Friday, June 28, 2013

மழை வாசமும், மரணத்தின் வாசமும்

போன ஒரு மாத காலமாக சென்னையில் மழை பெய்வது போல பில்டப் கொடுத்து அப்படியே போக்குக் காட்டிக்கொண்டிருந்தது. தண்ணி லாரி ஸ்டிரைக் செய்ததால் குளிக்குக் கூடத் தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த வேளையில் நேற்று நல்ல மழை. ஓரிரு சாஃப்ட்வேர் கம்பெனிக்கு லீவ் விட்டார்களாம். சிலர் பாத்ரூம் போறதெல்லாம் வீட்டிலேயே முடித்து விட்டு வரவேண்டும் என்று சொல்லி டாய்லெட்டை பூட்டி விட்டார்களாம். சாலையோர துரித உணவகம் மாதிரி சாலையோர கழிப்பிடமும் முளைத்து விடுமோ என்றெல்லாம் சிலர் புது பிசினஸ் மாடல் உருவாவதற்கான சாத்தியத்தை அலசினார்களாம்.

அதற்குள்ளாக கொஞ்சம் மழையும், லாரி ஸ்டிரைக் முடிவும் வந்தது. மூன்றரை வயதான என் மகள் வேண்டுமென்றே அவளது விளையாட்டுப் பந்தை வெளியே வீசி விட்டு மழையில் ஆடினாள். நதிக்கரையில் வளர்ந்தவனுக்கு குழந்தையின் குதூகலத்தை மறுக்க மனமில்லை. அப்பா ஜாலி ஜாலி என குதித்தாள்.. மாமழை போற்றுதும் ! ராத்திரி 102 டிகிரி காய்ச்சல். இன்னிக்கு யூனிஃபார்ம் போடணுமா? லீவா? தாத்தா என் பிரண்டே இல்லை. கிள்ளிக் கிள்ளி வெக்கறாங்க.. என கண்டதை உளறிக்கொண்டிருந்தாள். விடிய விடிய தூக்கமில்லை. மறக்க முடியாத ஒரு இரவாக அது அமைந்தது.

அதை விட மறக்க முடியாத ஒரு துக்கமான நிகழ்வும் நேற்று நடந்தது. எங்கள் டவுன்ஷிப்பில் வசிக்கும் ஒருவர் இறந்து போனார். அவரது இரண்டு சக்கர வாகனமும், லாரியும் (தண்ணீர் லாரியாக இருக்க வேண்டும்) மோதிக்கொண்டதால் விபத்து. இன்ஃபோசிஸில் பணிபுரிகிறார். வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது டவுன்ஷிப்புக்குள் நுழையுமிடத்தில் விபத்து நடந்திருக்கிறது.

விபத்துகளும், மரணங்களும் எங்காவது நடந்தபடியேதான் உள்ளன. அவற்றை வெறும் செய்தியாகக் கடந்து போகிறோம். மரணிப்பது நமக்குத் தெரிந்தவர்கள் எனும் போது நம்மையும் அறியாமல் ஒரு சோகம் மனதை அடைக்கிறது. அதிலும் இந்த மனிதர் ஆறு மாதப் பெண் குழந்தைக்குத் தகப்பன். தான் உயிரோடு இருக்கும் போது தம் பிள்ளைகளின் மரணத்தைச் சந்திப்பவரை நீங்கள் நேராக நோக்க முடியாது. அப்படி விடுபட முடியாத சோகத்தில் அவரின் பெற்றோர் இருக்கிறார்கள். ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நாங்கள் வசிப்பது ஒன்றும் நகரின் பிசியான ஏரியா இல்லை. அரசன்கழனி ஏரியும், நூக்காம்பாளையம் மலையும் இருக்கிற ஒரு கிராமம். எங்கள் குடியிருப்புப் பகுதிக்குள்ளேயே தாறுமாறாக ஓட்டி கீழே விழுந்து கண்ணாடியை உடைத்தது, காயம் பட்டது, நெற்றியில் வெட்டிப்பட்டது என சின்னச்சின்ன விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் உயிரிழப்பு உச்சகட்ட அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகளால் மரணம் நிகழ்வது தமிழகத்தில்தான் என்ற செய்தி சில நாட்களுக்கு முன் செய்தித்தாள்களில் வெளியானது. சாலை விபத்தால் மரணிக்கும் ஏழு பேரில் ஒருவர் தமிழ்நாட்டுக்காரர். (கவனியுங்கள்: தமிழர் என்று சொல்லவில்லை, இப்போதெல்லாம் பாரதிராஜா அடுத்து என்ன சொல்வாரோ என பயமாக இருப்பதால்) ’இந்த ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான். ஆக்சிடண்ட் ஆகிட்டூ இருக்கும்,’ என்கிறார் என் நண்பர் ஒருவர்.


இந்தியாவில் உள்ள ஆறு பொறியியல் கல்லூரிகளில் ஒன்று தமிழ் நாட்டில் இருக்கிறது. சாலை விபத்துக்கும், சாஃப்வேர் கனவோடு என்சினியரிங் காலேஜில் சேர்வதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? இல்லாட்டி செலவு செய்து காலேஜ் கட்டுவதற்கும் செயலலிதாவுக்கும் கனெக்‌ஷன் இருக்குமோ?

No comments: