Saturday, August 10, 2013

தனிமையிலே இனிமை காண முடியுமா

திரும்பிப் பார்ப்பதற்குள் இருபத்தைந்து வயது ஆகி விட்டது. கொஞ்சம் முரட்டுத்தனமானவன் என்ற இமேஜை மெயிண்டெய்ன் செய்வது நல்லதென நம்பிய காலம் அது. அப்படி ஒரு தெனாவெட்டோடு இருந்தால் பெண்கள் மரியாதையோடு நடந்து கொள்வார்களே தவிர நெருக்கமாக மாட்டார்கள். என் ரூம்மேட்ஸ் இரண்டு பேர் அவர்களோடு வேலை செய்யும் பெண்களோடு நெருக்கமாகப் பழகி அவர்களையே திருமணமும் செய்து கொண்டனர். இருபத்தாறு வயது முடியும் வரைக்கும் எனக்குக் கல்யாணமெல்லாம் ஏண்டா செய்யுறாங்க என்றிருந்தது. இருபத்தாறில் ஏக்கம் முதன்முறையாக எட்டிப் பார்த்தது.

என் பெற்றோர் வேறு மாதிரி நினைத்தார்கள். அவர்கள் பையன் இன்னும் சின்னக் குழந்தை எனக் கருதினார்கள். ஒட்டு மொத்த தென்னிந்தியாவிலும் அவனே most eligible bachelor எனவும் நம்பினார்கள். நான் அவர்களை முழுமையாக நம்பினேன். மேட்ரிமோனி வெப்சைட்டுகளில் இருந்து நான் பொறுக்கியெடுத்த வரன்களை அவர்களுக்கு அனுப்பி வைப்பேன். எங்கள் ஊருக்கு 24 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அவர்கள் ஒரு கணக்கு வைத்திருந்தார்கள். அந்த எல்லைக்கு வெளியே இருந்த அத்தனை பேரையும் நிராகரித்தார்கள். ஜாதகம் பொருந்தவில்லையெனக் காரணம் சொன்னார்கள். ஒரு கட்டத்திற்குப் பின்னர் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் சாஃப்ட்வேரை நானே இன்ஸ்டால் செய்துகொண்டேன். பொருந்தாத கேஸ்களை நானே ஒதுக்கி விட்டு உகந்ததை மட்டும் அவர்களுக்கு பாஸ் பண்ணினேன். அவர்கள் போட்ட நாடகம் அப்போது தான் எனக்குப் புலனானது. 24 கிலோ மீட்டர் மேட்டரும் தெரிந்தது. அவர்களது search engine செயல்பட்ட அந்த வட்டத்திற்குள் அவர்கள் எதிர்பாக்கிற மாதிரி பெண்களே இல்லை.

இத்தனை இடர்பாடுகளையும் கடந்து ஒரு ஐந்தாறு முறை பெண் பார்க்கும் நிகழ்வு வரைக்கும் இழுத்துச் சென்றிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று பெண்கள் “நீங்க என் டைப் இல்லை” என முகத்துக்கு நேரே சொல்லி விட்டார்கள். இன்னொன்றில் என் மாமா குட்டையைக் குழப்பி கும்மியடித்து விட்டார். “நம்ம பக்கத்துலயே 100-150 பவுன் நகை போடறதுக்கு பொண்ணு இருக்குதுங்க. எங்க அசோக்தான் என்னமோ படிச்ச புள்ளயே வேணும்ங்கறான். இல்லீன்னா பலாப் பழத்துக்கு ஈ பிடிச்சு விட வேண்டியதில்ல பாருங்க.” அந்தப் பெண் பெங்களூரில் ஒரு சாஃப்ட்வெர் கம்பெனியில் வேலை செய்தாள். படு டீசண்டாக அடுத்த நாள் எனக்கு போன் செய்தாள். ”எங்க ஃபேமிலில எல்லோருக்கும் உங்கள புடிச்சுது. ஆனா உங்க மாமா பேசினதப் பாத்து பயந்துட்டாங்க. இது சரிப்பட்டு வராதுன்னு சொல்றாங்க,” என்று சொல்லி விட்டு ஆல் த பெஸ்ட் பரிமாறினாள்.

சொந்தக்காரர்களை அண்டவே விடக் கூடாது என்ற பாடத்தைக் கற்ற பிறகு  சென்னையில் இரண்டு குடும்பங்களைப் பார்த்தேன். இரண்டுமே தமிழ் மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டவை. என்னை அவர்களுக்குப் பிடிக்கும் பட்சத்தில் என் பெற்றோருக்கு அனுப்பி வைக்கலாம் என நினைத்தேன். அதில் ஒரு பெண்ணின் தகப்பனார் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எனக்கு போன் செய்துகொண்டே இருந்தார். என் சம்பள பேக்கேஜ் அவரை impress செய்திருக்க வேண்டும். ஒரு நாள் எங்கள் ஆஃபீஸ் வரை வந்து கேண்டீனில் ஜூஸ் குடித்து விட்டுப் போனார். போகும் முன் வேளச்சேரியில் தன் வீட்டுக்கு வந்து மகளைச் சந்திக்க அழைப்பு விடுத்தார். நான் அவர்கள் வீட்டை அடைந்து 40 நிமிடம் கழித்த பின்னர் அந்தப் பெண் வந்தாள். டிராஃபிக் என அவளது அப்பாதான் சொன்னார். உரையாடல் ஒரு தலை ராகம் போலிருந்தது. நானே பேசிக்கொண்டிருந்தேன். ”உங்க பேரண்ட்ஸ் நான் நினைக்கிற அளவு காஸ்மோபொலிட்டனா இல்லைனு நினைக்கிறேன். பிளீஸ் எக்ஸ்கியூஸ் மீ” என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.

இன்னொரு பெண், அதுவும் மேட்ரிமோனி சைட் உபயம், அவள் வேலை பார்க்கும் ஷோலிங்கநல்லூர் (சோழிங்கநல்லூரை அப்படித்தானே அழைக்கிறோம்)இன்ஃபோசிஸ் வளாககத்திற்கு வரச் சொன்னாள். அது ஒரு சனிக்கிழமை. வாசலில் செக்யூரிட்டியிடம் கையெழுத்துப் போட்ட பிறகு கேண்டீனுக்கு அழைத்துப் போனாள். நான் பேசிய அறிமுக வார்த்தைகள் தவிர 35 நிமிடமும் அவளே பேசினாள். இறுதியில் அறிவித்தாள்: ‘You are not jovial and interactive enough.’ மறுநாள் அவளுக்கு ஒரு மெயில் போட்டேன். முடிவு மறுபரிசீலனை செய்து மீண்டும் சந்திப்பதற்கு இன்னொரு சந்தர்ப்பம் அளிக்குமாறு வேண்டினேன். ஒரே வரியில் ‘Stop mailing me’ என ரிப்ளை அனுப்பினாள். வழக்கமாக மின்னஞ்சல் ஆரம்பிக்கும் போது இடும் ’பிளீஸ்’, முடிக்கும் இடத்தில் போடும் regards ஆகியவை மிஸ்ஸிங்.

கிட்டத்தட்ட நான் தீர்மானித்து விட்டேன், நம்ம கேஸ் பூட்ட கேஸ் என. அதன் பின் திருமண நோக்கில் நான் செய்த ஒரே காரியம் தமிழ் மேட்ரிமோனியில் என்னைத் தொடர்பு கொள்ளும் மெசேஜுக்கு பதில் அனுப்புவது மட்டுமே. அதுவும் கடனுக்கு செய்தேன். வாழ்க்கைத் துணை பற்றிய பரவசமான கனவுகள், காதலும் கற்பனையும் கலந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் என்னை விட்டு அகன்றன. எல்லோருக்கும் கல்யாணம் ஆவது போல நமக்கும் ஆனால் சரி என்ற நிலைமைக்கு வந்தேன். தட்ஸ் ஆல்.

இந்தக் கொடுமையான கால கட்டத்தில் தான் அட்லாண்டாவில் கிடைத்த ஆன்சைட் அசைன்மெண்டை ஏற்றுக்கொண்டேன்.

(விரைவில் வெளிவரவிருக்கும் இரவல் காதலி நாவலில் இருந்து)

அதன் Kindle ஆங்கில வடிவம் Borrowed Girlfriendஇதை Kindle புத்தகங்களை பர்சனல் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போன் மூலமாகவே வாசிக்கலாம்.

1 comment:

Anonymous said...

மிகவும் அருமை