Thursday, August 29, 2013

டாலர் தேசம்

கஜகஸ்தான் என்றொரு தேசம். அங்கு நான் கொஞ்ச நாள் தங்கியிருந்தேன். Borrowed Girlfriend (இரவல் காதலி) நாவலில் மிக முக்கியமான அத்தியாயம் கஜகஸ்தான் பின்னணியில் வருகிறது.

அல்மாட்டி நகரின் கோகோல் ஸ்ட்ரீட்டில் பெரியதொரு கமர்சியல் ஏரியா இருக்கிறது. பிற்பகலை அங்குதான் கழித்தோம் (நாவலின் நாயகனும், நாயகியும்). கஜகஸ்தானில் கஜக் மக்கள் பெரும்பான்மையினர் எனினும் எல்லோருமே ரஷ்ய மொழி பேசுகிறார்கள். அந்த தேசம் ரஷ்ய பாரம்பரியத்தையும், மொழியையும் இன்னும் பேணுகிறது. 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து கடைசியாகப் பிரிந்து வந்தது கஜகஸ்தான். அன்று முதல் இன்று வரை Nursultan Nazarbayev  என்ற நபர் தான் கஜகஸ்தான் அதிபராக உள்ளார். சோவியத்தின் ஒரு அங்கமாக இருந்த வரை அவர் நாத்திகவாதியாக விளங்கினார். கஜகஸ்தான் தனி நாடாக மாறிய பின்னர் இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாறி விட்டார். கடைந்தெடுத்த அரசியல்வாதி போலும். உஸ்பெகிஸ்தான் முதலிய அண்டை நாடுகள் வறுமையில் உழன்றாலும் கஜகஸ்தான் செல்வச் செழிப்பில் திளைக்கிறது. காரணம் எண்ணெய் வளம்.

சரி மேட்டருக்கு வருவோம். அல்மாட்டி நகரில் ஓட்டலில் தங்குவதை விட ஏதாவது வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கலாம் என முடிவு செய்து செயல்படுத்தினோம். வீட்டு வாடகை எவ்வளவு தெரியுமா? அந்த ஊர்க் காசில் கிட்டத்தட்ட நான்கு லட்சம். இரண்டு மாதம் தங்கியதால் எட்டு இலட்சம் தர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் வீட்டு ஓனர் கஜகஸ்தான் டெங்கேவில் வாடகை தர வேண்டாம், அமெரிக்க டாலராகக் கொடுத்து விடுங்கள் என முன் கூட்டியே சொல்லி விட்டார்.

அல்மாட்டி கஜகஸ்தானில் பெரிய நகரம். அங்கிருக்கும் பெரும்பாலான ஏ.டி.எம் இயந்திரங்கள் உள்ளூர் கரன்சியும், கூடவே அமெரிக்க டாலரும் தருகின்றன. எக்சேஞ்ச் ரேட் தாறுமாறாக இருப்பதால் பல வியாபார நிறுவனங்கள் தமது விலையை டாலரில் வைத்திருக்கிறார்கள். ஏற்ற-இறக்கம் என்ற பிரச்சினையில்லை பாருங்கள். ரூபாயின் மதிப்பும் (இன்று இதை எழுதி முடிக்கும் போது ஒரு டாலர் 68 ரூபாய்க்கும் மேலே) இப்படியே சரிந்தால் CBSE பள்ளிக் கூடங்களும், மருத்துவனைகளும் இனிமேல் ஃபீஸ் வாங்கும் போது டாலரில் வாங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. (ஏற்கனவே தங்கத்தின் விலையை டாலரில் தான் செலுத்து வருகிறோம் என்ற உண்மை தெரியாமலேயே அதைச் செய்கிறோம்). நிச்சயமான தேவை உள்ள பொருட்கள் மற்றும் தேவைகள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். சொல்லப் போனால் டாஸ்மாக் நிறுவனம் NYSE இல் பட்டியலிடப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இப்போதிருக்கும் நிலைமையில் இந்தியாவிற்கு வெளியே வேலை செய்யும் ஒரு சிலரையும், சாஃப்ட்வேர் கம்பெனி முதலீட்டாளர்களையும் (சாஃப்வேர் துறை ஊழியர்கள் இல்லை) தவிர யாருமே மகிழ்ச்சியாக இல்லை. இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி அனைவரையும் நேரடியாகப் பாதிக்கிறது. இல்லையேல் வெகு விரைவில் பாதிக்கும். ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் “NOW THE STORY IS UNFOLDING AND IF STILL GOVERNMENT AND RBI CONTINUES TO DO WHAT THEY ARE DOING, WE ARE LOOKING FOR A MASSIVE MASSIVE HYPER INFLATION. THIS MAY LEAD TO ZIMBABWE LIKE SITUATION.“ என அறச்சீற்றம் கொண்டுள்ளார். விரைவில் தக்காளியும், தனுஷ் வாங்கும் சம்பளமும் டாலரில் குறிக்கப்படுமா? ரூபாய் என்றும் டாலர் என்றும் வேறு வேறாக இருந்தால் தானே இந்தப் பிரச்சினை? பேசாமல் ரூபாயை முற்றிலுமாக ஒழித்து விட்டு எங்கும் டாலரையே பயன்படுத்தலாமே? இப்படியெல்லாம் கேள்வி எழுந்தால் நீயும் என் இனமே ! (ஃபேஸ்புக்கில் நிறையப் எதையாவது போட்டு ’நீயும் உடன்பிறப்பே’ என திமுகவைக் கலாய்க்கிறார்கள் யுவர் ஆனர்)

இந்தியாவின் திறந்த பொருளாதாரக் கொள்கையால் தான் இந்த நிலையா அல்லது பாலிசி மற்றும் அரசாங்கத்தின் நிதிக் கொள்கை நிர்வாகத்தில் கோளாறா என்பது விவாதத்துக்குரியது. ஆழமாக அதைப் பற்றி பலவாறாக எழுதலாம். சாதக பாதகங்களை அலசலாம். விரல் சுட்டலாம். நிச்சயமாக நிலைமை நன்றாக இல்லை. இதற்கான விலையை நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வடிவத்தில் கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஃபாரின் ஒயின் இறக்குமதி செய்கிறவன் தான் பாதிக்கப்படுவான் என்றில்லை.

1 comment:

Anonymous said...

அறசீற்றமா?

வயித்தெரிச்சல்யா..

பேஸ்புக் நண்பர்