Monday, July 01, 2013

இரண்டாவது வீடு

முந்தைய பாகம்..

வாடகை வீட்டில் வசிக்கும் அத்தனை பேருக்கும் இருக்கும் முதன்மையான இலட்சியம் சொந்த வீடு வாங்குவதாகத்தான் இருக்கும். ஒன்பது மணிக்கு மேல் கேட்டை திறக்கக் கூடாது, பத்து மணிக்கு மேல் லைட்டை போடக் கூடாது, சுவற்றில் ஆணி அடிக்கக் கூடாது, நாலு பேருக்கு மேல் தங்கக் கூடாது.. அப்பப்பா.. வாடகை வீட்டில் எத்தனை அசெளகரியங்கள் !

எலி வலையென்றாலும் தனி வலையென்று சொல்லுவார்கள். உணவு, உடை, உறைவிடம் ஆகியன மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்றாலும் மூன்றாவதாக வரும் உறைவிடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குடியிருக்கும் இடம் என்பதைத் தாண்டி மனதுக்கு நெருக்கமான எமோஷனல் விஷயமாக இருக்கிறது.

சொந்த வீடு என்கிற இலட்சியம் பல பேருக்கு கனவாகவே முடிந்து போகிறது. வாடகை வீட்டிலேயே தொடர்வதா அல்லது அண்டா, குண்டாவையெல்லாம் அடகு வைத்து கடனை உடனை வாங்கி சொந்தமாக நமக்கென்று ஒரு இல்லத்தை அடைவதா? இந்தக் குழப்பம் எல்லோருக்கும் இருந்திருக்கிறது, இருக்கிறது, இருக்கும்.

இன்றைக்கிருக்கிற நிலையில் தனி வீடெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. பிளாட்(flat) வாங்குவது கூட மிகுந்த சிரமத்துடனே செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சதுர அடி நாலாயிரம், ஐயாயிரம் என ஏறிக்கொண்டே போகிறது பிளாட் விலை. இத்தனை காசு போட்டு வாங்க வேண்டுமா? பேசாமல் வாடகை வீட்டிலேயே இருந்து விட்டுப் போகலாமா என்ற குழப்பம்.

2004 ஆம் வருடம் நானும் எனது நண்பர் ஒருவரும் வேளச்சேரியில் உள்ள ஒரு 2 பெட்ரூம் அபார்ட்மெண்டில் மாதம் ரூ 4,500 வாடகைக்கு குடியிருந்தோம். அந்த வீட்டின் உரிமையாளர் அதை எட்டு இலட்ச ரூபாய்க்கு எங்களையே வைத்துக்கொள்ளச் சொன்னார். நாங்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. இன்றைக்கு அது எண்பது இலட்சத்துக்கு விலை போகும். இடைப்பட்ட இந்தக் காலத்தில் வாடகை மூலம் மிச்சமான பணம் வேறு.

எப்படித் தேடியிருந்தாலும் ரிஸ்க்கே இல்லாமல் இப்படியொரு இலாபகரமான முதலீடு வேறு வடிவங்களில் கிடைத்திருக்காது. அபரிமிதமான இலாபம். அதைத் தவற விட்டிருக்கக் கூடாது.

எட்டு இலட்சம் எண்பது இலட்சம் ஆனது. வெரி குட். அதே மாதிரி இப்போது எண்பது இலட்சத்திற்கு ஒரு பிளாட் வாங்கினால் அது இன்னுமொரு எட்டு ஆண்டுகள் கழித்து எட்டு கோடி ஆகுமா? நிச்சயமாக மில்லியன் டாலர் கேள்விதான்.

நாளைய பொழுது நேற்றைப் போலவே விடிவதில்லை என்பதே எதார்த்தம். ஜப்பான் 1980 களில் தாறுமாறான வீட்டு விலை உயர்வைக் கண்டது. அடுத்த இருபது ஆண்டுகளில் அது சரிவையே அடைந்தது.

இந்தியாவில் அப்படி நடக்கும் என்று சொல்லவில்லை. ’ஒரு வேளை இதற்கு மேல் உயராமல் போகலாம். ஆனால் கண்டிப்பாகக் குறையாது,’ என பல நண்பர்கள் என்னிடம் சொல்வதுண்டு. ஏறாமல் அதே அளவிலேயே இருப்பது கூட குறைவதற்குச் சமம்.

உதாரணத்துக்கு யோசித்துப் பாருங்கள். ஐம்பது இலட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள். ஐந்து வருடம் கழித்தும் அதே ஐம்பது இலட்சத்தில் உள்ளது. ஹவுசிங் லோன் வட்டி வீதம் 10 % என வைத்துக்கொண்டாலும், உங்கள் பணம் 80 இலட்சமாக இருக்கும். வீட்டின் மதிப்பு அதே 50 இலட்சத்தில் நிற்க, உங்களது நிகர நஷ்டம் 30 இலட்சம்.

கடந்த பத்து ஆண்டுகளில் சாஃப்ட்வேர் துறை வெகுவான சம்பளம் தந்தது. அதனால் ரியல் எஸ்டேட் டிமாண்ட் ஏறியது. விலை ஏறினாலும் அதை கிரகிக்க ஒரு கூட்டம் தயாராக இருந்தது. 15 இலட்சம், 25 இலட்சம் எல்லாம் அவர்களால் சுலபமாக லோன் போட்டு வாங்கி விட முடிந்தது. இப்போது நிலைமை அப்படியில்லை.

‘போகிற போக்கைப் பார்த்தால் நாமெல்லாம் வீடே வாங்க முடியாது போல’ என்று சாஃப்ட்வேர் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். முன்பெல்லாம் அவர்களது சம்பளம் 20%20%22020 % - 30% அளவில் கூடும். இப்போது பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் ஒற்றை இலக்கத்தில் ஊதிய உயர்வு அளிக்கின்றன. 20-25 ஆண்டுகளுக்கு லோன் போட்டு EMI கட்டி முடிப்பதற்குள் வேலையை விட்டுத் தூக்கி விட்டால் என்ன செய்வது என திகைத்து நிற்கிறார்கள். மற்ற துறைகளை விட இவர்கள் கூடுதலாகச் சம்பாதிக்கிறார்கள் என்றாலும், கடந்த பத்தாண்டுகளைப் போல அடுத்து வரும் பத்தாண்டுகள் இருக்காது என நம்பலாம்.

கண்டிப்பாக சொந்த வீட்டில்தான் குடியிருக்க வேண்டும் என நம்மை குச்சி கொண்டு யாரும் அடிக்கவில்லை. அறுபது இலட்ச மதிப்புள்ள வீடு மாதம் 15 ஆயிரத்துக்கு வாடகைக்குக் கிடைக்கிறது. Rental yield எனக் குறிப்பிடுகிற வாடகை ஈக்கும் திறன் 2 அல்லது 3 விழுக்காடுதான்.

ஒரு பக்கம் பில்டர்கள் விற்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம், நம்மால் தூக்க முடியாத பாரமெனினும் கூட வாடகை வீட்டை விட சொந்த வீட்டையே நாம் நாடுகிறோம். இந்திய நகரங்களில் 66 சதவீதம் பேர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். சர்வதேச அளவில் மற்ற முன்னேறிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம்.

சென்னையோடு ஒப்பிடும் போது பெங்களூரில் சொந்த வீடுகளுக்கான தேவை குறைவாகவும், வாடகை வீடுகளுக்கான டிமாண்ட் அதிகமாகவும் உள்ளது. ’கோணலா இருந்தாலும் என்னோதாக்கும்’ என்ற ரீதியில் சென்னையில் பெரும்பாலும் சொந்த வீட்டையே நாடுகிறார்கள். அதனால் வாடகை குறைவாகவும், விலை கூடுதலாகவும் உள்ளது.

நிதி நிர்வாகத்தில் ஊறிய பர்சனல் ஃபைனான்ஸ் ஆலோசகர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? இதுதான் உங்களது முதல் வீடு என்றால், முன்பின் ஆனாலும் பரவாயில்லை. ஹவுசிங் லோன் போட்டு வாங்கி விடுங்கள்.

வாடகைக்குப் பதிலாக இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் பணம் போட்டு லோன் EMI கட்டலாம். பணம் இருக்கும் போது கூடுதலாகக் கடனைச் செலுத்தி விட்டு, வேறு ஏதாவது தேவை ஏற்படுகையில் பெரும் தொகையை எடுத்துக்கொள்ளும் வகையில் புதுமையான பல கடன் திட்டங்கள் உள்ளன. வீட்டுக் கடனுக்கு வருமான வரிச் சலுகைகள் வேறு.

இரண்டாவது வீடு வாங்குவது, இன்றைய சூழலில் முட்டாள்தனமாகவே அமையும். அதை விட முட்டாள்தனம், EMI கட்ட மட்டுமே ஒட்டு மொத்த வருமானத்தையும் ஒதுக்கி விட்டு ஓய்வு காலத் திட்டமிடலுக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் ஒன்றுமே செய்யாமலிருப்பது. தனி வீடு சாத்தியமில்லாத சூழலில் அனைவரும் அபார்ட்மெண்டுகளையே வாங்க வேண்டியிருக்கிறது. அபார்ட்மெண்டுகளின் மதிப்பு நாளுக்கு நாள் குறையத்தான் செய்யும். விலை ஏறுவதாக கடந்த சில ஆண்டுகளாக நாம் நினைத்துக்கொண்டிருந்தது, புதிய பிளாட்களின் விலையோடு ஒப்பிட்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டதே தவிர வேறொன்றுமில்லை.

என்ன செய்கிறோம் என்பதை விட எதைச் செய்யாமல் விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம் என்பதிலேதான் நமது எதிர்கால வளம் தீர்மானிக்கப்படுகிறது.

அப்படி இருக்கும் போது கழுத்து வரைக்கும் கடனில் மூழ்கித்தான் இரண்டாவது வீடு வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடன் பெற வேண்டிய சூழ்நிலையில் நீங்கள் இல்லை, கை நிறையப் பணம் இருக்கிறது என்றாலும் கூட இத்தனை பெருந்தொகையில் இன்னொரு வீடு தேவையில்லை. பிற இலாபகரமான முதலீடுகளில் ஈடுபட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பத்தை இழக்கவும் அது காரணமாக அமைந்து விடுகிறது.

எட்டு வருடத்தில் எட்டு இலட்ச ரூபாய் பிளாட் எண்பது இலட்சம் ஆகவில்லையா என நினைப்பீர்களானால், ஹாலி வால்நட்சத்திரத்தோடு (Halley’s Comet) அதை பொருத்திப் பாருங்கள்.

ஹாலி வால்நட்சத்திரம் 75-76 ஆண்டுக்கு ஒரு முறைதான் தோன்றும். ஆனால் நிலாவோ, மாதாமாதம் தேய்ந்து வளர்ந்து வரும். நிகழாத ஒரு வால் நட்சத்திரத்துக்கான தேடலில் நிஜமான பெளர்ணமிகளை உதாசீனப்படுத்தி விடாதீர்கள்.

3 comments:

வடுவூர் குமார் said...

நிதர்சன உண்மை. நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

seetha lakshmi said...

Good Information

seetha lakshmi said...

Good information