Friday, August 30, 2013

ஷோபா சக்தியின் சமூகத்திற்கு மெட்ராஸ் கஃபே வந்தனங்கள்


ஷோபா சக்தியை நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக. 

ஷோபா ஒரு முன்னாள் விடுதலைப் புலி. முன்னாள் என்றால் பல வருடம் முன்னால். பிறகு புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பிரான்ஸில் வசிக்கிறார். தீவிரமான புலி எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக அறியப்படும் நபர். லீனா மணிமேகலையுடன் சேர்ந்து ‘செங்கடல்’ படத்தை எடுத்தவர். அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஷோபாவில் எழுத்தில் இயல்பாகத் தெறிக்கும் எள்ளலும், மேவரிக்கான நடையும் தனித்தன்மை வாய்ந்தவை. 

மெட்ராஸ் கஃபே படத்தில் வரும் அனுராதபுரம் காட்சி தொடர்பாக ஒரு விவாதத்தில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்.

//இழவிலும் காசு பார்க்க 'கிழக்குப் பதிப்பகம்' வெளியிட்ட 'பிரபாகரன்' என்ற புத்தகத்தை எழுதிய செல்லமுத்து குப்புசாமி அனுராதபுரப் படுகொலைகள் குறித்த (Madras Cafe) விவாதத்தில் இவ்வாறு சொன்னார்: /அனுராதபுரம் கொலை மாதிரி பெரிய அளவில் சிங்களர்களைப் பாதிக்குமாறு ஒரு செயலில் ஈடுபடுமாறு RAW எல்லாக் குழுக்களையும் மிரட்டி, அதன் அடிப்படையில் புலிகள் அதைச் செய்தனர். பேச்சு வார்த்தைக்கு வராமல் இழுத்தடித்த ஜெயவர்த்தனாவை பேச்சு மேசைக்கு வரவைக்க இந்தியா கையாண்ட உத்தி இப்படி உமா மகேஸ்வரன் பேட்டி கொடுத்த சில நாட்களில் கொல்லப்பட்டதையாவது காட்டினார்களா? இந்தியாவின் சமாதான முயற்சியையும், அனுராதபுரம் நிகழ்வையைம் தனித்தனியே பார்க்க முடியாது./

நான் அவருக்கு இவ்வாறு எழுதியுள்ளேன்: / அப்படியா! நான் இதுவரை புலிகள் தன்னிச்சையாகவே அனுராதபுரப் படுகொலைகளை செய்ததாக நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் சொல்லித்தான் இந்திய அரசின் கைப்பாவைகளாகப் புலிகள் அந்தப் பாதகத்தைச் செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதேவேளையில் வேறெந்த போராளிக் குழுக்களும் இந்திய அரசு வற்புறுத்தியும் கூட இந்தப் பாதகத்தை செய்ய முன்வரவில்லை என்பதும் தெரிகிறது. தகவலுக்கு நன்றி தோழர்./

ஏலி ஏலி லாமா சபக்தானி!
//

நான் இதை மறுத்துப் பேசுவேன் என்றோ, அல்லது புலிகளின் செயலை நியாப்படுத்துவேன் என்றோ அவர் கருதியிருக்கக் கூடும். அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதும், அனுராதபுரம் நிகழ்வும் புலிகள் மீதும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய ஈழத் தமிழனம் மீதுமான கரும்புள்ளி என்பதில் எனக்கு பலமான நம்பிக்கை உண்டு.

அனுராதபுரம் நிகழ்வு குறித்த பகுதியை ’பிரபாகரன் – ஒரு வாழ்க்கை’ புத்தகத்தின் ஆங்கில வடிவமான Prabhakaran: The Story of his struggle for Eelam ல் இருந்து:

According to Uma Maheswaran’s 1989 interview to the Time magazine, it was India’s RAW that had encouraged LTTE to attack the Sinhala public to make Jayewardene come down from his position:

‘A RAW officer asked us to throw a grenade into a Sinhalese cinema [hall] or put a bomb in a bus or market in a Sinhalese town. Only we and the EROS refused. In May 1985 two busloads of Tigers drove into the ancient Sinhalese capital of Anuradhapura and, in the town's main bus station, opened fire with automatic weapons, slaughtering 143 civilians there and elsewhere. According to one of the participants in the killing spree, Tiger leader Vilupillai Prabhakaran was in radio contact with RAW agents during and after the massacre.’25

Time, Asian Edition, 3 April 1989

ஷோபா சக்தியின் புனைவுகளைப் போல அல்லாமல் நிகழ்கால வரலாறு எழுதுவது மிகவும் சவாலான காரியம். 

நீங்கெல்லாம் அரசியல் பேசுவது அதுவும் ஈழம் குறித்து எனக்கே பாடம் நடத்துவதற்கு இதுவொன்றும் எம்.ஜி.ஆர் போல ரோபோ சங்கர் பேசும் மிமிக்ரியல்ல. இரத்தமும் சதையுமான எங்களது வரலாறு.” என நீங்கள் சங்கரபாண்டியை நோக்கிச் சொன்னது என்னைச் சுட்டிச் சொன்னதாகவும் கருதுகிறேன். இரத்தமும், சதையுமான எங்கள் வரலாற்றை தமிழ்நாட்டைச் சேர்ந்த எவனோ செல்லமுத்து குப்புசாமி எப்படி எழுதலாம் என உங்கள் அடிமனது சொல்வதாகவே நம்புகிறேன். இருக்கட்டும். அதற்கு உங்களிடம் ஆயிரம் காரணங்கள், நியாயங்கள் இருக்கலாம். நாம் முழுமையாக மதிக்கிறேன்.

ஆனால் மெட்ராஸ் கஃபே படத்தில் வருவது யாருடைய ரத்தமும், சதையுமான வரலாறு? படம் எடுத்தவன் உங்களோடு அல்லப்பிட்டியில் பிறந்தவனா?

Thursday, August 29, 2013

டாலர் தேசம்

கஜகஸ்தான் என்றொரு தேசம். அங்கு நான் கொஞ்ச நாள் தங்கியிருந்தேன். Borrowed Girlfriend (இரவல் காதலி) நாவலில் மிக முக்கியமான அத்தியாயம் கஜகஸ்தான் பின்னணியில் வருகிறது.

அல்மாட்டி நகரின் கோகோல் ஸ்ட்ரீட்டில் பெரியதொரு கமர்சியல் ஏரியா இருக்கிறது. பிற்பகலை அங்குதான் கழித்தோம் (நாவலின் நாயகனும், நாயகியும்). கஜகஸ்தானில் கஜக் மக்கள் பெரும்பான்மையினர் எனினும் எல்லோருமே ரஷ்ய மொழி பேசுகிறார்கள். அந்த தேசம் ரஷ்ய பாரம்பரியத்தையும், மொழியையும் இன்னும் பேணுகிறது. 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து கடைசியாகப் பிரிந்து வந்தது கஜகஸ்தான். அன்று முதல் இன்று வரை Nursultan Nazarbayev  என்ற நபர் தான் கஜகஸ்தான் அதிபராக உள்ளார். சோவியத்தின் ஒரு அங்கமாக இருந்த வரை அவர் நாத்திகவாதியாக விளங்கினார். கஜகஸ்தான் தனி நாடாக மாறிய பின்னர் இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாறி விட்டார். கடைந்தெடுத்த அரசியல்வாதி போலும். உஸ்பெகிஸ்தான் முதலிய அண்டை நாடுகள் வறுமையில் உழன்றாலும் கஜகஸ்தான் செல்வச் செழிப்பில் திளைக்கிறது. காரணம் எண்ணெய் வளம்.

சரி மேட்டருக்கு வருவோம். அல்மாட்டி நகரில் ஓட்டலில் தங்குவதை விட ஏதாவது வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கலாம் என முடிவு செய்து செயல்படுத்தினோம். வீட்டு வாடகை எவ்வளவு தெரியுமா? அந்த ஊர்க் காசில் கிட்டத்தட்ட நான்கு லட்சம். இரண்டு மாதம் தங்கியதால் எட்டு இலட்சம் தர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் வீட்டு ஓனர் கஜகஸ்தான் டெங்கேவில் வாடகை தர வேண்டாம், அமெரிக்க டாலராகக் கொடுத்து விடுங்கள் என முன் கூட்டியே சொல்லி விட்டார்.

அல்மாட்டி கஜகஸ்தானில் பெரிய நகரம். அங்கிருக்கும் பெரும்பாலான ஏ.டி.எம் இயந்திரங்கள் உள்ளூர் கரன்சியும், கூடவே அமெரிக்க டாலரும் தருகின்றன. எக்சேஞ்ச் ரேட் தாறுமாறாக இருப்பதால் பல வியாபார நிறுவனங்கள் தமது விலையை டாலரில் வைத்திருக்கிறார்கள். ஏற்ற-இறக்கம் என்ற பிரச்சினையில்லை பாருங்கள். ரூபாயின் மதிப்பும் (இன்று இதை எழுதி முடிக்கும் போது ஒரு டாலர் 68 ரூபாய்க்கும் மேலே) இப்படியே சரிந்தால் CBSE பள்ளிக் கூடங்களும், மருத்துவனைகளும் இனிமேல் ஃபீஸ் வாங்கும் போது டாலரில் வாங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. (ஏற்கனவே தங்கத்தின் விலையை டாலரில் தான் செலுத்து வருகிறோம் என்ற உண்மை தெரியாமலேயே அதைச் செய்கிறோம்). நிச்சயமான தேவை உள்ள பொருட்கள் மற்றும் தேவைகள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். சொல்லப் போனால் டாஸ்மாக் நிறுவனம் NYSE இல் பட்டியலிடப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இப்போதிருக்கும் நிலைமையில் இந்தியாவிற்கு வெளியே வேலை செய்யும் ஒரு சிலரையும், சாஃப்ட்வேர் கம்பெனி முதலீட்டாளர்களையும் (சாஃப்வேர் துறை ஊழியர்கள் இல்லை) தவிர யாருமே மகிழ்ச்சியாக இல்லை. இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி அனைவரையும் நேரடியாகப் பாதிக்கிறது. இல்லையேல் வெகு விரைவில் பாதிக்கும். ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் “NOW THE STORY IS UNFOLDING AND IF STILL GOVERNMENT AND RBI CONTINUES TO DO WHAT THEY ARE DOING, WE ARE LOOKING FOR A MASSIVE MASSIVE HYPER INFLATION. THIS MAY LEAD TO ZIMBABWE LIKE SITUATION.“ என அறச்சீற்றம் கொண்டுள்ளார். விரைவில் தக்காளியும், தனுஷ் வாங்கும் சம்பளமும் டாலரில் குறிக்கப்படுமா? ரூபாய் என்றும் டாலர் என்றும் வேறு வேறாக இருந்தால் தானே இந்தப் பிரச்சினை? பேசாமல் ரூபாயை முற்றிலுமாக ஒழித்து விட்டு எங்கும் டாலரையே பயன்படுத்தலாமே? இப்படியெல்லாம் கேள்வி எழுந்தால் நீயும் என் இனமே ! (ஃபேஸ்புக்கில் நிறையப் எதையாவது போட்டு ’நீயும் உடன்பிறப்பே’ என திமுகவைக் கலாய்க்கிறார்கள் யுவர் ஆனர்)

இந்தியாவின் திறந்த பொருளாதாரக் கொள்கையால் தான் இந்த நிலையா அல்லது பாலிசி மற்றும் அரசாங்கத்தின் நிதிக் கொள்கை நிர்வாகத்தில் கோளாறா என்பது விவாதத்துக்குரியது. ஆழமாக அதைப் பற்றி பலவாறாக எழுதலாம். சாதக பாதகங்களை அலசலாம். விரல் சுட்டலாம். நிச்சயமாக நிலைமை நன்றாக இல்லை. இதற்கான விலையை நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வடிவத்தில் கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஃபாரின் ஒயின் இறக்குமதி செய்கிறவன் தான் பாதிக்கப்படுவான் என்றில்லை.

Monday, August 26, 2013

ஜின்னா - தேதியவாதியா? பிரிவினைவாதியா?

இந்தியா வேறு, பாகிஸ்தான் வேறு என இரு தேசங்களாகப் பிரிக்கட்டு விட்டன. பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் ஆகிறார் ஜின்னா. அதற்கு முன்னர் அவர் பேசியது:

“I still consider myself to be an Indian. For the moment I have accepted the Governor General-ship of Pakistan. But I am looking forward to a time when I would return to India and take my place as a citizen of my country"

தனது நாற்பது வருட அரசியல் வாழ்க்கையில் முப்பது வருட காலம் இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், கடைசி பத்தாண்டு காலம் பாகிஸ்தான் பிரிவினைக்காவும் குரல் கொடுத்த முகமது அலி ஜின்னா விளங்கிக் கொள்ள முடியாத புதிர். ஜின்னாவைப் பற்றி நாம் ஏற்கனவே பல கெட்ட, நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருந்தாலும் சந்தியா பதிப்பகம் வாயிலாக சா.ராசமாணிக்கம் எழுதிய ‘ஜின்னா - தேதியவாதியா? பிரிவினைவாதியா?’ என்ற புத்தகம் ஜின்னா என்கிற மனிதரைப் பற்றிய பல விஷயங்களைத் தெரியக் கொடுக்கிறது.

ஜின்னா ஒரு குஜராத்தி. அவரது முன்னோர் மதம் மாறியிராவிடில் காந்தியும்,  ஜின்னாவும் ஒரே ஜாதிக்கார ஆட்கள். இருவரின் பூர்வீக கிராமங்களுக்குமான தூரம் முப்பத்திச் சொச்ச கிலோ மீட்டர் தான். ஜின்னாவின் காதல் மனைவி ஒரு பார்சி. அவரது மருமகன் கிறுத்துவர். சமையல்காரர் ஒரு கோவானியர். அவரது சுருக்கெழுத்தாளர் ஒரு பாலக்காட்டு ஐயர். அவரது டிரைவர் ஒரு சீக்கியர். அவர் ஆரம்பித்த Dawn பத்திரிக்கையின் ஆசிரியர் ஒரு மலையாள கிறித்துவர். அவரது பர்சனல் டாக்டர் ஒரு இந்து. பாகிஸ்தானின் முதல் பிரதமராக அவர் தேர்ந்தெடுத்த லியாகத் அலிகானின் மனைவி ஒரு பிராமணர். அவரால் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டவர் ஒரு தாழ்த்தப்பட ஜாதியைச் சேர்ந்தவர்.

தன் அரசியல் வாழ்வின் பிற்பகுதியில் முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுத்த ஜின்னா எந்தக் காலத்திலும் முஸ்லீமாக வாழ்ந்ததில்லை. முழுமையாக பகுத்தறிவுவாதியாக விளங்கினார். அவர் மண்டியிட்டுத் தொழுததில்லை. பன்றிக்கறி உண்டார். மதத்தில் உள்ள மூடப் பழக்கங்களைச் சாடினார். காந்தி தன் கடைசிக் காலத்தில் காங்கிரஸைக் கலைத்து விட ஆசைப்பட்டது போலவே ஜின்னா முஸ்லீம் லீகைக் கலைக்க ஆசைப்பட்டார்.

இன்னொரு சுவையான நிகழ்ச்சி. ஒரு முறை தேசிய சட்ட மன்றத்தில் பகத் சிங் குண்டு வீசினார். அப்போது அல்லா உறுப்பினர்களும் பதறியடித்து ஓடினார்கள். மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே அப்படியே அமர்ந்திருந்தனர். அதில் மோதிலால் நேருவும், ஜின்னாவும் அடக்கம்.

- கர்சன் பிரபு வங்காளத்தை மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் எனப் பிரித்த போது ஜின்னா அதை கடுமையாக எதிர்த்தார். கிழக்கு வங்காளம் (இன்று பங்களாதேஷ்) முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறியதால் அந்த நடவடிக்கையை அநேகமான முஸ்லிம்கள் வரவேற்றனர்.

- முதலாம் உலகப் போரில் துருக்கி தோற்றது. உலக முஸ்லிம்களின் தலைவன் எனக் கருதப்பட்ட துருக்கி சுல்தானும், துருக்கி தேசமும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தால் துண்டாடப்பட்டது. முஸ்லிம் இனத்திற்கு ஆதரவாக காந்தி இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களைத் திரட்டி கிலாபத் இயக்கம் என்ற ஒரு வேலையைச் செய்தார். ஏதே நாட்டில் நடக்கும் முஸ்லிம் பிரச்சினையில் நாம் தலையிடக் கூடாது என அதைக் கிண்டல் செய்து முஸ்லிம் மக்களின் கண்டனத்திற்கு ஆளானவர் ஜின்னா.

அப்படிப்பட்ட ஜின்னா இந்தியாவை இரண்டாகப் பிரிக்கும் நிலைக்குப் போனது வரலாற்று சோகம்.

ஜின்னாவின் உண்மையான நோக்கம் பாகிஸ்தான் பிரிவினையல்ல. அவர் அதை பேரம் பேசும் கருவியாகக் கையாண்டார். மவுன்பேட்டன் பிரபுவும், நேருவும், சர்தார் பட்டேலும் காந்தியின் சம்மதமின்றி ‘நீங்கள் பிரிந்து போங்கள்’ என ஒப்புக்கொண்டதை ஜின்னாவே கூட நம்ப முடியவில்லை.

பல கோடி மக்களின் வாழ்க்கையை இந்தியத் துணைக் கண்டத்தில் மாற்றியமைத்த முதமது அலி ஜின்னா என்ற குஜராத்தியின் அரசியல் வாழ்க்கையை ராசமாணிக்கத்தின் சிறிய புத்தகம் எளிய மொழியில் நன் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

முடிந்தால் வாசித்துப் பாருங்கள்

Saturday, August 24, 2013

காற்றாலை மின் உற்பத்தி

உங்களுக்கு கைபர் கணவாய் தெரியும். பாலக்காட்டுக் கணவாய் தெரியுமா? மேற்குத் தொடர்ச்சி மலையில் 40-45 கிலோ மீட்டர் இடைவெளியே அந்தப் பகுதி. இதன் வழியே பலத்த காற்று வீசும். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கும், பல்லடத்திற்கும் இடைப்பட்ட பகுதியான இதில் (உடுமலை, குடிமங்கலம், தாராபுரம் முதலிட இடங்களில்) காற்றாலை மூலம் இலாபகரமாக மின்சாரம் தயாரிக்கும் சாத்தியம் உண்டு. நிறைய காற்றாலைகள் இங்கே நிறுவப்பட்டுள்ளன. கடந்த தி.மு.க ஆட்சியில் புதிய காற்றாலைகள் வெகுவாக எழுந்தன. தமிழகத்தின் காற்று மின் உற்பத்தித் திறனில் பாதி இந்த உடுமலை-தாராபுரம்-பல்லடம் பகுதிக்கு உரித்தானது. வேகமாக கார் ஓட்டும் அந்த நபரும், ஹைஹீல் போடும் நடிகரும் நிறைய காற்றாலைகளை வைத்திருக்கிறார்களாம்.


ஆனாலும் கூட பலமாகக் காற்று வீசும் மாதங்களில் இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை தேவை மிகுந்த ஊர்களுக்கு எடுத்தச் செல்லப் போதுமான கட்டமைப்பு வசதி இல்லை. அதன் காரணமாகவே சில காற்றாலை உரிமையாளர்கள் ஒரு நாளில் 10-12 மணி நேரம் ஆலையை நிறுத்து வைக்குமாறு பணிக்கப்பட்டனர். அப்படியே பாதியும், கால்வாசியுமாக மின்சார வாரியம் இவர்களிடம் வாங்கிய மின்சாரத்திற்கும் உடனடியாக பணம் தருவதில்லை. சில நேரங்களில் இரண்டு ஆண்டுகள் கூட நிறுத்தி வைக்கிறார்களாம்.

ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் அ.தி.மு.க ஆட்சியில் மேலும் சிக்கலாகின. ஏற்கனவே குழி தோண்டி அஸ்திவாரம் இடப்பட்ட முதலீடுகள் கூட அப்படியே தேங்கிப் போய்க் கிடந்தன. காற்றாலைக்குக் காடு பிடித்துக் கொடுப்பதெற்கென்று பல பேர் சுற்றினார்கள். அவர்கள் அம்மாவின் ஆட்சியில் வேறு வேலைக்குப் போய் விட்டார்கள். அம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் ரூ 1,071 கோடி செலவில் 273 கிலோ மீட்டர் தொலைவுக்கு டிரான்மிஷன் லைன் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறார்கள். உடுமலையில் இருந்து சேலம் வரைக்கும் இந்த grid அமையும்.


வா.மணிகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி எழுதினார்: “ரூபாய் ஏன் கீழே விழுகிறது என்பதற்கு ஒரு அண்ணன் இண்ட்ரஸ்டிங் கதை சொன்னார். பொதுத் தேர்தலுக்குள்ளாக வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்துவிட முயற்சிக்கிறார்களாம். மூணுமாசம் முன்னாடி ஒரு டாலரை கொண்டு வந்திருந்தால் ஐம்பது சொச்சம் ரூபாய்தான் கிடைத்திருக்கும். இப்பொழுது அதே ஒரு டாலரைக் கொண்டு வந்தால் அறுபத்தைந்து ரூபாய் கிடைக்குமல்லவா? அப்படிப் பார்த்தால் அம்மாவுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை, ஆயிரம் கோடி புராஜெக்ட் போட்டிருக்கிறார்,” என நாம் கூறலாம். எது எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி.

காற்றாலை மின் உற்பத்தி குறித்து முன்பொரு காலத்தில் எழுதியது கீழே:
டாப் 10 படங்கள், மிக மோசமான 10 படங்கள் என ஒவ்வொரு வருடத்தையும் போல கடந்த 2011 ம் பல காரணங்களுக்காக நினைவுகூரப்படலாம். தமிழகத்தைப் பொறுத்த வரை கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பிராந்திய மக்களும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களும் நடத்திய போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

அதிகரித்து வரும் மின் வெட்டு தந்த அனுபவத்திலும், விரக்தியின் காரணத்தினாலும் இவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என போராட்டக்கார்ர்களை பெரும்பாலான நடுத்தர வர்க்கதினர் நினைக்கிறோம். அணு ஆற்றல் மலிவானது, பாதுகாப்பானது எனக் கருதுகிறோம்.

அணு ஆற்றல் துறையில் நீண்ட அனுபவம் உடைய அமெரிக்க வல்லுனர் அர்ஜுன் மஹிஜனி, அணுசக்தி தேவையே இல்லை என்கிறார். காற்று மற்றும் சூரிய ஒளி மூலமாவே கார்பன் உமிழாத, சுற்றுச் சூழலுக்கு பாதகம் இல்லாமல் மலிவான மின்சாரத்தைத் தயாரிக்க முடியும் என்கிறார்.

உலக மின் உற்பத்தியில் 2006 ஆம் ஆண்டு 15.2 சதவீதமாக இருந்த அணுசக்தி 2010 இல் 13.5 சதவீதமாக தொடர்ந்து இறங்கியுள்ளது. முன்னேறிய மேற்கத்திய நாடுகள் மாற்று எரிபொருளை நோக்கி நகர்கின்றன. கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது புகோஷிமா அணு மின் நிலையம் பாதிப்புக்கு உள்ளானது. அதனையடுத்து உலகலாவிய அளவில் பொது மக்கள் மத்தியிலும், ஆட்சியாளர்கள் மத்தியிலும் மரபுசாரா மாற்று எரிசக்தி மீதான் ஆர்வம் கூடியுள்ளது.

சமீபத்தில் 24 நாடுகளில் நடந்த ஒரு சர்வதேச வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் (62 சதவீதம் பேர்) அணுசக்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். 90 சதவீத இத்தாலியர்களும், ஜெர்மனி & மெக்சிகோ முதலிய நாடுகளில் 80 % க்கு மேலும், தனது பெரும்பான்மை மின் தேவையை அணுசக்தி மூலம் பெறும் பிரான்சில் 67% பேரும் எதிர்த்துள்ளனர். வல்லரசுக் கனவு ஜோராக விற்பனை செய்யப்பட்டுள்ள, மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் மட்டும் 61% பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நடப்பு மின் நிலவரம் பற்றியும், வேகமாக வளரும் பொருளாதாரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதிகரித்தே ஆக வேண்டிய மின் உற்பத்தி பற்றியும் அறிந்தவர்கள் நமது மின் தாகம் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றே என்பதை ஒப்புக்கொள்வார்கள். அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

நாட்டின் வாழ்க்கைத் தரத்தைக் குறிக்கும் அளவீடுகளில் முக்கியமான ஒன்று தலைக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துக்கிறோம் என்ற per capita power consumption ஆகும். இந்த அளவீட்டில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. ஒரு அமெரிக்கரின் சராசரி பயன்பாடு இந்தியனுடையதை விட 25 மடங்குக்கும் மேல். நாம் போட்டி போடுவதாகச் சொல்லும் சீனர்கள் ஆளொன்றுக்கு நம்மை விட ஏழு மடங்கு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள். உலக சராசரியில் ஐந்தில் ஒரு பங்குதான் நமது பயன்பாடு. பூமிப்பந்தின் 17 சதவீத மக்கள் தொகையைக் கொண்டிருக்கிற தேசம் வெறும் 3.4 சதவீத மின்சாரத்தை மட்டும் தயாரிக்கிறது.

இத்தனைக்கும் கடந்த இருபது ஆண்டுக்ளின் மின் உற்பத்தித்திறன் இரட்டிப்புக்கு மேல் அதிகரித்துள்ளது. வரப்போகும் 20-30 ஆண்டுகளில் மிக வேகமாக வளரவிருக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஈடுகொடுக்க தற்போதுள்ள மின் உற்பத்தியான 1,85,500 மெகாவாட் பன்மடங்கு அதிகரிக்க வேண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. 2030 இல் மொத்த மின் தேவை 950,000 மெகாவாட்டைக் கடக்கும் என்கிறது ஒரு கணிப்பு. எதிர்காலத்தை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள். இன்றைய தேதியில் இந்தியர் அனைவருக்கும் தங்குதடையற்ற மின்சாரம் அளிக்க சுமார் 135 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 6.88 இலட்சம் கோடி ரூபாய்) தேவைப்படும் என International Energy Agency மதிப்பிடுகிறது. அதை கார்பன் உமிழக்கூடிய வழக்கமான அனல் மின் சக்தி மூலமாக அல்லது கதிரியக்கம் வெளியிடும் அணு மின் சக்தி மூலமாக மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. மரபுசாரா வளங்கள் மூலமாகவும் இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்யலாம்.

மார்ச் 2011 முடிவில் இந்திய மின் உற்பத்தியில் 10.63 % மட்டுமே மரபுசாரா மின் உற்பத்தியின் பங்களிப்பு. செப்டம்பர் முடிவில் இது 12 % ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் இது 16 சதவீதம் ஆகும். மரபுசார மின் உற்பத்தியைப் பொருத்தமட்டில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

தார் பாலைவன பகுதிகளில் சோலார் எனர்ஜி மூலம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 25 – 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அங்கே சுமார் 35,000 சதுர கிமீ கண்டறியப்பட்டுள்ளது ஆக்கப்பூர்வமான செய்தி.

சோலார் எனர்ஜியைப் போலவே ஈர்ப்புடைய இன்னொரு வளம் காற்று சக்தி. ஒரு மெகாவாட் காற்றாலை ஆண்டொன்றுக்கு 2000 டன் கார்பன்–டை-ஆக்ஸைடு வளி மண்டலத்தில் உமிழப்படுவதைத் தவிர்க்கிறது. சோலார் பவரைக் காட்டிலும் செலவு குறைவானது. அதிக நிலப்பரப்பு தேவைப்படாத காற்று மின்னாலை நிறுவுதல் உலகலாவிய அளவில் ஆண்டுக்கு 30% கூடி வருகிறது. 1992-2010 கால கட்டம் இந்தியாவில் 24.67% உற்பத்தித் திறன் அதிகரிப்பைக் கண்டது.

1992 ஆம் ஆண்டு 41.3 மெகா வாட் என்ற அளவில் நிறுவப்பட்டிருந்த இருந்த wind டர்பைன் உற்பத்தித்திறன் 2011 மார்ச்சில் 14550 மெகா வாட். மரபுசாரா எரிசக்தியில் சுமார் 70 விழுக்காடு காற்றாலை மூலமே உற்பத்தியாகிறது. மாற்று எரிசக்தியில் 2020 க்குள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள அளவை எட்ட இன்னும் 50000 மெகாவாட் காற்றாலை நிறுவியாக வேண்டும்.

2011 India Wind Energy Outlook வெளியீட்டின் படி இந்தியாவின் மொத்த காற்று மின்னாற்றலில் 53.4 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தியாவது தெரிகிறது. இத்தனைக்கும் காற்றாலை மின்சக்திக்கு யூனிட் ரூ 3.39 என நாட்டிலேயே மிகக் குறைவான விலை கொடுப்பது தமிழகம்தான்.

தரையில் இருந்து 50 மீட்டர் உயரத்தில் 200 வாட்/ச.மீ க்கு அதிகமாக காற்று வீசும் பகுதிகள் காற்றாலை மின் உற்பத்திக்கு உகந்தவை. சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜி நாடெங்கும் 644 மையங்களில் மேற்கொண்ட ஆய்விற்குப் பிறகு 2010 இல் வெளியிட்ட விண்ட் அட்லஸ் ஒரு விஷயத்தை புலப்படுத்துகிறது. வெறும் 2 சதவீதம் நிலப்பரப்பில் 50,000 மெகாவாடு உற்பத்தி செய்யும் சாத்தியமே அது.

Thursday, August 22, 2013

வந்தாரை வாழ வைக்கும் சென்னை

செல்லமுத்து குப்புசாமி

மதராஸப்பட்டினம்...ஏற்கனவே நூறு வருடத்திற்கு மேல் இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மயிலாப்பூர் சாம்தோமில் நிலைகொண்டு அங்கே சர்ச்செல்லம் கட்டி வலிமையாக இருந்தனர். சமீபத்தில் டச்சுக்காரர்கள் பவவேற்காட்டில் (Pulicat) வலிமையோடு இருந்தனர். மிக தாமதமாக இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து விரட்டியடிக்கப்பதும் தெற்கே கடல் வழியாக இடம் தேடி அலைந்து வந்து, ஓரளவுக்கு போர்ச்சுக்கீசியர் உதவியோடு கூவம் நதிக்கு வடக்குப் பக்கம் ஒரு இடத்தைக் காண்கிறார்கள்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியர் பிரான்சிஸ் டே நங்கூரத்தை வீசி விட்டு இறங்குகிறார். அந்த இடத்தை தர பூந்தமல்லி நாயக்கரின் ஒப்புதலை நாடுகிறார். அவர் சந்திரகிரியில் உள்ள ராஜாவின் உத்தரவை நாடுகிறார். ராஜா பணத்தை வாங்கிக்கொண்டு பட்டா போட்டு இடத்தை வழங்குகிறார். இவ்வாறாக பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கான அடிக்கல் அந்த சந்திரகிரி மாளிகையில் நடப்பட்டது. ராஜா தான் கொடுப்பது வெறும் துண்டு நிலமல்ல. ஒரு சாம்ராஜ்ஜியத்திற்கான பட்டயம் என்பதை அப்போது உணர்ந்திருக்க மாட்டார். அந்த வியாபாரியும் தான் செய்யும் காரியம் எத்தனை தூரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என நம்பியிருக்க மாட்டார்.

முதலில் ஆங்கிலேயர்கள் பனை ஓலை குடிசைகளைத்தான் அமைத்தார்களாம். பிறகு படிப்படியாக கிடங்குகள், வீடுகள், கோட்டை, காவலர்கள், மருத்துவர்கள் என பெருகியிருக்கிறார்கள். வெள்ளையர்கள் வசித்த பகுதியும், அதைச் சுற்றி அவர்களோடு வியாபாரம் செய்யும் உள்ளூர் ஏஜெண்டுகள் தங்கிய ‘கறுப்பு நகரமும்’ சேர்ந்து சென்னை அப்படியே வளரத் துவங்கியது.

இன்று மெட்ராஸ் டே கொண்டாடுகிறோம். Thanks to Francis day

Monday, August 19, 2013

எங்கே போகிறது ரூபாயின் மதிப்பு?

- செல்லமுத்து குப்புசாமி

இந்திய ரூபாயின் எக்சேஞ்ச் ரேட் மிரட்டுகிறது. ஆளாளுக்கு காரணம் சொல்கிறார்கள். அடிப்படையில் எளிமையான காரணம் ரூபாயைக் கொடுத்து விட்டு டாலர் வேண்டுமெனக் கேட்கும் ஆட்கள் அதிகமாகி விட்டார்கள். நமது இறக்குமதிகளான எண்ணெய் மற்றும் தங்கம் பெருமளவு அந்ந்நியச் செலவாணியை வெளியேற்றத்துக்கு காரணமாக இருக்கிறது. அதைத் தவிரவும் பிற புறக் காரணிகள் நிறைய உள்ளன.

Since June 2013 till 7 August 2013, FIIs have sold debt worth US$ 8.4 billion. Between January 2013 and May 2013, they had invested US$ 7.7 billion in the debt market. 

அந்நிய முதலீடுகள், குறிப்பாக கடன் பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீடு வெளியேறும் போது மோசமான விளைவுகள் உண்டாகின்றன. மேலை நாடுகளை விட கூடுதலான வட்டி இங்கே கிடைப்பதனால் பல அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்தார்கள். ஆனால் எக்சேஞ்ச் ரேட்டின் நிச்சயமற்ற தன்மையால் குறைவான வட்டி கிடைத்தாலும் பரவாயில்லையென அவரவர் தேசத்துக்கு எடுத்துச் சென்று விடுவார்கள்.

கடன் பத்திரங்களில் வெளியேறும் முதலீடுகளைத் தடுக்கவும், நிறையப் பேர் இந்திய ரூபாயை வாங்கவும் வேண்டுமெனில் இங்கே வட்டி விகிதம் அதிகமாகவே பேணப்படல் வேண்டும். அப்படிப் பேணுகையில் இங்கே ஏற்கனவே தள்ளாடும் தொழில்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாகும். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகள் திண்டாடும். வங்கியில் நல்ல வட்டி கிடைப்பதால் பங்குச் சந்தையில் காத்து வாங்கும்.


ஆனால் இதுதான் பங்குகளை வாங்க வேண்டிய தருணம். The Science of Stock Market Investment இல் ராகுல் திராவிட் சொன்ன ஃபுல் டாஸ் இதுதானே?

Thursday, August 15, 2013

திருமணமாகாத ஆண்கள் கவனிக்க

பெண்ணின் பிறந்த நாளை ஞாபகம் வைத்திருக்க வேண்டும். அவள் நாய்க்குட்டிக்கு தடுப்பூசி போடும் நாளை முன் கூட்டியே குறித்து வைத்து நினைவூட்ட வேண்டும். அவளுக்கு என்ன பிடிக்குமென்று தெரிந்து கொள்ள வேண்டும். அவளுக்கு வெற்றிகரமான ஆண்களைப் பிடிக்கும். தனது இலட்சியம் அல்லது கனவை நோக்கி சீரிய இலக்குடன் முயலும் ஆணை வெகுவாக மதிப்பாள். அந்த இலட்சியமும், கனவும் உனக்கு அப்புறம்தான் என்று உணர்த்தினால் அப்படியே சரணாகதி ஆவாள். உன்னை விட இந்த உலகத்தில் பெரியது ஏதுமில்லையென நீரூபிக்கவில்லை என்றாலும் கூட வாயிலாவது சொல்ல வேண்டும். 

ஆண் எல்லா விஷயத்தையும் பகுத்தறிவோடு அணுகுவான். பெண் எமோஷனல் கோணத்தில் அனுகுவாள். ஆணின் மூளை efficiency ஐ படைக்கும் நோக்கில் பின்னப்பட்டுள்ளது. ஆண்-பெண் உறவில் efficiency ஐ காட்டிலும் effectiveness ஸே முக்கியம் என்பதை உணர வேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பெண்ணோடு எஃப்பெக்டிவ் கம்யூனிகேஷனை நிறுவுவது ஆணுக்கு புரியாத புதிரே. தட்ஸ் ஓகே என்று அவள் சொல்லும் போது தட்ஸ் நாட் ரியல்லி ஓகே!

ஒரு பெண் தான் ஸ்பரிசிப்பட விரும்புகிறாள். சீண்டலும், தீண்டலும் அவளுக்கு அவசியமாக இருக்கிறது. அவள் கூறுவதைக் காது கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறாளே ஒழிய அதை வைத்து அவள் மீது மதிப்பீடுகளை உருவாக்கினால் அவள் ரசிப்பதில்லை. (ஆனால் காலம் பூராவும் மற்றவர்கள் மீது மதிப்பீடுகளை உருவாக்குவது பெண்ணின் பிரதானமாக காரியங்களில் ஒன்று) அவள் சொல்பதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என விரும்புகிறாளே ஒழிய அவள் பிரச்சினைகளுக்கு நீங்கள் தீர்வு காண வேண்டுமென அவள் எதிர்பார்ப்பதில்லை. She wants you to pay attention to her – pay attention to details. தன் தோற்றம் பற்றி நீங்கள் புகழ வேண்டுமென விரும்புகிறாள். அவள் மேக்கப் பற்றி, அவளது ஆடைத் தேர்வைப் பற்றி, அவள் அடித்திருக்கும் பாடி ஸ்பிரே பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்து, அது பாராட்டும் வகையில் இருத்தம் உசிதம், இருக்க வேண்டும். நீங்கள் அவளை அழகானவளாக உணர வைக்க வேண்டும். தன்னைப் பெரிதாக மதிக்கவும், கொண்டாடவும் வேண்டுமென அவள் விழைகிறாள். நான் ரொம்ப லக்கி என நீங்கள் சொல்ல வேண்டுமென விரும்புகிறாள். அவள் அடிக்கும் மொக்கையான ஜோக்குகளுக்கெல்லாம் நீங்கள் சிரிக்க வேண்டும். 

உங்கள் மீதான நம்பகத்தன்மையை நீங்கள் நிரூபிக்க வேண்டுமென அவள் எதிர்பார்க்கிறாள். நீங்கள் அருகில் இருக்கையில் அவள் பாதுகாப்பாக உணர விரும்புகிறாள். உங்கள் தோளில் அவள் சாய்ந்திருக்கும் போது கவலைகள் ஏதுமில்லாமல் தூங்க முடிவதாய் இருக்க வேண்டுமென விரும்புகிறாள். உங்கள் பிரச்சினைகளுக்கு அவளிடம் நீங்கள் ஆறுதல் தேட வேண்டுமென ஆசைப்படுகிறாள். அவள் அறியாத ரகசியங்களை நீங்கள் வைத்திருப்பதை அவள் அனுமதிப்பதில்லை. அவள் பெற்றோரைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் நீங்கள் தவறாக ஏதும் பேசக் கூடாது. ஆனால் இந்தச் சட்டம் அவளைக் கட்டுப்படுத்தாது. அவ்வப்போது அணைப்புகளும், முடியும் போது முத்தங்களும் பரிமாறிக்கொள்ள வேண்டும் அவளுக்கு. 

நீங்கள் நெருக்கமாக ஆனால் மட்டுமே அவளுக்கு காம உணர்வு உண்டாகும். உங்களுக்கு காம உணர்வு ஏற்பட்டால் மட்டுமே நெருக்கம் வரும். நீங்கள் அவளோடு விவாதங்களில் ஈடுபட வேண்டுமென்று அவளுக்கு விருப்பம் – அது விளையாட்டுக்காக இருந்தாலும் சரி. அந்த விவாதத்தின் முடிவில் அவளே வெல்ல வேண்டும். நான் தப்பு, நீதான் சரியென்று நீங்களே ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் அவளுக்கு விட்டுக் கொடுத்த மாதிரி இருக்கக் கூடாது. உண்மையை ஏற்று ஒப்புக்கொண்ட மாதிரி இருக்க வேண்டும். நீங்கள் சுவாரசியமான ஆளாக இருக்க வேண்டுமென விரும்புகிறாள். அவளை நீங்கள் சிரிக்க வைக்க வேண்டுமென்று விரும்புகிறாள். உங்கள் அருகாமை அவளுக்கு மகிழ்ச்சி தர வேண்டும். அவளோடு நீங்கள் குறும்புத்தனமாக விளையாட வேண்டுமென்று விரும்புகிறாள். அவளை படுக்கையில் (அல்லது சோஃபாவில் அல்லது ஷவருக்கு அடியில்) எப்படி திருப்திப்படுத்த வேண்டுமென்ற சூட்சுமம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறாள்.

(விரைவில் வெளிவரவிருக்கும் ’இரவல் காதலி’ நாவலில் இருந்து)