Thursday, September 19, 2013

வேலைக்காரி கதை

என் மகளுக்கு நான் கொடுக்கும் தண்டனைகளிலேயே பெரிய தண்டனை தூங்கும் முன்னர் கதை சொல்லாமல் இருப்பது. ”இன்னைக்கு குறும்பு பண்ணுனேல்ல அதனால ஸ்டோரி கட்” என்று சொன்னால் அதை ஏமாற்றத்தோடும், அழுகையோடும் எதிர்கொள்வாள். அடித்தாலோ திட்டினாலோ கூட இவ்வளவு பெரிய கோபம் வருவதில்லை. அவளுக்கான எல்லாக் கதைகளும் ‘ஒரு ஊரிலே’ என்றுதான் ஆரம்பிக்கும். முருகன் பழத்துக்காக சண்டை போட்ட கதையென்றாலும் அது  ஒரு ஊரில் தான் ஆரம்பிக்க வேண்டும். சாமிக்கு ஊரெல்லாம் கிடையாது என்று சொன்னால் கேட்பதில்லை.

கதை சொல்வதற்கு ஒரு டெம்ப்ளேட் நம்மிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வேறு மாதிரி யாராவது சொன்னால் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சுவாரசியமாக அலுப்புத் தட்டாமல், “ஸாரி மாப்ள ஒரு கால் வருது” என எஸ்கேப் ஆகி ஓட வைக்காமல் சொல்லப்படும் எல்லாக் கதைகளும் நல்ல கதைகளே. கதையை விட கதை சொல்லும் விதமே நம்மை ஈர்க்கிறது. இப்படித்தான் பாருங்கள் ஷீலாவின் கதை ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. சொதப்பி விடுமோ என பயமாக இருக்கிறது.

ஷீலா எங்கள் வீட்டு வேலைக்காரி. ஷீலாவை ஷீலா என்றே குறிப்பிடுகிறேன். கதைக்காக முனியம்மாவாக்க வேண்டாம். பணியாளரம்மா என்று பொலிட்டிகல்லி கரெக்ட்டாகவும் எழுத வேண்டாம். எங்கள் வீட்டில் லாவண்யாவுக்குப் பிறகு ஷீலா வேலைக்கு வந்தாள். எப்படியும் என்னை விட வயதில் மூத்தவளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் என்னவோ ஒல்லியாக இருப்பதால் வயது தெரியாது. அவளிடம் பேசும் போது ’ங்க போட்டுப் பேசினாலும், அவள் இல்லாத சமயங்களில் அவள் அவளாகவே எங்கள் உரையாடல்களில் இடம்பெறுகிறாள்.

எட்டு மாதத்தில் நாலு பேரை மாற்றியாகி விட்டது. மாறி விட்டார்கள். ஆளுக்கு அவ்வளவு டிமாண்ட். ஆறாயிரம் சம்பளம் வாங்குவதற்காக ஆண்கள் தினம் 12 மணி நேரம் செக்யூரிட்டி வேலை பார்த்து யூனிஃபார்மோடு நிற்கும் அதே டவுன்ஷிப்பில் வேலைக்காரப் பெண்கள் ஒரு மணி நேரம் வேலை செய்து இரண்டாயிரம் டிமாண்ட் பண்ணுகிறார்கள். பாத்திரம் கழுவி, வீடு கூட்டி, தரையைத் துடைக்க வேண்டும். நாலு வீடு செய்யும் போது ஒரு வீட்டில் பிரேக்ஃஃபாஸ்ட்டும், இன்னொரு வீட்டில் டீ-காஃபியும் தந்து விடுவார்கள். நாம் கூட வீட்டிலிருந்து கிளம்பினால் ஆஃபீஸுக்குப் போவதற்குள் வேர்த்து வடிகிறது. ஆனால் இந்தப் பெண்கள் எல்லோரும் பவுடரோடும், மலர்ச் சூடிய கூந்தலோடும் வருகிறார்கள். திரும்பிப் போகும் போதும் அப்படியே போகிறார்கள்.

எங்களது கம்யூனிட்டியில் இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் மூன்று நிமிடத்திற்கு மேல் கூடி நின்று பேசினால் அதில் வேலைக்காரி டாபிக் நிச்சயமாக இருக்கும். குண்டா கழுவ எல்லோரும் ஆள் வைத்திருக்கிறார்கள். சில பேர் சமைப்பதற்கும் ஆள் வைத்திருக்கிறார்கள்; சில பேர் குழந்தையைக் கவனித்துக்கொள்ள. ஆறாயிரம், எட்டாயிரம் என ஒவ்வொன்றுக்கும் கணக்கு நீளும். ”நாம பழைய சோறு தின்னா கூட பரவாயில்லேங்க.. ஆனா அவங்களுக்கு சூடா டிஃபன் செய்ய வேண்டியிருக்கு. இவளுங்க மட்டும் இல்லேன்னா சமைக்கவே வேண்டியதில்லை” என சிலர் அங்கலாய்ப்பதுண்டு.

”ஏம்மா நீ தான் எல்லாமே நீல்கிரீஸ்ல வாங்கிக்கிறீல்ல. ரேஷன் கார்டை குடுத்தா என்ன?” என 17ஆவது பிளாக்கில் ஒரு வீட்டில் வேலைக்காரி கேட்டாளாம். அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். மூன்று மாதம் கழித்து, “நான் நாலு வீடு போறவ. டைமே கெடைக்கறதில்ல... நீ சும்மா தானே வீட்ல இருக்கே. (இப்பவெல்லாம் குந்திக்கினு இருக்கேனு சீரியலில் மட்டுமே பேசுகிறார்கள்) அப்படியே ரேஷன்ல போய் ஜாமான் வாங்கிட்டு வந்து குடுத்துறேன்” என எக்ட்ஸ்ரா பிட்டைப் போட்டிருக்கிறாள். நல்ல வேளை மறுத்து விட்டார்களாம். இல்லாவிட்டால் இந்நேரம் மதிய நேர மெகா சீரியலுக்கெல்லாம் முழுக்குப் போட்டு விட்டு அபார்மெண்ட் பெண்கள் ரேஷன் கடையில் தவம் கிடப்பார்கள்.

லாவண்யாவிற்கு முன் ஒரு பெண் எங்களிடம் வேலை செய்தாள். கூடவே செகண்ட் ஃபுளோரில் ஸ்ரீஜா வீட்டிலும். பெயர் சரியாக நினைவில்லை. ஆனால் முதல் நாள் அட்வான்ஸ் வாங்கும் போது ’இந்த ஒடம்புல இருந்து உயிரு போற வரைக்கும் உங்களுக்கு நாயா ஒழைப்பேன்’ என்று சொன்னது நினைவிருக்கிறது. ஸ்ரீஜாவிடம் ‘உங்களப் பாத்தா அப்படியே மேரி மாதாவையே பாக்கிற மாதிரி இருக்கு’ என்றாளாம். மூனே வாரத்தில் ஆள் எஸ்கேப்.

ஜானி படத்தில் ரஜினி சொல்வாரே அந்த மாதிரி, ஒன்னை விட இன்னொன்னு பெட்டர்னு பாத்தா வாழ்க்கை ஃபுல்லா மாறிக்கிட்டே, மாத்திக்கிட்டே இருக்கணும். அப்படி வேலை சுளுவாக, பணம் அதிகமாகக் கிடைக்கும் வீடுகளையும் எஜமானிகளையும் நோக்கி மாறிக்கொள்கிறார்கள். அட்வான்ஸ் வாங்கும் நாளில் பாத்திரம் கரைகிற வரைக்கும் தேய்த்துத் தேய்த்து கழுவுவார்கள். பிறகு நாலு நாளைக்கு போன் செய்தாலும் எடுக்க மாட்டார்கள். கார்பெண்டர், கார் கிளீச் செய்கிற பையன், வேலைக்காரி என இது எல்லோருக்கும் பொருந்தும். அதனால் யார் முன்பணம் கேட்டாலும் கொடுக்கக் கூடாது என மனைவியிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன். அட்வான்ஸ் கொடுத்தால் பணம் போகிறது என்றெல்லாம் கிடையாது. பணம் வாங்கிய ஆளே போகிறது.

நான் இறுக்கமானவன். என் மனைவி அதற்கு நேரெதிர். அவள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும் - இ.வா என்று. யார் பாவமாகக் கேட்டாலும் அவளுக்கு மனது இளகிவிடும். சிக்னலில் யார் கை நீட்டினாலும் ஐந்து ரூபாயாவது போடுவாள். பத்து ருவா குடுக்கிறதுல நாம ஒன்னும் குடி முழுகிப் போயிற மாட்டோம் என்பாள். ஸ்ரீஜாவை மாதாவென அழைத்த பெண், ”சைக்கிள் வாங்கினால் சீக்கிரம் வேலைக்கு வந்து விடுவேன். மாதம் ஐநூறு பிடித்துக் கொள்ள்ளுங்கள்” என்று நான் இல்லாத சமயத்தில் மூவாயிரம் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறாள். உடனே நின்று விட்டாள். வீட்டுக்காரியின் தயாள குணத்துக்கே தனியாக மாத பட்ஜெட்டில் ஒரு தொகை ஒதுக்குவது வாடிக்கையாக இருந்ததொரு காலம்.

ஒரு முறை சிக்னலில் ஒரு பையன் மிகவும் இறைஞ்சிக் காசு கேட்டான். பிரமாதமான முகபாவம். செத்தே விடுவான் போலிருந்தது. சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சார் பிளீஸ் எனக் கெஞ்சினான். காலில் செருப்புக் கூட இல்லை. கொதிக்கும் வெயிலில் தார் ரோட்டில் நின்றதிலேயே கால் வெந்திருக்கும். என் மனைவி பத்து ரூபாயை எடுத்தாள். அவள் கொடுப்பதற்குள், “எங்க வீட்ல வேலை இருக்கு வரியா? மூனு வேளை சோறு போட்டு நல்ல டிரஸ்ஸூம் எடுத்துத் தர்றோம்” என்றேன். முகத்தின் ரியாக்‌ஷனை உடனே மாற்றி, “போய்யா” என்று காரை உதைத்து விட்டு அடுத்த வண்டியை நோக்கி நடந்தான்.

நான் இரக்கமற்றவன் என நினைத்திருந்த மனைவி அந்த சம்பவத்துக்குப் பிறகு ஓரளவு மாறி விட்டாள். இப்போது தேவலாம். என் அனுமதியில்லாமல் யாருக்கும் தானமோ, முன் பணமோ தருவதில்லை. என் அனுமதி என்பது இன்கம்டேக்ஸ் ரீஃபண்ட் மாதிரி. நிச்சயமாகக் கிடைக்காத ஒன்று. அப்படி இருந்தும் இந்த மாதம் ஷீலாவுக்கு 750 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டாள்.

நேற்று மாலை வீட்டுக்குப் போனதும், ‘ஏங்க. ஷீலாவுக்கு ரண்டாயிரம் வேணுமாம். புள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணுமாம்” என்றாள்.

“நீ ஒடனே குடுத்துட்டியா?”

“உங்க கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்.”

”ஏற்கனவே அட்வான்ஸ் குடுத்துருக்கில்ல… இன்னும் என்ன வேணூமாமா?”

அதோடு பேச்சு முடிந்தது. பிறகு தெய்வம் தந்த வீடு, தாயுமானவன், சரவணன் மீனாட்சி, தென்றல், வாணி ராணி, ஆஃபீஸ் எல்லாம் முடிந்து தூங்கப் போகும் போது என் மனைவியின் மொபைலில் ஷீலா அழைத்தாள்.

“நீங்களே பேசுங்க..” என்று என்னிடம் கொடுத்தாள்.

“ஹலோ” என எடுத்தேன்.

“தீபா மேடம் இருக்காங்களா?” பேசியது ஆண் குரல்.

”சொல்லுங்க”

“தப்பா நெனச்சுக்காதீங்க ஸார்...நான் ஷீலா வீட்ல இருந்து பேசறேன்.. அவ நடவடிக்கையெல்லாம் ஒன்னு சரியில்லைங்க”

“ம்”

“தயவு செஞ்சு தப்பா நெனசுக்காதீங்க.. ரொம்ப லேட் ஆகிருச்சு”

“பரவாயில்லை”

“ஒன்னும் சரியில்லைங்கைய்யா.. அடிச்சிட்டாங்கய்யா… கொஞ்சம் கண்டிச்சு வைங்கய்யா” வடிவேலு மாடுலேஷனில் மனிதர் கதறினார்.

“சரிங்க” என்று சொல்லி விட்டு வைத்து விட்டேன்.

அது வரைக்கும் என்னையே பார்த்துக்கொண்டிருந்த மனைவி ”என்னவாமா?” எனக் கேட்டாள்.

“நாளைக்கு அவளுக்கு ரண்டாயிரம் கொடுத்துரு.”

1 comment:

manjoorraja said...

எதிர்பாராத வித்தியாசமான முடிவு.