Thursday, July 04, 2013

வாழ்க சனநாயகம்

(கடந்த 2012 மே மாதம் ஆழம் இதழுக்கு எழுதியது)

அறுபதாம் கல்யாணம் இந்த வருடம் - கூட்டாட்சிக் குடியரசான பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்துக்கு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 இல் நடைமுறைக்கு வந்து தேசம் தன்னை குடியரசாக அறிவித்துக்கொண்ட பிறகு 1951 இறுதி மற்றும் 1952 துவக்கத்தில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மக்களவை 1952 மே 13 ஆம் தேதி முதலாவதாகக் கூடியது. இப்போது அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நாடாளுமன்றம். சுதந்திர இந்தியக் குடியரசின் நாடாளுமன்ற ஆயுள்தான் 60 ஆண்டுகளே தவிர, 1927 இல் கட்டி முடிக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம் 85 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறது.

ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற போது இந்தியா ஒரே தேசமாக உடையாமல் நீடிக்கும் என்று வெகு சிலரே நம்பினர். அப்படியே நம்பினாலும் அது ஜனநாயக தேசமாக நீடிக்கும் என அதிலும் சிலரே கருதினர். ஏழ்மை, கல்வியறிவின்மை, சமுதாய ஏற்றத்தாழ்வு, சாதிய அடக்குமுறைகள் மற்றும் பாகிஸ்தான் பிரிவினை உண்டாக்கிட ரணம் ஆகியன அச்சுறித்தின. அத்தனை கணிப்புகளும் பொய்த்து 15 நாடாளுமன்றத் தேர்தல்களைக் கடந்து நிற்கிறது இந்தியா. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சூழலில் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற வெகு சில நாடுகளில் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது. 1970 களின் பிற்பகுதியில் இந்திரா காந்தி-சஞ்சய் காந்தி உருவாக்கிய நெருக்கடி நிலை சமயத்தைத் தவிர எல்லா நேரத்திலும் மக்களாட்சி இங்கே உயிரோடு இருந்து வந்திருப்பதையே மிகப் பெரிய சாதனையாகக் கருத வேண்டும்.

இந்தியாவின் சாதனைகள் எல்லாமே இந்திய ஜனநாயகத்தின் சாதனைகள் எனக் கொள்ளவும் சாத்தியம் இருக்கிறது. நிலையான அரசும், அரசு இயந்திரமும் இல்லாமல் ஒரு தேசமானது பொருளாதார ரீதியாக மேம்படவும், பன்னாட்டு வணிகத்தில் செழிக்கவும் முடியாது. சராசரி ஆயுள் நீடிப்பு, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி என யாவுமே நிலையான ஜனநாயக்க் குடியரசு இல்லாமல் போனால் இத்தனை தூரம் சாத்தியமாகியிருக்குமா என்பது ஐயமே.

இன்றைய சூழலில் இந்தியா மார் தட்டிக்கொள்ளும் அபரிமிதமான தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியே கூட்டாட்சித் தத்துவத்தின் விளைவேயாகும். நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தி கட்டாயமாகத் திணிக்கப்பட்ட போது அதை அண்ணாவின் அன்றைய தி.மு.க மட்டும் பலமாக எதிர்க்காமல் போயிருந்தால் இன்று இந்தியாவில் ஆங்கிலம் இருக்கும் இடத்தை இந்தி பிடித்திருக்கும். ஆங்கிலக் கல்வியறிவால் ஏற்பட்ட கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பப் புரட்சி இத்துனை தூரம் சாத்தியமாகியிராமல் போயிருக்கலாம். இந்தித் திணிப்பை ரத்து செய்த ஜனநாயக நடவடிக்கையானது உடையாத ஒரே தேசமாக இந்தியா நீடிப்பதற்கு மட்டுமல்லாது ஆங்கிலம் பேசும் பாரிய மனித வளத்தை உருவாக்கி, அதன் வாயிலாக பொருளாதார வளர்ச்சிக்கும் மறைமுகமாக உதவியிருக்கிறது.

நமது தெற்காசிய அண்டை நாடுகளில் இராணுவ ஆட்சி வருவதும், அரசியலமைப்பு முற்றிலுமாக மாறுவதும் அடிக்கடி நடந்திருப்பதைக் கண்டிருக்கிறோம். அவற்றோடெல்லாம் ஒப்பிடுகையில் பரந்துபட்ட மொழி, மத மற்றும் இனப் பின்னணி கொண்ட துணைக்கண்டமாகிய இந்தியா இன்னும் ஒரே தேசமாக இருப்பதற்கு அதன் நிலையான அரசியலமைப்பு, அரசாங்கம், கட்டமைப்பு ஆகியன முக்கியக் காரணமாகின்றன.

பிரதமர் நேருவின் மருமகன் பெரோஸ் காந்திய அம்பலப்படுத்திய ஊழலின் விளைவாக நேருவின் நெருங்கிய நண்பரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாரம்பரியம் இந்திய நாடாளுமன்றத்துக்கு உண்டு. நாடாளுமன்ற அலுவல்களை பத்திரிக்கையாளர் பார்வைக்கு திறந்து வைத்ததிலும் பெரோஷுக்கு முக்கியப் பங்குண்டு.

ஆனால் நிலைத்தன்மை மட்டுமே தேசத்தின் இருப்பை, அதன் அடையாளத்தை நியாயப்படுத்திடாது. நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் எத்தனை மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கின்றன, சுதந்திரமான பிரஜைகளாக வாழ மக்களை எந்த அளவுக்கு வழிவகை செய்திருக்கின்றன என்றெல்லாம் ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும். கடந்த 20 ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றம் ஆண்டுக்கு 100 நாட்கள் கூட கூடி விவாதித்ததில்லை. ஆனால் இங்கிலாந்தில் 160 நாட்களுக்கு மேலே பாராளுமன்ற அலுவல் நடந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் பிரச்சினைகளை விவாதித்து பொதுவான முடிவுக்கு வரும் காலமெல்லாம் போய், பிரதமரோ அல்லது ஆளுங்கட்சியின் தலைவரோ எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் கூடமாக நாடாளுமன்றம் மாறியிருக்கிறது. சட்ட அமைச்சர் அம்பேத்கார் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வழி செய்யும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்த போது, அதை பிரதமர் நேரு ஆதரித்தாலும் கூட, மற்ற உறுப்பினர்களின் ஆதரவின்மை காரணமாக தோற்கடிப்பட்ட ஜனநாயகத்தன்மை (அந்த முடிவு மோசமானதாக இருக்கலாம்) ஒரு காலத்தில் இருந்தது.

அனைத்து மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் இருக்கிறதா என்றாலும் இல்லை. வலிமையுள்ளவன் கூறுவது மட்டுமே சட்டமாகும் பேரவலம் இந்தியாவில் உண்டு. பெரும்பான்மை வாக்குச் சீட்டு மூலம் கிடைக்கும் அதிகாரத்தின் கோரப் பிடி திராணியற்றவர்களை நசுக்குவது நடந்த வண்ணமே இருக்கிறது. சமீபத்தில் கூடங்குளம் போராட்டம் நசுக்கப்பட்டது தெளிவான உதாரணம்.

பரவலாக விரவிக் கிடந்த அதிகாரத்தை டெல்லியில் குவியச் செய்ததும், மாநிலங்களில் செல்வாக்கற்ற தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டு என்ற நோக்கமும், மத்திய ஆளும் கட்சி அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்வதும் நேருவின் காலத்திற்குப் பின்னர் இந்தியாவின் ஜனநாயகத் தன்மையில் இந்திரா காந்தி புகுத்திய சரிசெய்ய முடியாத மாறுதல்கள்.

பரவலான மக்களின் பிரதிநிதிகளை, அவர்தம் நிலைப்பாடுகளை சகித்து ஒரே இயக்கமாக ஒரு காலத்தில் விளங்கியது காங்கிரஸ் பேரியக்கம். தட்டையாக சப்பாத்திக்கள்ளியைப் போல அது மாறிய பிறகு வலதுசாரி, இட்துசாரி, மற்றும் மொழி & பிராந்திய நலன் சார்ந்த கட்சிகள் பெருக ஆரம்பித்தன. 1967 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தியை முன்னிறுத்திய காங்கிரஸ் வெறும் 283 இடங்களை மட்டுமே வென்றது. முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் முறையே 364, 371, 361 இடங்களைக் கைப்பற்றியிருந்த்து குறிப்பிட்த்தக்கது.

மக்கள் பிரச்சினையை மையப்படுத்தாமல், மக்களின் எண்ணப் பிரதிபலிப்பின் பின்னணியில் வளராமல், ஊழலின் உருவான கருப்புப் பணத்தை மூலதனமாக வைத்தே இன்றைய அவல அரசியல் நடக்கிறது. பிரச்சினைகளை விவாத்த்துக்குளாக்குவது, மக்கள் கிளர்ச்சியை அங்கீகரிப்பது, பொதுக்கருத்தை எட்டுவது என்ற பொருள்படும் ‘அரசியலாக்குதல்எனும் சொல் சில தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட நலனைக் காப்பாற்றுவதற்கான நாடகத்தினால் (ஈழப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம், கூடங்குளத்தை அரசியலாக்க வேண்டாம்) இழிவான பொருள் கொண்டு விளங்குகிறது. அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் ‘போராட்டங்கள்அனைத்தும் பிரபு நடிக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் புரட்சிப் போராட்ட்த்தை விட வேடிக்கையாக உள்ளன.

இன்னொரு பக்கம் இந்தியாவின் கொள்கை முரண் பல்லை இளிக்கிறது. சுந்த்திரம் அடைந்தவுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் மீது படையெடுத்த போது அதை இந்தியாவோடு இணைக்குமாறு மன்னர் ஹரி சிங்கை கட்டாயப்படுத்தி இணைத்த நேரு, 1947 நவம்பரில், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பின் வாக்கெடுப்பு நட்த்தி அவர்கள் தனிநாடு விரும்பினால் அவர்கள் விருப்பப்படி விடுவோம் என்று வானொலியில் ஆற்றிய உரையை நமது வரலாறு இலகுவாக மறந்து விட்டது. மக்கள் விருப்பம் என்னவாக இருக்கும் என்பது தெரிந்ததால் இன்னும் வாக்கெடுப்பு நடக்கவேயில்லை. தனி நாடாக இருக்க விரும்பிய ஹைதராபாத் சமஸ்தானத்தை ‘மக்கள் விருப்பம்என்ற பெயரில் இந்திய இராணுவம் கைப்பற்றியது. அதே போல 1970 களில் மன்னரின் விருப்பதற்கெதிராக, மக்கள் விருப்பப்படி இராணுவ நடவடிக்கை மூலம் சிக்கிம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. இதற்கெல்லாம் நேர் எதிராக தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தனது தோழி சிறீமாவோ பண்டாரநாயகேவின் நலன் கருதி இலங்கைக்கு வாரிக் கொடுத்தார் இந்திரா காந்தி.

சமூக/பொருளாதார ஏற்றத்தாழ்வு, விவசாயி தற்கொலைகள், மதக் கலவரங்கள், பொது வாழ்க்கையில் அப்பழுக்கில்லதா தலைவர்கள் இல்லாமை, கருப்புப் பணம், ஸ்விஷ் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியீடு, சட்டம் மற்றும் நீதித் துறைகளில் நீக்கமற நிறைந்திருக்கிற அரசியல் தலையீடுகள், லோக்பால், பணம் படைத்தவனுக்கு ஒரு சட்டம் – இல்லாதவனுக்கு ஒரு சட்டம் என்ற நடைமுறை எதார்த்தம், ஏதாவது செல்வாக்கு அல்லது குறுக்கு வழி மூலமே காரியத்தைச் சாதித்தாக வேண்டிய நிலை ஆகியன இந்திய ஜனநாயகத்தை எதிர்நோக்கியுள்ள பெரும் சவால்கள். இந்த சவால்களைக் களைவதைக் காட்டிலும் அவற்றை அரசியல் நிர்வாகத்தின் ஒரு அங்கமாகவே மாற்றியிருக்கிறோம். அப்படியே பழகியும் விட்டோம்

ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத அங்கம் சகிப்புத்தன்மை. ஜனநாயகம் நீடித்திருப்பதற்கு இது மிகவும் அவசியமான ஒன்று. பொதுப் பிரச்சினைகளில் அதீத சகிப்புத்தன்மை பெருகியுள்ளதா இல்லையா என்று கணிக்கவே முடியவில்லை. சகிப்புத்தன்மை என்பதைக் காட்டிலும் அலட்சியப் போக்கு என்றே இதைக் கொள்ள வேண்டும். எந்த ஒரு விவாதப் பொருள் மீதும் ஜனநாயகத்தின் நாயகமாக விளங்கும் ஜனத்திற்கு தெளிவில்லை. மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற மாபெரும் ‘அரசியல்இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

ஒரு சில அரசியல் கட்சிகளும், மாநில அரசுகளும் குறுகிய பிராந்திய நலன்களை முன்னிறுத்தி தேசிய நலனுக்கு முரணாக செய்லபடுவதும், நீதிமன்றத் தீர்ப்புகளை துச்சமாக மதிப்பதும், அவற்றையே ஆளும் மத்திய அரசு மெளனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு கள்ளத்தனமாக அங்கீகரிப்பதும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், அடிக்கடி முறைதவறி கையாளப்படும் ‘இறையாண்மைஎன்ற சொல்லின் உண்மையான பொருளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை.

இன்றைக்கு நடைமுறையில் முழுமையாக செயல்படுத்தாவிட்டாலும், ஜனநாயகம் என்ற ஒன்று மரிக்காமல் இருக்கிறதென்றால் அதில் அனைத்துத் தரப்புக் கருத்துக்களையும் உள்வாங்கி, அவற்றுக்கு மதிப்பளித்து அங்கீகரித்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. இந்திரா காந்தி/சஞ்சய் காந்தி போன்றோ, ஜெயவர்த்தனா போன்றோ யாராவது ஒருவர் சுதந்திர இந்தியாவின் முதல் ஆட்சியாளராக இருந்திருந்தால் ஜனநாயகத்தின் போக்கு வேறு மாதிரி ஆகியிருக்கும்.

காங்கிரஸ் கட்சியைச் சாராத அம்பேத்காரை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆக்கினார் நேரு. அதை விட முக்கியமாக, இந்திய அரசியலமைப்புச் சட்ட்த்தை உருவாக்கும் இமாலயப் பணியை அவரிடம் ஒப்படைத்தார்.

இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடிருப்பதில் நேருவுக்கு இணையான, இன்னும் சொல்லப்போனால் நேருவைக் காட்டிலும் கூடுதலான, பங்கு அம்பேத்காருக்கு உண்டு. உலகிலேயே மிக நீளமான அரசியல் சாசனத்தை இந்தியாவுக்காக உருவாக்கிக் கொடுத்த சிற்பி அவர். சிவில் சமூகத்தின் அடிப்படையான அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கி 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 450 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உடையதாகத் திகழும் அரசியல் சாசனத்தைச் செதுக்கியவர்.

கூட்டாட்சித் த்த்துவத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் நாம் இன்னும் பேணி வருகிறோம் என்பதில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேசமாகத் திகழ்வதில் வலுவான அரசியலமைப்புக்கு பெரும் பங்கிருக்கிறது.

எவ்வளவு நல்ல அரசியலமைப்புச் சட்டமாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவோர் மோசமான ஆட்களாக இருந்தால் அது மோசமான அரசியலமைப்புச் சட்டமாகவே முடியும். அதற்கு நேர் எதிராக எவ்வளவு மோசமான அரசியலமைப்புச் சட்டமாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவோர் நல்லோராக இருந்தால் அது நல்ல அரசியலமைப்புச் சட்டமாக அமையும்.இந்த வரிகள் அரசையலமைப்புச் சட்டத்தைக் குறித்து நாடாளுமன்றத்தில் (1949 இல் அது அரசியல் நிர்ணய சபை) அம்பேத்கார் குறிப்பிட்ட நிறைவுப் பேச்சு.

எவ்வளவு நிச்சயமான உண்மை.

திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் மட்டுமல்லாது, சட்டம் போட்டுத் தடுப்பவனும், அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறவனும் திருந்துற வரைக்கும் திருட்டை ஒழிக்க முடியாது.

No comments: