Monday, August 26, 2013

ஜின்னா - தேதியவாதியா? பிரிவினைவாதியா?

இந்தியா வேறு, பாகிஸ்தான் வேறு என இரு தேசங்களாகப் பிரிக்கட்டு விட்டன. பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் ஆகிறார் ஜின்னா. அதற்கு முன்னர் அவர் பேசியது:

“I still consider myself to be an Indian. For the moment I have accepted the Governor General-ship of Pakistan. But I am looking forward to a time when I would return to India and take my place as a citizen of my country"

தனது நாற்பது வருட அரசியல் வாழ்க்கையில் முப்பது வருட காலம் இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், கடைசி பத்தாண்டு காலம் பாகிஸ்தான் பிரிவினைக்காவும் குரல் கொடுத்த முகமது அலி ஜின்னா விளங்கிக் கொள்ள முடியாத புதிர். ஜின்னாவைப் பற்றி நாம் ஏற்கனவே பல கெட்ட, நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருந்தாலும் சந்தியா பதிப்பகம் வாயிலாக சா.ராசமாணிக்கம் எழுதிய ‘ஜின்னா - தேதியவாதியா? பிரிவினைவாதியா?’ என்ற புத்தகம் ஜின்னா என்கிற மனிதரைப் பற்றிய பல விஷயங்களைத் தெரியக் கொடுக்கிறது.

ஜின்னா ஒரு குஜராத்தி. அவரது முன்னோர் மதம் மாறியிராவிடில் காந்தியும்,  ஜின்னாவும் ஒரே ஜாதிக்கார ஆட்கள். இருவரின் பூர்வீக கிராமங்களுக்குமான தூரம் முப்பத்திச் சொச்ச கிலோ மீட்டர் தான். ஜின்னாவின் காதல் மனைவி ஒரு பார்சி. அவரது மருமகன் கிறுத்துவர். சமையல்காரர் ஒரு கோவானியர். அவரது சுருக்கெழுத்தாளர் ஒரு பாலக்காட்டு ஐயர். அவரது டிரைவர் ஒரு சீக்கியர். அவர் ஆரம்பித்த Dawn பத்திரிக்கையின் ஆசிரியர் ஒரு மலையாள கிறித்துவர். அவரது பர்சனல் டாக்டர் ஒரு இந்து. பாகிஸ்தானின் முதல் பிரதமராக அவர் தேர்ந்தெடுத்த லியாகத் அலிகானின் மனைவி ஒரு பிராமணர். அவரால் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டவர் ஒரு தாழ்த்தப்பட ஜாதியைச் சேர்ந்தவர்.

தன் அரசியல் வாழ்வின் பிற்பகுதியில் முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுத்த ஜின்னா எந்தக் காலத்திலும் முஸ்லீமாக வாழ்ந்ததில்லை. முழுமையாக பகுத்தறிவுவாதியாக விளங்கினார். அவர் மண்டியிட்டுத் தொழுததில்லை. பன்றிக்கறி உண்டார். மதத்தில் உள்ள மூடப் பழக்கங்களைச் சாடினார். காந்தி தன் கடைசிக் காலத்தில் காங்கிரஸைக் கலைத்து விட ஆசைப்பட்டது போலவே ஜின்னா முஸ்லீம் லீகைக் கலைக்க ஆசைப்பட்டார்.

இன்னொரு சுவையான நிகழ்ச்சி. ஒரு முறை தேசிய சட்ட மன்றத்தில் பகத் சிங் குண்டு வீசினார். அப்போது அல்லா உறுப்பினர்களும் பதறியடித்து ஓடினார்கள். மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே அப்படியே அமர்ந்திருந்தனர். அதில் மோதிலால் நேருவும், ஜின்னாவும் அடக்கம்.

- கர்சன் பிரபு வங்காளத்தை மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் எனப் பிரித்த போது ஜின்னா அதை கடுமையாக எதிர்த்தார். கிழக்கு வங்காளம் (இன்று பங்களாதேஷ்) முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறியதால் அந்த நடவடிக்கையை அநேகமான முஸ்லிம்கள் வரவேற்றனர்.

- முதலாம் உலகப் போரில் துருக்கி தோற்றது. உலக முஸ்லிம்களின் தலைவன் எனக் கருதப்பட்ட துருக்கி சுல்தானும், துருக்கி தேசமும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தால் துண்டாடப்பட்டது. முஸ்லிம் இனத்திற்கு ஆதரவாக காந்தி இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களைத் திரட்டி கிலாபத் இயக்கம் என்ற ஒரு வேலையைச் செய்தார். ஏதே நாட்டில் நடக்கும் முஸ்லிம் பிரச்சினையில் நாம் தலையிடக் கூடாது என அதைக் கிண்டல் செய்து முஸ்லிம் மக்களின் கண்டனத்திற்கு ஆளானவர் ஜின்னா.

அப்படிப்பட்ட ஜின்னா இந்தியாவை இரண்டாகப் பிரிக்கும் நிலைக்குப் போனது வரலாற்று சோகம்.

ஜின்னாவின் உண்மையான நோக்கம் பாகிஸ்தான் பிரிவினையல்ல. அவர் அதை பேரம் பேசும் கருவியாகக் கையாண்டார். மவுன்பேட்டன் பிரபுவும், நேருவும், சர்தார் பட்டேலும் காந்தியின் சம்மதமின்றி ‘நீங்கள் பிரிந்து போங்கள்’ என ஒப்புக்கொண்டதை ஜின்னாவே கூட நம்ப முடியவில்லை.

பல கோடி மக்களின் வாழ்க்கையை இந்தியத் துணைக் கண்டத்தில் மாற்றியமைத்த முதமது அலி ஜின்னா என்ற குஜராத்தியின் அரசியல் வாழ்க்கையை ராசமாணிக்கத்தின் சிறிய புத்தகம் எளிய மொழியில் நன் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

முடிந்தால் வாசித்துப் பாருங்கள்

No comments: