Sunday, October 27, 2013

நீங்கள் இன்னும் வேலையில் இருக்கிறீர்கள்

பையன் சென்னையில் ஒரு மிகப் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியின் ஊழியர், பெண் இன்னொரு கம்பெனியில். கல்யாணம் திருச்சியில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இருவருக்குமாகச் சேர்ந்து சென்னையில் ஏராளமான நண்பர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் திருச்சிக்குச் செல்ல இயலாது என்பதால் சென்னையில் ஏதாவது ரிசப்ஷன் உண்டா என்ற கேள்விக்கு, "எக்கனாமிக் ரிசஷென்" என்று அழைப்பிதழோடு பதில் சொல்கிறார்கள் பையனும், பெண்ணும்.

"அலிபாபாவும், நாற்பது திருடர்களும்' கதையை இப்போது படமாக்கினால் என்ன தலைப்பு வைப்பார்கள் தெரியுமா?" எனக் கேட்டு விட்டு 'அலிபாபாவும் 20 திருடர்களும்' என்று மின்னஞ்சல் ஜோக்குகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். கேட்டால் 'செலவுக் குறைப்பு' எனப்படும் cost cutting என்ற மேலாண்மை மொழி பேசுகிறார்கள். அந்த அளவுக்கு செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் சிரத்தை காட்டுகின்றன மென்பொருள் நிறுவனங்கள்.

டாய்லெட் பேப்பர் முதல், தேநீர்க் கோப்பைகள் வரை எல்லாமே குறைந்து வருவதைக் கண் கூடாகக் காண முடிகிறது. சம்பளக் குறைப்பும், ஆட்குறைப்பும் இன்றைக்கு எல்லா கம்பெனிகளிலும் அடிபடும் சொற்கள். இப்படியே போனால் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் கூடக் கொடுக்காமல், 'நீங்களே சுயமாக கணிப்பொறி எடுத்து வந்து பணியாற்றுமாறு ஊக்குவிக்கிறோம்' என்று சொன்னாலும் சொல்லுவார்கள் போலும்.

ஆள் கிடைக்காத காலத்தில் யாரையாவது உள்ளே இழுத்துப் போட்டு சமாளிபிகேஷன் செய்த கம்பெனிகள் இன்றைக்கு தகுதி இல்லாத ஆசாமிகளை வீட்டுக்கு அனுப்பத் தயக்கமும், கருணையும் காட்ட மறுக்கின்றன. இத்தனை காலமாக கண்காணித்து வைத்த விஷயங்கள், அதிகார வர்க்கத்தை எதிர்த்து 'எனக்கு திறமை இருக்கிறது. உனக்கு ஏன் போட வேண்டும் சலாம்?' என்று புரட்சி வசனம் பேசியவர்கள், தில்லுமுல்லு செய்து வேலைக்குச் சேர்ந்தவர்கள், முன் அனுபவமே இல்லாமல் இருப்பதாகச் சொல்லி இடம் பிடித்தவர்கள் முதலிய எல்லாச் சங்கதிகளும் தூசி தட்டப்பட்டு மறு பரிசீலனைக்கு ஆளாகின்றன.

ஆள் எடுக்கும் போது ஏனோதானோவென்று எடுத்த நிறுவனங்களில் பல இப்போது உள்ளே உள்ளவர்களுக்கெல்லாம் வித விதமான தேர்வுகள் வைக்கின்றனவாம். நோக்கம் என்னவென்று கணிக்க கம்ப சூத்திரம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. டிஸ்மிஸ் செய்யப்பட்டு பிங்க் ஸ்லிப் கொடுப்பதற்குப் பதிலாக, கட்டாய ராஜினாமாவை மனமுவந்து சமர்ப்பிக்குமாறு கட்டம் கட்டப்பட்ட ஊழியர்கள் பணிக்கப்படுவதாக அறிகிறோம்.

'சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் மன்னிக்க' என்று திருமணத் தகவல் இணையத் தளங்களில் கூடக் காண முடிவது அதிர்ச்சி தருவதாக இல்லை. குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர் ஆவதாக கவுண்டமணி ஒரு படத்தில் கலாய்ப்பார். கடந்த ஐந்தாண்டுகளில் மென்பொருள் துறையில் நுழைவதுகூட அப்படித்தான் இருந்தது. டாக்டர் ஆவதென்றால் எம்.பி.பி.எஸ் படித்திருக்க வேண்டும், வக்கீல் ஆவதென்றால் B.L படித்திருக்க வேண்டும், ஆடிட்டர் ஆவதென்றால் C.A படித்திருக்க வேண்டும் - ஆனால் சாஃப்ட்வேர் துறையில் நுழைய எதுவுமே தேவையில்லை என்ற நிலை உருவானது.

"விஜயவாடாவில் ஓட்டல் வெச்சிருந்தேன் சார். பிசினஸ் டல் ஆகிருச்சு. அப்பதான் ஃபிரண்ட்டூ செப்பேசாரு. அப்படியே SAP கன்ஸ்சல்டன்ட் ஆயிட்டேன்," கூசாமல் சொல்லுகிறார்கள் நண்பர்கள். இனிமேல் அவர்களில் எத்தனை பேரால் தாக்குப் பிடிக்க முடியுமென்று தெரியவில்லை.

சொகுசு வாழ்க்கைக்குப் பழகிவிட்ட உடலும், மனதும் அந்த செளகரியங்களை இழக்க நேர்ந்தால் வேதனைக்கு ஆளாகின்றன. ஆடம்பரமும், படோபடமும் வியாபித்திருந்த அவர்களின் வாழ்க்கை இன்றைக்கு பயத்தாலும், பதற்றத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஷேர் மார்க்கெட்டில் 100 ரூபாய் ஈட்டும் போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பத்து ரூபாயை இழக்கும் போது உண்டாகும் வேதனை பெரியது. மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்கள் பல சம்பளக் குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. வேலையை இழப்பதற்குப் பதில் சம்பளத்தைக் கொஞ்சம் தணித்துக் கொள்வதில் தவறில்லை தான்.

நான்கு வருடம் பணியாற்றிய நிறுவனம் வீட்டுக்கு அனுப்பிய பிறகு நான்கு மாதமாக வேலை தேடிக் களைத்துவிட்டு, இனி ஊருக்குப் போய் லோன் வாங்கி பால் பண்ணை ஆரம்பிக்கும் முடிவுக்கு வந்த நபரை நான் அறிவேன். இத்தகைய 'பிளான் B' பெருவாரியான மக்களுக்கு இருப்பதில்லை. கடந்த தலைமுறையில் வேலைக்குச் சேர்ந்தால் ரிட்டையர் ஆகும் வரை ஒரே துறையில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் சாத்தியம் இருந்தது. இன்றும், இனி மேலும் அவ்வாறே இருக்குமா என்பது யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாத ஒன்று. சமீபத்தில் வாசிக்க நேர்ந்த ஒரு ஆய்வுக் கட்டுரை, 21 ஆம் நூற்றாண்டில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தனக்கு பரிச்சயம் இல்லாத துறைகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு சராசரியாக எட்டு முறையாவது மாற வேண்டியிருக்கும் என்று கூறுகிறது.

Competetive advantage என்று சொல்லப்படுகிற 'பிறரைக் காட்டிலும் கூடுதல் அனுகூலம்' பெற்றிருக்கும் நிலை நிரந்தரமாக யாருக்கும் வாய்க்கப் போவதில்லை என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மென்பொருள் நிறுவனங்களுக்கு நிச்சயம் பொருந்தும். உன்னத நிலையில் கருதப்படும் ஒரு துறைக்கும், பிற துறைகளுக்குமான இடைவெளி நிரந்தரமானதாக இருக்கப் போவதுமில்லை. இந்திய மென்பொருள் துறை இந்த விதிக்கு விலக்காக இருக்குமா என்பது அனைவராலும் யூகிக்கக் கூடியதே.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இருந்து வேலைகள் இந்தியாவிற்கு இடம் பெயரப் பத்தாண்டு ஆனதென்றால், இந்தியாவிலிருந்து அதைவிடக் குறைவான செலவில் வேலையை முடித்துக் கொடுக்கவல்ல தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர ஐந்தாண்டுகள் ஆகுமா? சில கேள்விகளை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதே நலமென்றால், இதையும் தவிர்த்துவிடலாம்.

ஏட்டுக் கல்வியில் மட்டுமே தேர்ந்தவர்களாக, பணத்தின் மதிப்பு தெரியாதவர்களாக சமுதாயத்தின் ஒரு பிரிவினரை இந்தியாவில் உருவாக்கிய உலகமயமாக்கல் இன்றைக்கு அவர்களது பலவீனத்தை அம்பலப்படுத்தும் ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. ஒரு தனி மனிதனின் தகுதியை நிர்ணயிப்பது அவன் ஈட்டுகிற ஊதியம் மட்டுமே என்ற நினைப்பில் இருந்தவர்கள் உள்ளூரப் பயந்து கொண்டிருக்கிறார்கள்.

வேலை பறி போனவர்கள், சம்பளம் குறைக்கப்பட்டவர்கள் என்று நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. மேற்கத்திய நாடுகளைப் பிடித்து ஆட்டுவிக்கும் பொருளாதாரத் தேக்கம் வேலையில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களையும் கலக்கமுறச் செய்துள்ளது என்பதே உண்மையான கள நிலவரம். தேவைகளையும், செலவுகளையும் குறைத்துக் கொள்ள முனைகிறார்கள். நாளை என்ன நடக்குமோ என்ற கவலை பலரையும் பீடித்திருக்கிறது.

கவலையில்லாமல் 20-25 ஆண்டுகளுக்கு மாதத் தவணை முப்பதாயிரம் கட்டுமாறு கடனில் வீடு வாங்கியவர்கள் எல்லாம் கலங்கிப் போயிருக்கிறார்கள். கார் வாங்குவதையே ஒத்திப் போடுவதற்குப் பலர் பழகியிருக்கிறார்கள். புதிய வீடுகள் விற்பனை அப்படியே உறைந்து போயிருக்கிறது. வேலை பறி போனதால் கடன் தவணையைச் செலுத்த முடியாத நபர்களின் வீடுகள் ஏலத்திற்கு வருவதை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காண்கிறோம்.

1967 இல் காங்கிரஸ் கொடி வைக்கப்பட்ட சிவன் மலையில் இந்த ஆண்டு மண்ணை வைத்து பூஜை செய்கிறார்களாம். அங்கே என்ன பொருள் பூஜைக்கு ஆளாகிறதோ அது பலத்த நெருக்கடிக்கும் ஆளாகும் என்பது ஐதீகம். ரியல் எஸ்டேட் சரிவிற்கு சிவன் மலை ஆண்டவர் மட்டுமல்லாமல், சாஃப்ட்வேர் துறையின் மந்தமான சூழ்நிலையும் காரணம் என்பதே ஏற்றுக் கொள்ள வேண்டிய பகுத்தறிவு.

பக்கத்து வீட்டு வாலிபனோடு அழகான மனைவி ஓடி விடுவாளோ என்பது தெரியாத நடுத்தர வயதுக் கணவனின் மன நிலையை ஒத்திருக்கிறது மென்பொருள் வல்லுனர் சமுதாயம். 2002-இல் டாட்-காம் குமிழ் உடைந்ததைத் தொடர்ந்து மென்பொருள் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கும், இப்போதைய நெருக்கடிக்கும் முக்கியமான வேறுபாடு உள்ளது. அன்றைக்கு ஏறத்தாழ அத்தனை பேரும் இளைஞர்களாக, புதிதாக வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்களாக இருந்தனர். அவர்களது தேவைகள் அன்றைக்கு பலமானதாக இல்லை.

இன்றைய நிலை அதனினும் மாறுபட்டது. தற்போது சாஃப்ட்வேர் துறையில் உள்ளவர்களில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர் குடும்பம், குழந்தை என்று ஆனவர்கள். வீட்டுக் கடன் தவணை உள்ளிட்ட தேவைகளில் சிக்கியுள்ளவர்கள். சொகுசான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட இவர்கள் 2002 இல் வேலை பறி போன பேச்சுலர்களைப் போல திருவல்லிக்கேணி மேன்சனில் போய்க் குடியேற முடியாது. ஆகையால் இவர்களது வாழ்க்கையும், வாழ்க்கைத் தரமும் குறிப்பிட்ட இந்தத் துறையை முழுமையாகச் சார்ந்திருப்பது முன்பைவிடக் கூடுதலாக உள்ளது.

ஒன்றை அளவுக்கு அதிகமாக நம்பி, அது தவிர வேறு போக்கிடம் இல்லையென்ற நிலைக்கு ஆளானவர்களால் அந்த விஷயத்தைத் தவிர்த்து வாழ்வது சிரமம். கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அதன் காரணமாகவே இன்றைய உலகச் சூழலின் நெருக்கடி மென்பொருள் பணியாளர்களை மனதளவில் வெகுவாகப் பாதித்துள்ளது. 29 வயதில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்த கதைகள் இங்கே உலவுகின்றன. கூடுதலாகப் பணியாற்றுவதால் ஏற்படும் வேலை அழுத்தம் தவிர வேலை இல்லாமல் போகுமோ என்ற சிந்தனையால் ஏற்படப் போகும் அச்சமும் மன உளைச்சலைத் தூண்டுகிறது.

சாத்தியமான மாற்று ஏற்பாடு அல்லது பிளான்-B ஐ நடைமுறைப்படுத்துவது பலருக்கும் காலம் கடந்து சென்றுள்ளது. வேற்று வழியில்லை. அதன் காரணமாகவே நிலையான துறை எனக் கருதப்பட்ட மென்பொருள் துறையின் நிலையற்ற தன்மை அல்லது நிச்சயமற்ற எதிர்காலம் உள்வாங்க முடியாத கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. இரத்த அழுத்தம், இதய நோய்கள் முதலியன வெளிப்படும் காலமிது. ஏற்கனவே உடலுக்கு வேலை கொடுக்காமல் உட்கார்ந்திருக்கும் மென்பொருள் ஊழியர் சமூகம் இப்போது மன அழுத்தம் காரணமாக என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுமோ என்று அச்சமாக உள்ளது.

வருடா வருடம் ஒவ்வொரு நிறுவனமும் ஆயிரக் கணக்கில் ஆளெடுக்கும் என்ற நினைப்பில் புதிது புதிதாக முளைத்திருக்கும் பொறியியல் கல்லூரிகளைப் போலன்றி அவற்றில் இருந்து வெளியேறும் மாணவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள். ஏற்கனவே மென்பொருள் துறையில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அதை நம்பி ஏதாவது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணாக்கர்களும் பிளான்-B ஒன்றைத் தயார் செய்து கொள்வது நல்லது. கூடவே மனவளக் கலையும், உடற்பயிற்சி முறைகளும்!

(சில வருடம் முன்னர் 2008-09 சமயத்தில் உயிரோசைக்கு எழுதியது. இன்றைக்கும் பொருந்தும் போலிருக்கிறது)

Thursday, October 24, 2013

அது தொழில் ரகசியம்

நீங்கள் குறும்புக்காரரா? கொஞ்சம் ஓய்வு நேரம் இருக்கிறதா? போரடித்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறீர்களா? சுவாரஸ்யமாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற அரிப்பு மண்டையைக் குடைந்து கொண்டே இருக்கிறதா? பொழுது போக்காகவும் இருக்க வேண்டும்.அதே நேரத்தில் இலாபமும் வேண்டுமா? ஒரு சூப்பர் ஐடியா இருக்கிறது. காமேஷ் ஜெயச்சந்திரன் என்ற நண்பர் தான் அதைச் சொன்னார். ஐடியாவுக்குப் போவதற்கு முன்னர் அந்த ஐடியா மணியைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.

ஆள் அண்ணா யுனிவர்சிட்டியில் படித்தவர். இந்தக் காலத்தில் காலேஜ்னு சொன்னாலே எஞ்சினியரிங் காலேஜைத் தான் சொல்கிறோம். எல்லா எஞ்சினியரிங் காலேஜும் அண்ணா யுனிவர்சிட்டிக்கு அட்டாச் ஆகியிருக்கு. அதனால எல்லாப் பசங்களுமே அண்ணா யுனிவர்சிட்டில படிக்கறேன்னு சொல்றது வழக்கமா இருக்கு. ஆனால் இந்த ஆள் நிஜமாகவே அண்ணா யுனிவர்சிட்டியில், கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்றவர். இப்போது அமேசானில் வேலை செய்கிறார். அதைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது. பிறகு பேசுவோம்.

காமேஷ் ஒரு அப்ளிகேஷன் செய்திருக்கிறார். அதை பல பேருக்கு பரவசம் தராத ஒரு சமாச்சாரம் என்று கூட வைத்துக்கொள்ளலாம். நான் ஒரு portfolio tracker செய்துகொண்டிருக்கிறேன் என்றார். நல்லது. ஆனால் என் போர்ட்ஃபோலியோவில் இருபது ஷேருக்கு மேலே இருக்காது. எனக்கு Icicic Direct ல வரும் போர்ட்ஃபோலியோ டிராக்கரே போதுமென்றேன். ’என்னோட அப்ளிகேஷன்ல இதெல்லாம் ஸ்பெஷல்’ன்னு சொல்லி கீழுள்ள விஷயங்களை அனுப்பினார்.

* It can compute CAGR(Most trackers only show absolute gains).
* It can give all the news reported in BSE for your holdings.
* It can give full dividend history, It will tell you if you have missed any dividends.
* You can export/import your full trade history to/from csv file.
* You can import your contract note. 
* Import from valueresearchonline.com
எனக்கு மற்றதெல்லாம் பெரிதாக ஈர்க்கவில்லை, CAGR தவிர! சாஃப்ட்வேர்னா பரவாயில்லை. அரசியல்னா கூட பரவாயில்லை. ஆஃபீஸ் பாலிட்டிக்ஸ்ல நான் கில்லி. ஃபேஸ்புக் சண்டைன்னாலும் நான் அப்டுடேட். ஆனா CAGR அப்படீன்னா என்னன்னு கேட்கிற ஆளா நீங்க இருந்தா இந்த போர்ட்ஃபோலியோ டிராக்கர் மேட்டரெல்லாம் உங்களுக்கு ஆனதில்லை. ”இல்லை பரவாயில்லை. சொல்லுங்க” அப்படீன்னா கூகிளே பதில் சொல்லிரும். இன்னும் ஆழமாகத் தெரிஞ்சுக்க விரும்பினா The Science of Stock Market Investment –Practical Guide to Intelligent Investors என்கிற Kindle புத்தகத்தை ரெஃபர் பண்ணலாம். இதுக்கு மேல பேசினா சுய விளம்பரம் ஆகிரும். எனினும் சொல்லித்தான் ஆக வேண்டும். காசு கொடுத்து வாங்கும் முன்னர் முதல் சில அத்தியாயங்களை பிரிவியூவில் வாசித்துப் பார்த்த பிறகு கூட வாங்கலாம்.

அமேசானில் வேலை செய்யும் காமேஷ் எல்லா புத்தகத்தை Kindle-ல் படிக்கிறாராம். இதில் ஒரு பெரிய அனுகூலம் இருக்கிறது. மேலே சொன்ன மாதிரி எல்லா புத்தகத்தையுமே முழுமையாக காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. பிரிவியூ பார்த்து விட்டு பிடித்திருந்தால் மட்டுமே கருதலாம். ஒரு Kindle அக்கவுண்டில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்துப் பராமரிக்கலாம். Kindle உபகரணம் கூட தேவையில்லை. லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போன் எதில் வேண்டுமானாலும் Kindle நூல்களை படிக்கலாம். அதற்கு Kindle for PC என்ற சின்ன அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தால் போதும். PDF மாதிரி Kindle புக்ஸை அடித்து நகர்த்தலாம்.

காமேஷின் அப்ளிகேஷன் இன்னும் ரிலீஸ் ஆகலை. இப்போது இறுதிக் கட்ட டெஸ்டிங் செய்துகொண்டிருக்கிறாராம். நம்ம ’முட்டைன்னா இன்னா’ இயக்குனர் மாதிரி பேசிக்கொண்டே இராமல் இவர் சீக்கிரமாக அப்ளிகேஷனை ரிலீஸ் செய்யட்டும். அதற்குள் ICICI Direct-ம் CAGR-ஐ தமது போர்ட்ஃபோலியோ டிராக்கரில் உட்புகுத்துவார்கள் என நம்பவும் செய்வோம்.

இப்போதுதான் முக்கியமான மேட்டர். (இதற்காக காமேஷ் ராயல்டி கேக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்.) ஷேர் மார்க்கெட்ல லிஸ்ட் ஆகியிருக்கும் கம்பெனிகளில் உங்க ஊரில் தலைமை அலுவலகம் உள்ளவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதி வைத்துக்கொள்ளுங்கள். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் என பெரிய ஊர் எல்லாவற்றிலும் நிச்சயமாக நிறைய கம்பெனி இருக்கும். அந்தக் கம்பெனியில் எல்லாம் ஒரே ஒரு ஷேர் மட்டும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சில கம்பெனிகள் மட்டுமே ஷேர் விலை நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் விற்கும். பெரும்பாலானவை பத்து ரூபாய்க்குக் குறைவாகவே இருக்கும். அதையெல்லாம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அந்த நிறுவனங்களின் AGM (Annual General Meeting) நடக்கும் போது எல்லா பங்குதாரர்களுக்கும் அழைப்பு விடுவார்கள். ஒரு ஷேர் வைத்திருக்கிறோம் என்றெல்லாம் உதாசீனம் செய்ய மாட்டார்கள். போய் ‘உள்ளேன் அய்யா’ போட்டு விட்டு உட்காருங்கள். சேர்மனோ, மேனேஜிங் டைரக்டரோ, CEO வோ எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள். நீங்கள் சமோசா, இஞ்சி டீ, சாப்பாடு எல்லாவற்றையும் ஒரு கட்டு கட்டி விடுங்கள். அநேகமாக இந்த மாதிரி மீட்டிங் யாவும் நட்சத்திர ஓட்டல்களில் நடப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.  பிறகு ஷேர்ஹோல்டர்களுக்கு கம்பெனியின் நினைவாக ஏதாவது கொடுத்து அனுப்புவார்கள். இரண்டு கிலோ ஸ்வீட் கொடுத்தா கூட 600, 700 ரூபாய் ஆச்சு. இத்தனைக்கும் ஆறேகால் ரூபாய்க்குத்தான் ஷேர் வாங்கியிருப்பீர்கள்.

காமேஷ் இந்த டெக்னிக்கை செயல்படுத்திப் பார்த்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு குரூப்பே இருக்கிறார்களாம். வெரி இண்டரிஸ்டிங் !

”பாஸ். மெட்ராஸ்ல என்னென்ன கம்பெனி ரிஜிஸ்டேர்ட் ஆபீஸ் வெச்சிருக்காங்க அப்படீங்கற டீட்டெய்ல்ஸை எப்படி எடுக்கிறது” என்று கேட்கிறீர்களா?

பதிவின் தலைப்பைப் பாருங்கள்!

Wednesday, October 23, 2013

அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டாமா

உங்களுக்கு ரமேஷைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரமேஷைப் போன்ற ஒருவனைக் கடந்து வந்திருப்பீர்களா என்பது கூட சந்தேகமே. அவன் பதினைந்து வருடத்துக்கு முன் என்னோடு கல்லூரியில் படித்தான். அப்போது இரண்டு பேருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது நான் மெக்கானிக்கல். அவன் ECE. கேம்பஸ் இண்டர்வியூவில் இரண்டு பேருக்கும் ஒரே கம்பெனியில் கிடைத்தது. அப்போது நல்ல பழக்கம் ஏற்பட்டது. ஒன்றாக வீடு எடுத்துத் தங்கியதில் என் ரூம் மேட் ஆனான். ரொம்ப வித்தியாசமான பையன் என அப்போது தெரிந்தது. பொதுவாக பொறியியல் கல்லூரிகளில் மெக்கானில் படிக்கும் மாணவர்கள் பாவம். அவர்களுக்கு கடலை போட யாரும் கிடைக்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு அப்படியில்லை. அதிலும் எங்கள் காலேஜில் ஆண்களை விட பெண்கள் அதிகமாகப் படித்த துறை ECE. அப்படி இருந்தும் பிதாமகன் விக்ரம் மாதிரி சுற்றிக்கொண்டிருப்பான்.

வேலைக்குச் சேர்ந்த உடனே ஆபீஸில் வட்டியில்லாமல் என்னென்ன லோன் கொடுப்பார்களோ எல்லா லோனையும் நான் எடுத்து விட்டேன். முப்பத்தைந்தாயிரம் ரூபாய் சுசுகிக்கு மூன்று வருடம் due கட்டிய காலம் அது. அது போக பர்சனல் லோன் வேறு. இண்டிரஸ்ட் இல்லையல்லாவா? ரமேஷ் என் கூடத்தான் பைக்கில் ஆபீஸ் வருவான். ”நீ ஏன்டா பைக் வாங்கல?” என்று கேட்டால், “கொஞ்ச நாள் கழிச்சு உனக்கே புரியும்” என்பான். நமக்குள்ளே மன்மோகன் சிங் மாதிரி ஒரு பொருளாதார மேதை தூங்கிக்கிட்டு இருக்கிறதா நெனச்சு திரிந்த நான் அவனது செயலில் சுத்தமாக எக்கனாமிக் சென்ஸே கிடையாது என நினைத்துக் கொண்டேன்.

வேலைக்குச் சேர்ந்த எட்டு மாதத்தில் வேலையை ரிஸைன் செய்து விட்டான். ஏன்டா என்றால், ”ஓக்லஹாமா யுனிவர்ச்சியில எம்.எஸ் கெடச்சிருக்குடா” என்றான்.

“என்ன யுனிவர்சிட்டி?” சிரிப்பை அடக்க முடியவில்லை.

தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொன்ன காலம். அது கூகிள் இல்லாத காலம். ஒரு வேளை கூகிள் அப்போதே இருந்திருக்கலாம். அத்தனை பிரபலமாகியிருக்கவில்லை. எல்லாவற்றையும் கூகிள் செய்து, விக்கிபீடியாவில் அலசி நிபுணத்துவம் பெறுவதற்கான வாய்ப்புகள் அரிதாக இருந்த காலம். Ask Jeevs என்றொரு வெப்சைட் aj.com என்ற பெயரில் செயல்பட்டது. (இப்போது ask.com) அதில்தான் எல்லாவற்றையும் தேடிக்கொள்ள வேண்டாம். அது கூட அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனக்கெல்லாம் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் கம்ப்யூட்டரை shutdown செய்யவே தெரியும். Shutdown செய்வதற்குக் கூட Start க்குச் செல்ல வேண்டுமே என முகைநரண்..ஸாரி.. நகைமுரண் பரப்பித் திரிந்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதற்கு முன்னர் நமது கம்ப்யூட்டர் நாலேஜ் எல்லாம் படிக்கிற காலத்தில் இருந்த C, Fortran லேங்குவேஜ்க்கு ஒரு பேப்பர் இருக்குமே அதோடு சரி. அதற்கு லேப் வேறு. அங்கே மட்டுந்தான் ஏசி போடுவார்கள். உள்ளே போகும் போது செருப்பு, ஷூ எல்லாம் கழட்டி விட்டுச் செல்ல வேண்டும். கம்யூட்டர் லேப் பீரியட் மட்டும் செம காமெடியாக இருக்கும். ஒரு நாள் பழனிச்சாமின்னு ஒரு பையன் சீரியஸாக என்னிடம் வந்து கேட்டான். “மாம்ஸு.. என்னோட கீபோர்ட்ல X இல்லடா. வந்து பாருடா” நானும் போய் தேடிப் பார்த்தேன். அவன் சொன்னது நிஜம் தான். ஒரு 2 நிமிசம் தேடியிருப்போம்.  ”உன்னை ஏமாத்தீட்டாங்க பழனி. உன் கீபோர்டுல மட்டும் X இல்ல பாரு” என பேசிக்கொண்டோம். அப்புறம் தான் அங்கிருந்த மேடத்தை அழைத்தோம். சுடிதார் அணிந்து சடையை முன் பக்கம் தூக்கிப் போட்டிருக்கும் மேடம்ஸ் அங்கே மட்டுந்தான் இருப்பார்கள். மேடம் என்றால் அதுக்கு முந்தைய வருடம் BE முடித்த பெண்மணியாகவோ அல்லது ME படித்துக்கொண்டிருக்கும் பிகராகவோ இருக்கும்.

“வாட்?” எனக் கூவியது மேடம்.

“நோ எக்ஸ் இன் மை கீபோர்டு மேடம்” என்றான் பழனி. நான் கூடவே தலையாட்டினேன்.

மேடம் ஒரு முறை முறைத்து விட்டு X ஐ தொட்டுக்காட்டி விட்டு, “எல்லா கீபோர்டுலையும் இந்த எடத்துல தான் எக்ஸ் இருக்கும்” என தமிழுக்கு மாறினார்.

இப்போது திரையை மட்டும் பார்த்துக்கொண்டு கீபோர்டில் இலாவகமாக எங்கோ ஐரோப்பிய தேசத்தில் டைப்பிக்கொண்டிருக்கிறான் பழனி. காலம் மாறி விட்டது. காலத்துக்குத் தக நாமும் மாறி விட்டோம். இந்த பிளாஷ்பேக் எல்லாம் சொல்வதற்குக் காரணம் ரமேஷ் சொன்ன அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் பெயரில் ஹா மட்டும் சரியாக காதில் விழவில்லை. அவன் ஏதோ தமாஷுக்கு என்னை ஓட்டுவதாகத்தான் முதலில் நினைத்தேன். பிறகுதான் MS படிக்க அமெரிக்கா போகும் திட்டம் அவனுக்கு ஏற்கனவே இருந்தது புரிந்தது. அதனால் தான் வட்டியில்லாமல் கடன் கிடைத்தாலும் கூட அதைத் தவிர்த்திருக்கிறான். தீர்க்கதரிசி.

போய் எம்.எஸ் படித்தான். படித்து முடித்த உடனே வேலை. நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம். கூவிக்கூவி கடன் கொடுத்திருக்கிறார்கள். 35 ஆயிர ரூபாய் மோட்டார் பைக் கடன் வேண்டாமென்றவனுக்கு அமெரிக்காவில் கடன் வாங்கினால் தான் மரியாதை என அவனுக்கு முன்னோடியாக அங்கே சென்றிருந்தவர்கள் வழிநடத்தியிருக்கிறார்கள். முதல் மாதசம்பளம் வாங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் கார், வீடு எல்லாம் வாங்கி விட்டான். எல்லாமே கடன். லிவரேஜிங் என்றான். இடையில் ஒரு முறை சிடி பிளேயர் வாங்கி எனக்கு பார்சல் அனுப்பியிருந்தான். ”நான் தான்டா MS படிச்சு வேஸ்ட் பண்ணிட்டேன். நீ ஸ்டெய்ட்டா H1 அப்ளை பண்ணிட்டு வந்துரு. நான் பாத்துக்கறேன்” என்று மெயில் அனுப்பியிருந்தான். நானும் அமெரிக்கக் கனவில் ஊசலாடிக்கொண்டிருந்தேன்.

ரமேஷுக்கு எல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருந்தது. வாழ்க்கை இதை விட இனிமையாக இருக்க முடியாது என கவித்துவமாக நினைத்திருப்பான். 16 மாதம் சம்பளம் வந்தது. 17 ஆவது மாதம் முடிவதற்கு எட்டு நாள் பாக்கியிருந்த போது காலை பத்து மணிக்குக் கூப்பிட்டு Hand over your key. Sam will escort you out என அனுப்பி விட்டார்கள். Key எனச் சொன்னது access card. ஹையர் அண்ட் பையர் அமெரிக்க வாழ்வின் ஒரு அங்கம் என மனதைத் தேற்றிக்கொண்டான். மும்முரமாக வேலை தேடினான். வெறித்தனமாகத் தேடினான். பிறகு பைத்தியம் பிடித்த மாதிரி அலைந்தான். எட்டு மாதம் போயிருக்கும். அவனது எம்ப்ளாய்மெண்ட் ஹிஸ்டரியை விட கிரெடிட் ஹிஸ்டரி அச்சுறுத்தியது. இனி மேல் வேலை கிடைத்தாலும் கிரெடிட் ஹிஸ்டரியை ரிப்பேர் செய்ய முடியுமா தெரியவில்லை. மனமுடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சில இந்தியர்களைப் பற்றிக் கேள்விப்பட்டான். நல்ல வேளை அவனக்கு கல்யாணம் ஆகவில்லை.

வழக்கமாக அவனுக்கு கார் ஓட்டுவது பிடிக்கும். வேகமாக நீண்ட தூரம் ஓட்டுவான். வேகமாகவும் ஓட்டுவான். இப்போதும் அவன் காரை எடுத்தான். அமெரிக்க வாழ்க்கை அவனைத் துரத்தியது. கிரெடிட் ஹிஸ்டரி துரத்தியது. இந்த முறை அவனது வேகம் சீராக இருந்தது. அவன் தீர்மானமாக இருந்தான். எவ்வித பதட்டமுமில்லை. காரை நேராக ஏர்போர்ட்டுக்கு எடுத்துச் சென்று பார்ச் செய்தான். சென்னைக்கு ஒன்வே விமான டிக்கெட் வாங்கப் போதுமான பணம் இருந்தது. விமானம் ஏறிய போது அவன் பெற்ற எம்.எஸ் பட்டமும், வீட்டு சாவியும், கார் சாவியும் அமெரிக்க நினைவாக அவன் கூடவே வந்தன.

அவன் விமானம் ஏறி இன்றோடு பத்து வருடம் முடிகிறது. நான் ஆபீஸில் வட்டியில்லாமல் கார் லோன் வாங்கியிருக்கிறேன்.

Sunday, October 20, 2013

மோடி வந்திருந்தார்

மோடியை ஆதரிப்பவர்களைப் போல மோடி ஒன்றும் முட்டாளில்லை என மனுஷ்யபுத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சேத்தன் பகத்தின் பத்தியை வாசித்த போது அப்படித் தோன்றவில்லை. தமிழுக்கு சுஜாதா என்ன செய்தாரா அதை இந்திய ஆங்கில வாசகர்களுக்குச் செய்துகொண்டிருப்பவர் அவர். சுஜாதாவுக்கும் அரசியல் நிலைப்பாடுகள் இருந்தன. சேத்தன் பகத் மாதிரி வெளிப்படையாக அவர் அரசியல் பேசியதில்லை. சரி விஷயத்துக்கு வருவோம்.

நரேந்திர மோடியின் பிரச்சார ராணுவம் பலமானது. அந்த ராணுவத்தின் முக்கியமான சிப்பாய்களில் முன்னு நிற்பவராக சேத்தன் தெரிகிறார். மனுஷ் சொல்வது போல அவரை முட்டாள் என்றெல்லாம் என்னால் ஒதுக்க முடியவில்லை. அவரவருக்கான அஜெண்டாவின் படி அவரவர் செயல்படுகிறார்கள். சிலர் விசுவாசத்திற்காக ஆதரிக்கிறார்கள். சிலர் கொள்கைக்காக. சிலர் something is better than nothing என்பதன் அடிப்படையில் ஆதரிக்கிறார்கள். சிலர் சுயநல ஆதாயத்துக்காக ஆதரிக்கிறார்கள். சிலர் எல்லோரும் ஆதரிப்பதால் நாமும் ஆதரித்து வைப்போமே என ஆதரிக்கிறார்கள். சிலர் ஏனென்றே தெரியாமல் ஆதரிக்கிறார்கள். சிலர் விரக்தியின் காரணத்தால் ஆதரிக்கிறார்கள். ஆனால் மோடியை வெறுமனே ஆதரிப்பவர்களுக்கும், அவரது பிரச்சார இராணுவத்தில் இருப்பவர்களுக்குமான வித்தியாசம் நிச்சயமாக மனுஷ்யபுத்திரனுக்குத் தெரிந்திருக்குமென நம்புகிறேன்.

மிகச் சரியாகத் திட்டமிட்டு துல்லியமாக காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார் மோடி. பால் தினகரன் முதல் காவியுடை சாமியார்கள் உள்ளிட்ட அத்தனை குருமார்களும் அவரை நெருங்குகிறார்கள். Of course பெரு முதலாளிகள் எப்போதும் போல ஓடுகிற குதிரை மீது பந்தயம் கட்டுவார்கள். ஏற்கனவே மோடியை மகா புருஷர் என முடிவு கட்டிவிட்டார்கள். கார்ப்பரேட் மகாராஜாக்கள், சாமியார்கள், ஊடகங்கள், பெஸ்ட் செல்லிங் ஆங்கில நாவலாசிரியர்கள் என அனைவரும் அணி திரண்டிருக்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்து விஜயகாந்தைத் தாக்கிப் பிரச்சாரம் செய்த வடிவேலுவின் நிலை இவர்கள் யாருக்கும் வராமலிருக்கக் கடவது.

கடந்த வெள்ளிக்கிழமை மோடி சென்னைக்கு வந்திருந்தார். அதனால் எனக்குத் தெரிந்த போலீஸ் ஆபீஸர் ஒருவர் ஈரோட்டிலிருந்து வந்து கிண்டி தீரன் சின்னமலை சிலைக்கு எதிர்ப்புறம் காலையிலிருந்து தேவுடு காத்தார். எள் ஏசி காரில் போனாலும் எலிப் புலுக்கை மொட்டை வெலியில் காய்ந்து தான் தீர வேண்டும். சீமான் மாதிரியான ஆட்கள் கூட்டம் போட்டுப் பேசினால் அதை டேப் செய்யும் வேலையில் இருப்பவர் அவர். வழக்கமாக சீருடை அணியாதவர். வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு வரச்சொல்லியிருந்தார். ”அம்மா சீக்ரெட்டா முடிவு பண்ணிருச்சு. கடைசி வரைக்கும் கமுக்கமா வெச்சிருப்பாங்க” என்றார். சர்வ நிச்சயமாக இது அனைவருக்கும் தெரிந்திருக்கும் போல. இல்லையென்றால் முன்பு பாஜகவின் ஆட்சியில் அமைச்சரவைப் பொறுப்புகளையெல்லாம் திமுக வகித்திருந்த வரலாற்றையெல்லா சகித்துக்கொண்டு, என்னவோ இப்போதுதான் இந்துத்துவ முகமூடி தெரிந்த மாதிரி உடன்புறப்புகள் ஃபேஸ்புக்கில் பொங்கிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு வேளை காட்சிகள் மாறி, சூரியன் உதித்து தாமரை மலர்வதற்கான சாத்தியத்தையும் ஜனநாயகத்தில் மறுப்பதற்கில்லை.

மோடியை ஆதரிப்பதற்கு ஆளுக்கொரு காரணம் இருப்பதைப் போல அவரைத் தீவிரமாக எதிர்ப்பதற்கும் வெகு நியாயமான காரணங்கள் இங்கே உண்டு. அவை குஜராத் படுகொலைகள் தொடங்கி, பாரதிய ஜனதாவின் சமரசமற்ற இந்துத்துவா கொள்கை வரை நீள்கின்றன. உண்மையில் இது தட்டையான காரணம். வெகு தட்டையான காரணம்.

பாரதிய ஜனதாவும், அதன் கொள்கைகளும் பிடிக்காத போது அதன் பிரதம வேட்பாளர் மோடியாக இருந்தால் என்ன அத்வானியாக இருந்தால் என்ன? ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டியதுதானே...சொல்லப் போனால் வாஜ்பாய் தலைமையில் சென்ற கும்பல் தான் டெல்லியில் காமராஜர் தங்கியிருந்த வீட்டைக் கொளுத்தியது. இன்று அவரை மிதவாதி என்கிறீர்கள். வாஜ்பாய், அத்வானி போல மோடி இல்லை என்கிறீர்கள். என்றாவது ஒரு நாள் மோடியும் மிதவாதி ஆவார். அதுதானே பரிணாம வளர்ச்சி !!

என்னைப் பொறுத்த வரைக்கும் காங்கிரஸுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. எப்படி கருணாநிதிக்குத் தப்பி ஜெயலலிதாவிடம் சரணடைவது ஒப்பாத விஷயமாக இருந்தாலும் நடந்தேறுகிறதோ அப்படித்தான் காங்கிரஸுக்குத் தப்பி மோடியை மீட்பராகச் சித்தரிப்பதும். 

Monday, October 14, 2013

நவராத்திரி கொலுவும் கோமளா மாமியும்

சென்னை வந்து கிட்டத்தட்ட பத்து வருடமாகிறது. நவராத்திரி கொலு பற்றியெல்லாம் நிறையைக் கேள்விப்பட்டிருந்தாலும் அது குறித்த அறிமுகம் வெகுவாகக் கிடைத்தது இந்த வருடந்தான். பேச்சுலர் வாழ்க்கையில் பரவாயில்லை. கல்யாணமாகி தனி வீட்டில் வசித்த போதும் அவ்வளவு பரிட்சயம் இல்லை. இப்போது வாழும் கம்யூனிட்டியில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். வினாயகர் சதுர்த்துக்கு கொழுக்கட்டை கிடைக்கிறது. ரம்ஜானுக்கு பிரியாணியும், கிறிஸ்துமஸுக்கு கேக்கும் கதவைத் தட்டி தருகிறார்கள். எனினும் இந்த கொலு கலாச்சாரம் நமக்குப் புதிது. கடந்த ஒரு வாரத்தில் பல பேர் அழைத்தார்கள். மனைவி போய் விட்டு வந்து சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தேங்காய் பழம், குங்குமச் சிமிழ், பொம்மை என ஒரே வசூல்.

நான் வளர்ந்த சூழலில் சரஸ்வதி பூஜை என்பதற்கு புத்தகங்களை அடுக்கி வைத்து கோபுரம் மாதிரி ஆக்கி சாமி கும்பிடுவது என்று பொருள். சுவரோடு ஒட்டி ஒரு பெரிய பெட்டி. அதற்கு மேலே சின்னதாக ஒரு பெட்டி. அதற்கு மேலே புத்தகங்கள். எல்லாவற்றையும் வெள்ளை வேட்டியால் மூடி விட வேண்டும். அதறன் மீது சரஸ்வதி படம் வைத்தால் போதும். பதினெட்டாம் படி மேல் உட்கார்ந்திருக்கும் ஐயப்பன் போலவே இருக்கும். வருசம் முழுவதும் மனப்பாடம் செய்து வைத்த விருத்தங்களை அன்றைக்கு பாட வேண்டும். நிறைய விருத்தம் பாடினால் அதிகப் பண்டிதத்துவம் அடைந்ததாக அர்த்தம். ’வெள்ளைக் கமலத்தில்’ என ஆரம்பித்து ‘அரியாசனத்தோடு சரியாசனத்தில் வைத்த தாயே’ என முடியும் ஒரு பாட்டு மட்டுமே இப்போது நினைவிருக்கிறது. அடுத்த நாள் காலையில் மறுபூசை போட்டு பிரிப்போம்.

விருத்தம் சொல்வது ஒரு கலை. எங்கள் ஊரில் வருசத்துக்கு ஒரு முறை சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில் கும்பம் தாளிப்பது என்றொரு முக்கியமான நிகழ்விருக்கும். கொதிக்கும் எண்ணெயில் கடுகைப் போட்டு வெங்காயம் தாளிப்பது தெரியும். அதென்ன ’கும்பம் தாளிப்பது’ என இது வரைக்கும் ஆராய்ந்ததில்லை. தாளிப்பது என்ற சொல்லில் ’திருமாறு’ என்ற விஷயம் பண்டிதர்களுக்கு இருப்பதாக கும்பகோணத்துக்காரர் ஒருத்தர் சொன்னர். எனக்குத் தெரிந்த கும்பம் தாளிக்கும் மேட்டரைச் சொல்கிறேன். கோவிலில் இருந்து ஆற்றங்கரை 200 மீட்டர் இருக்கும். கும்பலாக அத்தனை ஆண்களும் ஆற்றுக்குச் சென்று பெரியதொரு கலசத்தில் தீர்த்தம் முத்திரிப்பார்கள். நான் அறிந்தவரை முத்திரிப்பது என்றால் தீர்த்தத்தை நிரப்புவது. அப்படி தீர்த்தம் முத்திரித்த கலசத்தை ஒருவர் தலையில் வைப்பார்கள். அவருக்கு பத்தடிக்கு ஒரு தடவை அருள் வந்து நின்று விடுவார். நிற்க மாட்டார். ஆடுவார். யாராவது விருத்தம் பாடி impress செய்து அவரை நகரத்த வேண்டும். அப்படி விருத்தம் சொல்வதற்கு தங்கவேல் மாமா என்றொருத்தர் இருந்தார். அவர் விருத்தம் பாடும் அழகே தனி. அவர் இல்லையென்றாலும் திருவிழா நடக்கும். ராத்திரி திரை கட்டி சினிமா போடுவார்கள். ஆனால் தீர்த்தம் கொண்டு வரும் சம்பிரதாயம் மட்டும் சுவாரசியமில்லாமல் போய் விடும்.

விருத்தம் பாடிய தங்கவேல் மாமா ஓரிரு வருடம் முன் ஆற்றங்கரையில் மாரடைப்பு வந்து இறந்து போனார். இப்போது ஊர்த் திருவிழாக்களில் விருத்தம் எப்படிப் பாடுகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. ‘சீக்கிரம் விடுங்கப்பா. நான் போயி தண்ணியை சாமிக்கு விடுறேன்’ என கும்பம் தாங்கிய ஆள் வேகமாகப் போனாலும் போவார். சித்திரை வெயிலில் கால் பொடிச் சூட்டில் வெந்து போகும். அவரை நிறுத்துவதற்காக மட்டுமே விருத்தம் பாட வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

விருத்தம் பாடி சரஸ்வதி பூஜை செய்யும் போது, மூன்று படிக்கட்டின் அடியில் கொழு வைத்துக் கும்பிடுவதுண்டு. கொழு என்ற சொல் பலருக்கும் அறிமுகமாகியிக்க வாய்ப்பில்லை. உண்டு கொழுப்பது என்ற பொருள் தெரியும், கொழுப்பைக் குறைக்க முயற்சிப்பது தெரியும். கொழுப்பதற்கு காரணாமான உணவை உற்பத்தி செய்யும் உழவுத் தொழிலின் pilot கொழு தான். கலப்பை மரத்தினால் ஆனது. அதை அப்படியே உழவுக்கு உபயோகப்படுத்த முடியதாது. அதனால் அதன் முனையில் உழுவதற்காகப் பயன்படுத்தும் கூர்மையான இரும்புத் துண்டு கொழு எனப்பட்டது. அந்தக் கொழுவை வைத்து பூஜை செய்வார்கள். சரஸ்வதி பூஜைக்கு எதற்கு கொழு வைக்கிறார்கள் என வியந்ததுண்டு. சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் ஒன்றென உணர்ந்த பின்னர் அவரவர் தொழிலுக்குப் பயன்படுத்தும் கருவிகளை வைத்து பூஜை செய்வார்கள் என புரிந்து கொண்டேன். உழவுக்கு பிரதானமாக விளங்கும் கொழு வைப்பதன் காரணம் விளங்கியது.  

கொழு என்ற சொல்லை கூளிகில் போட்டுத் தேடினால் முதலில் ‘கொழு கொழு கோமளா மாமி’ என வந்து நிற்கிறது. கூகிள் இமேஜில் தேடினாலும் ஹன்சிகாவும், நமீதவும் வந்து சிரிக்கிறார்கள்.

Thursday, October 10, 2013

ஒரு இயக்குனரின் கதை

எங்கள் அப்பார்மெண்டில் கீழ் வீட்டில் ஒருவர் இருக்கிறார். மனிதர் உண்மைக்குப் பெயர் போன சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நிறைய நாளுக்குப் பிறகு நேற்று மாலை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டை கொண்டு வந்தவர் மறுபடியும் வந்தார். ஆள் வழக்கமாக உட்கார்ந்தே பேச மாட்டார். ஆனால் இன்றைக்கு வந்து அமர்ந்து, அப்பறம் எல்லாம் எப்படி போகுதுங்கன்னு கேஷுவலாக உரையாடலை துவங்கினார்.

நிறைய ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். குறும்படம் எடுக்கப் போவதாகச் சொன்னார். எழுத்தும், ஆக்கமும் அவர்தானாம். நம்ம இளவஞ்சி மாதிரி கேமிரா பைத்தியம் ஒரு பிரண்ட் அவருக்கு இருக்கிறானாம். அவனுக்கு சினிமாட்டோகிராஃபி டிபார்ட்மெண்டாம்.

’நல்ல விஷயம். செய்யுங்க. மணிவண்ணன் செத்துப் போயிட்டார். அவர் எடம் காலியாத்தான் இருக்கு. கோயம்புத்தூர்காரங்க சினிமாவுல தோத்ததில்லீங்க’

‘ஆமாங்க பாஸ். கோயம்புத்தூர்ல இருந்து வந்து சினிமா எடுத்து யாரும் தோத்ததில்ல. ஆனா கோயம்புத்தூர்ல போய் சினிமா எடுத்தா ஊத்திக்கும்’ என்றார்.

உங்க Borrowed Girlfriend தான் பாஸ் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று சொல்லி விட்டு கதை சொல்ல ஆரம்பித்தார். உடனே அவரது மனைவி, ”சரிங்க. நீங்க பேசிட்டு வாங்க. நான் கிளம்பறேன்” என்று சொல்லி விட்டு செப்பல் ஸ்டேண்டை நோக்கிச் சென்று விட்டார்.

ஷார்ட் ஃபிலிம் எடுக்கறோம் பாஸ். Youtube ல ரிலீஸ் பண்றோம். நம்ம கேமிராமேன் ஒரு கேமிரா வெச்சுருக்காப்ல. பிட்ஸா படமே அந்த கேமிராவுலதான் எடுத்தாங்களாம். ஐ மீன் அந்த மாடல் டிஜிட்டல் கேமிராவுல. பட்ஜெட் ஒன்னும் பிராபிளம் இல்லை. ஐயாயிரத்து மேல ஆகாது. அதையும் நம்ம ஹீரோவே போடறேன்னு சொல்லிட்டாப்ல. எழுத்தும், ஆக்கமும் மட்டும் எம்பேரு போடுவேன்.’

‘வாவ். இண்டெரிஸ்டிங். சொல்லுங்க. என்ன நாட்?’

‘ரொம்ப காமெடியான சப்ஜெக்ட்டுங்க. எப்படியும் Youtube, ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாத்துலயும் பரப்புறோம். தமிழ் தெரிஞ்ச எவனெல்லாம் நெட்ல இருக்கானோ அவனெல்லாம் இதை பாக்கணும்.’

நிஜமாலுமே பிரமித்துப் போனேன். கருணாஸ் கலரில், அனிருத் சைஸில் என் முன்னால் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தார் நண்பர். பத்து வருடத்து முன்னர் பவர் ஸ்டாரும், அஞ்சு வருசத்துக்கு முன் ஆண்டர்சனும் (சாம் ஆண்டர்சன்) இப்படித்தான் வெறியோடிருந்திருப்பார்கள் போல. ஆனால் அந்த யுத்திகள் எல்லாம் இன்று காலாவதியாகி விட்டன. பரபரப்பாக எதாவது வேண்டும். விளம்பரத்தை விளம்பரமாகக் கொடுக்காமல் செய்தியாகக் கொடுக்கும் கால நிர்ப்பந்தத்தில் வாழ்கிறோம். இந்தப் படம் இன்னைக்கு ரிலீஸ் என விளம்பரம் கொடுப்பதை விட இன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் இந்தப் படத்தில் நடிக்கும் நஸ்ரியாவின் தொப்புளை அவர் சம்மதம் இல்லாமல் இயக்குனர் சற்குணம் டூப் போட்டு எடுத்து வெளிட்டு ஏமாற்றி விட்டார் என செய்தியாக பரபரப்பு உண்டாக்கும் காலக் கட்டாயம் இன்றைக்கு சினிமாவுக்கு தேவையாக இருக்கிறது.

’உங்க பிளான் என்னங்க?’

‘மொதல்ல ஷார்ட் பிலிம் எடுக்கறோம். To start with comedy subject. அப்பறம் ஒரு சீரியஸ் சப்ஜெக்ட். அடுத்து ஈரானிய படம் பண்றோம். நெக்ஸ்ட் தெலுங்குல ஒரு கிளாமர் படம். தமிழ்ல ஒரு செண்டிமெண்ட் படம். அப்பறம் இந்தில ஒரு கம்ர்ஷியல் படம். கடைசியா எல்லாத்தையும் ஒன்னா போட்டு கலக்கி ஒரு மசாலா படம். விஜய்தான் ஹீரோ. அதோட சரி. இந்தியாவுக்கு பை பை.’

‘ஏங்க?’

‘நம்ம டார்கெட் ஹாலிவுட் தாங்க. இப்ப சொன்னதெல்லாம் முன்னோட்டம். ஆஸ்கர் வாங்காம ஓயறதில்லைங்க. கமல் ஆஸ்கார் வாங்கறேன் ஆஸ்கார் வாங்கறேன் ஆஸ்கார் வாங்கறேன்னு சொல்லிக்கிட்டே இருக்கான். கடைசில ஆடி கார் தான் வாங்கினான். நம்ம அப்படி இல்லை பாஸ். பீட்ஸாவை பீட்ஸாவா கொடுக்கணும். கமல் மாதிரி பொங்கச் சோறு ஆக்கிட்டு பீட்ஸா நல்லா இருக்கான்னு கேட்டுக்கிட்டே இருக்கக் கூடாது. 2020-ல ஆஸ்கார் கன்ஃபர்ம்டு’

’சூப்பர்ங்க.’

‘நம்ம ஷார்ட் பிலிம் ரொம்ப சிம்பிள். செருப்பல அடிச்ச மாதிரி தீம். சொல்லவா?’

‘சொல்லுங்க.’

‘மூனு முட்டை ஒன்னு பின்னாடி ஒன்னா கீழே விழுகுது. அப்படியே freeze பண்ணி டைட்டில் போடறோம் ‘முட்டைன்னா இன்னா?’ அப்படீன்னு. அப்பறம் ஓப்பனிங் சீன். ஒரு முட்டையை மட்டும் காட்டுறோம். ஹீரோ அதை கையில் தூக்கிக்கிட்டே போறான். அத குளோஸப்ல காட்றோம். நிறைய கூட்டம். ரொம்ப சத்தம். எல்லாத்தையும் கடந்து போறான். அப்படியே zoom out பண்ணி காட்றோம். டாஸ்மாக் பார். நம்ம ஹீரோ குடிக்கப் போறான்னு எல்லோரும் நினைக்கிறாங்க. ஆனால் அங்கதான் டிவிஸ்ட். நம்ம ஆள் கூட்டத்தை கிராஸ் பண்ணி போறான். பார்ல ஸ்னாக்ஸ் எல்லாம் செய்யற எடத்துல முட்டைய வெச்சிட்டு அப்படியே நிக்கறான். மாஸ்டர் அதை ஒடச்சு ஆஃப்பாயில் போட்டு ஒரு பிளேட்ல வெக்கிறார். ஹீரோ கடுப்பாகி மொறைக்கிறான். அப்படியே கட் பண்றோம். ஹீரோ ரண்டாவது முட்டையை எடுக்கிறான். அதை அப்படியே தூக்கிக்கிட்டே போறான். பெரும்பாக்கம் ரோட்ல ஒரு பாய் ஆம்பூர் பிரியாணி கடை வெச்சிருக்கார்ல அங்கே போறான். அங்கே முட்டையை வெச்சிட்டு பாயை பாக்கிறான். அந்த பாய் அதை தண்ணில போட்டு பாயில் பண்றார். அப்பறம் அதை உரிச்சு பிரியாணிக்குள்ள வெச்சு பார்சல் பண்றார். நம்ம ஆள் கடுப்பாகி அடுத்த முட்டையைப் போய் எடுக்கிறான். அதை நேரா ஒரு கோழிகிட்ட கொண்டு போய் வைக்கிறான். அது அண்ணாமலை ரஜினி மாதிரி ஒரே பாட்ல குஞ்சாகி, பெருசாகி, கோழியாகி வளந்து நிக்குது. ஷார்ட் பிலிம்ல பாட்டு வெக்கலாம்ங்கறது இங்க மட்டும் விதிவிலக்கு பாத்துக்குங்க. அப்பறம் ஒரு கறிக்கடையைக் காட்டுறோம். வளந்து ஆளான அந்தக் கோழியை உரிச்சு கிளாமரா தொங்க விட்டிருக்காங்க. ஒரு சண்டே காலைல பத்து மணிக்கு ஒரு அங்கிள் வந்து அரை கிலோ கேக்கறாரு. அந்த கறிக்கடை பாய் அந்தக் கோழிய அப்படியே ரண்டா வெட்டி வெயிட் போட்டு கொடுக்குறாரு. அப்ப ஒரு பேக்கிரவுண்ட் மியூசிக் கொடுக்கிறோம் பாருங்க. முதல் மரியாதைக்கு வேற மாதிரி மியூசிக் போட்டிருக்கலாம்னு இளையராஜாவே ஃபீல் பண்ணுவார். அப்படி நம்ம மியூசிக்மேன் பிழியறார். Youtube பாத்துக்கிட்டே எல்லோரும் அழுது லேப்டாட் கீபோர்ட் எல்லாம் நனைஞ்சிருது. அவ்வளவு உருக்கமான மியூசிக். அப்படியே கீழே டைட்டில் போடறோம் – ”முட்டைன்னா இன்னா” எழுத்தும், ஆக்கமும்னு எம்பேரு. எப்படி?’

செய்வதறியாமல் விழித்தேன்.

‘என்ன பாஸ் அப்படியே ஸ்டண் ஆகிட்டீங்க? பயங்கரமான பின்நவீனத்துவ சப்ஜெக்ட் இது. முட்டைனு இங்க சிம்பாலிக்கா சொல்றது சாஃப்ட்வேர் லைஃப். ஒருத்தன் ஆஃப் பாயில் ஆகறான். இன்னொருத்தன் அவிச்ச முட்டை ஆகறான். எப்படியோ எஸ்கேப் ஆனவன் சில்லி சிக்கன் ஆகறான். இதான் தீம்.’

‘கலக்கிட்டீங்க. வேற யார் கிட்டயாவது இந்த ஸ்டோரிய சொன்னீங்களா?’

‘வீட்ல சொன்னேன்.’

‘என்ன ரியாக்‌ஷன்?’

‘இனிமே இதப் பத்தி பேசினா நான் சாப்பிடவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சமைக்கவும் மாட்டாங்களாம்’

'ஏன் பாஸ்?’

‘உங்ககிட்ட சுருக்கமா சொல்லிட்டேன்.. அவங்க கிட்ட ஷாட் பை ஷாட் சொன்னதுல டென்ஷன் ஆகிட்டாங்க.’

‘ஓ. சம்யூ என்ன சொன்னா? அவ கிட்ட கதை சொன்னீங்களா?’ (சம்யூ LKG படிக்கும் அவரது மகள்)

‘அவ அப்படியே அலர்றா.. ஓடிப்போய் அவங்க அம்மாவை கட்டிப் புடிச்சுக்கிறா, என்னவோ பூச்சாண்டியைப் பாத்த மாதிரி.’

‘விடுங்க பாஸ். ஜெயிக்கற வரைக்கும் யாரும் நம்மை மதிக்க மாட்டாங்க.’

‘ஆமாம் பாஸ். சாக்ரடீஸுக்கே விஷம் கொடுத்த உலகம் தான இது!’

‘சரி என்ன நம்பி உங்க கதையை சொல்லீட்டீங்களே! நான் நெட்ல போட்டுட்டா என்ன பண்ணுவீங்க? கேஸ் போடுவீங்களா?’

‘அட நீங்க வேற! முட்டைக்குப் பதிலா தக்காளியோ வெங்காயமோ எதையாவது மாத்திக்க வேண்டியதுதான். நம்மளோட ஒன்லி எய்ம் ஆஸ்கார் தானே ஒழிய ஆம்லேட் போடற முட்டை கெடையாது!’