Thursday, September 26, 2013

சுயதொழில் தொடங்க

எங்கள் அலுவலகத்துக்கு முன்னால் கன்னியப்பன் என்றொருவர் சைக்கிளில் டீ விற்பார். அது ஒரு குறுகிய சந்து. இரண்டு பக்கமும் ஐடி கம்பெனிகள். ஆயிரக் கணக்கான ஆட்கள் வேலை பார்க்கும் இடம். சாலையில் ஓரமாக இருந்த நடை பாதையில் ஒரு இடத்தில் மட்டும் சைக்கிள் நிற்கும் அளவுக்கு இடமிருக்கும். அதுதான் கன்னியப்பனின் ஸ்டாண்ட். அவரிடம் டீ குடித்துப் பழகியவர்கள் வேறு கடைக்குப் போக மாட்டார்கள். பக்கத்திலேயே, பக்கத்திலே என்றால் சுமார் 50 மீட்டர் தூரத்தில், மூன்று பெரிய டீக்கடைகள் இருக்கின்றன. டீக்கடை என்ற மினி சைஸ் உணவகங்கள். பஜ்ஜி, போண்டா, வடை, புரோட்டா, ஃபிரைட் ரைஸ் எல்லாம் கிடைக்கும். அங்கே வெறும் டீ ஏழு ரூபாய்க்குக் கொடுப்பார்கள். ஆனால் கன்னியப்பன் அதே ஏழு ரூபாய்க்கு இஞ்சி டீ, ஏலக்காய் டீ தருவார். கூட பிஸ்கெட்டும், விற்பார்.

பல நேரங்களில் அகோரமாகப் பசித்தாலும் பஜ்ஜி, வடை தின்னாமல் வெறும் இஞ்சி டீயைப் பருகி விட்டு திரும்ப வரும் அளவுக்கு அத்தனை ருசியாக இருக்கும். அந்த addiction  எண்ணெய் பலகாரமாகத் தின்று கொலஸ்ட்ரால் கூடாமல் இருக்கவும் உதவியிருக்கிறது. கன்னியப்பன் கடும் உழைப்பாளி. கட்டம் போட்ட பழுப்பு நிறச் சட்டையும், லுங்கியும் அணிந்திருப்பார். மாலை சரியாக நாலு மணிக்கு வந்து விடுவார். ஒரு ட்ரம் தீர்ந்தால் உடனே ஐந்து நிமிடத்தில் அதை ரீஃபில் செய்து திரும்ப வந்து விடுவார். ராத்திரி ஒரு மணி வரைக்கும் இருப்பாராம். கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஒரு நாள் வேடிக்கையாக, ’வேலை ரொம்ப பிரஷரா இருக்கு. பேசாம கன்னியப்பனுக்குப் பக்கத்துல ஒரு சைக்கிள் கடை போட்டுற வேண்டியதுதான்’ என்று சொன்னதுக்கு அவர் சிரித்தார். ஏற்கனவே அந்த டீக்கடை ஆட்கள் இவர் சைக்கிளுக்குப் பக்கத்தில் இன்னொரு சைக்கிளை நிறுத்திப் பார்த்தார்களாம். அவர்களது டீ நன்றாக இல்லை என்பதால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேலும் ஒரு நாள் 300 ரூபாய் சம்பளம் கொடுத்து ஆளைப் போட்டு அதன் பிறகு கணக்குப் பார்த்தால் ஒன்றும் மிஞ்சாது. அதனால் ரண்டு நாளுக்கு மேல் அவர்களால் நிற்க முடியவில்லை. MBA வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் சமாச்சாரங்களை ஒரு சைக்கிள் கேரியரில் சுமந்து ஜெயித்துக்கொண்டிருந்தார் அவர்.

ஒரு நாள் ராத்திரி எட்டு மணிக்கு போலீஸ் வந்து ”கண்ட நேரத்துல இங்க என்னடா பண்றே” என மிரட்டினார்களாம். அடுத்த நாள் காலையிலேயே அவர் வழக்கமாக சைக்கிள் நிறுத்தும் இடத்தில் ஒரு நடை வண்டி நின்றிடுந்தது. அதற்கு முன்னால் பெரிய சைஸ் கற்கள் இரண்டு இருந்தன. அந்த வண்டியில் பெரிய சைஸ் டீ ட்ரம் இருந்தது. பக்கத்தில் பஜ்ஜியெல்லாம் பரப்பி வைத்திருந்தார்கள். சிகரெட், கடலை மிட்டாய் எல்லாமே இருந்தது. கிட்டத்தட்ட கட்டிடம் கட்டிய மாதிரியான நிரந்தரமான செட்டிங்.

நாங்கள் நாலரைக்குப் போன போது கன்னியப்பான் சாலையின் ஓரமாக கீழே நின்று கொண்டிருந்தார். வண்டிக்கடைக்கும் அவரது சைக்கிளுக்கும் ஒரு அடி தூரமே இருக்கும். நேற்று போலீஸ் மிரட்டியது அவர் கண்களில் தெரிந்தது. வண்டிக்கடைக்கு யாருமே வரவில்லை. ஒரு பீகார் பையன் அதில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு சப்போர்ட்டாக கடைக்கார முதலாளி அருகிலேயே நின்றார். கன்னியப்பனை, ‘தள்ளிப் போப்பா..’ என அதட்டினார். “நான் எப்பவும் நிக்கற எடந்தான?” என்ற கன்னியப்பனின் குரல் பலவீனமாகக் கேட்டது. அப்போதும் அவர் business இல் busy-ness காட்டினார். எப்போதும் போல நாங்கள் அவரிடமே வாங்கினோம். போனில் பேசியபடி அவசரமாக வந்த ஒரு ஒரு இளைஞன் வண்டிக்கடைக்குப் போய் ’ஒரு டீ’ என்றான். ஒரு நொடியில் கன்னியப்பனைத் திரும்பிப் பார்த்து விட்டு, “ஸாரி ஸாரி.. வேண்டாம்” என சொல்லி விட்டு அவரிடமே வந்து விட்டான். அதெயெல்லாம் டீக்கடை முதலாளி கவனித்தபடியே நின்றார்.

எங்கள் ஊரில் சுப்பன் என அழைக்கப்பட்ட சுப்பிரமணி என்ற பெயருடைய ஒரு மரமேறி இருந்தார். அநேக குடியானவர்களின் காடுகளில் இருந்த பனை மரங்களில் கள்ளும், பதநீரும் இறக்குவார். கவுண்டமாருக எல்லாம் கள்ளைக் குடித்து விட்டு ஃபுல்லா சட்டம் பேசுவார்கள். அது டாஸ்மாக் வராத காலம். அரசாங்கம் சாராயக் கடைகளை ஏலம் விடும் பாரம்பரியம் நிலவிய பருவம். ஒரு நல்ல நாளில் ஆளுங்கட்சி ஒன்றியச் செயலாளர் ஒயின் ஷாப்பை ஒப்பந்தத்தில் எடுத்தார். அடுத்த நல்ல நாளில் சுப்பிரமணியை போலீஸ் ஸ்டேஷனில் அடைத்தார்கள். காப்பாற்ற அவரிடம் கள் குடித்த எந்தக் கவுண்டனும் போகவில்லை.

Wednesday, September 25, 2013

திலீபன் நினைவு தினம்

நாளை செப்டம்பர் 26 ஆகும் போது திலீபன் இறந்து 26 வருடங்கள் முடிந்திருக்கும். காற்றில் கரைந்து, வரலாற்றில் மறைந்து போன தமிழீழக் கனவின் பொருட்டு அன்னமும், தண்ணியும் உண்ணாமல் உயிர் நீத்த திலிபனின் மரணம் நமக்கு பல விஷயங்களை இன்றும் நினைவூட்டிக் கொண்டுதானிருக்கிறது.

மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து அங்கிருந்து போராட்டத்துக்கு நிதியளித்த யாழ்ப்பாணத் தமிழர்களின் முதலீட்டுக்கு போதுமான ROI கிட்ட வேண்டிய கட்டாயத்தில் போர் முனையில் புலிகளும், வன்னி மக்களும் காவு கொடுக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு கடந்த காலத்தின் தவறுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது தமிழினம். வரலாற்றில் எங்கெல்லாம் பிழை நேர்ந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். விடுதலைப் புலிகளின் தவறுகளை வரிசைப் படி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு வேளை, ஏதேனும் ஒரு வகையில் படை பலத்தினால் தனித் தமிழீழ நாட்டை அவர்கள் கட்டி எழுப்பியிருந்தால் அதை நவீன உலகின் முன்மாதிரியான விடுதலைப் போராட்டமாக நாம் ஆராய்ந்திருப்போம். சுய நிர்ணயம் கோரிப் போராடும் அமைப்புகளுக்கு அது எத்தகைய ரோல் மாடலாகத் திகழ்கிறது என்பது குறித்து அலசியிருப்போம்.

அப்படியெல்லாம் நடக்கவில்லை. அப்படி நடக்குமாறு உலக ஒழுங்கு நிர்ணயிக்கவில்லை. இலங்கையைப் பொருத்த வரை சிங்களர்கள் பெரும்பான்மையினராக இருந்த போதும் அவர்கள் சிறுபான்மை மனோபாவத்தில் இருந்தனர். தமிழர்கள் சிறுபான்மையினராயிருந்தும் பெரும்பான்மை மனப்போக்கு கொண்டிருந்தனர், எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையானது இதுதான். வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருந்த மலையகத் தமிழர்களுக்கு சிங்களவர்களும், ஈழத் தமிழர்களும் ஒட்டு மொத்தமாக செய்த கொடுமைகள் இன்னொரு முக்கியமான பிரச்சினை. இந்த இரண்டின் அடிப்படையிலுமே எல்லாவற்றையும் அணுகவேண்டியிருக்கிறது.

பிரிட்டிஷ்காரன் ஆள்வதற்கு முன் இலங்கைத் தீவில் தமிழ் மற்றும் சிங்கள தேசங்கள் தனித்தனி அரசாங்கம் நடத்தின. ஆனால் ஆங்கிலேயர் ஒரே நாடாக இலங்கையை ஆக்கி அதை சிங்களர் கையில் கொடுத்து விட்டார்கள் என்ற கூற்று இங்கே உண்டு. ஆனால் உண்மையில் ஒரே நாடாக இருக்க விரும்பியது யாழ்ப்பாணத் தமிழர்களே. ஒற்றையாட்சி முறைக்குப் பதிலாக சமஷ்டி தீர்வுக்கான அல்லது தனி நாட்டுக்கான கோரிக்கை அங்கு பலமாக இல்லை. தமிழர்களின் கோரிக்கையென்று ஒன்று இருந்ததென்றால் அது கொஞ்சம் கூட நியாமில்லாமல் 50:50 பிரதிநிதித்துவம் கேட்டதுதான். ஏற்கனவே கல்வியில் முன்னேறியிருந்த யாழ்ப்பாண மேட்டுக்குடி தமிழர்கள் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஆதிக்க செலுத்த விரும்பியதன் விளைவே சிறுபான்மை, பெரும்பான்மை மனோபாவம்.

இன்னும் நிறையப் பேசலாம். தமிழர் பக்கத்துத் தவறுகள் குறித்து, சிங்களவர் அராஜகம் குறித்து…. நூல் மீது சேலை விழுந்தாலும் சேலை மீது முள் விழுந்தாலும் சேதாரம் சேலைக்குத் தான் என வழக்கமாகச் சொல்வார்களே அந்த மாதிரி கிழிந்து போய்க் கிடக்கிறது தமிழினம். முள் மோசமானது தான், அதற்காக முள்ளோடு சேலையை சண்டை போடச் சொல்லி வேட்டி உசுப்பேத்தி விட்டதெல்லாம் போதும்.

பின் குறிப்பு: திலீபனின் நினைவாக செப்டம்பர் 25 12:30PM – செப்டம்பர் 25 12:30PM வரை இரண்டு நாட்களுக்கு Prabhakaran: The Story of his struggle for Eelam புத்தகம் இலவசம்காகக் கிடைக்கிறது. Kindle for PC என்ற application மூலம் இதை கணினியிலும், மொபைல் போனிலும் கூட வாசிக்கலாம்.

Thursday, September 19, 2013

வேலைக்காரி கதை

என் மகளுக்கு நான் கொடுக்கும் தண்டனைகளிலேயே பெரிய தண்டனை தூங்கும் முன்னர் கதை சொல்லாமல் இருப்பது. ”இன்னைக்கு குறும்பு பண்ணுனேல்ல அதனால ஸ்டோரி கட்” என்று சொன்னால் அதை ஏமாற்றத்தோடும், அழுகையோடும் எதிர்கொள்வாள். அடித்தாலோ திட்டினாலோ கூட இவ்வளவு பெரிய கோபம் வருவதில்லை. அவளுக்கான எல்லாக் கதைகளும் ‘ஒரு ஊரிலே’ என்றுதான் ஆரம்பிக்கும். முருகன் பழத்துக்காக சண்டை போட்ட கதையென்றாலும் அது  ஒரு ஊரில் தான் ஆரம்பிக்க வேண்டும். சாமிக்கு ஊரெல்லாம் கிடையாது என்று சொன்னால் கேட்பதில்லை.

கதை சொல்வதற்கு ஒரு டெம்ப்ளேட் நம்மிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வேறு மாதிரி யாராவது சொன்னால் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சுவாரசியமாக அலுப்புத் தட்டாமல், “ஸாரி மாப்ள ஒரு கால் வருது” என எஸ்கேப் ஆகி ஓட வைக்காமல் சொல்லப்படும் எல்லாக் கதைகளும் நல்ல கதைகளே. கதையை விட கதை சொல்லும் விதமே நம்மை ஈர்க்கிறது. இப்படித்தான் பாருங்கள் ஷீலாவின் கதை ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. சொதப்பி விடுமோ என பயமாக இருக்கிறது.

ஷீலா எங்கள் வீட்டு வேலைக்காரி. ஷீலாவை ஷீலா என்றே குறிப்பிடுகிறேன். கதைக்காக முனியம்மாவாக்க வேண்டாம். பணியாளரம்மா என்று பொலிட்டிகல்லி கரெக்ட்டாகவும் எழுத வேண்டாம். எங்கள் வீட்டில் லாவண்யாவுக்குப் பிறகு ஷீலா வேலைக்கு வந்தாள். எப்படியும் என்னை விட வயதில் மூத்தவளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் என்னவோ ஒல்லியாக இருப்பதால் வயது தெரியாது. அவளிடம் பேசும் போது ’ங்க போட்டுப் பேசினாலும், அவள் இல்லாத சமயங்களில் அவள் அவளாகவே எங்கள் உரையாடல்களில் இடம்பெறுகிறாள்.

எட்டு மாதத்தில் நாலு பேரை மாற்றியாகி விட்டது. மாறி விட்டார்கள். ஆளுக்கு அவ்வளவு டிமாண்ட். ஆறாயிரம் சம்பளம் வாங்குவதற்காக ஆண்கள் தினம் 12 மணி நேரம் செக்யூரிட்டி வேலை பார்த்து யூனிஃபார்மோடு நிற்கும் அதே டவுன்ஷிப்பில் வேலைக்காரப் பெண்கள் ஒரு மணி நேரம் வேலை செய்து இரண்டாயிரம் டிமாண்ட் பண்ணுகிறார்கள். பாத்திரம் கழுவி, வீடு கூட்டி, தரையைத் துடைக்க வேண்டும். நாலு வீடு செய்யும் போது ஒரு வீட்டில் பிரேக்ஃஃபாஸ்ட்டும், இன்னொரு வீட்டில் டீ-காஃபியும் தந்து விடுவார்கள். நாம் கூட வீட்டிலிருந்து கிளம்பினால் ஆஃபீஸுக்குப் போவதற்குள் வேர்த்து வடிகிறது. ஆனால் இந்தப் பெண்கள் எல்லோரும் பவுடரோடும், மலர்ச் சூடிய கூந்தலோடும் வருகிறார்கள். திரும்பிப் போகும் போதும் அப்படியே போகிறார்கள்.

எங்களது கம்யூனிட்டியில் இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் மூன்று நிமிடத்திற்கு மேல் கூடி நின்று பேசினால் அதில் வேலைக்காரி டாபிக் நிச்சயமாக இருக்கும். குண்டா கழுவ எல்லோரும் ஆள் வைத்திருக்கிறார்கள். சில பேர் சமைப்பதற்கும் ஆள் வைத்திருக்கிறார்கள்; சில பேர் குழந்தையைக் கவனித்துக்கொள்ள. ஆறாயிரம், எட்டாயிரம் என ஒவ்வொன்றுக்கும் கணக்கு நீளும். ”நாம பழைய சோறு தின்னா கூட பரவாயில்லேங்க.. ஆனா அவங்களுக்கு சூடா டிஃபன் செய்ய வேண்டியிருக்கு. இவளுங்க மட்டும் இல்லேன்னா சமைக்கவே வேண்டியதில்லை” என சிலர் அங்கலாய்ப்பதுண்டு.

”ஏம்மா நீ தான் எல்லாமே நீல்கிரீஸ்ல வாங்கிக்கிறீல்ல. ரேஷன் கார்டை குடுத்தா என்ன?” என 17ஆவது பிளாக்கில் ஒரு வீட்டில் வேலைக்காரி கேட்டாளாம். அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். மூன்று மாதம் கழித்து, “நான் நாலு வீடு போறவ. டைமே கெடைக்கறதில்ல... நீ சும்மா தானே வீட்ல இருக்கே. (இப்பவெல்லாம் குந்திக்கினு இருக்கேனு சீரியலில் மட்டுமே பேசுகிறார்கள்) அப்படியே ரேஷன்ல போய் ஜாமான் வாங்கிட்டு வந்து குடுத்துறேன்” என எக்ட்ஸ்ரா பிட்டைப் போட்டிருக்கிறாள். நல்ல வேளை மறுத்து விட்டார்களாம். இல்லாவிட்டால் இந்நேரம் மதிய நேர மெகா சீரியலுக்கெல்லாம் முழுக்குப் போட்டு விட்டு அபார்மெண்ட் பெண்கள் ரேஷன் கடையில் தவம் கிடப்பார்கள்.

லாவண்யாவிற்கு முன் ஒரு பெண் எங்களிடம் வேலை செய்தாள். கூடவே செகண்ட் ஃபுளோரில் ஸ்ரீஜா வீட்டிலும். பெயர் சரியாக நினைவில்லை. ஆனால் முதல் நாள் அட்வான்ஸ் வாங்கும் போது ’இந்த ஒடம்புல இருந்து உயிரு போற வரைக்கும் உங்களுக்கு நாயா ஒழைப்பேன்’ என்று சொன்னது நினைவிருக்கிறது. ஸ்ரீஜாவிடம் ‘உங்களப் பாத்தா அப்படியே மேரி மாதாவையே பாக்கிற மாதிரி இருக்கு’ என்றாளாம். மூனே வாரத்தில் ஆள் எஸ்கேப்.

ஜானி படத்தில் ரஜினி சொல்வாரே அந்த மாதிரி, ஒன்னை விட இன்னொன்னு பெட்டர்னு பாத்தா வாழ்க்கை ஃபுல்லா மாறிக்கிட்டே, மாத்திக்கிட்டே இருக்கணும். அப்படி வேலை சுளுவாக, பணம் அதிகமாகக் கிடைக்கும் வீடுகளையும் எஜமானிகளையும் நோக்கி மாறிக்கொள்கிறார்கள். அட்வான்ஸ் வாங்கும் நாளில் பாத்திரம் கரைகிற வரைக்கும் தேய்த்துத் தேய்த்து கழுவுவார்கள். பிறகு நாலு நாளைக்கு போன் செய்தாலும் எடுக்க மாட்டார்கள். கார்பெண்டர், கார் கிளீச் செய்கிற பையன், வேலைக்காரி என இது எல்லோருக்கும் பொருந்தும். அதனால் யார் முன்பணம் கேட்டாலும் கொடுக்கக் கூடாது என மனைவியிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன். அட்வான்ஸ் கொடுத்தால் பணம் போகிறது என்றெல்லாம் கிடையாது. பணம் வாங்கிய ஆளே போகிறது.

நான் இறுக்கமானவன். என் மனைவி அதற்கு நேரெதிர். அவள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும் - இ.வா என்று. யார் பாவமாகக் கேட்டாலும் அவளுக்கு மனது இளகிவிடும். சிக்னலில் யார் கை நீட்டினாலும் ஐந்து ரூபாயாவது போடுவாள். பத்து ருவா குடுக்கிறதுல நாம ஒன்னும் குடி முழுகிப் போயிற மாட்டோம் என்பாள். ஸ்ரீஜாவை மாதாவென அழைத்த பெண், ”சைக்கிள் வாங்கினால் சீக்கிரம் வேலைக்கு வந்து விடுவேன். மாதம் ஐநூறு பிடித்துக் கொள்ள்ளுங்கள்” என்று நான் இல்லாத சமயத்தில் மூவாயிரம் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறாள். உடனே நின்று விட்டாள். வீட்டுக்காரியின் தயாள குணத்துக்கே தனியாக மாத பட்ஜெட்டில் ஒரு தொகை ஒதுக்குவது வாடிக்கையாக இருந்ததொரு காலம்.

ஒரு முறை சிக்னலில் ஒரு பையன் மிகவும் இறைஞ்சிக் காசு கேட்டான். பிரமாதமான முகபாவம். செத்தே விடுவான் போலிருந்தது. சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சார் பிளீஸ் எனக் கெஞ்சினான். காலில் செருப்புக் கூட இல்லை. கொதிக்கும் வெயிலில் தார் ரோட்டில் நின்றதிலேயே கால் வெந்திருக்கும். என் மனைவி பத்து ரூபாயை எடுத்தாள். அவள் கொடுப்பதற்குள், “எங்க வீட்ல வேலை இருக்கு வரியா? மூனு வேளை சோறு போட்டு நல்ல டிரஸ்ஸூம் எடுத்துத் தர்றோம்” என்றேன். முகத்தின் ரியாக்‌ஷனை உடனே மாற்றி, “போய்யா” என்று காரை உதைத்து விட்டு அடுத்த வண்டியை நோக்கி நடந்தான்.

நான் இரக்கமற்றவன் என நினைத்திருந்த மனைவி அந்த சம்பவத்துக்குப் பிறகு ஓரளவு மாறி விட்டாள். இப்போது தேவலாம். என் அனுமதியில்லாமல் யாருக்கும் தானமோ, முன் பணமோ தருவதில்லை. என் அனுமதி என்பது இன்கம்டேக்ஸ் ரீஃபண்ட் மாதிரி. நிச்சயமாகக் கிடைக்காத ஒன்று. அப்படி இருந்தும் இந்த மாதம் ஷீலாவுக்கு 750 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டாள்.

நேற்று மாலை வீட்டுக்குப் போனதும், ‘ஏங்க. ஷீலாவுக்கு ரண்டாயிரம் வேணுமாம். புள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணுமாம்” என்றாள்.

“நீ ஒடனே குடுத்துட்டியா?”

“உங்க கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்.”

”ஏற்கனவே அட்வான்ஸ் குடுத்துருக்கில்ல… இன்னும் என்ன வேணூமாமா?”

அதோடு பேச்சு முடிந்தது. பிறகு தெய்வம் தந்த வீடு, தாயுமானவன், சரவணன் மீனாட்சி, தென்றல், வாணி ராணி, ஆஃபீஸ் எல்லாம் முடிந்து தூங்கப் போகும் போது என் மனைவியின் மொபைலில் ஷீலா அழைத்தாள்.

“நீங்களே பேசுங்க..” என்று என்னிடம் கொடுத்தாள்.

“ஹலோ” என எடுத்தேன்.

“தீபா மேடம் இருக்காங்களா?” பேசியது ஆண் குரல்.

”சொல்லுங்க”

“தப்பா நெனச்சுக்காதீங்க ஸார்...நான் ஷீலா வீட்ல இருந்து பேசறேன்.. அவ நடவடிக்கையெல்லாம் ஒன்னு சரியில்லைங்க”

“ம்”

“தயவு செஞ்சு தப்பா நெனசுக்காதீங்க.. ரொம்ப லேட் ஆகிருச்சு”

“பரவாயில்லை”

“ஒன்னும் சரியில்லைங்கைய்யா.. அடிச்சிட்டாங்கய்யா… கொஞ்சம் கண்டிச்சு வைங்கய்யா” வடிவேலு மாடுலேஷனில் மனிதர் கதறினார்.

“சரிங்க” என்று சொல்லி விட்டு வைத்து விட்டேன்.

அது வரைக்கும் என்னையே பார்த்துக்கொண்டிருந்த மனைவி ”என்னவாமா?” எனக் கேட்டாள்.

“நாளைக்கு அவளுக்கு ரண்டாயிரம் கொடுத்துரு.”

Tuesday, September 17, 2013

முரண்பாடுகள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஹைதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய சமயத்தில் அங்கே தேஜோவதி என்ற அழகான பெண் (இப்போது ஆண்ட்டி ஆகியிருப்பார்) மனித வள மேம்பாட்டுத் துறையில் இயங்கினார். அந்தப் பெண்ணிற்கு வேலை எதையாவது சுவாரசியமான மேட்டர் கிடைத்தால் ஃபார்வேர்ட் செய்ய வேண்டியது. LIC ஆஃபீஸுக்குப் போனால் இந்தியை வளர்ப்பதற்காக எதாவது இந்திச் சொல்லுக்கு விளக்கம் எழுதிப் போட்டிருப்பார்களே அந்த மாதிரி மின்னஞ்சல்களை அனுப்பி எங்களுக்கெல்லாம் ஆங்கில அறிவை வளர்ப்பார்.

ஒரு முறை Oxymoron என்ற இலக்கியச் சங்கதியைப் பற்றி மெயில் அனுப்பினார். எதிரெதிர் அர்த்தம் உடைய இரண்டு சொற்களை ஒன்றாக இணைத்துச் சொல்லுவதே Oxymoron. நிறைய உதாரணங்களையும் அனுப்பினார். அதற்கு ரிப்ளை போட்டு ஒவ்வொருத்தரும் தங்களுக்குத் தெரிந்த Oxymoron சொற்களை அனுப்ப வேண்டும். நேர்மையான அரசியல்வாதி, சந்தேகிக்காத மனைவி, கற்புள்ள நடிகை, எக்கனாமிக்கல் கேர்ள்ஃபிரண்ட் என எதை வேண்டுமானாலும் அனுப்பியிருக்கலாம். வேலையில் பிஸியாக இருந்த ஒரு பையன் கடுப்பாகி ‘பியூட்டிஃபுல் தேஜோவதி’ என வன்மம் தீர்த்து விட்டான். அன்று முதல் அந்த கடலோர ஆந்திரப் பெண் ஆங்கிலம் வளர்க்கும் பணியை நிறுத்திக்கொண்டார்.

வாழ்க்கை பல்வேறு முரண்பாடுகளால் ஆனது. வாழ்க்கையில் செட்டில் ஆவது, மகிழ்ச்சியான வாழ்க்கை முதலிய பதங்கள் நிரந்தர Oxymorons. தெளிவான எந்தவொரு வரையறைக்குள்ளும் சிக்காத வாழ்க்கையை decode செய்ய முயலும் ஒவ்வொரு சாமியார்களின் செயலும் வாழ்க்கை எவ்வளவு சிக்கலான oxymoron என்பதற்கான சான்று. நம் நாட்டில் ஜனநாயம் என்பதே அப்படி ஒரு சங்கதிதான். தனது கடைசி அணு உலையை ஜப்பான் மூடிக்கொண்டிருக்கிறது. ஆனால் சிவில் அணுசக்தி தொடர்பான பேச்சுக்களை இந்தியா மீண்டும் துவக்கியிருக்கிறது. ஜனநாயகத்தை வாழ வைக்க ஜனங்களைக் கொல்லத் தயங்குவதில்லை நாம். 

மக்கள் பிரச்சினைகளை பொதுவான தளத்தில் வைத்து பரவலான விவாதத்துக்கு வைக்கும் ‘அரசியலாக்குதல்’ என்ற சொல்லை நாம் கெட்ட வார்த்தையாகப் பாவிக்கின்றோம். வாழ்க்கையில் you can either be happy or rational என்ற விஷயத்தை அத்தனை பேரும் அறிவோம்.

முரண்பாடுகளே வாழ்வில் சாஸ்வதமான விஷயம். உற்று நோக்கினால் ஐந்து நிமிடத்தில் ஏதேனும் ஒரு முரண் தட்டுப்படுகிறது. The Science of Stock Market Investment - Practical Guide to Intelligent Investors என்ற ஷேர் மார்க்கெட் புத்தகத்தில் கூட ’Efficient market, like short-term investor is an oxymoron’ என்றொரு வாசகம் வரும். 

பங்குச் சந்தையில் உள்ள முரண்பாடே என்னை பரவலாக வாசிக்க வைத்தது. பல விஷயங்களை உணர வைத்தது. வாழ்க்கையைப் பற்றிய பல முரண்களை சிரித்துக்கொண்டே கடந்து செல்ல உதவியது. முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. பல நேரங்களில் நாம் முரண்படுகிறோம் என்றே தெரியாமல் போகும். காதல் என்றால் பித்து என்று ஒரு காலத்தில் நீயா நானாவில் பேசிய நபர் சில வருடம் கழித்து பெற்றோர் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பார்க்க வேண்டுமென்கிறார். காதல் இல்லையேல் சாதல் என்ற ரீதியில் பாட்டெழுதிய கவிஞன் ‘டாக்டர் பொண்ணு போனா நர்ஸ் பொண்ணை’ என அறிவுறுத்துகிறார். நேற்றைக்கு சரியாகத் தெரிந்த விஷயம் இன்று தவறாகவும், நேற்று பிழையாகக் கண்ட ஒன்றை இன்று முறையாகவும் காண நேர்கிறது. அது நாம் அடையும் முதிர்ச்சிக்கும், நமது பக்குப்படுதலுக்கும் ஏற்ப நமது பார்வை மாறுகிறது. பக்குவப்படுதல் என்பது இங்கே conditioning என்ற சொல்லை மட்டுமே குறிக்கிறதே ஒழிய அறிவில் சிறந்தவர்களாக ஆகிறோம் என உணர்த்துவதில்லை.

நமது பார்வைகள், நிலைப்பாடுகள் காலத்திற்கு ஏற்ப மாறுகின்றன. போன வருடம் வாசித்த புத்தகத்தை இந்த வருடம் மீண்டும் வாசித்தால் வேறு மாதிரியான அனுபவம் கிடைக்கிறது. கணக்குப் புத்தகம் மட்டுமே எப்போதும் மாறாக ஒரு வாசிப்பு அனுபவத்தை அளிக்கும் சக்தி கொண்டிருக்கிறது. 

Wednesday, September 11, 2013

மழையில் நனைந்து கொண்டே

நேற்றிரவு நல்ல மழை. ஸ்கூல் எல்லாம் லீவ். நல்ல வேளை ஆபீஸுக்கு லீவ் இல்லை. லீவ் விட்டிருந்தாலும் வீட்டில் இருந்து வேலை செய்திருக்க வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்ய? லீவ் நாளில் உண்மையிலேயே லீவை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் போன ஜென்மத்தில் அடுத்தவன் பொண்டாட்டியை சைட் அடிப்பது உள்ளிட்ட பாவங்களை செய்யாத புண்ணியவான்களாக இருக்க வேண்டும். அதனால் லீவ் கிடைப்பதை விட ஆபீஸ் வருவதே மேல்.

இன்று காலை அலுவலகம் வந்தவுடன் ஒரே வெள்ளம். நிறையப் பேர் ஷூவைக் கழட்டிப் பிடித்துக்கொண்டும், பேண்டைச் சுருட்டிக் கொண்டும் உள்ளே வந்தனர். பாதி நிறையப் பேரைக் காணோம்.. மதியம் மூன்று மணிக்கு ஒரு பையனைத் தேடினேன்.. அருகிலிருந்த பையனிடம் எங்கேயென்று கேட்டேன். Sick leave என்றார்கள். அது எப்படித்தான் கல்யாணம் ஆனவுடனே மழை பேயறதுக்கு முன்னாடி sick ஆகறாங்கன்னு தெரியல..

அது நம் ரத்தத்தில் ஊறிய ஒரு சங்கதியாக இருக்கிறது. நேர மேலாண்மை என்பது வயிற்று வலியைக் காரணம் காட்டி ஸ்கூலுக்கு லீவ் போடும் நம் கலாச்சாரத்தில் ஊறியிருக்கிறது. சமரசத்தின் வாயிலாக வாழ்வியல் முறையைக் கண்ட ஒரு சமுதாயம் தனது முன்னுரிமைகளை வசதிக்குத் தக்க மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கிறது. வலிமையானவனுக்காகக் காத்திருக்கலாம். வசதியானவனுக்காகக் காத்திருக்கலாம். தப்பில்லை. நமக்கு இலாபம் வருமென்றால், இல்லை நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமானால் நேரத்தைக் கடைபிடிக்கலாம். இல்லையென்றால் ஊதித் தள்ளி விட்டு போய்க்கொண்டே இருக்கலாம். நமது அடிப்படை ஒழுக்கம் சந்தர்ப்பவாதம் சார்ந்த ஒரு நிலைப்பாடாக இன்றைக்கு நிலை கொண்டிருக்கிறது.

வட இந்தியாவை கம்பேர் செய்யும் போது நாம் எவ்வளவோ பரவாயில்லை என்றாலும் கூட மனது ஒப்பவில்லை. நம்ம ஊரில் தான் மழை வந்தாலும் சாக்கு, வெயில் அடித்தாலும் சாக்கு, பஞ்சர் ஆனாலும் சாக்கு. பல்லு வலிக்கும் சாக்கு. ’ஆள்காரன் நடையில் ஏய்க்கிறான். பண்ணாடி படியில் ஏய்க்கிறான்’ என்று சொல்லுவார்கள். அந்த மாதிரி எங்கெல்லாம் டபாய்க்க முடியுமோ அங்கெல்லாம் டபாய்த்துக் கொண்டிருக்கிறோம். யாரும் இங்கே ஒழுங்கில்லை. நாம் செய்யும் வேலைக்கு accountability நிர்ணயிக்கப்படாத வரை நமது சமூகத்தின் அடிப்படைப் பண்புகள் மாறப் போவதில்லை. கட்டணச் சாலைகள் (toll roads) ஒரு முறை தான் போடுகிறார்கள். வருடக் கணக்கில் அப்படியே இருக்கிறது. ஆனால் காண்டிராக்ட் மூலம் அமைக்கப்படும் சாலைகள் அடுத்த மழை அல்லது தண்ணீர் லாரி வந்தவுடன் பல்லிளித்து விடுகிறது. வாஷிங் மெசினுக்கெல்லாம் வாரண்டி கொடுக்கிறார்கள். தார் ரோட்டுக்கு கொடுத்தால் என்ன? எவன் கேள்வி கேட்பது?

சுற்றி என்ன நடந்தாலும் கவலையின்றி, அடிப்படை ஒழுக்கமின்றி, அடிப்படையான உரிமைகள் மறுக்கப்படும் போது கூட கண்டு கொள்ளாமல், அடிப்படைக் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் வாழப் பழகியிருக்கிறோம். நல்லாப் படிச்சு செட்டில் ஆகி விடத் துடிக்கும் நாம் நம் வீட்டுப் பெண் பலாத்காரம் செய்யப்படும் வரை ஒதுங்கித்தான் இருப்போம். பாதுகாப்பான சூழல் இல்லாத சமுதாயத்தில் செக்யூரிட்டி, கண்காணிப்பு கேமிரா கொண்ட டவுன்ஷிப்பில் வீடு வாங்கிக் கொள்கிறோம். நீர் மாசு மட்டால் நமக்கென்னவென்று RO வாங்கி மாட்டிக் கொள்கிறோம். நாளைக்கு பால் சுத்தமாக இல்லையென்றால் ஒவ்வொரு வீட்டிலும் எருமை வாங்கி வளர்த்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பாலுக்கெல்லாம் யார் பாஸ் சண்டைப் போடுறது?

சரி.. எதையோ ஆரம்பித்து எங்கோ போய் விட்டது. உண்மையில் நான் மார்க்கைப் பற்றித்தான் எழுத நினைத்தேன். மார்க் ஒரு ஆங்கிலக் குடிமகன். வெற்றிச்செல்வன் தான் எனக்கு அவனைப் பற்றிச் சொன்னார். வெற்றிச்செல்வன் என் நண்பர். யாழ்ப்பாணத்தில் பிறந்து வரலாற்றுப் பெருவெள்ளத்தில் லண்டனில் கரை ஒதுங்கியவர். அவரது நிஜப்பெயர் வேறு. ஆனால் உங்களுக்கு வெற்றிச்செல்வன் என்ற பெயரில் ஒரு பிரச்சினையும் இருக்காது என்பதால் அவரை வெற்றிச்செல்வன் என்றே இங்கே குறிப்பிடுகிறேன்.

சில வருடங்களுக்கு முன் ஒரு நியூஸ் ஏஜென்சியில் கண்கானிப்பாளராக பணியாற்றிய போது மார்க்குடன் அவருக்குப் பழக்கம். லண்டன் பரபரப்பான ஊர். அங்கே காலையில் எழுந்து சாவகசமாக பேப்பர் படிக்கும் அளவுக்கு யாருக்கும் பொழுதில்லை. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது நீயூஸ் பேப்பர் வாசிப்பார்கள். எல்லா ஸ்டேஷனிலும் இலவச பேப்பர் வைத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். மாலையிலும் ஒரு ஈவினிங் பேப்பர் அப்படி இலவசமாகக் கிடைக்கும். இந்த பேப்பர் கம்பெனிகளுக்கெல்லாம் வருமானம் விளம்பரம் வாயிலாகத்தான் வருகிறது.

ஆனால் சில பேர் காசு கொடுத்து வாங்கும் செய்தித்தாளை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்கள். அவர்களுக்கும் நேரமும், பணமும் மிகுதியாகவே இருக்கும் என யூகிக்கிறேன். அவர்களுக்கு செய்தித்தாள் வீட்டிலே டெலிவர் செய்யப்பட வேண்டும். அதற்கான ஏஜென்சிகள் இருக்கும். நம்ம ஊரில் பேப்பர் போடும் பையன்கள் மாதிரி. அப்படி ஒரு ஏஜென்சியில் தான் நண்பர் மேனேஜராக இருந்தார். அவருக்குக் கீழே பேப்பர் டெலிவர் செய்யும் பணியில் மார்க் இருந்தான். இடி இடித்தாலும், மழை பெய்தாலும், புயல் அடித்தாலும் நேரத்திற்கு பேப்பர் போயாக வேண்டும்.

தினமும் மார்க் பையன் சரியாக வந்து விடுவானாம். ஒரு நாள் ஆளைக் காணோம். இங்கிலீஷ்கார கிழவிகள் வெற்றிச்செல்வனுக்கு போன் போட்டு இன்னும் பேப்பர் வரலையே என escalate செய்திருக்கிறார்கள். இவரும் எதையோ சொல்லி சமாளித்திருக்கிறார். நல்ல வேளை அரை மணி நேரம் தாமதமாக வந்து விட்டானாம் மார்க். விளக்கமெல்லாம் கேட்காமல் பேப்பரை அள்ளிப் போட்டு அனுப்பியிருக்கிறார். அவனும் அதே பரபரப்பில் கிளம்பிப் போய் பேப்பரெல்லாம் போட்டு விட்டு திரும்பி வந்திருக்கிறான்.

திரும்ப வந்தவன் சோர்வாகக் காணப்பட்டிருக்கிறான். “மார்க், டயர்டா இருக்கியே? ஆர் யூ ஆல்ரைட்?” என நம்மவர் கேட்டிருக்கிறார்.

“நைட் சரியாகத் தூங்கலை. நாளைக்கு சரியாகிரும்,” என்றானாம்.

“ஏன் தூங்கல?”

“My father passed away last night.”

Monday, September 09, 2013

ஆனந்த யாழை மீட்டினோம்

நம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள். அதற்கு ஒரேயொரு சரியான விடை. அதைத் தவிர வேறு ஏதேனும் பதில் சொன்னால் தவறு. ஒரு கேள்விக்கு இரண்டு பதில் இருக்க முடியாது. இப்படியாகத்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். வாழ்க்கையின் வெற்றிக்கான சூத்திரமும் அப்படித்தான்: ’நன்றாகப் படிக்க வேண்டும். நிறைய மார்க் வாங்க வேண்டும். நல்ல வேலையில் சேர்ந்து செட்டில் ஆக வேண்டும்.’ அப்படிப் படிக்காதவன் வெற்றியடைவதில்லை. இதன் காரணமாகத்தான் ஏராளமான தனியார் கல்வி நிறுவனங்கள் முளைத்திருக்கின்றன. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்ற இரண்டாவது மிக முக்கியமான முதலீடு கல்வித் தந்தையாக மாறவதுதான் என்ற எளிய கணக்கு சாத்தியமாகியிருக்கிறது.

நேற்று தங்க மீன்கள் பார்த்தேன். பார்த்தோம் என்று சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் ஐம்பது ரூபாயில் சிடி கிடைத்து விடுகிறது. சினிமாவுக்குப் போனால் மாயாஜாலில் பார்க்கிங் டிக்கெட் மட்டுமே அறுபது ரூபாய். காலையில் இருந்து ‘வருத்தப்படாத வாலிபர் சந்தம்’ என பாடிக்கொண்டே இருந்தாள் மூனே முக்கால் வயதான என் மகள். ஆனாலும் தங்க மீன்கள் செல்லத் தீர்மானித்தோம். கடைசி கிளைமேக்ஸ் காட்சியில் பயந்து போய் என் கழுத்தைக் கட்டிக்கொண்டதைத் தவிர்த்துப் பார்த்தால், படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒன்றிப் போய் மூழ்கியிருந்தாள்.


இது வரைக்கும் அவளோடு தியேட்டருக்குப் போனதே கிடையாது. இரண்டரை மணி நேரம் உள்ளே உட்காருவாளோ என பயந்து கொண்டே இருந்தேன். ஆனால் செல்லம்மாவோடு லயித்து விட்டாள். தியேட்டரில் நிறைய முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்கள் இருந்தனர். அனைவரும் முழுமையாக ஈர்க்கப்பட்டிருந்தனர். மகிழ்ச்சியாக இருந்தது.

குறிப்பாக கிறிஸ்துமஸ் தாத்தா கட்டிக் கொடுக்கும் டிரீம் ஸ்கூல் பற்றி செல்லம்மா விவரிப்பாள். அதில் ஸ்டெல்லா மிஸ் குழந்தைகளிடம் ஸாரி கேட்பார். குழந்தைகள் முட்டி போடச் சொன்னதும் முட்டி போட்டு மன்னிப்புக் கேட்பார். அந்தக் காட்சியில் என் மகள் துள்ளிக் குதித்து கை தட்டி ரசித்தாள். படம் முடிந்து கிளம்புகையில், இன்னும் பார்க்கணும் என அடம் பிடித்தாள். மறுபடியும் வரலாம்ப்பா என்றாள்.

நிச்சயமாக சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவலில் காணும் எந்த ஒரு உலகத் தரமான சினிமாவிற்கும் சளைக்காத படைப்பு. நிச்சயம் பேசப்படும் எளிய மனிதர்களின் கதை. இயக்குனர் ராம் தவிர மற்றவர்களின் நடிப்பு இயல்பாக இருந்தது. அப்பா-மகள் கதை என்ற நினைப்பை படம் சம்பந்தமான விளம்பரங்கள் நமக்கு ஊட்டின. அதே போல ஃபேஸ்புக்கில் சில மனிதர்கள் எதற்கென்றே புரியாமல் ஆற்றிய அப்பா-மகள் முத்தம் பற்றிய வியாக்கியானமும் தேவையற்றது. இந்தப் படத்தில் அப்பா-மகள் பாசம் ஒரு அம்சம் மட்டுமே. மற்றபடி இது குழந்தைகள் படம்.

ஸ்டெல்லா மிஸ் கேட்கும் கேள்விக்கு, ”எங்க தாத்தாவுக்கு ஆயிர ரூபாய் காஸ்ட்லி மிஸ். எங்க அப்பாவுக்கு நூறு ரூபா காஸ்ட்லி மிஸ்” என செல்லம்மா பதில் கூறுவாள். ஒரு கேள்விக்கு ஒரு சரியான விடை மட்டுமே இருக்க முடியும் என்ற கருத்தை பலமாக மறுக்கும் அடிப்படைக் கல்வி பற்றிய படம். குழந்தைகளை விட பெற்றோர்களுக்கே இது பெரிதும் அவசியமான படம். நடைமுறை வாழ்வில் ஒரு பிரச்சினைக்கு பல தீர்வுகள் இருக்கக் கூடும். பல விதமாகக் கையாளலாம். ஒரு கேள்விக்குஒரு சரியான பதில் மட்டுமே இருக்க முடியும் என்கிற கற்பிதம், ஒருவன் மட்டுமே வெற்றிபெறுவான் மற்றவனெல்லாம் தோற்றுப் போவான் என்பதை மறைமுகமாக நம்மில் விதைத்திருக்கிறது. ’நன்றாகப் படிக்க வேண்டும். நிறைய மார்க் வாங்க வேண்டும். நல்ல வேலையில் சேர்ந்து செட்டில் ஆக வேண்டும்.’ என்ற ஒரே வெற்றிச் சூத்திரத்தின் மாயையை உடைக்க முயலும் சிறிய முயற்சி.

மகளைப் பெற்ற அப்பாக்கள் மட்டும் பார்க்க வேண்டிய படமல்ல. மகனைப் பெற்ற தகப்பன்களுக்குமான படமும் கூடத்தான். குழந்தையைப் பெற்று வளர்க்கும் அத்தனை மனிதர்களுக்குமான படம்.

வாழ்த்துக்கள் ராம். கற்றது வாழ்க்கை !

Tuesday, September 03, 2013

இந்தியாவுக்கு வரும் ஜப்பான் அணு உலை புகோஷிமா

கல்லூரி மாணவிகள் (மாணவர்களும் தான்) எப்படி உடை அணிய வேண்டும், ’தங்க மீன்’ ராமின் முத்தம் உண்மையிலேயே காமத்தின் சேராதது தானா என்ற விவாதங்கள் தமிழ்ச் சமுதாயத்தில் முதன்மையாக இருக்கிற சமயத்தில், இந்தியா மீண்டும் தனது சிவில் அணுசக்தி தொடர்பான பேச்சுக்களை ஜப்பானுடன் தொடங்கப் போவதாக இன்று செய்திகள் வெளிவந்திருக்கின்றன.


மின் தட்டுப்பாடு என்ற காரணத்தை மட்டுமே காட்டி அணு உலைகளுக்கு ஆதரவான கருத்தை மிடில் கிளாஸ் மக்கள் முன்னிலையில் வெற்றிகரமாக உருவாக்கி வைத்திருக்கும் மத்திய அரசு எப்படியும் நாடெங்கும் அணு உலைகளை நிறுவத்தான் போகிறது. ஜப்பான் புகோஷிமா விபத்து பேரழிவை உருவாக்கிய பின்னர் நிறுத்தி வைத்திருந்த பேச்சுக்களை இந்தியா மீண்டும் தொடங்குகிறது. தனது நாட்டில் எல்லா உலைகளையும் மூடி விட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிறுவுவதற்கு ஜப்பானுக்கு கசக்குமா என்ன?

ஏற்கனவே செர்னோஃபில் பேரவழிவைத் தந்த ரஷ்யாவிலிருந்து கூடங்குளத்திற்கு இறக்குமதி செய்து விட்டோம். இப்போது புகோஷிமாவைத் தந்த ஜப்பானின் பழைய ஈயம் பித்தளையை வாங்க பேச்சு வார்த்தை நடக்கிறது.

இனிமேல் இந்தியாவில் அவனவனுக்கு வேண்டியதை அவனவனே கவனித்துக்கொள்ள வேண்டும். தனக்கான உணவையும், உடையையும் தானே சம்பாதிப்பது போல தனக்கான நீரையும், காற்றையும், சுகாதாரத்தையும், சுற்றுச் சூழலையும், பாதுகாப்பையும் அவனே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாட்சிமை பொருந்திய அரசு இயந்திரமே...நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஊழல் செய்து கொள்ளுங்கள். பணம் சுருட்டிக்கொள்ளுங்கள். ஊழல் தொடர்பான கோப்புகளை மறைத்து வைத்து விட்டு காக்கா தூக்கிப் போனதென்று சொல்லுங்கள். பொருளாதாரத்தை கூட்டு பலாத்காரம் செய்யுங்கள். ஆனால் இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழலையும் தயவு செய்து விட்டு வையுங்கள். கூடங்குளத்தின் கோரச் சுவடுகள் ஒரு மோசமான உதாரணத்தை நமக்கு முன் வைத்திருக்கின்றன.


ஏனென்றால் சிவில் அணுசக்தி என்ற கோட்பாட்டின் முக்கிய நோக்கம் மின் தேவையைப் பூர்த்தி செய்வதல்ல. முன்னேறி நாடுகளின் அணுசக்தி நிறுவனங்களுக்கான சந்தை, நம் அரசியல்வாதிகளின் சுயநலம், இந்தியாவின் அணு வல்லரசுக் கனவு ஆகியவை மட்டுமே முதன்மையான காரணங்கள். மின்சாரம் என்பது அதன் பக்க விளையேயாகும். இங்கே மின்சாரத்திற்குஅணு உலையைக் காட்டிலும் பாதுகாப்பான, மலிவான மாற்று மூலங்கள் நிறையவே உள்ளன.