Saturday, August 24, 2013

காற்றாலை மின் உற்பத்தி

உங்களுக்கு கைபர் கணவாய் தெரியும். பாலக்காட்டுக் கணவாய் தெரியுமா? மேற்குத் தொடர்ச்சி மலையில் 40-45 கிலோ மீட்டர் இடைவெளியே அந்தப் பகுதி. இதன் வழியே பலத்த காற்று வீசும். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கும், பல்லடத்திற்கும் இடைப்பட்ட பகுதியான இதில் (உடுமலை, குடிமங்கலம், தாராபுரம் முதலிட இடங்களில்) காற்றாலை மூலம் இலாபகரமாக மின்சாரம் தயாரிக்கும் சாத்தியம் உண்டு. நிறைய காற்றாலைகள் இங்கே நிறுவப்பட்டுள்ளன. கடந்த தி.மு.க ஆட்சியில் புதிய காற்றாலைகள் வெகுவாக எழுந்தன. தமிழகத்தின் காற்று மின் உற்பத்தித் திறனில் பாதி இந்த உடுமலை-தாராபுரம்-பல்லடம் பகுதிக்கு உரித்தானது. வேகமாக கார் ஓட்டும் அந்த நபரும், ஹைஹீல் போடும் நடிகரும் நிறைய காற்றாலைகளை வைத்திருக்கிறார்களாம்.


ஆனாலும் கூட பலமாகக் காற்று வீசும் மாதங்களில் இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை தேவை மிகுந்த ஊர்களுக்கு எடுத்தச் செல்லப் போதுமான கட்டமைப்பு வசதி இல்லை. அதன் காரணமாகவே சில காற்றாலை உரிமையாளர்கள் ஒரு நாளில் 10-12 மணி நேரம் ஆலையை நிறுத்து வைக்குமாறு பணிக்கப்பட்டனர். அப்படியே பாதியும், கால்வாசியுமாக மின்சார வாரியம் இவர்களிடம் வாங்கிய மின்சாரத்திற்கும் உடனடியாக பணம் தருவதில்லை. சில நேரங்களில் இரண்டு ஆண்டுகள் கூட நிறுத்தி வைக்கிறார்களாம்.

ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் அ.தி.மு.க ஆட்சியில் மேலும் சிக்கலாகின. ஏற்கனவே குழி தோண்டி அஸ்திவாரம் இடப்பட்ட முதலீடுகள் கூட அப்படியே தேங்கிப் போய்க் கிடந்தன. காற்றாலைக்குக் காடு பிடித்துக் கொடுப்பதெற்கென்று பல பேர் சுற்றினார்கள். அவர்கள் அம்மாவின் ஆட்சியில் வேறு வேலைக்குப் போய் விட்டார்கள். அம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் ரூ 1,071 கோடி செலவில் 273 கிலோ மீட்டர் தொலைவுக்கு டிரான்மிஷன் லைன் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறார்கள். உடுமலையில் இருந்து சேலம் வரைக்கும் இந்த grid அமையும்.


வா.மணிகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி எழுதினார்: “ரூபாய் ஏன் கீழே விழுகிறது என்பதற்கு ஒரு அண்ணன் இண்ட்ரஸ்டிங் கதை சொன்னார். பொதுத் தேர்தலுக்குள்ளாக வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்துவிட முயற்சிக்கிறார்களாம். மூணுமாசம் முன்னாடி ஒரு டாலரை கொண்டு வந்திருந்தால் ஐம்பது சொச்சம் ரூபாய்தான் கிடைத்திருக்கும். இப்பொழுது அதே ஒரு டாலரைக் கொண்டு வந்தால் அறுபத்தைந்து ரூபாய் கிடைக்குமல்லவா? அப்படிப் பார்த்தால் அம்மாவுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை, ஆயிரம் கோடி புராஜெக்ட் போட்டிருக்கிறார்,” என நாம் கூறலாம். எது எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி.

காற்றாலை மின் உற்பத்தி குறித்து முன்பொரு காலத்தில் எழுதியது கீழே:
டாப் 10 படங்கள், மிக மோசமான 10 படங்கள் என ஒவ்வொரு வருடத்தையும் போல கடந்த 2011 ம் பல காரணங்களுக்காக நினைவுகூரப்படலாம். தமிழகத்தைப் பொறுத்த வரை கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பிராந்திய மக்களும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களும் நடத்திய போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

அதிகரித்து வரும் மின் வெட்டு தந்த அனுபவத்திலும், விரக்தியின் காரணத்தினாலும் இவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என போராட்டக்கார்ர்களை பெரும்பாலான நடுத்தர வர்க்கதினர் நினைக்கிறோம். அணு ஆற்றல் மலிவானது, பாதுகாப்பானது எனக் கருதுகிறோம்.

அணு ஆற்றல் துறையில் நீண்ட அனுபவம் உடைய அமெரிக்க வல்லுனர் அர்ஜுன் மஹிஜனி, அணுசக்தி தேவையே இல்லை என்கிறார். காற்று மற்றும் சூரிய ஒளி மூலமாவே கார்பன் உமிழாத, சுற்றுச் சூழலுக்கு பாதகம் இல்லாமல் மலிவான மின்சாரத்தைத் தயாரிக்க முடியும் என்கிறார்.

உலக மின் உற்பத்தியில் 2006 ஆம் ஆண்டு 15.2 சதவீதமாக இருந்த அணுசக்தி 2010 இல் 13.5 சதவீதமாக தொடர்ந்து இறங்கியுள்ளது. முன்னேறிய மேற்கத்திய நாடுகள் மாற்று எரிபொருளை நோக்கி நகர்கின்றன. கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது புகோஷிமா அணு மின் நிலையம் பாதிப்புக்கு உள்ளானது. அதனையடுத்து உலகலாவிய அளவில் பொது மக்கள் மத்தியிலும், ஆட்சியாளர்கள் மத்தியிலும் மரபுசாரா மாற்று எரிசக்தி மீதான் ஆர்வம் கூடியுள்ளது.

சமீபத்தில் 24 நாடுகளில் நடந்த ஒரு சர்வதேச வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் (62 சதவீதம் பேர்) அணுசக்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். 90 சதவீத இத்தாலியர்களும், ஜெர்மனி & மெக்சிகோ முதலிய நாடுகளில் 80 % க்கு மேலும், தனது பெரும்பான்மை மின் தேவையை அணுசக்தி மூலம் பெறும் பிரான்சில் 67% பேரும் எதிர்த்துள்ளனர். வல்லரசுக் கனவு ஜோராக விற்பனை செய்யப்பட்டுள்ள, மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் மட்டும் 61% பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நடப்பு மின் நிலவரம் பற்றியும், வேகமாக வளரும் பொருளாதாரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதிகரித்தே ஆக வேண்டிய மின் உற்பத்தி பற்றியும் அறிந்தவர்கள் நமது மின் தாகம் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றே என்பதை ஒப்புக்கொள்வார்கள். அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

நாட்டின் வாழ்க்கைத் தரத்தைக் குறிக்கும் அளவீடுகளில் முக்கியமான ஒன்று தலைக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துக்கிறோம் என்ற per capita power consumption ஆகும். இந்த அளவீட்டில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. ஒரு அமெரிக்கரின் சராசரி பயன்பாடு இந்தியனுடையதை விட 25 மடங்குக்கும் மேல். நாம் போட்டி போடுவதாகச் சொல்லும் சீனர்கள் ஆளொன்றுக்கு நம்மை விட ஏழு மடங்கு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள். உலக சராசரியில் ஐந்தில் ஒரு பங்குதான் நமது பயன்பாடு. பூமிப்பந்தின் 17 சதவீத மக்கள் தொகையைக் கொண்டிருக்கிற தேசம் வெறும் 3.4 சதவீத மின்சாரத்தை மட்டும் தயாரிக்கிறது.

இத்தனைக்கும் கடந்த இருபது ஆண்டுக்ளின் மின் உற்பத்தித்திறன் இரட்டிப்புக்கு மேல் அதிகரித்துள்ளது. வரப்போகும் 20-30 ஆண்டுகளில் மிக வேகமாக வளரவிருக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஈடுகொடுக்க தற்போதுள்ள மின் உற்பத்தியான 1,85,500 மெகாவாட் பன்மடங்கு அதிகரிக்க வேண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. 2030 இல் மொத்த மின் தேவை 950,000 மெகாவாட்டைக் கடக்கும் என்கிறது ஒரு கணிப்பு. எதிர்காலத்தை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள். இன்றைய தேதியில் இந்தியர் அனைவருக்கும் தங்குதடையற்ற மின்சாரம் அளிக்க சுமார் 135 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 6.88 இலட்சம் கோடி ரூபாய்) தேவைப்படும் என International Energy Agency மதிப்பிடுகிறது. அதை கார்பன் உமிழக்கூடிய வழக்கமான அனல் மின் சக்தி மூலமாக அல்லது கதிரியக்கம் வெளியிடும் அணு மின் சக்தி மூலமாக மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. மரபுசாரா வளங்கள் மூலமாகவும் இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்யலாம்.

மார்ச் 2011 முடிவில் இந்திய மின் உற்பத்தியில் 10.63 % மட்டுமே மரபுசாரா மின் உற்பத்தியின் பங்களிப்பு. செப்டம்பர் முடிவில் இது 12 % ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் இது 16 சதவீதம் ஆகும். மரபுசார மின் உற்பத்தியைப் பொருத்தமட்டில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

தார் பாலைவன பகுதிகளில் சோலார் எனர்ஜி மூலம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 25 – 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அங்கே சுமார் 35,000 சதுர கிமீ கண்டறியப்பட்டுள்ளது ஆக்கப்பூர்வமான செய்தி.

சோலார் எனர்ஜியைப் போலவே ஈர்ப்புடைய இன்னொரு வளம் காற்று சக்தி. ஒரு மெகாவாட் காற்றாலை ஆண்டொன்றுக்கு 2000 டன் கார்பன்–டை-ஆக்ஸைடு வளி மண்டலத்தில் உமிழப்படுவதைத் தவிர்க்கிறது. சோலார் பவரைக் காட்டிலும் செலவு குறைவானது. அதிக நிலப்பரப்பு தேவைப்படாத காற்று மின்னாலை நிறுவுதல் உலகலாவிய அளவில் ஆண்டுக்கு 30% கூடி வருகிறது. 1992-2010 கால கட்டம் இந்தியாவில் 24.67% உற்பத்தித் திறன் அதிகரிப்பைக் கண்டது.

1992 ஆம் ஆண்டு 41.3 மெகா வாட் என்ற அளவில் நிறுவப்பட்டிருந்த இருந்த wind டர்பைன் உற்பத்தித்திறன் 2011 மார்ச்சில் 14550 மெகா வாட். மரபுசாரா எரிசக்தியில் சுமார் 70 விழுக்காடு காற்றாலை மூலமே உற்பத்தியாகிறது. மாற்று எரிசக்தியில் 2020 க்குள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள அளவை எட்ட இன்னும் 50000 மெகாவாட் காற்றாலை நிறுவியாக வேண்டும்.

2011 India Wind Energy Outlook வெளியீட்டின் படி இந்தியாவின் மொத்த காற்று மின்னாற்றலில் 53.4 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தியாவது தெரிகிறது. இத்தனைக்கும் காற்றாலை மின்சக்திக்கு யூனிட் ரூ 3.39 என நாட்டிலேயே மிகக் குறைவான விலை கொடுப்பது தமிழகம்தான்.

தரையில் இருந்து 50 மீட்டர் உயரத்தில் 200 வாட்/ச.மீ க்கு அதிகமாக காற்று வீசும் பகுதிகள் காற்றாலை மின் உற்பத்திக்கு உகந்தவை. சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜி நாடெங்கும் 644 மையங்களில் மேற்கொண்ட ஆய்விற்குப் பிறகு 2010 இல் வெளியிட்ட விண்ட் அட்லஸ் ஒரு விஷயத்தை புலப்படுத்துகிறது. வெறும் 2 சதவீதம் நிலப்பரப்பில் 50,000 மெகாவாடு உற்பத்தி செய்யும் சாத்தியமே அது.

No comments: