Sunday, August 04, 2013

ஆடிப் பெருக்கு

எங்கள் ஊர் ஒரு காலத்தில் ஓஹோவென விளங்கிய ஊர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காயம்புத்தூர் முனிசிப்பாலிட்டி ஆன அதே நாளில் முனிசிபாலிட்டி ஆன ஊர். அதற்குப் பிறகு வளரவேயில்லை. அன்றைக்கெல்லாம் சிற்றூராக இருந்த ஈரோடும், திருப்பூரும் இன்றைக்கு மாகநராட்சிகள். நாகேஷும், எஸ்.வி.ராஜதுரையும், தியோடர் பாஸ்கரனும், எஸ்.வி.ராமகிருஷ்ணனும் பிறந்த ஊர் என்ற பழம் பெருமையைத் தவிர சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை. ரயில்வே டிராக் இல்லாததால் தான் வளர்ச்சியில்லை என்பது சில காலமாக பல பேர் சொல்லும் காரணம்

ரயில் இல்லாததால் என்னவோ, ஒன்று ஈரோட்டில் இறங்கி பஸ்ஸில் போக வேண்டும். இல்லாவிட்டால் எழும்பூரிலிருந்து மங்களூர் போகும் ரயிலில் கரூரில் இறங்கிக்கொள்ளலாம். காவேரிப் பாலம் தாண்டினால் ஈரோடு. அமராதிப் பாலம் தாண்டினால் கரூர். இந்த முறை கரூர் மார்க்கம். ஆடிப் பெருக்கு நிகழ்வுக்கு மேட்டூர் திறந்து காவிரி நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. திருச்சி டூ கரூர் பாதை பாதிக் தூரம் காவிரிக்கு இணையாகவே வருகிறது. அதற்கு இணையாக வாய்க்கால் ஓடுகிறது. இந்த முறை அதில் நிரம்ப ஓடிக்கொண்டிருக்கிறது தண்ணீர்.

ஆடி-18 ஆம் தேதி அதிகாலையில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தார்கள். மங்களூர் எக்ஸ்பிரஸில் என்னைச் சுற்றி ஐந்து ஜோடிகள். எல்லோரும் புதிதாக கல்யாணம் ஆனவர்கள் போல. கொட்டி முடிக்க வேண்டிய காதல் இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் தனியே உட்கார்ந்து வாய்க்காலை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன். வாய்க்காலின் இரு மருங்கிலும் மரங்கள், தென்னை மரங்கள், பல காலமாக தண்ணீரைக் காணாமல் பட்டுப் போய்க் காய்ந்து கிடைக்கும் தென்னை மரங்கள். குளித்தலை எல்லாம் சோழ நாடுதானே ! என்ன கொடுமை சரவணன்.

என்னைப் போலவே இன்னொரு சின்னப் பெண்ணும் தனியே செய்வதறியாது அரை மணி நேரம் போனில் விளையாடி போரடித்த பிறகு, டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தாள். மிகவும் சின்னப் பெண். இருபது-இருபத்தொரு வயது இருக்கும். ஜீன்ஸ் போட்டிருந்தாள். ஜரிகை வைத்துத் தைத்த மேல் சட்டை போட்டிருந்தாள். சுற்றிலும் ஆட்கள். மறைத்து மறைத்து எழுதிக்கொண்டிருந்தாள். ஜோடிகளுக்கு அவளைக் கவனிக்கும் அளவுக்கு நேரமில்லை. அவள் எழுதுவது தமிழிலா ஆங்கிலத்திலா தெரியவில்லை. ஓரக் கண்ணில் பார்த்த போது ‘வாய்க்காலில் குளித்து’ என்ற வார்த்தைகள் மட்டும் மறைத்துக்கொண்டிருந்த கையைத் தாண்டியும் தெரிந்தது. இந்தக் காலத்திலும் யுவதிகள் டைரி எழுதுவது மகிழ்ச்சியாக இருந்தது.

ஊர் வளராமல் போனாலும் தாராபுரத்தின் மீதான மோகம் அமராவதியில் மீதுள்ள காதலால் குறையாமல் அப்படியே இருக்கிறது. அமராவதி ஆறு எனக்கு அலுப்பதேயில்லை. ஒரு தாய்க்கு மகனுக்குமான உறவைப் போல மிக நெருக்கமானது. பால்ய சிநேகிதனை எப்போது பார்த்தாலும் இனிப்பது போன்றது எனக்கும் அமராவதிக்குமான உறவு. இதை விட நெருக்கமான ஒரு விஷய்ம் இந்த உலகத்தில் எனக்கு இருக்க முடியாது. எலும்பாகக் காய்ந்து போய்க் கிடந்தாலும் அவள் அழகுதான். உடம்பை நனைத்துச் செல்லும் போதும் அழகுதான்.

ஊருக்குப் போவதற்குள் மூன்று முறை அமராவதியைக் கடந்து செல்ல வேண்டும். முதலாவதாக கரூர். ஆடி-18 அன்று காய்ந்துதான் கிடக்கிறது. பிறகு பஸ் ஏறி மேற்கே போகும் போது சின்னத் தாராபுரத்தில் ஒரு முறை கடக்க வேண்டும். அங்கே ஓரளவு நீரோடியது. பேருந்தில் எனக்கு முன்னால் ஒரு நபர் வைத்திருந்த பேப்பரில் ‘அமராவதி அணை நிரம்பியது – வெள்ள அபாய எச்சரிக்கை’ என்று போட்டிருந்தது.

மூன்றாவதாக எங்கள் கிராமத்தில். போன வருடம் வரைக்கும் ஆற்றுக்குள் இறங்கி நடந்துதான் கடக்க வேண்டும். இந்த வருடம் பரவாயில்லை. பாலம் கட்டி விட்டார்கள். கிட்டத்தட்ட 30-40 ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்ட ஒரு விஷயம் சமீபத்தில் நிறைவேறியிருக்கிறது. அணையில் நிறையத் தண்ணீர் திறந்து விட்டிருப்பார்கள் போல. ஆள் இறங்க முடியாத அளவு வெள்ளம். இது போன்ற தருணங்களில் பரிசல் ஓட்டுவார்கள். பரிசல்காரர் என்றொரு ஆள் இருப்பார். எல்லாக் குடும்பங்களும் பரிசல்காரருக்கு வருடாந்திர பரிசல் கூலி கொடுப்பார்கள். அவர் பஸ் ஏறி வந்து சேர்வதற்குள் உள்ளூர்வாசிகளே கோல் போட்டு பரிசலை ஓட்ட ஆரம்பித்திருப்பார்கள். ஆற்றில் இடுப்பு தண்ணீருக்கு மேல் ஓடினால் பரிசல் இயங்கும். அதற்கும் குறைவாக இருப்பின் பரிசல் தரை தட்டி விடும்.

வைகாசி மாதனமானால் முகிலோட்டம் துவங்கி விடும். ஊரில் சாரல் அடிக்கும். மழையிருக்காது. மலையில் மழை பெய்து அணையில் நீர் நிறையும். ஆடி முந்துச்சா ஆறு முந்துச்சா என சொல்லி வைத்த மாதிரி ஆடி முதல் தேதிக்குள் ஆற்றில் புது வெள்ளம் வந்து விடும். சில முறை வைக்கோல் போரும், எருமைகளும் கூட அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டிருக்கிறேன். ஆடி மாதத்தில் பாதி நாளுக்கு மேல் பரிசலில்தான் பள்ளிக்கூடம் போக வேண்டியிருக்கும்.   

இப்போது பாலம் கட்டியிருக்கிறார்கள். பரிசல்காரர் என்ன ஆனாரோ தெரியவில்லை. ஆற்றுக்குள் நடந்து கடக்கும் காலங்களில் கணுக்கால், முழங்கால் தெரிய ரசித்த நினைவுகள் போன இடமும் தெரியவில்லை.

5 comments:

Srini said...

Sorgame yenrale athu namba oor pola varumaa???

Srini said...

Sorgame yenrale namba oor pola varumaa???

Bala K said...

அந்த மறக்க முடியாத நாட்கள்!!!

Baladhandapani said...

அந்த மறக்க முடியாத நாட்கள் !!!

Bala K said...

அந்த மறக்க முடியாத நாட்கள் !!!