோ என்ற அச்சம் தன்னம்பிக்கையைத் தகர்க்கிறது. தப்பாப் பேசினா என்ன உயிரா போயிரும் எனத் துணியும் போது ஆங்கிலம் அறிவதால் மட்டுமே வருகிற தன்னம்பிக்கையை விடக் கூடுதலாகிறது செல்ஃப் கான்பிடன்ஸ்.

வாட் டு யூ ஸே?

1 comment:

ஓட்டு பொறுக்கி said...

"Whose note is this kuppusamy?" nice one...