Monday, July 08, 2013

திவ்யாவுக்கு sure ஆ கிடைக்குமா?

திவ்யாவுக்கு sure ஆ கிடைக்குமா?

பேப்பர், டிவி, எஃப்.எம் என எல்லாவற்றிலும் கேட்கிறார்கள். என்ன மேட்டரோ தெரியவில்லை. எதாவது மெகா சீரியலுக்கான முன்னோட்டமா அல்லது சினிமா விளம்பரமா? ஒரு வேளை புள்ளிராஜா மாதிரியான சங்கதியாகக் கூட இருக்கலாம். இருக்கட்டும். இந்த திவ்யாவுக்கு கிடைத்தால் என்ன கிடைக்காமல் போனால் என்ன?

தர்மபுரி திவ்யாவுக்கு கிடைக்குமா? அந்த சின்னப் பெண்ணின் வாழ்க்கை திரும்பக் கிடைக்குமா? நிம்மதி கிடைக்குமா? இளவரசன் இறந்து போனதால் உண்டான மன உளைச்சலில் இருந்து விடுதலை கிடைக்குமா? மீடியா வெளிச்சத்தில் இருந்து தப்பிக்க வழி கிடைக்குமா? விடை தெரியாத கேள்விகள். பரபரப்பான ஊடக விவாதத்திற்கு மூலப் பொருளாகப் பயன்பட்ட பல எளிய மனிதர்களின் பட்டியலில் இன்றைக்கு இளவரசனும், திவ்யாவும் இருக்கிறார்கள்.

சாதி வெறிக்கு இளவரசன் பழியானார் என்றும், நாடகக் காதல் ஜெயிக்காது என்றும், விடுதலைச் சிறுத்தைகளே இளவரசனைக் கொன்று போட்டு அரசியல் பண்ணுகிறார்கள் என்றும், இது தமிழினத்தின் சாபக் கேடு, வாக்கு அறுவடைக்கான மூலதனம் என்றும் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வட தமிழகமும், சமூக வலைத்தளப் போராளிகளும் கொதிநிலையில் உள்ளனர். இது அடுத்த பிரச்சினை வெடிக்கும் வரை நீடிக்கும்.

காலம் எல்லாவற்றையும் கடந்து செல்லும். சாதிகள் இல்லையென்று சொல்லிக்கொண்டுதானிருப்போம். ஆனாலும் சாதிகள் ஒரு போதும் அழியப் போவதில்லை. இளவரசன் இறந்து போனதால் இனி மேல் சாதி கடந்த காதலெல்லாம் நின்று போவதுமில்லை. திவ்யா ஆசைப்பட்டால் அவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்போம் என இளவரசனின் தந்தை கூறியிருக்கிறார். மகிழ்ச்சி. ஊடக வெளிச்சங்கள் விரைவில் வேறு ஒரு பரபரப்பைத் தேடி இந்த அபலைப் பெண்ணை விடுவிக்கட்டும். பாவம் அந்த புள்ளய விட்டுருங்க.

அப்பட்டமாக ஜாதி அரசியல் செய்யும் ராமதாஸும், ஈஸ்வரன் போன்ற சிலருமே கூட தங்கள் பெயருக்குப் பின்னால் தமது ஜாதிப் பெயரைப் பயன்படுத்தத் தயங்குமளவுக்கு பெரியாரின் தாக்கம் இன்றும் நீடிக்கிறது. ஆனால் மெத்தப் படித்தவர்கள் சிலர் தங்கள் பெயருக்குப் பின்னால் தேவர், படையாச்சி, கவுண்டர், பறையனார், ஐயர் என போட்டுக்கொள்வது ஆபத்தாகப் படுகிறது. ரொம்பப் பேசினால் அரசியலாகி விடும். சாதிக் கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். கூடவே எல்லா அரசியல் கட்சிகளும் சாதியை வைத்திருக்கின்றன என்பதே சொகுசான எதார்த்தம்.

குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் யாரும் தமிழ்ப் பெயர் வைப்பதில்லை என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ராமசாமியும், கந்தசாமியுமாக இருந்த குழந்தைகள் கடந்த தலைமுறையில் சுரேஷும், ரமேஷும் ஆனார்கள். இன்று ஆகாஷும், அகிலேஷுமாக மாறியுள்ளனர். குழந்தைகளும், குடும்பங்களும் தமது அடையாளத்தை இழக்கிறார்கள். இருந்தாலும் கூட பாரம்பரியமாக அழைக்கும் பெயரையும் ஊரையும் கொண்டு அவன் ஜாதியைக் கணிக்கும் சாமர்த்தியம் பெற்றவர்களை குழப்பியடிக்கும் சக்தி இந்த வடமொழிப் பெயர்களுக்கு உண்டு. ’ஹலோ ஐயம் பழனியப்பன்’ என்றால், ’சாருக்கு காரக்குடிங்களா?’ என்று சுலபமாகக் கேட்கும் அறிவாளிகள் இனி வேறு உத்திகளை நாட வேண்டும்.

குமணன் அப்படீன்னு பேரு வைங்க. மலையாளிங்க கூட இனியாவென பெயர் படைத்தவர்களாக இருக்கிறார்கள். நாம் அவ்வாறான இனிய தமிழ்ப் பெயர்களைக் கொண்டாலும் ஜாதி வெளிப்படாது. இப்படி சிலர் சொல்லக் கூடும். எனக்கும் அதில் உடன்பாடு உண்டு. உண்மையில் இளவரசனும், திவ்யாவும், ராமதாஸும், அன்புமணியும், குருவும் கூட அப்படியாகப்பட்ட பொதுவான பெயர்கள்தான்.

No comments: